என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • உங்களிடம் பேச வேண்டும் என இளம்பெண் ஒருவர் டவர் மீது ஏறினார்.
    • இதைக் கண்ட பிரதமர் மோடி இளம்பெண்ணின் செயலால் அதிர்ச்சியடைந்தார்.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், செகந்திராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் திடீரென டவர் மீது வேகமாக ஏறினார். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை பிரதமர் சமாதானப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்விளக்கு டவரின் மீது ஏறி பிரதமரிடம் பேச முயன்றார். இளம்பெண் டவர்மீது ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, தயவுசெய்து கீழே இறங்குங்கள் என பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டார். உங்களிடம் நான் பேசுகிறேன் என பிரதமர் கூறியதை அடுத்து, அப்பெண் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் உதயமானதும் முதல் முதலமைச்சர் தலித் எனக்கூறிய கேசிஆர், பிறகு அந்த நாற்காலியை தானே பிடுங்கிக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு அத்தனை அரசியல் கட்சிகளும் மடிகா சமூக மக்களை மோசம் செய்தன. தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன பிஆர்எஸ் கட்சி அதை நிறைவேற்றவில்லை, அம்பேத்கரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியால்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் போனதாகவும் குற்றம் சாட்டினார்.

    • பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது.
    • நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது.

    தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினா். தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது.

    கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மக்கள் மத்தியில் ஆளும் கட்சி மற்றும் கே.சி.ஆர். மீது அதிக கோபம் உள்ளது. வாரிசு அரசியலாலும் ஊழலாலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

    காளேஸ்வரம் திட்ட ஊழல் முதல் டெல்லியின் கலால் கொள்கை ஊழல் வரை கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.

    கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஓராண்டுக்குள் அவர்களின் அரசும், உத்தரவாதமும் தோல்வி அடைந்தது.

    காங்கிரசும், கே.சி.ஆரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், இருவரும் ஊழல்வாதிகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் என தெரிவித்தார்.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.

    தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக அவர் வேனில் சென்றார் அப்போது, வேன் டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்தார்.

    இதை எதிர்பாராத அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் சிலர் கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண் அதிகாரி பிரதிமாவை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தியது தெரியவந்தது.
    • கைதான கிரணை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து செல்கின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள துடுகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதிமா (37). இவர் பெங்களூருவில் உள்ள கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் மகனை பிரிந்து பிரதிமா மட்டும் பெங்களூரு தொட்டஹள்ளசந்திரா அருகே உள்ள குவெம்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பிரதிமா அரசு காரில் தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் டிரைவர் காரை அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் பிரதிமா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதற்கிடையே பிரதிமாவின் அண்ணன் காண்டிராக்டர் பிரதிஷ் என்பவர் பிரதிமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து 3 முறை அழைத்தும் பிரதிமா செல்போனை எடுக்காததால், அவரது அண்ணன் பிரதிஷ் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கச் சென்றார்.

    பின்னர் மீண்டும் காலையில் எழுந்து தொடர்பு கொண்டார். அப்போதும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரதிஷ் தனது தங்கையின் வீட்டிற்கே நேராக சென்றார்.

    அங்கு பிரதிமா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சுப்ரமணியபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட பிரதிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர். கனிம வள அதிகாரி என்பதால் இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது கூலிப்படை அனுப்பி கொலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதோடு கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரி பிரதிமாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரியுடன் பணியாற்றி வரும் சில அதிகாரிகள் கூறும்போது, கொலை செய்யப்பட்ட பிரதிமா மிகவும் நேர்மையான அதிகாரி. துணிச்சலானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில இடங்களில் சோதனைக்கு சென்றார். இந்த துறையில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. எங்கிருந்து போன் வந்தாலும் உடனடியாக சென்று விசாரணை நடத்துவார் என்றனர்.

    இதற்கிடையே பிரதிமாவை அழைத்து வந்து வீட்டில் விட்ட கார் டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட பிரதிமாவிடம் முன்பு கார் டிரைவராக வேலை பார்த்த கிரண் (32) என்பவரை ஏன் வேலையை விட்டு நீக்கினார் என்றும் விசாரணை நடத்தினர்.

    அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. கனிம வள அதிகாரியான பிரதிமா அடிக்கடி ரகசிய சோதனைக்கு செல்லும்போது அதை முன்கூட்டியே டிரைவர் கிரண் சம்மந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிய வந்ததும் அவரை பிரதிமா வேலையை விட்டு நீக்கியது தெரியவந்தது.

    சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பிரதிமாவை வேலையை விட்டு நீக்கப்பட்ட கார் டிரைவர் கிரண் வந்து சந்தித்து மீண்டும் வேலை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கிரண் பெண் அதிகாரி பிரதிமாவை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தியது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரை தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

    தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் கிரண் சாம்ராஜ்நகர் மாவட்டம் மலைமாதேஸ்வரன் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்தனர். கைதான கிரணை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து செல்கின்றனர்.

    • மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இம்மாதம் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
    • 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

    ஐதராபாத்:

    119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது.

    தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், வருகிற 10-ந் தேதி வரை வேலை நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பா் 13-ந் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பா் 15-ந் தேதி.

    முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ள தெலுங்கானாவில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 3.17 கோடி. இதில் பெண்கள் 1.58 கோடி போ்.

    மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இம்மாதம் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

    எஞ்சிய 4 மாநிலங்களில் ஏற்கனவே தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவிலும் நடைமுறைகள் தொடங்கி இருப்பதால் 5 மாநில தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

    மிசோரமின் 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வருகிற 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகள் மற்றும் சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக 70 தொகுதிகளில் 17-ந்தேதியும், ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், தெலுங்கானாவில் 30-ந்தேதியும் தோ்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தோ்தலுக்கு முன்னோட்டமாக இத்தோ்தல்கள் கருதப்படுகின்றன.

    மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க. என பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தெலுங்கானாவில் ஆளும் பிஆா்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    5 மாநிலங்களிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 16 கோடி. இதில் ஆண்கள் 8.2 கோடி போ், பெண்கள் 7.8 கோடி போ். இவா்களில் 60.2 லட்சம் போ் முதல்முறை வாக்காளா்கள்.

    மொத்தம் 1.77 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் சுமாா் ஒரு லட்சம் மையங்களில் இணைய ஒளிபரப்பு வசதி மேற்கொள்ளப்படும். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் முழுமையாக பெண்களால் நிா்வகிக்கப்பட உள்ளன.

    • ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் ஆதரவு.
    • காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் தேர்தலில் போட்டியிட போவதில்லை.

    தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது, டிசம்பர் 3ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும ஆட்சி அமைப்பதை தடுக்கவும், ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டமிட்டுள்ளார்.

    மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஷர்மிளா அறிவித்துள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
    • கல்வகுர்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய கட்சிகள் அம்மாநிலத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு நடைபெற்ற பிரசாரா கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் குறித்த பா.ஜ.க. அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பொது மக்களிடையே பேசிய அவர், தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்து இருந்தார்.

    தெலுங்கானா மாநிலத்தின் கல்வகுர்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, "நீங்கள் இங்கு இரண்டு சதவீதம் வாக்குகளைத் தான் பெற போகின்றீர்கள். அப்புறம் எப்படி உங்களால் முதலமைச்சரை உருவாக்க முடியும்? உங்களால் அமெரிக்காவில் அதிபரையோ அல்லது தெலுங்கானாவில் முதலமைச்சரையோ உருவாக்க முடியாது," என்று தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி, சென்னூர் தொகுதியில் தனது மகன் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதனால் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதையடுத்து, அவர் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.

    • வாரங்கல் ரமணா பேட்டையை சேர்ந்த லயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
    • பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா தலைவர் பிரவீன் குமார் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    இதில் முதல் முறையாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வாரங்கல் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திருநங்கை லயா என்பவர் போட்டியிடுகிறார்.

    வாரங்கல் ரமணா பேட்டையை சேர்ந்த லயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள கால் சென்டரில் ஆபரேட்டராக பணியாற்றினார்.

    அந்த நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி உள்ளார். தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த அவர் கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் . மேலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா தலைவர் பிரவீன் குமார் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து லயாவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

    அவர் வீடு வீடாகச் சென்று பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளை விளக்கி கூறி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    தெலுங்கானாவில் முதன்முறையாக திருநங்கை போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×