என் மலர்tooltip icon

    அரியலூர்

    கீழப்பழுவூர் அருகே விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழப்பழுவூர்:

    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள சுண்டக்குடி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளியையொட்டி உள்ள விடுதியில் தங்கியும் மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த விடுதி வார்டன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் விடுதி சமையலர்கள் 2 பேரும், அந்த விடுதியில் தங்கி பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர், வார்டன், சமையலர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு சென்ற சுகாதாரத் துறை அலுவலர்கள், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் வார்டன் மற்றும் சமையலர்களின் குடும்பத்தினருக்கும் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அந்த பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் வகுப்புக்கு வருவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பாடங்களை ஆன்-லைன் மூலம் நடத்த வேண்டும். பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
    வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    அரியலூர்:

    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த பணி கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது எந்திரங்கள் பழுதானால், அதனை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட ஒதுக்கீட்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 20 சதவீதம் கட்டுப்பாட்டு கருவியும், வாக்குப்பதிவு எந்திரங்களும், 28 சதவீதம் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் கூடுதலாக ஓதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி 20 சதவீத இருப்புடன் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 376 வாக்குச்சாவடி மையங்களுக்கு 452 வாக்குப்பதிவு எந்திரங்களும், 452 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் 28 சதவீத இருப்புடன் 482-ம், மேலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 377 வாக்குச்சாவடி மையங்களுக்கு 453 வாக்குப்பதிவு எந்திரங்களும், 453 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் 28 சதவீத இருப்புடன் 483-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கருவிகளும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோடியால் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). விவசாயி. இவருக்கும், கடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்தரசன்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்தரசன் தகாத வார்த்தையால் திட்டி, செந்தில்குமாரை தாக்கினார். இதில் செந்தில்குமார் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தில்குமார் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முத்தரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    விக்கிரமங்கலம் அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஆலவாய் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 63). கூலித் தொழிலாளியான இவரும், கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரும், பெண் பார்க்கும் விஷயமாக சுத்தமல்லி சென்றனர். பின்னர் அங்கிருந்து சுத்தமல்லி -விக்கிரமங்கலம் சாலையில் மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். ஆலவாய்க்கும் கோரைக்குழிக்கும் இடையே துனிச்சிக்குட்டை என்ற ஏரிக்கு அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மரியதாஸ் ஓட்டி வந்த மொபட் மீது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. அப்போது மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த கோவிந்தராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சரக்கு ஆட்டோவின் முன் சக்கரம் கோவிந்தராஜின் தலையில் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அங்கு வந்து, கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த காமரசவல்லி கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணனை(29) போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோரைக்குழி வடக்கு தெருவை சேர்ந்த அம்பிகாவின்(வயது 42) வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி (46) என்பவருடைய வீட்டில் சோதனை செய்து, அவரது வீட்டின் பின்புறம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அம்பிகா, முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டத்தில் வடமாநில சர்க்கஸ் தொழிலாளி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செந்துறை சாலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து சர்க்கஸ் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சர்க்கஸ் தொழிலாளர்கள் வேலையிழந்து கட்டிட வேலை போன்ற வேலைகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அந்த சர்க்கசில் வேலை செய்வதற்காக கொல்கத்தாவை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி கபீர்(வயது 26) என்பவர் வந்தார். ஆனால் சர்க்கஸ் நடைபெறாததால் டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக நேற்று ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரில் ஒரு வீட்டிற்கு கபீர் சென்றார். வேலை செய்தபோது அவர் மயக்கம் வருவதாக கூறியுள்ளார். பின்னர் கழிவறை சென்று வருவதாக கூறி சென்றவர் மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கபீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், அங்கு சென்று கபீரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே 3 குழந்தைகளின் தாய் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சத்திரம் மேலத்தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி. இவருடைய மகள் விஜயா (வயது 27). விஜயாவுக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் உள்ள வெங்கட்ராமனுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய திருமணநாள் அன்று வெங்கட்ராமன் வீட்டில் இல்லாமல் ஜெயங்கொண்டம் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த விஜயா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வைத்தியநாதசாமி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விஜயாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென அரியலூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பயண அட்டையை உடனே வழங்க வேண்டும். பழிவாங்கும் வகையில் ஒரு மாணவனை பருவ தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி முதல்வரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கல்லூரியில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும், மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உங்களது கோரிக்கைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
    அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஒரு மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஒரு மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், வருகிற 14-ந் தேதி காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரியவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமிற்கு வரும் கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்கள் முகவரி சான்றிதழ் நகல்களாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் அட்டையை அவசியம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    தா.பழூரில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    கொரோனா பரவலின் எண்ணிக்கை நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அகிலா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. ஆய்வில் தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், முத்துபிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த ஜனவரி மாதம்25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதற்கிடையே சிறுமி, அந்த சிறுவனுடன் பேசியதை அவரது உறவினர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்த அவருடைய உறவினர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.
    நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.

    பஸ் நிறுத்தத்தையொட்டி உள்ள சாலை பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், இந்த சாலை வழியாகவே பஸ், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

    இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூரில் இருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் வாகனம் இறங்கி ஏறும்போது விபத்துக்கு உள்ளாகி காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×