என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓலையூர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகன் அருள் பாண்டியன் (வயது 25). பட்டதாரியான இவர் 2 கால்களும் செயலிழந்தவர்.
ராமலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தை பெயரில் உள்ள வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா, சிட்டா ஆகியவற்றை தனது பெயருக்கு மாற்ற அருள் பாண்டியன் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்தார்.
இந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அருள்பாண்டியனை, வி.ஏ.ஓ. சுமதி சில நாட்கள் அலைக்கழித்து வந்துள்ளார். இது பற்றி கேட்டபோது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா, சிட்டா மாற்றி தருவேன் என்று கூறியுள்ளார். இதற்கு அருள்பாண்டியன் அவ்வளவு பணம் என்னால் தரமுடியாது என்று கூறிய போது, ரூ.1000 தர வேண்டும் என்று சுமதி கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள் பாண்டியன், இது பற்றி அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுமதியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள் பாண்டியனிடம் ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை கொடுத்து அனுப்பினர்.
அவர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுமதியிடம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமதியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுமதி அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு காலனி தெருவை சேர்ந்தவர்கள் மணிகண்டன்(வயது 37). இவரது உறவினர் தேவேந்திரன்(40). இருவரும் கூலி தொழிலாளர்கள். இருவரின் குடிசைகளும் அருகேயே அமைந்துள்ளது. நேற்று காலை மணிகண்டன் மற்றும் அவரது குடிசையில் உள்ளவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இதேபோல் தேவேந்திரன் குடிசையில் உள்ளவர்களும் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மணிகண்டனின் குடிசையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிடித் தது. இதில் மணிகண்டன் மற்றும் தேவேந்திரனின் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது.
காலனி தெருவில் உள்ளவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்றிருந்ததால் குடிசைகள் தீப்பற்றி எரிந்தது தெரியாமல் போனது. பக்கத்தில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் ஊருக்குள் வெடி சத்தம் போன்று சத்தம் கேட்டதால் காலனி தெருவிற்கு ஓடிவந்து பார்த்தபோது, மணிகண்டன் மற்றும் தேவேந்திரன் குடிசைகள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கும், ஜெயங்கொண்டம் தீ அணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் 6 பேர் கொண்ட குழு தீயை அணைத்தனர். குடிசையில் இருந்த 3 கியாஸ் சிலிண்டர்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மணிகண்டன் குடிசையில் பீரோவில் வைத்து இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 4 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின. மேலும் பத்திரம், ரேஷன் கார்டு, சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இதேபோல் தேவேந்திரன் குடிசையில் பீரோவில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம், 6 பவுன் தங்க நகைகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் இருவரின் குடிசையும், குடிசையில் வைக்கப்பட்டு இருந்த வீட்டு உபயோக பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா, கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கும், தேவேந்திரனுக்கும் ஆறுதல் கூறினர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
அந்த வாகனத்தை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அந்த வாகனத்தில் ஒளிப்பரப்பான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பொதுமக்கள் தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காகவும், கருத்துக்களை தெரிவிப்பதற்காகவும் கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை மையம் இயங்குகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், எழிலரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், மத்திய அரசின் டிராய் விதிமுறைகளின்படி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் விரும்பிய சேனலை தேர்வு செய்து பார்க்கும் முறையை நடைமுறைப் படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அணுகி அதற்கான படிவங்களை பெற்று தங்களுக்கு தேவையான சேனலை பூர்த்தி செய்து கொடுத்து பயனடையலாம். மேலும், அனலாக் சிஸ்டம் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி.ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஒழுங்கு முறைச்சட்டத்தின்படி உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனலாக் சிஸ்டத்தை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
அவ்வாறு டிஜிட்டல் முறைக்கு மாறாமல் அனலாக் முறையில் வழங்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி செயல்படும் கேபிள் டி.வி.ஆபரேட்டர் களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கேபிள் டி.வி.உபகரணங் களும் பறிமுதல் செய் யப்படும்.
எனவே, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
நத்தம் வட்டம் செந்துறை அருகே உள்ள சித்திரைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ஜெய ராமகிருஷ்ணனின் மகள் சித்ரா(16), பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை 8-ந்தேதி மதியம் ஆங்கில தேர்வு எழுதுவதற்காக காலையில் படிப்பதற்காக சித்ராவின் தந்தை பள்ளியில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்துள்ளார்.
