search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூறுநாள் வேலை திட்டத்தில் பணிகள் நடக்காமலேயே நடப்பதாக கூறப்பட்டு கலெக்டர் ஆய்வுநடத்திய இடத்தை படத்தில் காணலாம்
    X
    நூறுநாள் வேலை திட்டத்தில் பணிகள் நடக்காமலேயே நடப்பதாக கூறப்பட்டு கலெக்டர் ஆய்வுநடத்திய இடத்தை படத்தில் காணலாம்

    நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு- ஒன்றிய பொறியாளர் உள்பட 3 பேர் தற்காலிக பணிநீக்கம்

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒன்றிய உதவி பொறியாளர், உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள 30 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு பொது மக்கள் பயன்படுத்தும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்றது.

    பிரதமரின் உத்தரவுப்படி தற்போது விவசாய பணிகளுக்கு 100 நாள் தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டு வருகின்றனர். ஆனால் இந்த பணிகளை அரசியல் பிரமுகர்கள் எடுத்து அதிகாரி கள் துணையுடன் முறைகேடு செய்வதாக புகார் எழுந்து வருகிறது.

    அதே போன்று இலங்கைச் சேரி கிராமத்தை சேர்ந்தவரின் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்க ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், நூறு நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் 36 பணியாளர்களை கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை பணிகள் நடைபெற்று வருவதாக செந்துறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பணிகாலத்தின் போது 4-ந்தேதி அன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிதளத்தில் யாரும் இல்லை. ஆனால் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு அறிக்கை மட்டும் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த பணி முறைகேட்டில் ஈடுபட்ட ஒன்றிய உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகம், செந்துறை ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் ஆகிய 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், துணைவட்டார வளர்ச்சி அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சாலை வசதி இல்லாத முந்திரிகாட்டிற்கு சுமார் 1 கிமீ தூரம் நடந்தே சென்று ரகசிய ஆய்வு செய்து எடுக்கப்பட்ட அரியலூர் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×