என் மலர்tooltip icon

    அரியலூர்

    மீன்சுருட்டி அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குறுங்குடி புளியடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ணன்(வயது 37). இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவ நல்லூர் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கஞ்சங் கொள்ளை கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழில் உரிமம் பெற்று முறையாக தொழில் செய்து வந்தார். 

    கடந்த 2018-ம் ஆண்டு உரிமம் காலாவதியானது. இதையடுத்து உரிமத்தை புதுப்பிப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ளார். சில காரணங்களால் அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரி ரத்து செய்து ஆணை பிறப்பித்தனர். அதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெடி பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வரும் தனது சகோதரர்கள் ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரிடம் இருந்து வெடி மருந்துகளை மணிகண்ணன் அரியலூர் மாவட்டம் வானவ நல்லூர் கிராமத்திற்கு வாங்கி வந்து நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    இது குறித்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உரிய அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மணிகண்ணன் மற்றும் பணியாளர்கள் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் காலனி தெருவை சேர்ந்த மற்றொரு மணிகண்டன்(22), மோகனசுந்தரம்(23) ஆகியோரை கைது செய்து அங்கிருந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்

    பின்னர் அரியலூர் வெடி மருந்து கண்டுபிடித்தல் மற்றும் அழித்தல் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் தலைமையிலான குழு நேரில் வந்து வெடி பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூர் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஒட்டி கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், கிளை சிறைச்சாலை, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. மைதானத்தில் உள்ள வகுப்பறைகளில் 10-ம், பிளஸ்-2 வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2-வுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மைதானத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் உடைத்துள்ளனர். தற்போது அந்த பாதை வழியாக மாணவர்கள் சென்று வருகின்றனர்.

    இதனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு, அதன் வழியாக காப்பி அடிப்பதற்காக ‘பிட்’ கொடுப்பதற்கும், சமூக விரோதிகள் அதன் வழியாக விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதே போல் கிளை சிறைச்சாலையின் சுவரையும் உடைக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குவதால், அதற்குள் உடைந்த சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    அரியலூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    தாமரைகுளம்:

    தேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை 28 ந்தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் வி.கைக்காட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர் பாளையம், பெரிய திருக்கோணம், செட்டித் திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார் பேட்டை, ஆதிச்சனூர், சுண்டக்குடி வாழைக்குழி, ஆண்டிப்பட்டாக்காடு, ஆலந்துறையார்கட்டளை, குணமங்கலம், கடம்பூர், பாளையக்குடி, காவனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேலும், பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

    இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

    இதேபோல் சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    மேலும் பலியான சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    திறமையுடன் செயல்பட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த தாக்குதல் குறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான பிரதம மந்திரி யின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டதின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விவசாய குடும்பத்திற்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் மூன்று சம தவணைகளில் ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 90 ஆயிரத்து 500 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 63 ஆயிரத்து 251 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனும், கலெக்டர் விஜயலட்சுமியும் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதல் தவணையாக 45 ஆயிரத்து 518 விவசாயிகளுக்கு, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது. மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிசாமி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) நாகநாதன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளவரசன், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணை இயக்குனர் முருகன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ராஜசேகரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் இந்திரா மற்றும் வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் இல்லத்துக்கு இன்றுவந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரது குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் அளித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFA
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    இவர்களில் சிவச்சந்திரனின் உடல் கடந்த 16-ம் தேதி கார்குடி கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.



    இந்நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் சிவச்சந்திரன் இல்லத்துக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சிவச்சந்திரன் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் திமுக சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

    அவருடன் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் வந்திருந்தனர். #PulwamaAttack #CRPFA 
    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 82). இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் இறவாங்குடி கடைவீதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிவலிங்கம் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சிவலிங்கம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவலிங்கம் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவலிங்கம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமாரை தேடி வருகின்றார். 
    மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மழவராயநல்லூர் மேற்குதெருவில் உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மணவாளன் மற்றும் போலீசார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கூறி மின்மாற்றியை உடனே சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான அரியலூர் ராணுவ வீரர் குடும்பத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறினார்கள். #SivaChandran
    ஜெயங்கொண்டம்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் பலியானார். அவரது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிவச்சந்திரனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிவச்சந்திரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்.

    பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது. அதனை நாம் போற்ற வேண்டும். இதற்கு காரணமான பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை மத்திய அரசு எடுத்து வருகிறது. உரிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். பிரதமர் மீதும், ராணுவத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கை பொய்க்காது.

    இன்று தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்போது உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகள் குறித்து பேச உள்ளேன். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்றார்.

    இதேப்போல் திரைப்பட நடிகர் ரோபோ சங்கர், சிவசந்திரன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்றால், அதற்கு இவர்களை (ராணுவ வீரர்கள்) போன்ற எல்லைச்சாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும். சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து சிவசந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறுகையில், இந்திய ராணுவத்தின் பலத்தை பாகிஸ்தான் அரசுக்கு காண்பிக்க வேண்டும். இனியும் இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். #PulwamaAttack #SivaChandran
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    அரியலூர்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். வேரோடு அழிக்கப்படவேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐ.பி.எஸ். ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சிவச்சந்திரனின் பெற்றோர் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காக செல்கிறேன் என கூறியுள்ளார்.

    எனவே சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்ல அரசு வேலையை வழங்க வேண்டும். மேலும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வைகோ மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் திரைப்பட நடிகர் தாமுவும் சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    அரியலூர் வீரர் சிவச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது’ என்று இளைஞர்கள் ஆவேசமாக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தில் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் பலியாகினர். இருவரின் உடல்களும் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

    முன்னதாக சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவச்சந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

    பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் சிவசந்திரனின் உடல், அவருக்கு சொந்தமான நிலத்தில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    அஞ்சலி நிகழ்ச்சியின் போது சிவசந்திரனின் தந்தை சின்னையன், மகன் சிவமுனியன் ஆகியோர் ராணுவ உடை அணிந்திருந்தனர். சிவமுனியன், தந்தையின் உருவப்படத்திற்கு முத்தமிட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது.

    மேலும் அஞ்சலி செலுத்த வந்திருந்த அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பொது மக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தி வந்ததோடு, கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டையை சட்டையில் குத்தியும் வந்திருந்தனர். வாய் பேச முடியாத சிவசந்திரனின் தங்கை ஜெயசித்ரா, அண்ணனின் உடல் இருந்த மரப்பெட்டியை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், இளைஞர்கள் பலர், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். ராணுவ வீரர்களின் ரத்தம் வீண் போகக்கூடாது என்று கூறி பாகிஸ்தானுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு.

    பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.


    கார்குடி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சிவச்சந்திரனின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  நிர்மலா சீதாராமன் இங்கும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.

    சிவச்சந்திரனின் உடலுக்கு அவருடைய மகன் ராணுவ உடையில் அஞ்சலி செலுத்தினான்.

    அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான கருணை உதவி காசோலை சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

    சுமார் 5.10 மணியளவில் சிவச்சந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #CRPFAttack #SivaChandran 
    ×