என் மலர்
உத்தரப் பிரதேசம்
- 15 நாட்களுக்கு முன்பு அஸ்மா இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
- குழந்தைகள் பிறந்ததில் இருந்து தினமும் வீட்டில் பூனை ஒன்று காணப்பட்டதாக போலீசில் கூறி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டுப் பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. அக்குழந்தையின் தாய் அஸ்மா, 15 நாட்களுக்கு முன்பு கவுத்ரா பட்டி பௌனி கிராமத்தில், அல்ஷிஃபா மற்றும் ரிஹான் என பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து தினமும் வீட்டில் பூனை ஒன்று காணப்பட்டதாகவும், ஆனால் உஷாரான
குடும்பத்தினர் அதை விரட்டி வந்ததாகவும் அஸ்மாவின் கணவர் ஹசன் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
நேற்றிரவு, அஸ்மாவுக்கு அருகில் குழந்தை ரிஹான் தூங்கி கொண்டிருந்திருக்கிறான். அப்போது ரிஹானை பூனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை கண்ட தாய் அஸ்மா எழுந்து கூக்குரலிட்டார். உடனே ஹசன் தன் குழந்தையை காப்பாற்ற அந்த பூனையை துரத்திக் கொண்டு ஓடினார். அப்போது வீட்டின் கூரை மேல் ஓடிய அந்த பூனை, குழந்தை ரிஹானை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது. கூரையிலிருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குழந்தை ரிஹான் உயிரிழந்தான்.
இச்சம்பவத்தை உறுதி செய்த காவல்துறையினர், இவ்விவகாரத்தில் குழந்தையின் குடும்பத்தினர் இதுவரை புகார் ஏதும் கொடுக்கவில்லை என கூறினர்.
- தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
- தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆக்ரா:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒருவரை வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினார்.அந்த கும்பல் ஆபாசமாக திட்டியபடி அவரை கீழே தள்ளி தலையில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் அப்படியே மயங்கி விட்டார்.
அதன் பிறகு தான் அந்த மோசமான சம்பவம் அரங்கேறியது. காயத்துடன் உயிருக்கு போராடியவர் மீது வாலிபர் சிறுநீர் கழித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலுக்கு ஆளானவரை பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சேர்த்தனர். ஆனால் தாக்கப்பட்டவர் இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஆதிய்யா என்ற வாலிபர் சிக்கினார். போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாகவும், தற்போது தான் அந்த வீடியோ காட்சி வெளியானதாவும் போலீசார் தெரிவித்தனர்.
- தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
வாரணாசி:
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவில் மீது அந்த மசூதி கட்டப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய, ஒட்டுமொத்த மசூதி வளாகத்திலும் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாரணாசி கோர்ட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த கோர்ட்டு, மசூதியில் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளுடன் ஆகஸ்டு 4-ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையினர் வாரணாசிக்கு நேற்று சென்றனர். மசூதியில் ஆய்வுப் பணிகளை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். இந்த தகவலை வாரணாசி மாவட்ட கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார்.
இன்று காலை 7 மணிக்கு தொல்லியல் துறையை சேர்ந்த 30 பேர் ஆய்வுப் பணிகளை தொடங்கினார்கள். அவர்களுடன் இந்து வக்கீல்கள் உடன் இருந்தனர்.
அதுபோல இஸ்லாமியர்கள் சார்பிலும் பிரதிநிதிகள் உள்ளே இருந்தனர். அவர்களுக்கு உதவ இஸ்லாமிய வக்கீல்களுடன் உடன் இருந்தனர்.
தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மசூதி வளாகத்தில் 40 கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். வெளியே உத்தரபிரதேச போலீசார் அரண்போல நின்றனர். இந்த ஆய்வு மூலம் உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசூதியில் உள்ள வடிவம் ஒன்றை சிவலிங்கம் என்று கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்துக்கள் தரப்பு கூறி வருகிறது. அந்த வடிவம் உள்ள பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
அந்த உத்தரவைப் பின்பற்றி அந்த பகுதியில் மட்டும் இன்று அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மற்ற பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து தகவல்களை சேகரித்தனர்.
ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரி மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது. வருகிற 26-ந்தேதி வரை இந்த தடை இருக்கும். அதற்குள் மசூதி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
- தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
- தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-
தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.
அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவல் நிலையத்திற்குள் உள்ள சுவிட்ச்போர்டில் இருந்த குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
- தீயின் தீவிரம் காரணமாக கேன்டீனில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட்டில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மீரட்டின் சர்தானாவில் உள்ள காவல் நிலையத்திற்குள் உள்ள குற்ற ஆய்வு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 4 காவலர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அடர்த்தியான கரும் புகையின் வானத்தை நோக்கி சென்றது. இது, பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் தெரிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவல் நிலையத்திற்குள் உள்ள சுவிட்ச்போர்டில் இருந்த குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
அது வேகமாக கட்டிடத்தில் பால்கனியில் பரவியது. அங்கு ஒரு கேன்டீன் உள்ளது. தீயின் தீவிரம் காரணமாக கேன்டீனில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
பின்னர், தீவிர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் சிங் சஜ்வான் கூறியதாவது:-
தீ அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீயை அணைக்க முயன்றபோது தங்கள் அதிகாரிகள் 4 பேருக்கு கைகள் மற்றும் முகங்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த அளவில் காயம் அடைந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
- சந்த்பாபு வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் காதலை கைவிடுமாறு ஆசி பாவிடம் ரியாஸ் கூறியுள்ளார்.
