search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி. தாதாவிடம் இருந்து பறிமுதல் செய்த நிலத்தில் குடியிருப்புகள்.. மலிவு விலையில் ஏழைகளுக்கு வழங்கிய முதல்வர்
    X

    உ.பி. தாதாவிடம் இருந்து பறிமுதல் செய்த நிலத்தில் குடியிருப்புகள்.. மலிவு விலையில் ஏழைகளுக்கு வழங்கிய முதல்வர்

    • இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதாவும் அரசியல் பிரமுகருமான அதிக் அகமதுவிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 76 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த குடியிருப்புகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று திறந்து வைத்தார்.

    மேலும் இந்த குடியிருப்புகளை மலிவு விலையில் ஏழைகளுக்கு வழங்கினார். ஜூன் 9ம் தேதி நடைபெற்ற குலுக்கல் முறைப்படி பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 41 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரூ.3.5 லட்சத்திற்கு பயனாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    குடியிருப்பை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, அவர்களின் குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.

    2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை மற்றும் அக்கொலைக்கு முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, கடந்த ஏப்ரல் 15ம் தேதி இரவு, பிரயாக்ராஜில் காவல்துறையினரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×