என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, திருமாவளவனை கைது செய்ய வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டிக்கவில்லை என மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் முஹம்மது இத்ரீஸ், சந்திரகலா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பேசுவதற்காக, மைக் மற்றும் ஒலிபெருக்கியை பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால், மைக் மூலம் பேச அனுமதியில்லை என்று கூறி, மைக் மற்றும் ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கும்பகோணம்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 10 நிமிடத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தன்சிங், ஒன்றிய பம்பு ஆபரேட்டர் பிச்சை பிள்ளை, நகராட்சி ஊழியர் சிவஞானம், சிலம்புச் செல்வி, ராஜலட்சுமி, பாப்பாத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் திருமானூர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும். கிராம தூய்மை காவலர்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.1000 ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் உடனே வழங்கிட வேண்டும். உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் உடனே வழங்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி குறித்த தகவல்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. வைப்பு நிதிக்கு பிடிக்கப்படும் பணம் எங்கே செல்கிறது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த முனியமுத்துவின் மகள் அபிநயா(வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் செல்வம் இறந்துவிட்டார். இதனால் அபிநயா மனவேதனையில் சோகமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி அபிநயா வீட்டில் இருந்த விஷத்தை (எலி பிஸ்கட்) எடுத்து சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்தார். பின்னர் அவர் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் மாவீரன் காடு வெட்டி குருவிற்கு சென்னையில் சிலை அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தோம்.
கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தலைமையுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் உருவாக்கிய மாவீரன் மஞ்சள் படை தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்யும். கலைஞர் இருக்கும்போது 108 சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார்.
அதேபோன்று தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டை தி.மு.க. பெற்றுத்தரும் என நம்புகிறோம். பா.ம.க.வினர் எங்களை தி.மு.க.விடம் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் பா.ம.க. தான் பெட்டியை வாங்கிக் கொண்டு அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் நிற்பது குறித்து பின்னர் தெரிவிப்போம். வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தி.மு. க.விடம் தான் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனவே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ம.க. இருக்கும் கூட்டணியில் மாவீரன் மஞ்சள் படை இடம்பெறாது.
குருவின் பெயரையோ புகைப்படத்தையோ தேர்தலுக்கு பயன்படுத்த பா.ம.க. விற்கு ஒரு சதவீதம் கூட தகுதி இல்லை. குருவின் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள். 30 வருடம் உள் ஒதுக்கீடு குறித்து பேசாமல் இப்போது பேசுவதற்கு என்ன அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயங்கொண்டம் ஒன்றியம் இளையபெருமாள் நல்லூர் ஊராட்சியில் உள்ள வடக்கு குளம், அரியலூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரையை ஏற்று அந்த ஊராட்சியில் உள்ள இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பினர் உதவியுடன் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அருளப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார். இந்த குளத்தினை ஆழப்படுத்தி, அதில் இருந்த மண்ணை எடுத்து கரைகளை பலப்படுத்தியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது நிலத்தில் அதே ஊரை சேர்ந்த விவசாயியான வேல்முருகன்(வயது 40) என்பவர் கடந்த 6 மாதங்களாக குத்தகைக்கு பயிர்செய்து வந்துள்ளார். அந்த விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். காட்டுப்பகுதி என்பதால் பன்றிகள் அடிக்கடி பயிரை நாசம் செய்து வந்துள்ளது. இதனால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு ஒரு பெண் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரிஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து, அந்த பெண் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்து கிடந்தவர் அருகில் மின்சார வேலி அமைத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்த மோகனின் மனைவி நிர்மலா(வயது 40) என்பதும், இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, பின்னர் சிறிது காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தெரியவந்தது.
மேலும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நிர்மலா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் நடந்தே ஓலையூர் பகுதிக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்வேலி கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேல்முருகனை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கயல்விழி(வயது 20). கடந்த பத்து மாதத்திற்கு முன்பு மாரிமுத்துவிற்கும், கயல்விழிக்கும் திருமணம் நடந்தது. தற்போது கயல்விழி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கயல்விழிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கயல்விழி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி பத்து மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமா? என உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தலா ஒருவருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 11 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,318 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,673 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 451 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,101 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1,997 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 490 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.






