என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே பெட்டிக்கடையில் சில்லரை கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். நெசவு தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி(வயது 60). இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த வெங்கடேசன், கொரோனா பரவலை தொடர்ந்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். தமிழரசி வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அறுபதாம் கல்யாணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலியை, ஏற்கனவே அணிந்திருந்த சங்கிலியுடன் சேர்த்து சுமார் 6¼ பவுன் தாலிச்சங்கிலியை தமிழரசி கழுத்தில் அணிந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் தமிழரசி பெட்டிக்கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர், வண்டியை தூரத்தில் நிறுத்திவிட்டு கடைக்கு நடந்து வந்து, தமிழரசியிடம் பணம் கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்ற அவர், மீண்டும் அந்த கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் பத்து ரூபாய் நோட்டை கொடுத்து, 10 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுக்கும்படி தமிழரசியிடம் கேட்டுள்ளார்.

    சில்லரையை எடுப்பதற்காக தமிழரசி குனிந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை மர்மநபர் பறிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட தமிழரசி, தாலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் சங்கிலி அறுந்து, சுமார் 5 பவுன் சங்கிலி மர்ம நபரின் கையில் சிக்கியது. தாலியுடன் சேர்த்து சுமார் 1¼ பவுன் நகை தமிழரசியின் கையில் இருந்தது.

    இதையடுத்து அந்த மர்மநபர் சங்கிலியுடன் அங்கிருந்து ஓடினார். இதனால் தமிழரசி திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் அந்த மர்ம நபரை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல், அவர் வந்த மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்தார். மூதாட்டியிடம் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    முன்னதாக வாரியங்காவல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அந்த மர்ம நபர், தான் ஒரு அதிகாரி என்று கூறி புகையிலை பொருட்களை விற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, அதனை மீறி ஏன் விற்பனை செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். பின்னர் ஒரு சீட்டில் குறிப்பெடுத்து கொண்டு நாளை நோட்டீஸ் ஒன்று வரும். ரூ.5 ஆயிரம் அபராதம் கட்ட நேரிடும் என கூறி பணம் பறிக்க முயன்றதாகவும், அப்போது கடையில் இருந்த விஜயா, தனது மகனுக்கு போன் செய்வதாக கூறியவுடன், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    பட்டப்பகலில் கடையில் இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூரில் முககவசம் அணியாத 11 கடைகளின் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அரியலூர்:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகள் உள்ளிட்டோரும் இந்த விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

    முககவசம் அணியாதவர்களுக்கு, வியாபாரிகளுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டதோடு, கடை திறக்கும் நேரம் போன்ற விதிமுறைகள் மீறப்படும் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும், முககவசம் அணியாத பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரியலூர் நகரில் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் ஸ்மீத் சைமன், தர்மலிங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ் தலைமையிலான ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் மளிகை கடை, ஜவுளிக்கடை, டீக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் முககவசம் அணியாமல் வேலை பார்த்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள், 11 கடைகளில் பணியாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். முககவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி ஆகியவைகள் இல்லாத கடைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அரியலூர் அருகே குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஜெயங்கொண்டம்:

    திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி தீத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராமசுப்ரமணியன். இவர் செங்குறிச்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகுணா (வயது 42).

    இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களுக்கு தன்வந்த் (வயது 6), வத்யவன் (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சிவராமசுப்ரமணியனுடன் வசித்து வருகின்றனர். சுகுணா மட்டும் ஆண்டி மடத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, பள்ளிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் பணி சுமை மற்றும் குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டி மடத்தில் உள்ள வீட்டின் குளியலறையில் சுகுணா தூக்குப்போட்டு தொங்கினார்.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், சுகுணாவை மீட்டு சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகுணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிவராமசுப்ர மணியன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 23), பால் வியாபாரி. இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பிரியா (18) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்றும் அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டுக்கு வந்த தமிழரசன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த தமிழரசன் பிரியாவை தாக்கியதில் தலையில் அடிபட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து தமிழரசன் அங்கிருந்து சென்று விட்டார்.

    அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது பிரியா தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய தமிழரசனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஆர்.எஸ்.பதி தோப்பில் போதை மயக்கத்தில் தமிழரசன் மயங்கி கிடந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தமிழரசன் மனைவியின் கழுத்தை நெரித்து தாக்கியதோடு சுவற்றில் வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிரியா இறந்துள்ளது தெரியவந்தது. திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய்த்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் அருகே விபத்தில் அடகு கடை உரிமையாளர் மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    கும்பகோணத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 52).இவர் அங்குள்ள பெரிய கடை தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி மனிஷா. இவர்களது மகள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமார் அவரது மனைவியுடன் சென்னை சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு நேற்றிரவு கும்பகோணம் புறப்பட்டனர்.

    காரை திருவிசைநல்லூரை சேர்ந்த திருமுருகன் ஓட்டினார். இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் கூவத்தூர் குடிக்காடு கிராமம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதின. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நரேஷ்குமார், டிரைவர் திருமுருகன் உயிருக்கு போராடினர். சம்பவ இடத்திற்கு ஆண்டிமடம் போலீசார் சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரமங்கலம் அருகே திருமணமாகி சுமார் 70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள காசான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேதுமணியன் (வயது 94). விவசாயி. இவரது மனைவி கமலம் (88). இந்த தம்பதிக்கு 6 மகன்கள் உள்ளனர். சேதுமணியன், கமலம் ஆகியோர் மகன்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக சேதுமணியன் கடந்த 9-ந்தேதி இறந்துவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சேது மணியனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அப்போது உறவினர்கள், கமலத்தை அழைத்து வந்து சேதுமணியனின் உடல் அருகே அமர வைத்தனர். அப்போது தனது கணவரின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த கமலம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கி, பெஞ்சில் படுக்க வைத்தனர். பின்னர் சேதுமணியனின் உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கமலத்தை, உறவினர்கள் எழுப்ப முயன்றபோது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். இதையடுத்து கணவர் இறந்த துக்கத்தில் அவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடலுக்கு நேற்று காலை இறுதிச்சடங்குகள் செய்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    திருமணமாகி சுமார் 70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    7 மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில் தமிழக அரசு தொடுக்காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    செந்துறை:

    நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிணவறையில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிப்பதற்கு இயலாத நிலையில், இந்த ஆண்டும் எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டும் மருத்துவ கனவை நனவாக்க முடியாது என்கிற மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.

    மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவிற்கு நீட் தேர்வு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாட்டை ஆள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுக்கும் வேண்டுகோள்.

    இந்த ஆண்டுக்கு மட்டும் வேண்டாம் என்று இல்லை. இனி எப்போதும் வேண்டாம் என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் கோரிக்கை. அனிதாவை தொடர்ந்து பல மாணவச் செல்வங்களை இழக்கும் நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலை தொடர்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்று நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட அதை தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டில் தமிழகம் உள்ளதாக முதல்வரே கூறியிருக்கிறார்.

    ஏழு மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு கொடுத்தார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அவ்வாறு வழக்கு கொடுக்காதது ஏன்? கடுமையாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இத்தகைய சாவுகள் தொடர்வதை தடுக்க வேண்டும்.

    விக்னேஷ் உயிர் இழப்பால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு துக்கத்தில், துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை தமிழக அரசும் சரி, மத்திய அரசு சரி புரிந்து கொள்ள வேண்டும்.

    நீட் தேர்வு இல்லை என்றால் விக்னேஷ் எப்பொழுதோ தனது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவர் கல்வி பெற்று இருப்பார். அவர் மருத்துவ படிக்க இயலாமைக்கு நீட் தேர்வு தான் காரணம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க உறுதி அளித்து இருப்பதை வரவேற்கிறோம், ஆனால் இழப்பீடு போதாது.

    தமிழக அரசு ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு அல்லது உயிரிழந் தவர்களுக்கு போதிய இழப் பீடு வழங்கவில்லை. விக்னேஷ் குடும்பத்திற்கும் இந்த இழப்பீடு போதாது. எனவே இதனை 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

    மாணவர்களுக்கு நான் விடுகிற வேண்டுகோள், மருத்துவராக வேண்டும் என்கிற மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். மருத்துவர் ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய கவுரவம் என்றெல்லாம் கருதவேண்டிய அவசிய மில்லை. தன்னம்பிக்கை வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு இதில் துணிவாக முடிவு எடுக்க வேண்டும், இதை நடை முறைப்படுத்த மாட்டோம் என்று துணிச்சலாக அறிவிப்பதில் தமிழக அரசுக்கு தயக்கம் தேவையில்லை.

    மத்திய அரசு நம்மீது திணிக்கிற அனைத்தையும் நெருக்கடிக்கு இடையிலே ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழக முதல்வர் பின்வாங்காமல் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரியலூர் அருகே தற்கொலை செய்த மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ் இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் டாக்டர் சீட் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே 3-வது முறையாக ‘நீட்’ தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார். ஆனால், இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து விக்னேஷ் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்த மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.
    அரியலூரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் மின்வாரிய பெண் ஊழியரின் கணவர் பலியானார். மேலும் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 30), இவரது மனைவி வேல்விழி (28). இவர் பெரம்பலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜய் மனைவியை அழைத்துக்கொண்டு அரியலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மருதையாறு பாலத்தில் சென்றபோது, அரியலூரில் இருந்து வாரணவாசியை நோக்கி சுரேஷ்குமார் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், விஜய் ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி வேல்விழி படுகாயம் அடைந்தார்.

    அதேநேரத்தில் சுரேஷ் குமார் தூக்கி வீசப்பட்டு மருதையாற்றின் பாலத்திலிருந்து 20 அடிக்கு கீழே ஆற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சுரேஷ்குமார், வேல்விழி ஆகியோரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் மின்வாரிய பெண் ஊழியரின் கணவர் பலியானார். மேலும் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 30), இவரது மனைவி வேல்விழி (28). இவர் பெரம்பலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜய் மனைவியை அழைத்துக்கொண்டு அரியலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மருதையாறு பாலத்தில் சென்றபோது, அரியலூரில் இருந்து வாரணவாசியை நோக்கி சுரேஷ்குமார் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், விஜய் ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி வேல்விழி படுகாயம் அடைந்தார்.

    அதேநேரத்தில் சுரேஷ் குமார் தூக்கி வீசப்பட்டு மருதையாற்றின் பாலத்திலிருந்து 20 அடிக்கு கீழே ஆற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சுரேஷ்குமார், வேல்விழி ஆகியோரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) தற்கொலை செய்து கொண்டார். செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் கோர்ட்டு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அதை தவிர்க்க சிமெண்டு தளம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நேற்று முன்தினம் முதல் கோர்ட்டு திறக்கப்பட்டு, வழக்குகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் வழக்குகள் தொடர்பாக பொதுமக்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    சில முதியவர்கள் சகதியில் வழுக்கி விழுந்த சம்பவமும் நடந்துள்ளது.

    மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே கோர்ட்டு முன்பும், கோர்ட்டு வளாகத்தை சுற்றியும் மண் கொட்டி மேடாக்கி, சிமெண்டு தளம் அல்லது சிமெண்டு கல் பதித்து செப்பனிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×