என் மலர்
ராஜஸ்தான்
- சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
- சரோஜ் சர்மா உடலை வெட்டிய என்ஜினீயர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
ஜெய்ப்பூர்:
டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல டெல்லி பாண்டவ நகரில் மகன் உதவியுடன் கணவரை துண்டு துண்டாக வெட்டிய வீசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களை போலவே ராஜஸ்தானிலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வித்யா நகரை சேர்ந்தவர் சரோஜ் சர்மா. இவரது கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர்.
இதனால் சரோஜ் சர்மாவுடன் அவரது கணவரின் அண்ணனும், அவரது மகனான அனுஜ் சர்மா (வயது 32) என்ற வாலிபரும் வசித்து வந்தனர். அனுஜ் சர்மா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 11-ந் தேதி அனுஜ் சர்மாவின் தந்தை வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது சரோஜ் சர்மா கோவிலுக்கு சென்றதாகவும், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அனுஜ் சர்மா போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் சரோஜ் சர்மாவை தேடி வந்தனர். மேலும் இதுபற்றி அவர் சரோஜ் சர்மாவின் மகள் பூஜாவிடமும் கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்றபோது அங்கு அனுஜ், சமையல் அறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பூஜா எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தனது மூக்கில் இருந்து ரத்தம் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பூஜா இதுபற்றி தனது சகோதரியிடம் கூறினார்.
பின்னர் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
அதன் மூலம் நடந்த விசாரணையில் சரோஜ் சர்மா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று அனுஜ் சர்மா, தான் டெல்லி செல்ல விரும்பியதாகவும், அதற்கு பெரியம்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை சமையல் அறைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மார்பிள் கட்டர் மூலம் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியதாகவும் கூறினார்.
மேலும் வெட்டப்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்று ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் கூறினார்.
மொத்தம் 10 துண்டுகளாக சரோஜ் சர்மா உடலை வெட்டிய அவர் சில உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி எடுத்து சென்று சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சரோஜ் சர்மாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி பயன்படுத்திய வார்த்தைக்கு கடும் கண்டனம்.
- இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்கள்.
அஜ்மீர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், அந்நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் மோடி என அவர் குறிப்பிட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிலாவலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மீக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சில் தலைவருமான ஹஜ்ரத் சையது நசீருதீன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பயன்படுத்திய விஷம தானமான வார்த்தைக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிலாவல் பூட்டோ தனது அமைச்சர் பதவியை மட்டுமன்றி ஒட்டு மொத்த தேசத்தை தரம் தாழ்த்தியுள்ளார்:
பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்.
பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் வைத்துதான், அமெரிக்க படைகளால் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் துணைப்பிரிவில் உள்ள புங்ராவில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாதயாத்திரையின் 100 நாட்களை குறிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் இசைக் கச்சேரிக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர் கெலாட், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, மாநில அரசு கொண்டாட்டதில் ஈடுபட்டு மேலும் காயத்தை சேர்க்கிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ரூ. 20 கோடி தொகுப்பை மாநில அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது, அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.
- வெளியுறவுத்துறை அமைச்சர், சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்
ஜெய்ப்பூர்:
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராஜஸ்தானின் தௌசாவில் பேசியதாவது:-
சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. இந்திய அரசாங்கம் நிகழ்வுகளில் செயல்படுகிறது, கொள்கையில் அல்ல. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் வீரர்கள் நமது வீரர்களை அடிக்கிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.
லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கைகள், அவர் சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் காந்தியுடன் மாநில முதல்வர் அசோக் கெலாட் உடனிருந்தார்.
- குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கியப் பங்காற்றியது.
ஜெய்ப்பூர்:
குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வென்றது. சுமார் 13 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பை பறித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு ஆம் ஆத்மி தான் முக்கிய காரணம் என கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
குஜராத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றியது. ஆம் ஆத்மி இல்லாவிட்டால், ஆளும் பாஜகவை தோற்கடித்திருப்போம்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பினாமியாக செயல்பட்டது. அந்த கட்சி பாஜகவின் பி டீம், காங்கிரசை வீழ்த்த பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது. அவர்கள் (பாஜக) இந்தியாவைப் பிளவுபடுத்துகிறார்கள், வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். அவர்கள் கொள்கையில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதை காங்கிரஸ் புரிந்துகொள்ளும்போது ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும்
- ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது.
ஜெய்ப்பூர்
வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.
நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது.
இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று நடத்திய பாதயாத்திரையில் மாநில தடகள வீராங்கனைகள் பலர் அவருடன் நடந்து சென்றனர்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டும் நிலையில், ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
ஒருபுறம் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு படை வல்லுனர்கள் என ஏராளமான பிரபலங்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்றும் வருகின்றனர்.