- தங்கை என்றும் பாராமல் ஆசி பாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ரியாஸ் (24). இவரது தங்கை ஆசிபா (18). ஆசிபாவும் அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபுவும் காதலித்து வந்தனர்.
சந்த்பாபு வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் காதலை கைவிடுமாறு ஆசி பாவிடம் ரியாஸ் கூறியுள்ளார். ஆனால் ஆசிபா சந்த்பாபுவை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் ஆசிபாவை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து தங்கை என்றும் பாராமல் ஆசி பாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தலையை துண்டாக வெட்டி பையில் வைத்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றார்.
அதற்குள் அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரியாசை கைது செய்தனர்.
விசாரணையில் காதலை கைவிட மறுத்ததால் தங்கை ஆசிபாவை கொலை செய்ததாக ரியாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்தவேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
- ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மதக் கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் வாரணாசி சிவில் கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதனிடையே இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் என்பவர் வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட், இது தொடர்பாக ஞானவாபி மசூதி நிர்வாகத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது என வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 6 மாதங்களுக்குள் கணக்கெடுப்பு முடிக்கப்படும் என நினைக்கிறேன் என்றார்.
- மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர்.
கான்பூர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன் விராட், வீரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 19ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர். ஸ்பைடர்மேனின் உரையாடலைக் கேட்ட விராட் பால்கனிக்கு வந்து 'நான் ஸ்பைடர்மேன் வருகிறேன்' என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விராட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
- தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்துள்ளது. யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதற்கிடையே 45 ஆண்டுகளுக்கு பிறகு யமுனை ஆற்றின் வெள்ளம் தாஜ்மகாலுக்குள் புகுந்தது. தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. தாஜ்மகால் சுவரை தொட்டுக் கொண்டும் வெள்ள நீர் செல்கிறது.
- ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்
- ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டியுள்ளார்
யூடியூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லீம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்திருக்கிறது.
இந்த சேனல் நடத்தி வருபவரான தஸ்லீம், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, அவர் கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதித்திருக்கிறார். தஸ்லீம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர் குடும்பம் இதனை மறுத்துள்ளது.
இதுகுறித்து தஸ்லீமின் சகோதரர் ஃபெரோஸ் கூறும்போது, ''டிரேடிங் ஹப் 3.0 (Trading Hub 3.0) என்ற யூடியூப் கணக்கை நிர்வகித்து வரும் தஸ்லீம், ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வருமானத்திற்கு அவர் வருமான வரியும் செலுத்தி வருகிறார்.
மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்திற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறோம். வேறு எந்த தவறான செயலும் செய்யவில்லை. சேனலில் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இந்த ரெய்டு ஒரு திட்டமிடப்பட்ட சதி."
இவ்வாறு ஃபெரோஸ் கூறியிருக்கிறார்.
தனது மகன் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக தஸ்லிமின் தாய் கூறியுள்ளார்.
- கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிக பிரபலமான யாத்திரையாகும்.
- யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு.
உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கன்வார் யாத்திரை பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
ஹரித்வாரில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துகொண்டு புறப்பட்ட பக்தர்கள் நேற்று இரவு மீரட் மாவட்டம் ராலி சவுகான் கிராமத்தில் வந்தபோது அவர்களின் வாகனம் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளானதும் வாகனம் தாறுமாறாக ஓடி பக்தர்கள் மீதும் மோதியது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலல் ஈடுபட்டனர். கன்வார் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
கன்வார் யாத்ரா:
கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிகப்பெரிய யாத்திரையாகும். உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சிவ பக்தர்கள் இதில் பங்கேற்கிறார்கள். கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படும் இந்த யாத்ரீகர்கள், காவடி ஏந்தி ஹரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமித்து, அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிசேகம் செய்வார்கள்.
- ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
- இந்த ரெயிலை கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி இன்று வந்தே பாரத் ரெயில் சென்றுகொண்டிருந்தது. சொஹாவால் பகுதி அருகே சென்றபோது சிலர் ரெயிலின் மீது சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரெயில் தொடர்ந்து லக்னோ நோக்கி சென்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, ரெயில் மீது கற்களை வீசி தாக்கிய நன்னு பஸ்வான், அவரது மகன்கள் அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நன்னு பஸ்வானுக்குச் சொந்தமான 6 ஆடுகள் கடந்த 9-ந்தேதி வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு இறந்து போனதால், அந்த ஆத்திரத்தில் இன்று ரெயில் மீது கற்களை வீசி தாக்கியது தெரியவந்தது.
கோராக்பூர்-லக்னோ இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயிலை கடந்த 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






