என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பன்னீர் பிரியாணிக்கு பதில் சிக்கன் பிரியாணி வந்தது வேதனையாக உள்ளது.
    • ஆர்டர் வினியோகம் செய்த ஊழியரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் தான் கேட்க வேண்டும் என கூறினார்.

    ஆன்லைன் மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது சில நேரங்களில் ஆர்டர் மாறி விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.இது தொடர்பாக வாரணாசியை சேர்ந்த அஸ்வினி சீனிவாசன் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், எனது நண்பர் சோமோட்டோவின் மூலம் அதே பகுதியில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் ரூ.1,228-க்கு பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு சிக்கன் பிரியாணி வந்துள்ளது. அவர்களது குடும்பம் ஒரு போதும் அசைவ உணவு சாப்பிட்டதில்லை. ஆரம்பத்தில் பன்னீர் பிரியாணி என்று நினைத்து அவர்களது குடும்பத்தினர் அதனை சாப்பிட்ட போது தான் அது சிக்கன் என தெரிய வந்தது.

    இதுபோன்று பன்னீர் பிரியாணிக்கு பதில் சிக்கன் பிரியாணி வந்தது வேதனையாக உள்ளது. உடனே ஆர்டர் வினியோகம் செய்த ஊழியரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் தான் கேட்க வேண்டும் என கூறினார். ஆனால் அவர்களும் உரிய பதில் அளிக்கவில்லை. இதற்கு யார் தான் பொறுப்பு? என கூறியிருந்தார். அதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு சிலர் சோமோட்டாவுக்கு ஆதரவாகவும், சிலர் மாற்று கருத்துக்களையும் பதிவிட்டு வருவதால் ஒரு விவாதமாகவே மாறியுள்ளது.

    • எக்ஸ்பிரஸ் சாலையில் பள்ளி வாகனம ஒன்வே-யில் தவறாக வந்ததால் விபத்து
    • உயிரிழந்த அனைவரும் சொகுசு காரில் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இன்று பள்ளி பேருந்து ஒன்று சொகுசு காரின் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    இன்று அதிகாலை டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் சென்ற அந்த சொகுசு காரின் மீது தவறான திசையில் வந்த பேருந்து நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    அந்த கார் குர்கானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் பலியான 6 பேரும் அந்த காரில் பயணித்தவர்கள். பள்ளி பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீசார் விசாரணையில் பள்ளி வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 9 கி.மீ. தூரம் தவறான பாதையிலேயே பயணித்தது தெரியவந்தது. காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க காரின் கதவுகளை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு பள்ளி வாகனம் சொகுசு கார் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    • முதல் தளத்தின் கட்டமைப்பும் வருகிற நாட்களில் தயாராகி விடும்.
    • மீதமுள்ள சிற்ப வேலைகள் 2025-க்குள் முடிவடையும்.

    அயோத்தி :

    அயோத்தி ராமஜென்மபூமியில் ராம பிரானுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் கோவில் கருவறையில் ராமபிரான் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் கோவிலை கட்டி வரும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

    இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ராம பிரானின் பிரமாண்ட கோவில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே தயாராகிவிடும். கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் கோவிலின் கருவறையில் ராம் லல்லா (குழந்தை ராமர்) பிரதிஷ்டை செய்யப்படுவார்' என தெரிவித்தார்.

    அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபா கூறியதாவது:-

    தரைத்தள கட்டமைப்பு தயாராக உள்ளது. தரை தளத்தில் 5 அரங்குகள் உள்ளன. கோவிலின் ஈர்ப்பு மையமாக மண்டபம் இருக்கும். பிரதான மண்டபத்தில் கடவுளின் கொடி எப்போதும் ஏற்றப்பட்டிருக்கும்.

    கோவில் கருவறை சுவர்கள் மற்றும் கூரைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தரை மற்றும் வெளிப்புற வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை. கோவிலின் கீழ் தளத்தில் உள்ள 166 தூண்களில் சிலைகள் வடிக்கும் பணி நடந்து வருகிறது. கருவறையில் உள்ள 6 தூண்கள் வெள்ளை மார்பிள் கற்களாலும், வெளிப்புறத் தூண்கள் இளஞ்சிவப்பு கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.

