என் மலர்
ராஜஸ்தான்
- கேந்திரிய வித்யாலயாவின் பின்புறம் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், தலைமுடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
- குட்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அனோ பரம் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது.
ஜெய்ப்பூர்:
டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் கொலை செய்து உடல்களை துண்டு, துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே பாணியில் மும்பை உள்ளிட்ட சில இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகளிலும் உடல்களை துண்டு, துண்டாக வெட்டி சாலை ஓரத்திலும், முட்புதரிலும் வீசிய கொடூரங்கள் மேலும் அதிர்ச்சி அளித்தன.
இந்நிலையில் ராஜஸ்தானிலும் இது போன்ற ஒரு பயங்கர கொலை நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட பாலசார் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் குட்டி. இவருக்கும் முண்ட சார் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் குட்டி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் 20-ந் தேதி தனது கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு குட்டி சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை என்பது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குட்டியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது 'சுவிட்ச் ஆப்' ஆன நிலையில் இருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் குட்டியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர் 22-ந் தேதி ஸ்ரீ பாலாஜி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 28-ந் தேதி நாகூர் நகரில் மால்வா சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் பின்புறம் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், தலைமுடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
போலீசார் ஆடையை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அது குட்டியின் உடை என்பது தெரியவந்தது. இதனால் குட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதுதொடர்பாக குட்டியின் தோழிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குட்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அனோ பரம் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் குட்டியின் கள்ளக்காதலனான அனோபரத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
திருமணம் ஆன குட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி தெர்வா கிராமத்தில் உள்ள கிணறுகள் உள்பட சில இடங்களில் வீசியதாகவும் கூறினார்.
அதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் அனோபரத்தை கைது செய்தனர். பின்னர் குட்டியின் உடல் பாகங்கள் வீசப்பட்ட கிணற்றில் இருந்து உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
ஆனால் கிணற்றில் இருந்து உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. டிரோன் கேமிராக்கள் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் முட்புதர்களில் உடல் பாகங்கள் ஏதேனும் கிடக்கிறதா என தேடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் போலீசாருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஜோஷி கூறுகையில், குட்டியை கொலை செய்ததை அனோபரம் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் சில விஷயங்களை கூறி அவர் விசாரணையை திசை திருப்புகிறார்.
குட்டியின் உடல் பாகங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும் என்றார்.
- முமல் மெகருக்கு உடன் பிறந்த சகோதரிகள் 7 பேரும், சகோதரர்கள் 2 பேரும் உள்ளனர்.
- மூத்த சகோதரி அனிஷா தான் சிறுவயதில் முமலின் அசாத்திய திறமையை கண்டு அவரை ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு வளர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர்:
சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்து மாணவியின் வாழ்க்கை பாதை ஒரே நாளில் மாறி உள்ளது. இதன்மூலம் அவரது கிரிக்கெட் கனவும் நனவாக இருக்கிறது.
ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் கனசார் கிராமத்தை சேர்ந்தவர் முமல் மெகர். 14 வயது சிறுமியான இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கிரிக்கெட் மீது தீராத காதல் இருந்தது. இதனால் கிரிக்கெட்டில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் தினமும் பள்ளிக்கு சென்று வந்ததும் மாலை நேரத்தில் கிராமத்து சிறுவர்களுடன் விளையாட தொடங்கினார்.
அவர் வசித்து வந்த கிராமம் பாலைவன பகுதி ஆகும். அவருக்கு ஷீ வாங்க வசதி இல்லாததால் அவர் பாலைவன மணல் திட்டில் எதுவும் அணியாமல் வெறுங்காலுடன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.
