search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமி பலாத்காரம் வழக்கில் உ.பி. எம்.எல்.ஏ. குற்றவாளி என அதிரடி தீர்ப்பு
    X

    சிறுமி பலாத்காரம் வழக்கில் உ.பி. எம்.எல்.ஏ. குற்றவாளி என அதிரடி தீர்ப்பு

    • 2014-ம் ஆண்டு சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
    • பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    உத்தர பிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.

    சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில்தான் நேற்று விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், நாளை மறுதினம் (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.

    இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் ராம்துலார் பதவி விலக நேரிடும்.

    Next Story
    ×