    முதல் தளத்தின் கட்டமைப்பும் வருகிற நாட்களில் தயாராகி விடும். மீதமுள்ள சிற்ப வேலைகள் 2025-க்குள் முடிவடையும். 2024-ம் ஆண்டு சித்ரா ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம்லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது பக்தர்களுக்கு தெய்வீக அனுபவமாக இருக்கும்.

    இவ்வாறு காமேஷ்வர் சவுபா கூறினார்.

    மற்றொரு உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், 'மகர சங்கராந்திக்கு பிறகு பக்தர்கள் ராமபிரானை தரிசிக்கலாம். சுமார் 300 முதல் 400 பேர் ஒரே நேரத்தில் ஸ்ரீராமரை தரிசனம் செய்ய முடியும். கோவிலின் தரைத்தளத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்தாலும், தளம், மின்விளக்கு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் செய்ய வேண்டியுள்ளது' என்று கூறினார்.

    • பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பது தெரியவந்தது.
    • மின்தடை தொடர்பான பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாக தகவல்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவரை கடுமையாக தாக்கி செருப்பை நாக்கால் நக்க வைத்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அந்த வீடியோவில் ஒரு நபர், மரக்கட்டிலில் அமர்ந்தபடி காலை நீட்ட, அவரது செருப்பை ஒரு வாலிபர் நாக்கால் நக்கி சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. அத்துடன், அந்த வாலிபர் காதை பிடித்துக்கொண்டு, தான் செய்தது தவறுதான் என கூறி தோப்புக் கரணம் போடுகிறார். இதேபோல் மற்றொரு வீடியோவில் அந்த நபர், வாலிபரின் கையை முறுக்கி கீழே தள்ளி கடுமையாக தாக்குவது பதிவாகியிருந்தது.

    இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மின்சாரத்துறையின் லைன்மேன் தேஜ்பாலி சிங் என்பதும், பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேஜ்பாலி சிங் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

    ராஜேந்திராவின் தாய் மாமன் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கனவு நிறைவேறப் போகிறது.
    • கீதா பிரஸ் என்பது உலகின் ஒரே அச்சகம்.

    பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அதன்படி முதலில் சத்தீஸ்கர் மாநிலம் சென்ற அவர், ராய்ப்பூரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் முடிவடைந்த திட்டங்களை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    அங்கிருந்து கோரக்புர் விரைந்த பிரதமர் மோடி, கீதா பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அங்கு உரையாற்றி பிரதமர் மோடி தனது கோரப்பூர் பயணம் குறித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தனது கோரக்பூர் பயணம் கீதா பதிப்பகம் நிறைவு விழாவில் கலந்துக் கொண்டது, நவீன ரெயில்களை அறிமுகப்படுத்தியது, பாரம்பரியத்துடன் வளர்ச்சியை இணைக்கும் தனது அரசாங்கத்தின் கொள்கையை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த முறை கோரக்பூர் பயணம் பாரம்பரியம் மற்றும் மேம்பாடு கொள்கைக்கு ஒரு தனித்துவமான உதாரணம்.

    பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கனவு நிறைவேறப் போகிறது. மராட்டிய ஆட்சியாளர் சிவாஜியின் கொடியின் அடிப்படையில் கடற்படை சின்னங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

    கல்யாண் பத்திரிக்கைக்கு விளம்பரம் எடுக்க வேண்டாம் என்று கீதா பத்திரிகைக்கு மகாத்மா காந்தி அறிவுறுத்தியிருந்தார். அது இன்னும் அந்த ஆலோசனையை பின்பற்றுகிறது.

    ரெயிலின் மீது ஒரு மோகம் உள்ளது. முன்பு, தலைவர்கள் தங்கள் பகுதிகளில் ரெயில்களை நிறுத்துவது பற்றி எழுதினர். இப்போது, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்தே பாரத் ரெயில்களை இயக்கக் கோரி எனக்கு கடிதங்கள் வருகின்றன. வந்தே பாரத் நடுத்தர மக்களுக்கு வசதிகள் மற்றும் வசதிகளை வழங்கியுள்ளது.

    கீதா பிரஸ் என்பது உலகின் ஒரே அச்சகம். அது ஒரு அமைப்பு அல்ல. வாழும் நம்பிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார்.
    • ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர்.

    உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உஷைத் நகரில் நடந்த மற்றொரு மின்னல் சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர். மேலும், மூன்று பேர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.

    திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

    ரேபரேலியின் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமகாந்தி (38) மின்னல் தாக்கி இறந்தார். மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • திருமணம் முடிந்த ஒரு வருடத்தில கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் இருந்தபோது தொடர்பு
    • கர்ப்பமானதால் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் கொலை செய்துள்ளார்

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயல்வெளியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் கள்ளக்காதலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    அந்த பெண்ணிற்கு கடந்த 2015-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்தில் திருமண வாழ்க்கை கசக்க, இந்த ஜோடி பிரிந்தது. அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது ஆதேஷ் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு பின் கள்ளக்காதலாக மாறியது.

    இருவரும் தனிமையில் சந்திக்க, அந்த பெண் கர்ப்பமானார். இதனால் ஆதேஷ் இடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், ஆதேஷ் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முயற்சி செய்தார்.

    அந்த பெண்ணை தீர்த்துக்கட்ட நான்கு பேர் உதவியை நாடினார். அவர்களும் கொலை செய்ய ஒப்புக் கொண்டர். சம்பவம் நடைபெற்ற ஜூலை 2-ந்தேதி ஆதேஷ் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

    அந்த பெண் ஆதேஷ் வீட்டிற்கு வந்ததும், தயாராக இருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்த்து செங்கலால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், உடலை வயல்வெளியில் வீசி, யாருக்கும் தெரியாததுபோன்று வீட்டில் இருந்துள்ளார். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

    • தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டம் சிப்ரிபஜார் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது.

    நேற்று இரவு இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் சிக்கி கொண்ட இன்சூரன்சு நிறுவனத்தை சேர்ந்த உதவி பெண் மேலாளர் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 3 மாடி கட்டிடமும் தீயில் கடுமையான சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதாவும் அரசியல் பிரமுகருமான அதிக் அகமதுவிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 76 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த குடியிருப்புகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று திறந்து வைத்தார்.

    மேலும் இந்த குடியிருப்புகளை மலிவு விலையில் ஏழைகளுக்கு வழங்கினார். ஜூன் 9ம் தேதி நடைபெற்ற குலுக்கல் முறைப்படி பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 41 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரூ.3.5 லட்சத்திற்கு பயனாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    குடியிருப்பை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, அவர்களின் குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை மற்றும் அக்கொலைக்கு முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, கடந்த ஏப்ரல் 15ம் தேதி இரவு, பிரயாக்ராஜில் காவல்துறையினரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
    • பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது.

    அந்த படத்தில் ரமேஷ் சந்திர சஹானியின் மனைவி மற்றும் குழந்தைகள் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போஸ் கொடுத்தவாறு இருந்தனர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் பணம் என்று தெரிவித்தார்.

    மேலும், அவர் தன்னை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அந்த படம் கடந்த 2021 நவம்பர் மாதம் 14-ந்தேதி எடுக்கப்பட்டது என்றும், அது முறைகேடாக சம்பாதித்த பணம் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும் பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    விசாரணை நிறைவில் போலீஸ் அதிகாரியான ரமேஷ் சந்திர சஹானி காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ்காரரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நோட்டு மூட்டைகளுடன் உள்ளனர்.

    இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண் டுள்ளோம், அந்த போலீஸ் காரர் காவல் துறையின் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
    • தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை.

    உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், இரண்டு தோட்டாக்கள் கார் மீது பாய்ந்தது. முதல் தோட்டா காரின் இருக்கை மீது பாய்ந்தது. மற்றொரு தோட்டா கதவு வழியாக சென்றபோது ஆசாத்தின் இடுப்பை உரசியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

    சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி விபின் தடா கூறுகையில், "சந்திர சேகர் ஆசாத்தின் கான்வாய் மீது காரில் வந்த ஆயுதம் ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு தோட்டா அவரைத் தாண்டிச் சென்றது. அவர் நலமாக உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்" என்றார்.

    காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

    மேலும், பீம் ஆர்மி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,"சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பீம் ஆர்மி தலைவரும் தேசியத் தலைவருமான பாய் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

    ×