என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
    • புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

    இதற்கான அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இது அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் அரசு உறுதியளித்ததுபோல ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது.

    இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல், புள்ளிவிபரங்கள், ஆவணங்களை சேகரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அனைத்து ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு செய்ய வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

    இந்த கணக்கெடுப்பு நடத்த கவர்னர் தமிழிசையும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் விரைவில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதனால் புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    எனவே உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறது.

    • அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    பொங்கல் பண்டிகைக்குள் இந்த மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த தகவலை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருந்தாலும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவலை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.

    அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

    அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
    • கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.

    தொடர்ந்து கவர்னர் உறியடித்தார். தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவர்னர் தமிழிசை கண்டுகளித்து கலைஞர்களை பாராட்டினார். மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அங்காளன், வி.பி.ராமலிங்கம், என்ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால் மற்றும் அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவால் பொங்கல், சாம்பார், பல வகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது.

    பொங்கல் விழாவுக்கு வந்த தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் உதயகுமார், அபிஜித்விஜய் சவூத்திரி, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர்.

    காலை 8 மணிக்கு விழா தொடங்கினாலும் முதலமைச்சர் ரங்கசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். இதனால் கவர்னர் தமிழிசை 2½ மணி நேரம் காத்திருந்தார். முதலமைச்சர் ரங்கசாமி வந்த பிறகே விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டது.

    • கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மயிலாடுதுறையில் தனியாக வசித்து வருகின்றனர்.
    • தனது பெயரில் மட்டும் தனி கணக்கை சாமிநாத தொடங்கி உள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி அக்கரை வட்டம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 60). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஞான ஒளி, மகன் நவீன். கடந்த சிலநாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மயிலாடுதுறையில் தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் ரேசன் கார்டை மாற்றாத காரணத்தால், அரசு வழங்கும் சலுகை மற்றும் பணம் தந்தைக்கு சென்று சேர்வதால், தந்தையின் வங்கி கணக்கில் நவீன் தன்னை ஜாயின் அக்கவுண்டராக அண்மையில் சேர்த்து ள்ளார்.

    ரேஷன் கார்டில் அரசு வழங்கும் பணத்தை சாமிநாதன் எடுக்கும் பொழுதெல்லாம், அவரது மனைவி ஞான ஒளியின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது. இதனை அறிந்த மகன் நவீன், ரேசன் கார்டில் வரும் பணத்தை ஞான ஒளிக்கு வழங்குமாறு அவ்வப்போது கூறி வந்தார். ஆத்திரமடைந்த சாமிநாதன், வங்கி பாஸ்புக் தொலைந்து விட்டதாக கூறி, தனது பெயரில் மட்டும் தனி கணக்கை சாமிநாத தொடங்கி உள்ளார். இது குறித்து விபரம் மனைவி ஞான ஒளியின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது.

    இது குறித்து தந்தையிடம் விவரம் கேட்க நவீன் நிரவிக்கு சென்று தந்தை சாமிநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பலமாக அடித்து விட்டு நவீன் தப்பி ஓடிவிட்டார். சாமிநாதனின் உறவினர் அரவிந்த், சாமிநாதனை காப்பாற்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்து அரவிந்த் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து நவீனை கைது செய்தனர். 

    • புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
    • குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.

    அதன் 2 கைகளிலும் வெட்டு காயங்கள் காணப்படுகிறது. இந்த குரங்கை அப்பகுதி மக்கள் அனுதாபத்துடன் பார்த்து உணவு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குரங்குக்கு பழத்தில் மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயற்சித்தனர்.

    ஆனால் குரங்கு மருந்து இருப்பதை அறிந்து பழத்தை தூக்கி எறிந்து விட்டது. குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
    • பால் விலை உயா்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நீலநிற பாக்கெட்டில் விற்பனையாகும் டோண்ட் மில்க் லிட்டர் ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆகவும், ஸ்பெஷல் டோண்ட் மில்க் (பச்சை நிற பாக்கெட்) லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டாண்டர்டு மில்க் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த பால் விலை உயா்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    • சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
    • கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.

    புதுச்சேரி:

    ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.

    அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

    • வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

    அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்று வந்ததாக தெரிவித்தனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    • நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன்.
    • புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பிராந்தியமான ஏனாமில் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி பா.ஜனதா ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 6-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்குக்கு நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஏனாம் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்கு நடைபெற்ற மக்கள் கலாசார நிறைவு விழாவில் ரங்கசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை . ஏனாம் மக்கள் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவையின் அனைத்து பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

    அரசின் ஒருசில திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகலாம். அதற்கு நம்மிடம் முழு அதிகாரம் இல்லாதது தான் காரணம். எனவே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

    நமது அரசு மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு புதுவையில் ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது நமக்கு கிடைத்த பெருமை.

    புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் மக்கள் குறைகள் குறித்து மனுவாக அளித்துள்ளார். இதில் குறிப்பாக ஏனாமில் சூதாட்ட விடுதிகள் அமைக்க கூடாது என்பது தான். சூதாட்டம் மிகவும் மோசமானது. எந்த இடத்திலும் சூதாட்ட விடுதி இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். எனவே சூதாட்ட விடுதிகளுக்கு அரசு அனுமதி அளிக்காது. புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே .டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
    • கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.

    ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.

    இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    • பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்.
    • தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் வேலங்குடியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 38). இவரது கணவர் சிவராஜா. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  ஹேமாவதியின் தந்தை பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் வசித்து வருகிறார். தனது தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹேமாவதி சைக்கிளில் தனது தந்தையை பார்க்க சென்றார்.

    அப்போது, மர்மநபர் ஒருவர், மோட்டார் சைக்களில் சென்று, ஹேமாவதியிடம் ஆபசமாக பேசி மோட்டார் சைக்களில் ஏறுமாறு கூறிய தாக தெரிகிறது. இது குறித்து, ஹேமாவதி நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹேமாவதி கூறிய மர்ம நபரின் அடையாளங்களை வைத்து திருவாரூர் மாவட்டம் பாவட்ட குடியைச்சேர்ந்த ரமேஷ் (39) என்பவரை கைது செய்தனர்.

    ×