என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது.
- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது.
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோமபுரா என்பவர் தான் செய்து இருக்கிறார். அவருக்கு 80 வயது ஆகிறது. அவரது மகன்கள் நிகில் மற்றும் ஆசிஷ் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த் சோமபுரா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
பதில்:- எங்களது சோமபுரா குடும்பம் பல ஆண்டுகளாக கோவில் கட்டும் பணியை செய்து வருகிறோம். நான் அதில் 15-வது தலைமுறை. எனது தந்தை தான் சோம்நாத் கோவிலை கட்டினார். பிர்லா மந்திர் கோவில்கள் எல்லாம் எங்களால் கட்டப்பட்டவை தான். எனவே தொழில் அதிபர் பிர்லா தான், அப்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்லால் சிங்காவிடம் என்னை பரிந்துரை செய்தார்.
கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வரைபடம் தயாரித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
பதில்:- ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும், அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989-ம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள். அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்து சென்றார்கள். அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதனால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில், பேப்பர் என எந்த பொருட்களையும் எடுத்து வர முடியவில்லை. இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன். ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பு எடுத்து வைத்து கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு 3 வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாக கொண்டு, மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின்போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.
கேள்வி:- பல நாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து இருக்கும் தென்னகத்து கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில்களுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை ஒப்பிட முடியுமா?
பதில்:- மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவிலுக்கு எல்லாம் நானும் வந்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் கோவில்கள் என்பது வெறும் கட்டிட கலை அல்ல. அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்றால் நமக்கு ஒரு அதிர்வலைகளை அது ஏற்படுத்த வேண்டும். மன நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை தர வேண்டும். இவற்றை மீனாட்சி அம்மன் கோவில்போல் அயோத்தி ராமர் கோவிலும் பக்தர்களுக்கு தரும் என்பதில் நீங்கள் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டாம். அதே நேரத்தில் அயோத்தி கோவில் கட்டுமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பழங்கால முறைப்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கோவில் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் பழங்கால முறைப்படியான கட்டுமானம் என்பது எது?
பதில்:- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது. இந்த கோவிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. கற்களின் ராஜாவான ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கற்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும். கோவில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு போன்று எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை. பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. இந்த கோவில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். அதனை தற்போது உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். நிலநடுக்கம், வெள்ளம்-மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிக வலுவாக கட்டப்பட்டு வருகிறது. பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவிலிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
கேள்வி:- சனாதன தர்மத்திற்கான கோவில் என்பதனை எப்படி புரிந்து கொள்வது?
பதில்:- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் அதனை கடைபிடிக்க வேண்டும். அது மதத்திற்கானது அல்ல, மனிதனுக்கு ஆனது என்ற பார்வையில் அதனை அணுக வேண்டும். அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெறும் ராமர் கோவில் மட்டுமின்றி இதர தெய்வங்கள் கோவிலும் கட்டப்பட உள்ளது.
கேள்வி:- இந்த கோவிலின் சிறப்பம்சமாக எதனை நீங்கள் சொல்வீர்கள்?
பதில்:- அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்டுவதே மாபெரும் சிறப்பானது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில், 58 ஆயிரம் சதுரடியில் 3 தளங்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. அதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
- ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.
- ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் முடிவடைந்து விடும். ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இருவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குடும்பத்தின் மூத்தவர்கள். அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்பு இருந்தது.
- காசி புத்துயிர் பெற அரசு, சமூகம் மற்றும் துறவிகள் இணைந்து பணியாற்றி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மகாமந்திரை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மையத்தை பார்வையிட்டார். மகாமந்திரத்தின் சுவர்களில் ஸ்வர்வேதத்தின் வசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அடிமை மனநிலையில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளதாகவும், அதன் பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-
அடிமைத்தன காலத்தில், இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அடக்குமுறையாளர்கள் முதலில் நமது சின்னங்களை குறிவைத்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, கலாச்சார சின்னங்களை மீண்டும் உருவாக்குவது அவசியமானது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்பு இருந்தது. பல சதாப்தங்களாக இந்த சிந்தனை ஆதிக்கம் செலுத்தியது. இதன் விளைவாக நாடு தாழ்வு மனப்பான்மையின் குழிக்குள் தள்ளப்பட்டது.
சுதந்திரம் கிடைத்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, காலச் சக்கரம் மீண்டும் ஒருமுறை சுழன்றது. அடிமை மனப்பான்மையிலிருந்தும், பாரம்பரியத்தைப் பற்றிய பெருமித உணர்விலிருந்தும் நாடு விடுதலையை அறிவித்தது.
சோம்நாத்தில் இருந்து தொடங்கிய பணி தற்போது பிரச்சாரமாக மாறியுள்ளது. இன்று விஸ்வநாத்தின் மகத்துவம் இந்தியாவின் பெருமையை பாடி வருகிறது.
பல நூற்றாண்டுகளாக, பொருளாதார வளம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு இந்தியா எடுத்துக்காட்டாக விளங்குகிறது. காசி புத்துயிர் பெற அரசு, சமூகம் மற்றும் துறவிகள் இணைந்து பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாரணாசியின் நமோ கட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- கன்னியாகுமரி, வாரணாசி இடையிலான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நமோ கட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய மீன்வள துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையேயான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வழியே புதிய தொழில்நுட்ப பயன்பாடு இன்று நடைபெறுகிறது. இது ஒரு புதிய தொடக்கம். இதனால், உங்களை என்னால் எளிதில் அடைய முடிகிறது.
விருந்தினர்கள் என்றளவில் இல்லாமல், நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றளவில் வந்திருக்கின்றீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்றால் அதற்கு மகாதேவரின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவது என பொருள். அதனாலேயே தமிழகம் மற்றும் காசிக்கு இடையேயான பிணைப்பு என்பது சிறப்பானது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
- ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது.
- ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:-
ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது. கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அயோத்தி திறப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம். அருகில் உள்ள சிறிய, பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும் உங்களால் சாத்தியமான கோவிலுக்குச் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
- எம்.பி., எம்.எல்.ஏ. வழக்க விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கில் விசாரணை முடிந்ததும், நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து சோன்பத்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், ராம்துலார் கோந்த் மக்கள் பிரதிநிதகள் சட்டப்படி எம்.ஏ.எல். பதவியை இழந்துவிட்டார்.
- வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தேசியக்கட்சிகள் தற்போது முதலே அதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து புனித தலத்துக்குச் சென்று 'மிஷன் -2024' என்ற ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசிக்கு வரக்கூடிய அவர், தனது பாராளுமன்றத் தொகுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் திங்கட்கிழமை கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.
வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்றார்.
அதேபோல் காசி தமிழ் சங்கமம், உலகின் மிகப் பழமையான கலாச்சார பாரம்பரியத்தின் வாழ்க்கைப் பிணைப்புகளை புதுப்பிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே போன்ற பிற துறைகளுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த காசி தமிழ்ச் சங்கமத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்றார்.
மேலும் பிரதமர் மோடி இந்த சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு சின்னங்களுக்கு இடையேயான விக்சி பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 2014-ம் ஆண்டு சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
- பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், நாளை மறுதினம் (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் ராம்துலார் பதவி விலக நேரிடும்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் அதிக முன்பதிவுகள் செய்து பக்தர்கள் வழிபட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பிரதமர் மோடியின் கனவு திட்டமாக ரூ.630 கோடியில் கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திறந்து வைத்தார்.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் அதிக முன்பதிவுகள் செய்து பக்தர்கள் வழிபட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2021 டிசம்பர் 13-ந்தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி வரை கடந்த 2 ஆண்டுகளில் 15,930 வெளிநாட்டு பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 12 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
- பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
- இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.






