என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜஸ்டின் அமல்ராஜ், சசிகுமார், பொன்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பல நாட்களை கடந்த மற்றும் நோயுற்ற ஆடுகள், கோழிகள் வெட்டப்பட்டு விற்கப்படுகிறதா?, கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், இறைச்சி விற்கும் இடங்கள் சுகாதாரமான முறையில் இருக்கிறதா?, இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 3 கிலோ அளவிலும் மற்றும் நாள்பட்ட இறைச்சி 5 கிலோ அளவிலும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    மாநில அளவிலான கராத்தே போட்டியில் அரியலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூரில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். 7 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் வரை பல மாவட்டங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். கத்தா, குமித்தே, குத்துச்சண்டை, உதையாட்டம், சிலம்பம், வாள் வீச்சு, கராத்தே என 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் 21 பேர் கலந்து கொண்டனர். 

    இதில், 11-ம் வகுப்பு மாணவி சந்தியா சிலம்பத்தில் இரண்டாம் பரிசும், 9-ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ கராத்தேவில் முதலிடமும், 9-ம் வகுப்பு மாணவி ரோஷினி கத்தாவில் இரண்டாம் இடமும், 11-ம் வகுப்பு மாணவி கவுரி சங்கரி முதல் இடமும், வாள் சண்டையில் 11-ம் வகுப்பு மாணவி சங்கீதா மூன்றாம் இடமும், குமித்தே போட்டியில் 10-ம் வகுப்பு மாணவர் திருமுருகன் முதலிடமும், உதையாட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவன் கவுதம் மூன்றாம் இடமும் பெற்றனர். மேலும், 9-ம் வகுப்பு மாணவர்கள் தனுஷ், மனோஜ் ஆகியோர் உதைஆட்டத்தில் முதல் இடமும், 9-ம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், பிரசாந்த் குத்துச்சண்டையில் முதல் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் சரவணனையும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ஜல்லிக்கற்கள் நிரவப்பட்ட நிலையில் சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால், அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் நடுவெளி கிராமத்தில் ஏரிக்கரை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதில் தத்தனூர் நடுவெளியில் உள்ள ஏரிக்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை முழுவதும் ஜல்லிக்கற்களால் நிரவப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் சாலைப்பணி நடைபெறவில்லை.

    இதனால் அந்த சாலை வழியாக சென்று வருவதற்கு சிரமம் ஏற்படுவதால், காலை, மாலை வேளைகளில் பொட்டக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை.

    பருக்கல், வளவெட்டிகுப்பம் ஆகிய ஊர்களில் இருந்து நடுவெளி ஏரிக்கரை சாலையில் வரும் வாகனங்கள் பஞ்சராகி விடுகின்றன. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களில் ஜல்லிக்கற்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 55). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8-ந் தேதியன்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்திற்கு பணி நிமித்தமாக சென்றுவிட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார். சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வேகத்தடை அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்ற முதியவரை காப்பாற்றும் நோக்கில் பிரேக் பிடித்தார்.

    அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்ததில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த முதியவருக்கும் பலத்த அடிபட்டது. இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
    ஜெயங்கொண்டத்தில் பாலியல் புகாரில் வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கணவரை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலைமணி(வயது 26). இவரது கணவர் கிங்ஸ்லின்தேவகுமார் என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கிங்ஸ்லின்தேவகுமாரை விடுவிக்கக்கோரி கலைமணி தனது குழந்தையுடன் நேற்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்திற்கும், சிறுமியின் தந்தைக்கும் முன்விரோதம் தொடர்பாக கடந்த 13-ந் தேதி ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நாங்கள் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தகராறில் எனது தந்தை வெங்கடேசன் தாக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் அவர்கள் மீது உள்ள தவறை மறைக்க எனது கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளனர். எனது கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முயற்சி செய்கின்றனர். எனது கணவர் குற்றமற்றவர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். விடுவிக்காவிட்டால் நானும், எனது 2½ வயது குழந்தையும் இறப்பதை தவிர வேறு வழி இல்லை. எங்களுக்கு ஆதரவு எனது கணவர் மட்டுமே என்று தெரிவித்து அழுது புலம்பினார்.

    இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் கலைமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்து, கலைமணியை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கணவரை மீட்க கோரி மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, தகராறு தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மேகநாதன் உள்ட 5 பேர் மீதும், மேகநாதன் கொடுத்த புகாரின்பேரில் வெங்கடேசன் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமி புகாரின்பேரில் கிங்ஸ்லின் தேவகுமார் மீது போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தார்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற சென்ற குருவின் மகன் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளம் கிராமம் மற்றும் ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே மாவீரன் மஞ்சள் படையின் கொடியினை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரும், காடுவெட்டி குருவின் மகனுமான கனலரசன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்றார். அப்போது, சட்டம், ஒழுங்கு பாதிக்கக்கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடி ஏற்ற வந்த கனலரசன் உள்பட 36 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதற்கிடையே மாவீரன் மஞ்சள் படை அமைப்பினர் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் நகர செயலாளர் மாதவன்தேவா உள்ளிட்டோர் ஜெயங்கொண்டத்தில் காமராஜர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். மேலும் கொடிக்கம்பத்தையும் அகற்றினர். அவர்களுடன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.

    மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தடை உத்தரவு அமலில் இருப்பதால், தடையை மீறி ஒன்று கூடியதாக திருமாவளவன் உள்பட 16 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜெயங்கொண்டம் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி மாவீரன் மஞ்சள் படை அமைப்பினருக்கும், பா.ம.க.வினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை ெதாடர்ந்து பா.ம.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக நேற்று கனலரசனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின்னர், செந்துறை கோர்ட்டில் கனலரசனை ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைப்பதற்காககனலரசனை போலீசார் அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் மஞ்சள் படை அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.
    உடையார்பாளையம் அருகே முதியவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 65). விவசாயியான இவர் நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் சரவணன், கோவிந்தசாமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் தந்தையும் இறந்ததால் மருத்துவ கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர்கோவில் கிராமத்தில் உள்ள மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். சித்த மருத்துவரான இவர் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள் சுவாதி(வயது 23). இவர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யப்பன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதற்காக ஊருக்கு வந்த அவர், பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளார். மேலும், சிறு வயதிலேயே சுவாதியின் தாய் இறந்துவிட்ட நிலையில், தற்போது தந்தையும் இறந்ததால் சுவாதி துக்கம் தாளாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி, அய்யப்பன் இறந்து 30 நாள் ஆனதையொட்டி வீட்டு தெய்வத்திற்கு படைப்பதற்காக சென்னையில் இருந்து சுவாதி, குருவாலப்பர் கோவிலுக்கு வந்தார். அன்று மாலை வீட்டில் இருந்த அவர், திடீரென வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்ததாக தெரிகிறது.

    உடனடியாக அவரை, அவரது சித்தி புஷ்பா மற்றும் உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சுவாதி உயிரிழந்தார். இது குறித்து அவரது சித்தி புஷ்பா(43) கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து, சுவாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சாத்தமங்கலத்தில் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சகுந்தலா பாண்டிராஜன். அந்த ஊராட்சியின் செயலாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் ஊராட்சிக்கு தேவையான திட்ட பணிகள் எதையும் சரிவர செய்யவில்லை என்றும், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட செய்ய முடியாமல் ஊராட்சி செயலாளர் ரமேஷ் தடுப்பதாகவும், அவரை வேறு ஊராட்சிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து மனு அளித்தார்.

    அதனை ஏற்று அதிகாரிகளும், ரமேசை கீழக்கொளத்தூர் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டனர். ஆனால் ரமேஷ், பலரது சிபாரிசுடன் அந்த பணியிட மாற்ற உத்தரவை திரும்பப்பெற செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி தீக்குளிக்கப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தமங்கலம் விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் மண்எண்ணெய் கேனுடன் வீட்டை விட்டு வெளியே வந்தபோதே, அவரை தடுத்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று அறிவுரை வழங்கினர்.

    மேலும் அதிகாரிகள் அவரை சந்தித்து, அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார், அதற்கான கோரிக்கை மனுவை மீண்டும் அளிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றால் மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். 

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தா.பழூரில் போலீஸ் நிலையம் அருகே கடையின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் போலீஸ் நிலையத்திற்கு அருகில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஸான்லால் என்பவர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர், கடையை வழக்கம்போல்பூட்டிவிட்டு கிஸான்லால் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று காலை கடையை திறப்பதற்கு அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவில் அதே பகுதியில் உள்ள செல்வபதி என்பவர் நடத்தி வரும் பாத்திரக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் மர்ம நபர் ஈடுபட்டதாகவும், பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு உரிமையாளர் எழுந்து வந்ததாகவும், இதனால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து கடை உரிமையாளர்கள் 2 பேரும், தா.பழூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருட்டு நடந்த எலக்ட்ரிகல் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது, அதில் திருட்டில் ஈடுபட்டவரின் உருவம் பதிவாகியிருந்தது. மேலும் அந்த நபர், பகல் நேரத்தில் கடையை நோட்டமிடுவதற்காக வந்து சென்ற காட்சியும் பதிவாகியிருந்தது. இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு மற்றும் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு வெகு அருகில் உள்ள கடையில் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டுள்ளதும், மற்றொரு கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளதும் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே தபால் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனத்தில் வந்த தபால் மூட்டைகளை அலுவலக ஊழியர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவர் பழனி, போக்குவரத்திற்கு இடையூறாக தபால் வாகனத்தை ஏன் நிறுத்தி உள்ளீர்கள் என்று கேட்டு தபால் ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 

    இதனால், ஆத்திரமடைந்த தபால் ஊழியர்கள் தபால் வாகனத்தை சாலையின் குறுக்காக நிறுத்தி தபால் மூட்டைகளை சாலையில் வைத்து போலீஸ் ஜீப் டிரைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், காதர்கான் (போக்குவரத்து) ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதனை ஏற்று தபால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பட்டா வழங்கப்பட்ட இடத்தினை அரசு அலுவலர்கள் அளந்து குடியமர்த்த வேண்டும் எனக் கோரி உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் ஆதிதிராவிடர் காலனி தெரு மக்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு, 98 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை அளந்து தங்களை குடியமர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை அரசு அலுவலர்கள் அளந்து குடியமர்த்த வேண்டும் எனக் கோரி உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தை உடையார்பாளையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில், வானத்திரையான்பட்டினம் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வி.சி.க. உடையார்பாளையம் பொறுப்பாளர் கவர்னர் நன்றி கூறினார்.

    பின்னர், ஊர்வலமாக சென்று உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    ×