என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தா.பழூர்: 

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் காரைக்குறிச்சி ஊராட்சி தலைவர் கவிதா, துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் தனவேல், ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனங்களில்  வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 9 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
    வாரணவாசியில் வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்: 

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அரியலூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தி  விரிவாக்க பணி சாலையின் இருபுறங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால், மழைக்காலங்களில் அருகே உள்ள  குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், எனவே சாலையின் உயரத்தை குறைக்கக்கோரியும், வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் இருக்க வடிகால் வசதி  ஏற்படுத்தி தரக்கோரியும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும்  சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், அரியலூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கம்பியை வைத்து, கிராம மக்கள் திடீர் சாலை மறியலில்  ஈடுபட்டனர். 

     இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீசார், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.  இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தா.பழூர் அருகே துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது மொபட் மீது பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் வக்காரமாரி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மனைவி பங்கஜம்(வயது 58), மகன் நடராஜன். இந்நிலையில் பங்கஜம், நடராஜனுடன் பந்தநல்லூர் அருகே உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் ஊருக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்தபோது சாலை வளைவில் வேகமாக வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பங்கஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நடராஜன் பலத்த காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் அங்கு சென்று, பங்கஜத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    உடையார்பாளையத்தில் தர்பூசணி விற்பனை அமோகமாக நடக்கிறது. ஒரு தர்பூசணி ரூ.20 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் பழச்சாறு, இளநீர், நீர்மோர், குளிர்பானங்கள், கம்பங்கூழ் போன்றவற்றை குடித்தும், நுங்கு, வெள்ளரிபிஞ்சு போன்றவற்றை உண்டும் வெப்பத்தை சமாளிக்கின்றனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூரில் விற்பனைக்காக சாலையோரத்தில் தர்பூசணிகள் குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் அந்த தர்பூசணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அளவுக்கேற்ப ஒரு தர்பூசணி ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தர்பூசணி வெட்டப்பட்டு 5 துண்டுகள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அந்த வழியாக செல்லும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தர்பூசணி பழங்களை வாங்கி உண்கின்றனர். மேலும் வீட்டிற்கும் வாங்கி செல்கின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது என்றும், அக்னி நட்சத்திரம் தொடங்கியபின்னர் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்போது, தர்பூசணி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, கொள்முதல் செய்த தர்பூசணி அனைத்தும் வீணாகியதால் கவலை அடைந்தோம். அதேபோல் தற்போது கொரோனா மீண்டும் பரவி வருவதால் விற்பனை பாதிக்குமோ என்று கவலையாக உள்ளது, என்றனர்.
    அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குன்னம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது;-

    உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போன்ற கூட்டணி பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி. கொரோனாவுக்கு தடுப்பூசி போன்றது தமிழகத்திற்கு தி.மு.க. ஆட்சி. அதற்கு தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். சினிமா நடிகர்கள் போன்று ஒவ்வொருவர் வருவார்கள். அதனை நம்பி ஏமாந்து விடாதீர்கள். நம்முடைய வாழ்வுரிமைக்காக, கல்வி உரிமைக்காக, பெண்ணுரிமைக்காக, மனித உரிமைக்காக போராடும் கட்சி தி.மு.க.தான்.

    மே 2-ந் தேதி ஸ்டாலின்தான் கோட்டையில் கொடி ஏற்றப்போகிறார். அதன்பிறகு ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களை மட்டும் மீட்டெடுக்க போவதில்லை. பா.ஜ.க.வில் அடகு வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வையும் மீட்டெடுக்க போகிறார்.

    இதேபோல் அரியலூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து, அரியலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில், தமிழகத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியால் பாதிக்கப்படாத மக்கள் யாருமில்லை. மதவெறி, சாதி வெறியை வெளியேற்றவே தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி பா.ஜ.க. ஆனால் நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்று அமித்ஷா சொன்னபோது, அ.தி.மு.க. தரப்பில் மறுத்து பேச முடியவில்லை. ஏன் என்றால் அ.தி.மு.க. மடியில் கணம், வழியில் பயம் என உள்ளது. நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் உயிர்பலி தொடர்கிறது. அதை தடுக்க ஏன் நடவடிக்கை இல்லை. செவிலியர் படிப்புக்கும் தற்போது நீட் தேர்வு. குலகல்வியை எதிப்பது எங்கள் அணி, என்றார்.
    செந்துறை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது 26). பூ விவசாயி. நேற்று இவர், மோட்டார்சைக்கிளில் நத்தத்துக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். குட்டுப்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற சரக்குவேன், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் திருமுருகனை (24) கைது செய்தனர். இறந்து போன சக்திக்கு நித்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அரியலூரை அடுத்த வி.கைகாட்டியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

    கனிம சுரங்கங்கள் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில் தினமும் இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை சந்திக்கும் மக்களுக்காகவும், நிலத்தை சிமெண்டு ஆலைகளுக்கு கொடுத்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் மக்களுக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடி வருபவர்தான் வேட்பாளர் சின்னப்பா. அவர் வெற்றி பெற்றால் உங்களுக்கு உரிய தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவார்.