மதியம் நடந்த ஆங்கில பரீட்சையை மாணவி தேர்வு நடக்கும் அறைக்கு போய் எழுதவில்லை. வழக்கம் போல் தனது மகளை கூப்பிடுவதற்காக பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மகளை காணாமல் பரிதவித்தார்.
ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர் இன்று தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறினர். பள்ளிக்கு வந்த மகள் காணவில்லை என்று நத்தம் போலீஸ் நிலையத்தில் தந்தை ஜெயராமகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார்.
இதையொட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44), விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (40). இந்த தம்பதிக்கு மணிகண்டன் (19) என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான குணசேகரன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அத்துடன் மது போதையில் கிராம மக்களிடமும் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்த போதெல்லாம் அவரையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலை செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற குணசேகரன் அங்கும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாமனாருக்கு சொந்தமான வைக்கோல் போருக்கு தீ வைத்துவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார்.
இதுபற்றி அறிந்த மாமனார் தனது மகள் மஞ்சுளாவுக்கு போனில் தெரிவித்துள்ளார். அத்துடன் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள மஞ்சுளாவின் உறவினர்கள் மத்துமடக்கி கிராமத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் மஞ்சுளாவுடன் சேர்ந்து மது போதையில் இருந்த குணசேகரனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார்.
பின்னர் மஞ்சுளாவின் உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து கணவர் அருகில் சென்ற மஞ்சுளா, அவர் அசைவற்று கிடந்ததால் இறந்துவிட்டதாக நினைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் தனக்கு தொடர் பில்லாதது போல் காட்டிக் கொள்ளவும் முயன்றுள்ளார். அதற்காக கணவரின் உடலில் இருந்த காயங்களின் மீது மஞ்சள் பொடியை தூவியுள்ளார்.
பின்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்காக உயிருடன் இருந்த கணவர் குணசேகரன் உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். அலறித்துடித்த குணசேகரன் சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நடந்ததை மஞ்சுளா கூறினார். ஊர் மக்களிடமும் குணசேகரன் தகராறு செய்து தொல்லை கொடுத்து வந்ததால் அவர்களும் மஞ்சுளாவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையடுத்து இரவோடு இரவாக குணசேகரனின் உடலை அப்புறப்படுத்தி அங்குள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

கொலையுண்ட குணசேகரனின் உடலை போலீசுக்கு தெரியாமல் தகனம் செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள்
அங்கு கட்டைகளை அடுக்கி தகனம் செய்ய முயன்றனர். இதுபற்றி தகவல் கிடைத்த குணசேகரனின் நெருங்கிய உறவினரான பழமலை என்பவர் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா கொலையுண்ட குணசேகரனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தேர்தல்- 2019 தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்திட அனுமதிக்கப்பட்ட மைதானங்கள் மற்றும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பயன்படுத்த அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது பிற கட்சியினர் மற்றும் அவர்களது வேட்பாளர்களின் கொள்கைகள், முந்தைய செயல்பாடுகள் மற்றும் வேலைகள் ஆகியவற்றை மட்டுமே விமர்சிக்கலாம். தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து காவல் துறையினருக்கு முன்பே தெரிவித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் தடை ஏதும் முன்பே விதிக்கப்பட்டிருப்பின் அதை பின்பற்ற வேண்டும்.
மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையில்லை. வெள்ளம், பஞ்சம் அல்லது இன்ன பிற இயற்கை இடர்பாடு காலங்களில் துயர்துடைப்பு பணி செய்திட தடையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தல் ஆணைய முன்அனுமதியுடன் பண உதவி செய்வதற்கும் தடை இல்லை.
அலுவலக பணிகளோடு தேர்தல் பிரசார பணிகளை இணைக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வேறு சில வழிகளிலோ தூண்டுதல் கூடாது. வாக்காளர்களிடையே ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்ய கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடையார்பாளையம் அருகே தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் மகள் தீபா(வயது 18). இவர் தத்தனூர் பொட்டகொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து வருகின்றது. தீபா தேர்வுக்கு படித்த கேள்விபதில் அனைத்தும் மறந்துவிடுவதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த தீபா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுசேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள கியாஸ் சிலிண்டர்களில் கலெக்டர் விஜயலட்சுமி 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை(ஸ்டிக்கர்) ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், தாசில்தார் கதிரவன், கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அன்றைய தினம் 5 வயதிற்குட்பட்ட 70 ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு 549 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் 86 பள்ளிகளில் நடைபெறும். மேலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நடமாடும் முகாம்கள் என 26 இடங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