அவரது கிரிக்கெட் பக்தியை கண்ட பள்ளி ஆசரியர் ரோசன்கான் அவருக்கு தினமும் பயிற்சி கொடுத்தார். இதன் மூலம் அவர் உள்ளூரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த போட்டிகளில் அவர் பவுண்டரி,சிக்சர் என விளாசி கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தான் வெறுங்காலுடன் பாலைவன மணலில் கிராமத்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சியை முமல் மெகர் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அவர், பவுண்டரி, சிக்சர் அடிப்பதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதற்கு அதிக லைக்குகளும் கிடைத்தது. கிரிக்கெட் முன்னாள் வீரர் தெண்டுல்கரும் அந்த மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் மாணவி முமல் மெகர் கிரிக்கெட் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் பூனியா அந்த மாணவிக்கு உதவ முன்வந்தார். மாணவி விளையாடுவதற்கு தேவையான கிரிக்கெட் பேட், கையுறைகள் மற்றும் உடைகள் என அவருக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதே போல பலரும் அவரது திறமையை பார்த்து உதவ முன்வந்துள்ளனர். இது அவரை நெகிழ வைத்துள்ளது. தனது கிரிக்கெட் கனவு விரைவில் நனவாக இருப்பதாக அவர் பூரிப்பு அடைந்து உள்ளார். கிரிக்கெட் ஷூ மற்றும் அதற்கான உடை அணிந்து முன்பை விட அவர் கிரிக்கெட்டில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அவரது திறமைக்கு வாய்ப்பு அளிக்க பல கிரிக்கெட் அணிகள் முடிவு செய்துள்ளன.
இதனால் எதிர்காலத்தில் முமல் மெகர் கிரிக்கெட் விளையாட்டில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முமல் மெகருக்கு உடன் பிறந்த சகோதரிகள் 7 பேரும், சகோதரர்கள் 2 பேரும் உள்ளனர். இதில் மூத்த சகோதரி அனிஷா தான் சிறுவயதில் முமலின் அசாத்திய திறமையை கண்டு அவரை ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு வளர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் சிலரது வாழ்க்கையை மாற்றி விடும் என்பதற்கு முமல் மெகர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.
- டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்தார். இந்த திட்டம் டெல்லி- தௌசா- லால்சோட் பாதை தேசிய தலைநகருக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.
டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே 1,386 கிமீ நீளத்துடன் இந்தியாவின் மிக நீளமான பாதையா அமைகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண தூரம் 12 சதவீதம் குறையும் என்றும், 1,424 கிமீ முதல் 1,242 கிமீ என்றும், பயண நேரம் 50 சதவீதம் குறையும் என்றும், தற்போதைய 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் மேடையில் இருந்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-
நெடுஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, ஆப்டிகல் ஃபைபர் போன்றவற்றில் அரசு முதலீடு செய்து, மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது, வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அது பலம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு மீதான முதலீடு அதிக முதலீட்டை ஈர்க்கிறது.
இத்திட்டம், 12,150 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.
பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்பவர்கள், தங்கள் பணியை முடித்து மாலையில் விரைவில் வீடு திரும்பலாம். விரைவுச் சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.
இந்த விரைவுச் சாலையானது சரிஸ்கா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, ரந்தம்பூர் தேசியப் பூங்கா மற்றும் ஜெய்ப்பூர், அஜ்மீர் போன்ற நகரங்களுக்கும் பயனளிக்கும்.
ராஜஸ்தான் ஏற்கனவே அதன் சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்றது. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டத்துடன் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.19,000 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்தார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
11 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 2000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடுகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 76 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் தினமும் பால் வழங்கப்படும்.
மாநில அரசு வாரியங்கள், பெருநிறுவனங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு முன் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கு 30,000 மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு 3,000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். தோல் நோய் தாக்குதலால் கால்நடைகளை இழந்த கால்நடை வளர்ப்போருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும். புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பட்ஜெட்டை தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
- பாஜக தலைவர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். சுமார் 7 நிமிடங்கள் வாசித்த நிலையில், அவர் கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை படிப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, கவனித்தார். உடனடியாக அவர் அசோக் கெலாட்டிடம் இதைக் கூறினார்.
உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்தினார். தவறுதலாக வாசித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், இந்த ஆண்டின் பட்ஜெட்டை வாசித்தார்.