    தற்போது நடைபெற்று வருவது ஊழல் ஆட்சி. முதல்-அமைச்சர் ரூ.6 ஆயிரம் கோடிக்கு தனது உறவினர்களுக்கு சாலை ஒப்பந்தங்களை கொடுத்துள்ளார் என்ற பட்டியலையும், தனது உறவினர்கள் பெயரில் ரூ.200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார் என்ற பட்டியலையும் ஸ்டாலின், கவர்னரிடம் கொடுத்துள்ளார். அதேபோல், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு மீறிய சொத்துக்களை ஊழல் செய்து சம்பாதித்துள்ளனர் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வது மோடிக்கு பிடிக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அதனை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.

    ‘நீட்’ தேர்வை கொண்டு வந்ததால்தான் இதே மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா உயிரிழந்தார். தமிழகத்துக்கு ‘நீட்’ இல்லை என ஒரு பொய்யான தகவலை பரப்பி, நம்பிக்கை மோசடி செய்தவர் பழனிசாமி. கிராம சபை கூட்டத்தை அரசு நடத்தாததால் ஸ்டாலின் மக்கள் சபை கூட்டத்தை நடத்தினார். திருச்சியில் ஒன்றிணைவோம் வா என கூட்டத்தை நடத்தி, 7 வாக்குறுதிகளை வழங்கினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 90 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளை ஆளும் கட்சி இதுவரை எடுக்கவில்லை. ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசை வெளியேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் அரியலூரில் அவர் பேசுகையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி தண்டவாளத்தில் தலை வைத்து ெரயில் மறியல் போராட்டம் நடந்து. அதில் பங்கேற்ற கருணாநிதி தனது அரசியல் வாழ்வில் முதன் முதலாக அரியலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தமிழுக்காக திருச்சி ெரயில் நிலைய சந்திப்பில் கீழப்பழுவூரை சேர்ந்த சின்னசாமி உயிரை மாய்த்துக் கொண்டான். இதுபோன்று பல அரசியல் நிகழ்வுகளை கண்டது இந்த மாவட்டம். தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளித்து தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்திடவும், ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும் அரியலூர் மக்கள் ஆதரவு தர வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும் அவர் விக்கிரமங்கலம், சுண்டக்குடி, ஏலாக்குறிச்சி, வெங்கனூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி வாகனங்களின் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியே 4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பறக்கும் படையினரும், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச்சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.5 கோடியே 4 லட்சத்து 45 ஆயிரத்து 660 ரொக்கமும், 2 பேரிடம் இருந்து 3 ஆயிரத்து 200 குக்கர்களும் மற்றும் ஒருவரிடம் இருந்து 122 பட்டுப்புடவைகளும், 2 பட்டு வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 18004256322, 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாகவும், 04329-296320, 296321, 296322, 296323 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் 8489551950 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாவும் புகார்களை cVIGIL என்ற செயலி மூலமாக தெரிவிக்கலாம். மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம் அரியலூர் தொகுதியில் இதுவரை 6 புகார்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு புகாரும் பெறப்பட்டு உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கடைவீதி, புறவழிச்சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    உடையார்பாளையம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கடைவீதி, புறவழிச்சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ்சந்தரபோஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், செல்வகாந்தி ஆகியோர் அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்தவர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் மொத்தம் ரூ.7 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஆண்டிமடம் அருகே மேலநெடுவாய் கிராம பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் காங்குழி, அய்யூர், வல்லம் மற்றும் குவாகம் கிராமங்களில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், வியாபார நிறுவனங்களில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்தவர்கள் என 11 பேருக்கு தலா 200 அபராதம் விதித்தனர். இதில் மொத்தம் ரூ.2,200 வசூல் செய்யப்பட்டது. இது பற்றி மருத்துவ அலுவலர் கண்ணன் கூறுகையில், பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கிருமி நாசினி பயன்படுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும், என்றார். ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நாட்டு துரை, சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் சுகாதாரக்குழுவினர் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2½ லட்சம் பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஜெயங்கொண்டம்:

    தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி-சிதம்பரம் சாலை புதுச்சாவடி அருகே பறக்கும் படை-2 அதிகாரி நடராஜன் தலைமையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தவழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அட்டைப்பெட்டி ஒன்றில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான 122 பட்டுப்புடவைகளை கொண்டு வந்தார். ஆனால், அந்த பட்டுப்புடவைகள் கொண்டு செல்ல ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் நிலை உள்ளது. கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சிய போக்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் பங்கேற்கும்போதும், பயணங்கள் மேற்கொள்வதிலும் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடர்வதும், பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருவதும் கொரோனா தொற்றின் அதிகரிக்கும் விதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கிருமிநாசினி பயன்படுத்தாதது மற்றும் வெப்பமானி உபயோகிக்காதது போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 6-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், முககவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மொத்தம் ரூ.8,200 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் விமலா, வட்ட வழங்கல் அலுவலர் சரண்யா, வருவாய் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மணல் கடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கொள்ளிடக்கரை பகுதியில் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் மற்றும் உதவியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிட கரையில் வந்த லாரியை மறித்து சோதனையிட்டபோது, அதில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, லாரியை ஓட்டி வந்த டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் காரைக்குடியை சேர்ந்த கணேசன் (56) என்பவரை கைது செய்தார். மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும், மணல் கடத்தி வரப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×