என் மலர்tooltip icon

    அரியலூர்

    திருமானூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). இவர் கட்டிடப்பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன், பின்புறமுள்ள கதவுகளை அடைத்து விட்டு தனது மனைவி சந்திரகலா(32), மகள் அபிநயா ஆகியோருடன் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென்று மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து கொண்டு, வீட்டின் உள்ளே நுழைந்தனர். அறையில் தூங்கி கொண்டிருந்த சந்திரகலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியையும், அவரது மகள் அபிநயா கழுத்தில் கிடந்த 1¼ பவுன் சங்கிலியையும் கொள்ளையடித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சந்திரகலாவும், அபிநயாவும் கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலிகள் காணாததால் அதிர்ச்சியில், திருடர்கள், திருடர்கள் என்று சத்தம் போட்டனர். இந்த சத்தத்தை கேட்டு எழுந்த ராமச்சந்திரன் தப்பியோடிய மர்மநபர்களை தேடி, அவர்கள் பின்னால் ஓடினார். ஆனால் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் அறையில் ராமச்சந்திரன் வைத்திருந்த பணமும் திருட்டு போயுள்ளது. ஆனால் எவ்வளவு பணம் திருட்டு போனது என்று தெரியவில்லை.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், திருட்டு போன வீட்டில் பெரம்பலூர் கைரேகை நிபுணர் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சிவமணி தலைமையிலான போலீசார் கைரேகைகளை சேகரித்து சென்றனர். மலர் என்ற போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிலிருந்து, கோவிலூர் பஸ் நிலையம் வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாய், மகள் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒன்றிய உதவி பொறியாளர், உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள 30 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு பொது மக்கள் பயன்படுத்தும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்றது.

    பிரதமரின் உத்தரவுப்படி தற்போது விவசாய பணிகளுக்கு 100 நாள் தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டு வருகின்றனர். ஆனால் இந்த பணிகளை அரசியல் பிரமுகர்கள் எடுத்து அதிகாரி கள் துணையுடன் முறைகேடு செய்வதாக புகார் எழுந்து வருகிறது.

    அதே போன்று இலங்கைச் சேரி கிராமத்தை சேர்ந்தவரின் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்க ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், நூறு நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் 36 பணியாளர்களை கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை பணிகள் நடைபெற்று வருவதாக செந்துறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பணிகாலத்தின் போது 4-ந்தேதி அன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிதளத்தில் யாரும் இல்லை. ஆனால் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு அறிக்கை மட்டும் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த பணி முறைகேட்டில் ஈடுபட்ட ஒன்றிய உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகம், செந்துறை ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் ஆகிய 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், துணைவட்டார வளர்ச்சி அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சாலை வசதி இல்லாத முந்திரிகாட்டிற்கு சுமார் 1 கிமீ தூரம் நடந்தே சென்று ரகசிய ஆய்வு செய்து எடுக்கப்பட்ட அரியலூர் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் அரசு முதன்மை செயலாளரும், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பணியாளர் பயிற்சித்துறை தலைவருமான பணீந்திர ரெட்டி தலைமையில் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

    கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் துறை அலுவலர்களிடம் அனைத்து துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகளைவிரைந்து முடிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை அலுவலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார். 

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேனகா, லட்சுமிபிரியா ஆகியோர் முன்னிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் சார்பில், இலவசமாக பிரேக் உள்ளிட்ட வைகளை சரிபார்த்து கொடுத்தனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்து குறித்தும், இதனால் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது குறித்தும் போலீசாரால் எடுத்து கூறப்பட்டது. 
    ஜெயங்கொண்டத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வீரிய ரக காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையின் சார்பில் வீரிய ரக காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ஜெயங்கொண்டம் தொட்டிகுளம் கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிரீடு வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், வீரிய ரக காய்கறிகள் சாகுபடியில் விதை நேர்த்தி, குழித்தட்டு நாற்றங்கால், சாகுபடி நிலம் தயார் செய்தல், பயிர் இடைவெளி, நீர் நிர்வாகம், உர நிர்வாகம், களைகள் கட்டுப்பாடு, வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல், பூச்சி, நோய் நிர்வாகம், அறுவடை மற்றும் மதிப்பு கூ ட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்தல் மற்றும் விற்பனை குறித்து விளக்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

    வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி அட்மா திட்ட செயல்பாடுகளை விளக்கி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் உழவன் செயலி பதிவிறக்கம் குறித்து விளக்கினார்.

    பயிற்சியில் தொட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டத்தில் சாலை விதிகளை மீறியவர்கள் 239 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கபட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தற்போது வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி வாகனங்களில் அதிவேகம், அதிக பாரம் ஏற்றுவது, போதையில் வாகனம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றது, லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்சென்றது, லைசென்ஸ் இல்லாமல் மற்றும் சீருடை அணியாமலும் வாகனங்களை ஓட்டியவர்களுக்கும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாமலும், இன்ஸ்சூரன்ஸ் இல்லாமலும் வாகனம் ஓட்டியது மற்றும் பைக்கில் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு சென்றது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறியவர்கள் 239 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கபட்டது.

