என் மலர்
ராஜஸ்தான்
- ராஜஸ்தானில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள உதய்ப்பூர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கடந்த 29-ந் தேதி மாயமானார்.
- சிறுமியுடன் பள்ளியில் படித்து பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ் என்பவர் சிறுமியை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூர்:
டெல்லியில் இளம் பெண் ஸ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து மும்பை, ராஜஸ்தான் உள்பட நாட்டின் சில இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராஜஸ்தானில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள உதய்ப்பூர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கடந்த 29-ந் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மவுலி பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியுடன் பள்ளியில் படித்து பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய கமலேஷ் என்பவர் சிறுமியை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
- பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும்.
- ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர்.
ஜெய்ப்பூர் :
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டாவில் நடந்த காங்கிரசாரின் போராட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக பதற்றம், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு போன்றவைதான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாக இருந்தன. இந்த பயணத்தின் வெற்றியால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர். இதனால் சதி செய்து அவரை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்' என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் கூறினார்.
- வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது.
- ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்:
அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது.
சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை கண்கூடாக காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த சகோதரர்களின் பெயர் அர்ஜுன்ராம், பகிரத், உமைத்ஜி, பிரகலாத். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் சகோதரி பன்வாரிதேவி 4 சகோதரர்களும் சகோதரி பன்வாரிதேவியின் மீது பாசத்தை பொழிந்து வளர்த்து வந்தனர்.
பன்வாரிதேவிக்கு கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது ஊரே மெச்சும்படியாக சகோதரர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.8 கோடியே 31 லட்சம் மதிப்பில் வரதட்சணை வழங்கினர். இந்த கிராமத்தில் இந்த அளவுக்கு அதிக தொகையை யாரும் இதுவரை வரதட்சணையாக வழங்கியதில்லை.
இந்த வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது. ரூ.4 கோடி மதிப்பில் 33 ஏக்கர் நிலம், ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கிலோவுக்கு மேல் தங்க நகைகள், ரூ.9.8 லட்சம் மதிப்பில் 14 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.
சீதனப் பொருட்கள் அனைத்தும் திங்சாரா கிராமத்தில் இருந்து மாப்பிள்ளை வீடு இருக்கும் ரய்தானு கிராமத்துக்கு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் ஒட்டக வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த திருமணத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் அனைவருமே திருமணம் நடந்த இடத்தில் திரண்டிருந்தனர்.
- நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
- அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதே போல் அருணாசல பிரதேசத்தில் அதிகாலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.
- 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
- கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர்.
பொக்ரான்:
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பாலைவன பகுதியான இங்கு பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பது, மறைவிடங்களில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வார்கள்.
வழக்கம் போல ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது இங்கிருந்து 3 ஏவுகணைகள் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த ஏவுகணைகள் விண்ணில் பாதை மாறி எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்த கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அந்த சமயம் பயங்கர வெடிசத்தம் போல கேட்டது. ஏவுகணை விழுந்த பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது. இந்த 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
இந்த ஏவுகணைகள் 10 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும்.
கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். இதில் ஆஜசர் என்ற கிராமத்தில் ஒரு ஏவுகணையின் சிதறிய பாகங்களும், அருகில் இருந்த மற்றொரு கிராமத்தில் 2-வது ஏவுகணையின் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.
ஆனால் 3-வது ஏவுகணை எங்கே விழுந்தது? என்று தெரியவில்லை. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
ஏவுகணை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
- தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாக ஹமித் கான் கூறி உள்ளார்.
- எதிர்தரப்பில் பெண்ணின் தந்தை பீர்பால் கான் என்பவர் மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஹமித் கான் என்ற வாலிபரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் கும்பலாக வந்து கடத்திச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவரது மூக்கையும் அறுத்துள்ளனர். திருமணத்தை ஏற்காததால் மனைவியின் குடும்பத்தினர் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹமித் கான், கெகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னையும் தன் மனைவி ரஜியாவையும் வீட்டில் இருந்து ஒரு வாகனத்தில் கடத்தி சென்றதாகவும், பின்னர் தன்னை மட்டும் வேறு வாகனத்தில் கடத்திச் சென்று நாகவுர் மாவட்டம் மரோத் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகில் வைத்து கடுமையாக தாக்கி தனது மூக்கை அறுத்ததாகவும் ஹமித் கான் கூறி உள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஜியாவின் தந்தை பீர்பால் கான் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் எதிர்தரப்பில் பீர்பால் கான் தன் மகளை காணவில்லை என்று மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக போலீசாரிடம் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
- முதல்-மந்திரியின் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
- அரசு வேலைகள் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என வீரர்களின் விதவை மனைவிகள் வலியுறுத்தினர்.
