என் மலர்
செய்திகள்

கைது செய்யப்பட்ட கனலரசன் போலீஸ் வேனில் ஏறியபோது எடுத்த படம்.
ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற சென்ற குருவின் மகன் உள்பட 36 பேர் கைது
ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற சென்ற குருவின் மகன் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளம் கிராமம் மற்றும் ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே மாவீரன் மஞ்சள் படையின் கொடியினை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரும், காடுவெட்டி குருவின் மகனுமான கனலரசன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்றார். அப்போது, சட்டம், ஒழுங்கு பாதிக்கக்கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடி ஏற்ற வந்த கனலரசன் உள்பட 36 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதற்கிடையே மாவீரன் மஞ்சள் படை அமைப்பினர் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் நகர செயலாளர் மாதவன்தேவா உள்ளிட்டோர் ஜெயங்கொண்டத்தில் காமராஜர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். மேலும் கொடிக்கம்பத்தையும் அகற்றினர். அவர்களுடன், போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.
மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தடை உத்தரவு அமலில் இருப்பதால், தடையை மீறி ஒன்று கூடியதாக திருமாவளவன் உள்பட 16 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜெயங்கொண்டம் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி மாவீரன் மஞ்சள் படை அமைப்பினருக்கும், பா.ம.க.வினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை ெதாடர்ந்து பா.ம.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று கனலரசனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின்னர், செந்துறை கோர்ட்டில் கனலரசனை ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைப்பதற்காககனலரசனை போலீசார் அழைத்து சென்றனர்.
இதற்கிடையே மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் மஞ்சள் படை அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.
Next Story