மறுபுறம் ஆளும் பா.ஜனதா சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும், குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. ராகுல் காந்தியின் தோற்றம், உடைகள் மற்றும் யாத்திரையில் பங்கேற்போர் குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவிப்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் இந்த சலசலப்புகளையும் தாண்டி இந்த யாத்திரையால் கட்சிக்கு நீண்டகால நன்மை விளையும் என கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது, 'முதலில் இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது. பா.ஜனதா தனது பொய்யான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது. இரண்டாவதாக இந்த வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது' என கூறினார்.
இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும் என்று குறிப்பிட்ட சஞ்சய் ஜா, காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் அதன் தொண்டர்கள் மூலம் அணிதிரட்டலைத் தக்கவைத்துக் கொள்வதே இனி உள்ள முக்கியப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த யாத்திரை கட்சிக்கு நம்பிக்கையின் ஒளியை அளித்துள்ளதாகவும், சாதாரண தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பாண்டே, எனினும் அது தேர்தல் ஆதாயமாக மாறுமா? என்பதை காலம்தான் சொல்லும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்த நோக்கம் நிறைவேறுமா? என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களில் கட்சி பெறும் வெற்றியை பொறுத்து அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
- ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
- இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.
சவாய் மாதோபூர்:
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:
பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,
இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர்.
- யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர். இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த 100-வது நாள் யாத்திரையில், இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்-மந்திரிமுகேஷ் அக்னிஹோத்ரி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருதாகத் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா, இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல்காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, வரும் 21-ம் தேதி அரியானாவிற்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
- 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண விருந்துக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன.
இதில் திருமணம் நடந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சிலிண்டர்கள் வெடித்ததில் ரத்தன்சிங் என்ற 5 வயது சிறுவனும், குஷ்பு என்ற 4 வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.
சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கியாஸ் சிலிண்டர்களால் ஏற்பட்ட கசிவு காாரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு குப்தா கூறும்போது, "இது மிகவும் மோசமான விபத்து. காயமடைந்த 50 பேரில் 42 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய அமைச்சரும் ஜோத்பூர் தொகுதி எம்.பி.யுமான கஜேந்திரசிங் செகாவத் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
காயம் அடைந்தர்களை இன்று மாலை முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார்.
- சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார்.
- ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இருந்து 92 -வது நாளாக தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த மாநிலத்தில் அவர் 17 நாட்கள் 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு புந்தாவில் தங்குகிறார்.
இந்தநிலையில் சோனியா காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி தங்க உள்ள புந்தா பகுதிக்கு சென்றார்.
சோனியா காந்திக்கு நாளை பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார். இதையொட்டி ராகுல்காந்தி நாளை நடை பயணம் செல்லவில்லை. நாளை மறுநாள் ( 10-ந்தேதி) மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார்.
- தேர்தல் வாக்குறுதியின்டி நாங்கள் சொன்னதை செய்வோம் என ராகுல் காந்தி பேசினார்.
- 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். பல மாநிலங்களில் சுமார் 2,400 கி.மீ. தூரத்தைக் கடந்து தற்போது 90 நாளைக் கடந்து ராஜஸ்தானில் அவரது நடைபயணம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுகிறது.
அங்கு 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் 8 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தும் அதனை நிறைவேற்றவில்லை.
அந்தத் திட்டத்தினை மாநில அரசு தனது சொந்த நிதியில் செயல்படுத்த திட்டமிட்டபோதும் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.
- சமூக ஊடகங்களில் மட்டுமே பாத யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
- அத்வானி யாத்திரை குறித்து தேசிய ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன.
ஜாலாவர்:
கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை, மத்திய பிரதேச மாநிலத்தை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளதாவது:

தேசிய செய்தி ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதனால் முக்கிய தேசிய ஊடகங்கள் பாத யாத்திரை குறித்த செய்திகளை புறக்கணித்து விட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் கடமையை நிறைவேற்ற முழுமையாகத் தவறி விட்டன.
வரலாறு அவர்களை மன்னிக்காது. நாடு முழுவதிலும் சமூக ஊடகங்களில் யாத்திரைக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் இணைகிறார்கள். ஆனால் தேசிய ஊடகங்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. சமூக நோக்கத்திற்கும. அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1
1990-ல் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி யாத்திரை சென்ற போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் செய்தியாக்கவில்லையா? நடந்ததைச் சொல்வது ஊடகங்களின் கடமை. ராகுல் காந்தி நேர்மறை சிந்தனையுடன் பயணம் செய்கிறார், இது நேர்மறை யாத்திரை, வன்முறை இல்லை, வெறுப்பு இல்லை. இந்த யாத்திரையை எடுத்து கூறி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






