என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 393 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 401 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 794 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
    அரியலூர்:

    கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து, கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்திடவும், இடம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாகவும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 90 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 111 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. அரியலூர் தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 5 வாக்குச்சாவடி மையங்களும் வேறு வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. தற்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 393 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 401 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 794 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியமனவாளன் கிராமத்தில் எதிர்நீச்சல் கபடி கழகம் மற்றும் அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகியமனவாளன் கிராமத்தில் எதிர்நீச்சல் கபடி கழகம் மற்றும் அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பைகளை அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருமானூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வடிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், விழுப்பனங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 37 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் கபடி அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை சோழபுரம் கபடி அணியும், 3-வது இடத்தை பட்டுக்கோட்டை கபடி அணியும், 4-வது இடத்தை அழகியமனவாளன் கபடி அணியும் பிடித்தன. அந்த அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
    அரியலூர் மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    தா.பழூர்:

    தா.பழூர் பகுதியில் கடந்த மாதம் 22-ந் தேதி, சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தா.பழூரை சேர்ந்த கவுதம் (வயது 25), கவிமணி(21), ஜான்(21), ராமநாதன்(20) ஆகியோரை தா.பழூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் அவர்கள் 4 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

    இதேபோல் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(44), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கீழப்பழுவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    மாவட்டத்தில் 24-வது நாளான நேற்று 7 போலீசார், 101 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 108 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    24-வது நாளான நேற்று 7 போலீசார், 101 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 108 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 37). இவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிந்து, அசோக்குமாரை கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தார். 

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரையின்பேரில் அசோக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகலை அசோக்குமாரிடம் வழங்கிய போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்று பணத்தை திருடிச்சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த உண்டியலை திருடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைல மரக்காட்டிற்கு அந்த உண்டியலை தூக்கிக்கொண்டு சென்று, அங்கு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு சில்லரை காசுகளை உண்டியலிலேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அம்மனை வேண்டிக்கொண்டு, கோவில் உண்டியலில் மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதேபோல் அப்பகுதியில் உள்ள 3 பேர் சமீபத்தில் அரை கிராம், 1 கிராம் என்ற எடையில் மாங்கல்யம் செய்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமயபுரம் மாரியம்மன், ஆதிபராசக்தி, அய்யப்பன் கோவில் பக்தர்கள் என பலரும் கடந்த 3 மாதமாக உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

    இதனால் கோவில் உண்டியலில் சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்கலாம் என்றும், பணத்தையும், தங்க மாங்கல்யங்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். கோவில் கதவை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்று பணம் உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    உடையார்பாளையம் அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 55). கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கு மரம் வெட்டிக்கொடுத்து, அதை விற்று தரும்படி கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினி(42) என்பவர் அந்த மரத்தை விற்றதாக தெரிகிறது. இது பற்றி தமிழரசன், ரஜினியிடம் கேட்டபோது, அவர் ஆத்திரமடைந்து தமிழரசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த தமிழரசன் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழரசனின் தந்தை கலியபெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரஜினியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கீழப்பழுவூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன்(வயது 72). விவசாயியான இவர் நேற்று காலை அவரது வயலுக்கு நடந்து சென்றார். 

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வி.கைகாட்டியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் தேளூர், ரெட்டிப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வி.கைகாட்டியில் 250-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியை சுற்றியுள்ள காத்தான்குடிகாடு, காவனூர், கா.அம்பாபூர், விளாங்குடி, ஒரத்தூர்மு.புத்தூர், முனியங்குறிச்சி, பெரியதிருக்கோணம், விக்கிரமங்கலம், பெரியநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தினமும் வி.கைகாட்டி வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் வி.கைகாட்டி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கல்லகம்கேட் முதல் மீன்சுருட்டி வரை சுமார் ரூ.900 கோடி மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் உணவகங்கள், வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு ஜெயங்கொண்டம் சாலை ஓரத்தில் வாய்க்கால் இருந்தது. தற்போது மேம்பால பணிக்காக அப்பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

    இதனால் வாய்க்கால் தூர்ந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் அருகே முருகன் கோவில் மற்றும் பஸ் நிறுத்தம் இருப்பதால் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கழுமங்கலத்தில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. எனவே வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த கழுமங்கலம் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கழுமங்கலம் வடக்கு தெரு, மேற்கு தெருவில் சரியாக வடிகால் வசதி இல்லாததால் வீட்டில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி சாலையும் சேதமடைகிறது. அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது, சாலையில் நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தரவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரம் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூரில் கெட்டுப்போன மீன்கள், இறைச்சிகளை விற்பனைக்கு வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 6 கிலோ நாள்பட்ட மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு  துறை நியமன அலுவலர் டாக்டர் நடராஜன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஆடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது நாள்பட்ட, நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே இறந்த ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது, சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகள், சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கழிவுகளை திறந்த வெளியில் வீசி எறியும் போக்கு, இறைச்சியை தொங்கவிட பயன்படுத்தப்படும் எளிதில் துருப்பிடிக்கும் தன்மை கொண்ட இரும்பாலான கொக்கிகள் பயன்பாடு, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறாமல் செயல்படும் இறைச்சி கடைகள், தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 3 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 6 கிலோ நாள்பட்ட மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இது போன்ற ஆய்வு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொன்ராஜ், சசிகுமார், ஜஸ்டின் அமல்ராஜ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்துமுகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும் உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ரூ.100-க்கு லைெசன்ஸ் எடுத்தவர்கள் ரூ.2 ஆயிரத்துக்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும். கறிகள் வெட்டப்படும் போது வீணாகும் தேவையற்ற பொருட்களை குழிதோண்டி புதைக்க வேண்டும். பொது இடங்களில் கொட்டக் கூடாது, அவ்வாறு கொட்டினால் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி. முதல் நாள் வெட்டப்படும் கறிகள் மீதமானால் அதனை மறுநாள் விற்கக்கூடாது, அழித்துவிடவேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    மீன்சுருட்டியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சந்தையில் இருந்து முக்குளம் வழியாக முத்துசேர்வாமடம் கிராமம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது.

    சமீபத்தில் பெய்த மழையால் அந்த சாலை மேலும் மோசமடைந்து மோட்டார் சைக்கிள் உள்பட இருசக்கர வாகனங்கள் கூட செல்ல பயனற்றதாக உள்ளது.

    இந்த சாலையை சத்திரம், பாகல்மேடு, பிச்சனூர், வெத்தியார் வெட்டு, இளையபெருமாள் நல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாகதான் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    9 மற்றும் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த சாலையில் மாணவிகள் சைக்கிளில் கூட சிரமத்துடன் தான் செல்ல வேண்டும். ஏற்கனவே இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை இனிமேலாவது சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×