முதல்வரின் இந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டி, பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்தபோது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இது கசிந்துவிட்டதா? என்று பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறினார்.
இன்று முதல்வர் கெலாட் பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டசபை அவமதிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், 'உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.
- இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசினார் ராம்தேவ்.
- உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
பார்மர்:
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமை ஊக்குவித்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2-ந்தேதி நடந்த கூட்டத்தில் இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசிய ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நாடுவதாகவும், இந்து பெண்களைக் கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
மற்ற இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார்.
இது தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த பதாய் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் ராம்தேவ் மீது இன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ராஜஸ்தானில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் தடம் புரண்டது.
- இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளது என வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- ராஜஸ்தானில் வேகமாகச் சென்ற சொகுசு கார் லாரி மீது மோதிய விபத்து ஏற்பட்டது.
- இதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் சோமு நகரைச் சேர்ந்த சிலர் சொகுசு காரில் கண்டேலா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அந்த சொகுசு கார் பல்சானா - கண்டேலா சாலையில் மாஜி சாஹப் கி தானி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது அங்கு சென்ற பைக் மீதும், எதிரே வந்த லாரி மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற தம்பதி மற்றும் சொகுசு காரில் சென்ற ஒன்றரை வயது குழந்தை உள்பட 8 பேர் என மொத்தம் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனே மீட்புப் பணிகளில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது.
- ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார்.
உதய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது. அதையடுத்து ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 37 தேர்வர்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.
மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. உமேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
- பா.ஜனதா தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.
- பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள்.
அல்வார் :
ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று அல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜனதா தலைவர்கள் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுவதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதாவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள். பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள். பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்' என குற்றம் சாட்டினார்.
இந்த தலைவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என கேட்டுப்பாருங்கள் எனக்கூறிய ராகுல் காந்தி, அமித்ஷா முதல் பா.ஜனதா முதல்-மந்திரிகள், எம்.பி-எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிப்பதாகவும், அவர்கள் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டும் என அந்த தலைவர்கள் விரும்புவதாகவும் சாடினார்.
மேலும் அவர், 'மாணவர்கள் இந்தி படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை. நீங்கள் இந்தி, தமிழ் என அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். எனவே ஏழைகளின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்று அமெரிக்கா சென்று அங்குள்ளவர்களுடன் போட்டிபோட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்' என்றும் தெரிவித்தார்.
- சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம்.
- காங்கிரஸ் கட்சி எப்போதும் நாட்டுக்காக நின்றிருக்கிறது என்றார் காங்கிரஸ் தலைவர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் அல்வாரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மோடி அரசு மிகுந்த வலிமையானது. யாரும் அவர்களது கண்களைக்கூட நேரடியாக பார்க்க முடியாது என மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் எல்லைகளில் மோதலும், சர்ச்சைகளும் எழுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் உயிரிழந்த பிறகு, அந்த நாட்டு அதிபரை பல முறை மோடி சந்தித்து பேசியிருக்கிறார். சந்திப்புகளை நடத்தியிருக்கிறார், அவருடன் ஊஞ்சல் ஆடியிருக்கிறார். இதெல்லாம் நடந்த பிறகும், சீன எல்லையில் இந்த மோதல் நீடிக்கிறது? வெளியே அவர்கள் சிங்கம் போல பேசுவார்கள், ஆனால் அவர்களது செயல்பாடுகளை நீங்கள் பார்த்தால், ஒரு எலியைப் போலத்தான் இருக்கும்.
சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அதற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அவர்கள் இன்னும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு தயாராக இல்லை. எல்லையில் என்ன நடக்கிறது? அரசு என்ன செய்கிறது? நமது எல்லை மற்றும் வீரர்களின் நிலை என்ன என்று விவாதிக்க விரும்புகிறோம். ஆனால் இந்த விவாதம் நடத்தாமல் ஏன் ஒளிந்து கொண்டு ஓடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
- மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
- ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






