என் மலர்tooltip icon

    அரியலூர்

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை: 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்வைதி (வயது 32).இவரது மனைவி கனிமொழி (27) . இவர்கள் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். நித்தீஸ் (6) தீபக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  இளம்வைதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வார். நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். கனிமொழியின் தந்தை கண்ணையன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கனிமொழி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    விஜயகாந்த் பிறந்த நாளையட்டி அரியலூர் மாவட்ட தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் செட்டிஏரி கரையில் உள்ள சக்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது. முக்கிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்கள் 50 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.

    அரியலூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடும், கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட பொருளாளர் கவியரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பழக்கடை பாண்டியன், மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் நல்லதம்பி, ராமச்சந்திரன், நகர நிர்வாகிகள் மதி, ரமேஷ், சுந்தர், ராதாகிருஷ்ணன், சின்னமுருகன், நமச்சிவாயம், சக்திவேல், மருதை, பாலா, செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தற்கொலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆர்.எஸ்மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெருமாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன்கள் தமிழ்அரசன் (வயது32), தமிழ்செல்வன் (27). இந்த நிலையில் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக வசந்தா என்பவரை சிற்றரசு திருமணம் செய்தார்.

    தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தமிழ்அரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்அரசனுக்கு திருமணம் நடைபெற்றது. அண்ணன் திருமணத்திற்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் தமிழ்செல்வன் சிலரிடம்  கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வசந்தா, திருமணத்திற்கு வந்த நகைகளில் தனக்கு தாலி செயின் ஒன்று வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினாராம். இதனால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தமிழ்செல்வன் நேற்று அங்குள்ள தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த தமிழ்அரசன், வசந்தாவிடம் சென்று எனது தம்பி சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உறவினர் வினோத் என்பவர் தடுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் தமிழ்அரசன், வினோத்தை கத்தியால் குத்தினார். காயமடைந்த அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தமிழ்செல்வன் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணி வரை வேட்பு மனு வாங்குவதற்கு தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக வேட்புமனு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.இதையடுத்து அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அறிவிப்பு பலகையில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 
    கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்ச்சுனன் தலைமையில் டாக்டர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது அரசு டாக்டர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து, அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அரியலூர் மாவட்ட அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமையில் டாக்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். இதில் தலைமை டாக்டர்கள் ரமேஷ் கண்ணன், உமா, மறைதென்றல், விக்னேஷ், மேகநாதன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் டாக்டர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பேர் இறந்துள்ளனர். இதில் தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. 

    இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது சட்ட பிரிவு 129–ன் கீழ் 161 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வெண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டார் வாகன சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
    அரியலூர்:

    வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள உடைகள், போர்வைகள், மெழுகுவர்த்தி, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், மருந்து பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களான நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத் தார். 

    அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயா, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) விக்டோரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #keralarain
    அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் தெற்கு எடத்தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது மாமியார் பழனியம்மாள் (வயது 54) வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் பழனியம்மாள் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை தனது வீட்டின் முன்புறத்தில் மறைத்து வைத்து விட்டு, அருகில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு பஸ் நிறுத்தத்தில் வைத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி பேனரை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி இவரது மகன் கண்ணன் வயது (47) இவர் கடந்த 17 ந் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு தனது ஊரில் பஸ் நிறுத்தத்தில் திருமாவளவனை வாழ்த்தி இலையூர் கடைவீதி அருகே டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.  

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டிஜிட்டல் பேனரை யாரோ மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இது குறித்து கண்ணன் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில் அதே பகுதி செம்மண்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் ராமமூர்த்தி (21) எரித்தது தெரியவந்ததை அடுத்து அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பயிற்சியாளர்கள் மூலம் 30 நாட்களாக கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பயிற்சியாளர்கள் பேராசிரியர் திருமுருகன், அமர்நாத், அன்பரசன், பிரேம்குமார் ஆகியோர் கடந்த 30 நாட்களாக கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளித்தனர்.

    இதை தொடர்ந்து போட்டியில் பங்கு பெறும் 16 மாணவர்களுக்கும் கல்லூரி தாளாளர் ரகுநாதன் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தென்னிந்திய அளவில் நடைபெறவுள்ள பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். #tamilnews
    அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டரிம் மனு கொடுத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 327 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    வாரியங்காவல் வடக்கு காலனி பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், வாரியங்காவல் வடக்கு காலனி தெருவில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியம் உள்ளது. ஆனால் மின்மோட்டார் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பழுதாகி போனது. அதனால் மேல்நிலை நீர்தேக்க தோட்டிக்கு நீர் ஏற்றி முடியாமல் உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் அன்றாட குடிப்பதற்கு மற்றும் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுநாள் வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அணைக்குடி கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், ஸ்ரீபுரந்தான் ஊராட்சியை சேர்ந்தது அணைக்குடி கிராமம். தற்பொது கொள்ளிடம் மற்றும் காவிரி வெள்ளத்தால், எங்கள் கிராமத்தில் கொள்ளிடம் நீர் புகுந்தது. இதனால் நாங்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி 4 நாட்களாக பாதுகாப்பு முகாமில் தங்க வேண்டிய நிலை உள்ளது. ஊரின் உள்ளே வன விலங்குகளான காட்டு பன்றி, குரங்கு, பாம்பு, முதலைகள் உள்ளிட்டவைகள் ஆக்கிரமித்து, பொருட்கள் அனைத்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் பல இன்னல்களுக்கு கிராம மக்கள் அனைவரும் ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், பொதுமக்களின் நலன் கருதி, பஸ் நிறுத்தம் அருகே சுமார் 6 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் அணைக்குடி கிராம மக்களை புதிதாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாண்ட்போர்ட் பள்ளியும் முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து நடத்திய 7ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாண்ட்போர்ட் பள்ளியும் முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து நடத்திய 7ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் மதுரை, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 7 அணிகள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளை மாண்ட் போர்ட் பள்ளியின் முதல்வர் தோமினிக் சாவியோ மற்றும் முன்னாள் மாணவர்கள் தொடங்கி வைத்தனர். இறுதிப்போட்டியில் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் பள்ளி அணியும், மதுரை திருநகர் இந்திராகாந்தி நினைவு பள்ளி அணியும் விளையாடியது.

    இதில் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் அணி 2க்கு 1 கோல் கணக்கில் வெற்றிப் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    இரண்டாவது இடத்தை மதுரை திருநகர் இந்திரா காந்தி நினைவு பள்ளி அணி பெற்றது. மூன்றாம் நான்காம் இடத்திற்கான போட்டியில் பாண்டியராஜபுரம் அரசு மதுரா சுகர்ஸ் பள்ளி அணி மற்றும் அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி விளையாடியது. இதில் 3ஆம் இடத்தை பாண்டியராஜபுரம், அரசு மதுரா சுகர்ஸ் பள்ளி அணியும் 4ஆம் இடத்தை அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் பெற்றது.

    போட்டியில் நடுவர்களாக மாநில அளவிலான நடுவர்கள் திருமாறன், செந்தில்குமார், பாபு, ஜார்ஜ் ஜான் பணியாற்றினர். பின்னர் பரிசளிப்பு விழா நடை பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தோமினிக் சாவியோ தலைமை தாங்கினார்.

    ஆர்.டி.சி. குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அக்பர் ஷெரீப் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. #tamilnews
    ×