என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
- கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை.
மதுரை:
வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
- தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.
மதுரை, அக்.16-
மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.
இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.
இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
- இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் பீடி இலைகள், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.
இதைத்தடுக்க மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி முறப்பநாடு பகுதியை சேர்ந்த துரை என்பவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தமைட்டல் என்ற ஐஸ் போதைப்பொருளும், சாரஸ் என்ற போதைப்பொருள் 300 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (16-10-2024) காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சென்னையில் கனமழையிலும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார்.
- நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார்.
சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
- விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
- சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.
முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணி கைகொடுத்துள்ளதை மக்களை கேட்டாலே தெரியும்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏரியில் ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நாராயணபுரம் ஏரியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கடந்த 3 மாதங்களாகவே மழை நீர் வடிகால் பணிகளை செய்து வந்தோம்.
* அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன.
* அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணி கைகொடுத்துள்ளதை மக்களை கேட்டாலே தெரியும்.
* தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி, பல்துறை ஊழியர்களுக்கு சென்னை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
* மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.
- டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன.
- தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுத் துறைகளில் நான்காம் தொகுதி பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-லிருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன. அவை குறித்த அனைத்து விவரங்களும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்குத் தெரியும். அவற்றைக் களைய வேண்டும் என்று நினைத்தால், ஊடகங்கள் முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் கயல்விழி தயாரா? இப்படியாக டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது சமூகநீதிக்காக குரல் கொடுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குறை கூற அமைச்சர் கயல்விழி முயல்வது கண்டிக்கத்தக்கது.
அவருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதுடன், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன.
- உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை.
வடமதுரை:
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பியூலா என்ற பெண் தனது 3 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வடை சாப்பிட சென்றார். சிறுவனுக்கு வடையுடன் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர்.
பாதி வடையை சாப்பிட்ட பின்னர் அதில் பூரான் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது தாயிடம் தெரிவித்தான். அவர் கடைக்காரரிடம் வடையில் பூரான் கிடப்பதை காட்டி கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் நகரில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரம் என்பது துளியளவு கூட கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் பூரான், பல்லி, பூச்சி உள்ளிட்ட விஷ சந்துகள் ஆங்காங்கே ஊர்ந்து வருகின்றது. பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவு பொருட்கள் தரையிலேயே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சிகள் அதில் விழும் அபாயம் உள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன. இதில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை. இதுபோன்ற தரம் குறைந்த உணவுகளை உண்பதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது.
எனவே திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
- மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அதே நேரத்தில் எதிராளிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையிலும் அவர் அதிரடியாக இறங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியினரோடும் பா.ஜ,க, வுக்கு ஆதரவான அமைப்பினருடனும் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறார்.
அந்த வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
"வான் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்கிற திருக்குறளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் நண்பர்கள் போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவ பேராசான் நமக்கு தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என விளக்கியுள்ளார்.
கட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்பகை கொண்டு செயல்படுபவர்கள் யாராவது இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதை தனது கடிதத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அதிரடியான வார்த்தைகளை குறிப்பிட்டு கட்சியினருக்கு கடிதம் எழுதியது இல்லை.
அதே நேரத்தில் மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை. ஆனால் தற்போது கட்சி நிர்வாகிகளை களையெடுக்கும் விதத்தில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
- நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
சென்னை:
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். ரேஸ் கோர்ஸ் நிலம் அரசின் வசம் வந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
மழை நீரை தேக்கி வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் குளம் அமைக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து பணி தொடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