    தொடர்ந்து இது போன்று போக்குவரத்து விதிகளை மீறி வாகங்களை இயக்கக்கூடாது எனவும், இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சண்முகம், அண்ணாதுரை தலைமையில் போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது.

    பைக் ரேசிங் போன்றவை சாலையில் தவிர்க்க வேண்டும், மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும். அதிகபாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவ-மாணவிகளிடமும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர். 
    அரியலூர் தூயமேரி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் தூயமேரி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட கல்வி அலுவலர் செல்லம், பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி, பள்ளி தாளாளர் அந்தோணி சாலமன், தலைமை யாசிரியர் அந்தோணி,அரசு வக்கீல் சாந்தி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசும் போது, சொந்த ஊரில் இருந்து 7கி.மீ நடந்து வந்து அரசு பள்ளியில் தான் படித்தோம். அப்போது இருந்த காலகட்டங்கள் வேறு, நான் சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவன், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்வி துறைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி உதவிகளை செய்தார். மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, பாட புத்தகங்கள், சீருடைகள் உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டது.

    தற்போது மிகச்சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்விதுறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் எந்த அளவுக்கு படிக்க நினைக்கின்றார்களோ? அந்த அளவுக்கு அரசு முழு உதவியும் செய்து வருகின்றது. கல்வி பயின்றால்தான் வாழ்க்கையின் தரம் உயரும், படிப்பு மட்டும் முக்கியமல்ல. உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா போன்றவைகளிலும் ஆர்வம் இருக்க வேண்டும் என்றார். 

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் டில்லிராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர், துணைதலைவர் பழனியாண்டி, வீடு கட்டும் சங்க தலைவர் கணேசன், கூட்டுறவு பால் சொசைட்டி சங்க துணைதலைவர் பாஸ்கர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவமாணவிகள், பெற் றோர்கள் கலந்துகொண்டனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். #veeramani #neet

    செந்துறை:

    நீட் தேர்வால் மருத்துவர் கனவு நிறைவேறாததால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகளான மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது நினைவாக குழுமூரில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழா, அனிதா நினைவு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய் யத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா, திரைப்பட இயக்குனர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, சாதி ஒழிப்பு போராளி கவுசல்யா, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி,

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரங்கசாமி உள்பட ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நூலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்ட அனிதாவை இழந்துள்ளோமே தவிர அவரது உணர்ச்சிகளை நாம் இன்னும் இழந்து விட வில்லை. நீட் தேர்வினால் அனிதா மட்டுமல்ல. மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயர் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியும் உச்ச நீதிமன்றம் அவற்றை புறக்கணிக்கிறது . நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும். நீட்தேர்வுக்கு எதிராக அறப்போரை மாணவர்களுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்றார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஆட்சியாளர்கள் நீட் தேர்வில் விலக்கு பெறுவோமென நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர். ஆனால் அனிதாவை இழந்து விட்டோம் என்றார்.

    அனிதா சிலையை திறந்து வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    அனிதா வெற்றி பெற்றிருந்தால் மிகச்சிறந்த தொண்டுள்ளம் கொண்டவராக இருந்திருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? ஏதேனும் ஒரு படிப்பு என்று அவர் நினைத்திருந்தால் மருத்துவம் கிடைக்காமால் வேறு பாடத்துக்கு மாறியிருப்பார்.

    ஆனால் தொண்டாற்ற வேண்டும் என்றகனவே அவரை மருத்துவ படிப்பை படிக்க தூண்டியிருக்கிறது. அனிதாவை போன்று மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நீட் தேர்வு முறையை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றார். 

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையமும், நபார்டு வங்கியும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்தும், வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் இளஞ்சேரன் தலைமை தாங்கினார்.

    வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான அழகுகண்ணன் வரவேற்றார். முகாமில் நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, தனியார் தொண்டு நிறுவன அலுவலர்கள் ஸ்ரீதேவி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின், வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா மற்றும் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர் கிருத்திகா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    மேலும் இம்முகாமில் நுண்ணீர் பாசனம் பற்றிய செயல்விளக்கத்தை மைய பண்ணை மேலாளர் திருமலைவாசன் செய்து காட்டினார். சொட்டுநீர் பாசன உபகரணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முடிவில் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் அசோக்குமார் நன்றி கூறினார். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் காந்தி நன்றி கூறினார்.

    இதேபோல் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். சத்துணவு மையத்தில் காலியாக இருக்கும், சாக்குகளை அரசே திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. 

    இதேபோல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந்தேதி கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

    போட்டிகளில் முதல் இடம் பிடிப்பவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ×