என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
- தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த பால சுப்பிரமணி மற்றும் சுமதி தம்பதியின் மகன் நாக அர்ஜூன் (வயது 23). இவர் அமெரிக்காவில் மெக்சிகோ பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். என்னுடன் இந்தியாவை சேர்ந்த பலரும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் என்னுடன் வந்தனர். மேலும் பலர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் வருகை தர உள்ளனர்.
உள்ளூரில் இருந்தால்கூட நாம் வாக்களித்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று சிலர் நினைத்து வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். இது தவறான செயலாகும். என்னைப்போல வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் சொந்த நாட்டிற்கு வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்த நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
வாக்குப்பதிவிற்காக அமெரிக்காவில் இருந்து வந்த நாக அர்ஜூனனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
- பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
- வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.
விரலில் வைத்த கருப்புமை
— வைரமுத்து (@Vairamuthu) April 18, 2024
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்#Elections2024
- திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
- உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கோவை:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கோவை தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கடந்த 10 நாட்களாக கோவையில் முகாமிட்டு அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று ஹோப் கல்லூரி அருகே திடீரென துரைராமலிங்கம் தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் நின்ற பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கைவிரலை துண்டித்தது குறித்து துரைராமலிங்கம் கூறியதாவது:-
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தேன். நேற்று ஹோப் கல்லூரி பகுதியில் பிரசாரம் செய்தபோது அருகில் நின்ற சிலர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு மிகுந்த மனவேதனையை தந்தது. இதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும்.
- பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று குறை கூறி வருகின்றனர்.
இதுபற்றி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு ஆவணங்களை அறிவித்துள்ளது. அவற்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி பான்கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும்.
எனவே பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் இல்லை.
சென்னை மாநகரில் 87 சதவீதம் வீடுகளுக்கு பூத் சிலிப் வினியோகித்து விட்டோம். சில வீடுகளில் கதவை திறப்பதில்லை. அதுபோன்ற காரணங்களால்தான் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கு கொடுக்க முடியவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பூத் சிலிப் கொடுக்கும்போது சில வீடுகள் பூட்டி கிடப்பதாக கூறுகின்றனர். வீட்டை பூட்டி விட்டு சிலர் வேலைக்கு சென்று விடுகிறார்கள்.
இதுபோன்ற காரணங்களால்தான் பூத் சிலிப் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1950 என்ற எண்ணில் விவரங்களை பதிவு செய்தால் எந்த வாக்குச்சாவடியில் உங்கள் பெயர் உள்ளது, பாகம் எண் முதற்கொண்டு அனைத்தும் கிடைத்து விடும். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை உள்ளீடு செய்தாலும் அனைத்து விவரங்களும் வந்து விடுகிறது.
எனவே பூத் சிலிப் என்பது கூடுதல் உதவிதான் அது கட்டாயமில்லை. வாக்களிக்க செல்லும்போது வாக்குச்சாவடி வாசல் அருகே உதவி மையம் இருக்கும். அங்கிருக்கும் தன்னார்வலர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
- அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.
தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.
2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.
லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
- 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணை உள்ளது. இந்த அணையையொட்டி ஆழியார் பூங்கா உள்ளது.
இது கோவையின் சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு, பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து தங்கள் பொழுதை கழித்து செல்வது வாடிக்கையாகும். இதனால் ஆழியார் அணை பூங்காவில் எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
ஆழியார் அணையை சுற்றி பார்த்து விட்டு, அவர்கள் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமுக்கும் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக நாளை ஆழியார் அணை பூங்கா மற்றும் பொள்ளாச்சி டாப்சிலிப் முகாம் மூடப்படுகிறது. அங்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
- அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல் தேர்தல்களுக்கும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை தினமும் கேட்டறிந்து வந்தனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலா னவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதுடன் நாளை ஓட்டு ப்பதிவு நடக்கப்போகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு முன்ன தாகவே, பஸ், ரெயில்களில் புக்கிங் செய்துவிட்டனர். இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் பனியன் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தேர்தல் காரணமாக, தொழிலாளர்கள் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக பின்னலாடை உற்பத்தியும், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.