ஜெய்ப்பூர்:
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராஜஸ்தான் மாநில சி.ஆர்.பி.எப். வீரர்களின் மனைவிகள் தங்களது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பா.ஜ.க. மேலவை எம்.பி. கிரோடி லால் மீனாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். வீரர்களின் மனைவிகள், தங்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். வீரமரணம் அடைந்தவர்களின் மனைவிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக சர்வாதிகார போக்குடன் அரசு நடக்கிறது என மீனா கூறினார்.
இதுபற்றி கெலாட் கூறும்போது, அரசியல் லாபங்களுக்காக விதவைகளை மீனா பயன்படுத்தி வருகிறார் என குற்றச்சாட்டாக கூறினார். ஆனால், போலீசார் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர் என மீனா கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் வீட்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் விதவை மனைவிகளை போலீசார் நேற்று காலை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் இல்லம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க. போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கைகளில், கம்புகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் காணப்பட்டனர். சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசியதில் வன்முறை வெடித்தது. போலீசாரின் பேரிகார்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
முன்னதாக, வெவ்வேறு தாக்குதல்களில் உயிரிழந்த வீரர்களின் விதவை மனைவிகளை, முதல்-மந்திரி கெலாட் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், அரசு வேலைகள் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என கெலாட்டிடம் வலியுறுத்தினர். புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் மனைவிகள் கெலாட்டை சந்திக்கவில்லை.
இதேபோன்று, ஜெய்ப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் தொடரும் என கூறிய அவர், அரசின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என கூறியதுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளார்.
- விஷ்வேந்திர சிங் மகன் அனிருத் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
- மந்திரி விஷ்வேந்திர சிங் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஜெய்ப்பூர் :
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அதில், சுற்றுலாத்துறை மந்திரியாக விஷ்வேந்திர சிங் பதவி வகித்து வருகிறார்.
அவருடைய மகன் அனிருத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவர் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கு நெருக்கமானவர். அவர் கூறியிருப்பதாவது:-
ராகுல்காந்தி, மற்றொரு நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது சொந்த நாட்டை இழிவுபடுத்துகிறார். ஒருவேளை, அவர் இத்தாலியைத்தான் தனது தாய்நாடாக நினைக்கிறார் போலும்.
அவர் இந்தியாவில் இந்த குப்பைகளை பேச முடியாதா? அவர் மரபணுரீதியாக ஐரோப்பிய மண்ணுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு மந்திரி விஷ்வேந்திர சிங் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
- ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது.
- கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று வந்த 2 முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்தனர். வங்கிக்கு நடந்து வந்த அவர்கள், கொள்ளையடித்தபின் வங்கி ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.
கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கலிபா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராம் (வயது32). இவரது மனைவி பட்லி (30).
இவர்களுக்கு ரமீலா (12), பிரகாஷ் (10), கேகி (8), ஜான்கி (6), ஹிதேஷ் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று சங்கர் ராம், பட்லி ஆகியோர் தங்களது 5 குழந்தைகளுடன் சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியவை கால்வாய் கரையில் இருந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதில் 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் சங்கர் ராம் குடும்பத்தி னருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தததாகவும், இது தொடர்பாக அந்த தம்பதியி னர் பஞ்சாயத்து கூட்டம் கூட்டி நீதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த கூட்டத்தி லும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சங்கர் ராம் தனது குடும்பத்தி னருடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலைக்கு முன்னதாக மாணவன் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
- படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.
கோட்டா:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த சில தினங்களாக பயிற்சி மையத்திற்கு செல்லாமல் இருந்த அபிஷேக் யாதவ், நேற்று தனது விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கி மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதி வைத்த குறிப்பை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தான் சிக்கலில் இருப்பதாகவும், படிப்பால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி, பெற்றோரிடம் தன்னை மன்னிக்கும்படி கூறியிருக்கிறார். எனினும் படிப்பில் அழுத்தம் அதிகரிப்பதற்கு பயிற்சி நிறுவனமே பொறுப்பு என மாணவரின் தந்தை கூறி உள்ளார்.
கோட்டா நகரில் இந்த ஆண்டு இதுவரை 4 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
- சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவ்ராம் மீனா கூறியதாவது:-
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் இதுதொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு பயங்கரமான விஷயம். ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் இன்று காலை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