திருப்பூரில் மட்டும் 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பமாக சொந்த ஊர் செல்கின்றனர். ஏற்கனவே சிலர் சென்றுவிட்டனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு பின் திருப்பூர் திரும்புவர். வடமாநில தொழிலாளர்கள் 20ந்தேதிக்கு பின், திருப்பூரில் இருந்து அந்தந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு புறப்படுவார்கள். இதன் காரணமாக பின்னாலடை உற்பத்தி குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
- தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர்காரர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்ததை தொடர்ந்து தொகுதிகளுக்கு தொடர்பில்லாத வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்து தங்கியவர்கள் பிரசாரம் முடிவடைந்த பிறகும் லாட்ஜ்-களில் தங்கியுள்ளார்களா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் லாட்ஜ்-கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலையில் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்றும் சோதனை தொடர்கிறது. போலீசார் நடத்தும் இந்த சோதனையின் போது லாட்ஜ்-களில் தங்கியுள்ளவர்களின் முகவரி மற்றும் அவர்களது அடையாள அட்டை ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
தேர்தல் நாளில் தேவையில்லாத வெளியூர் நபர்கள் உள்ளூர்களில் தங்கி இருந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டே இந்த வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, பெரியமேடு, கோயம்பேடு உள்பட அனைத்து பகுதிகளிலுமே லாட்ஜ்-களில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனை இன்று பகலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரவிலும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலமாக தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம்.
சென்னை:
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிக்கும் இன்று வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அடையாள மை உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உரிய போலீசாரும், துணை ராணுவ படையினரும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் இங்கு நடைபெறும் வாக்குப்பதிவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக 10 வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டல குழு என்ற வீதத்தில் 6 ஆயிரத்து 137 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் உடனடியாக சென்று பழுது பார்த்து கொடுப்பார்கள். பழுது பார்க்க முடியாத எந்திரங்களாக இருந்தால் புதிய எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
வாக்குப்பதிவின்போது விவிபேட் எந்திரத்தில் தவறான ஓட்டு காண்பிக்கப்படுவதாக இருந்தால், அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் யார் வேண்டுமானாலும் முறையிடலாம். புகாரில் உண்மை இருந்தால் அந்த எந்திரம் மாற்றப்படும்.
புகார் தவறாக இருந்தால் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம். அவரிடம் ஓட்டளிப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் வாக்குச்சீட்டில் டெண்டர் ஓட்டு போடலாம். அந்த சீட்டை கவரில் போட்டு தனியாக வைப்பார்கள். ஓட்டு எண்ணிக்கையின்போது வெற்றி தோல்விக்கு ஓரிரு வாக்கு வித்தியாசம் வந்தால் இந்த டெண்டர் ஓட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்காக சாய்வு தளம் செய்து தரப்பட்டு உள்ளது. அவர்கள் வரிசையில் காத்திருக்க தேவை இல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடும்போது முதலில் சட்டசபைக்காக விரலில் மை வைக்கப்படும். அடுத்ததாக பாராளுமன்ற ஓட்டுக்காக இன்னொரு விரலில் மை வைக்கப்படும்.
இந்த தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக விழிப்புணர்வு பிரசாரம் நிறைய செய்து உள்ளோம். வாக்காளர்கள் அனைவரும் தங்களது கடமையை நிறைவேற்றும் வகையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து நாளை வாக்களிக்க வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
- சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, வரகம்பட்டி, காரிப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது.
வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு கடந்த மாதம் மாங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி உள்பட சில ரகங்கள் மட்டும் மார்க்கெட்களுக்கு வருகிறது.
சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. ஆனாலும் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ விற்பனை அதிக அளவில் வரவில்லை. இதனால் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்களில் கடந்த ஆண்டு இதே நாளில் 30 முதல் 40 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 10 டன்னாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாமரங்களில் பூத்த பூக்கள் உதிர்ந்துள்ளது. இதனால் தற்போது மாம்பழ வரத்து உடனடியாக அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலையும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.
- தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளது. ஜூன் 4-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் ஓட்டு எண்ணும் மையத்துக்கு நாளை மாலை முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
நாளை மாலை முதல் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்குவார்கள். குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக ஐ.ஆர்.டி.டி. கல்லூரி வளாகத்தில் தனித்தனியே ஸ்டிராங் ரூம்களில் வைத்து சீலிடப்படும்.
அதன்பின் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையை ஒட்டி பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். இறுதியாக உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
ஜூன் 4-ந் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும். ஒரு ஷிப்ட்டுக்கு துணை ராணுவம், பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 199 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
- விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.
தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.
மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.






