என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
    • மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    இன்று அதிகாலை முதலே புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.

    சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர். கடற்கரை சாலையில் கடலில் குளிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையையும் மீறி குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.

    புதுவை நோணாங்குப்பம் படகு குழாமில் படகில் சவாரி செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி சென்றனர்.

    இதேபோல் புதுவையின் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    மதிய வேளையில் பிரபல உணவகங்களில் மேஜையை பிடிக்க வரிசையில் நின்றனர்.

    • புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே 15 ஏக்கர் அரசு இடம் உள்ளது.
    • புதுச்சேரி அரசு 12 ஆண்டுகளுக்கு பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே, 5 ஏக்கர் இடத்தில், புதிய சட்டசபை கட்டிடம் விரைவில் கட்டப்படும் எனசபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார். காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே 15 ஏக்கர் அரசு இடம் உள்ளது. அதில் 5 ஏக்கர் இடத்தில் ரூ.450 கோடி செலவில், புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்படும். இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்க உள்ளது. புதுச்சேரி அரசு 12 ஆண்டுகளுக்கு பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதனை அனைத்துதரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். அதேபோல், கவர்னர், முதல் அமைச்சர் ஒருங்கிணைந்து முடிவெடுத்து பெண்களுக்கு 2 மணி நேரம் பணி நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.

    புதுச்சேரி:

    கோடை விடுமுறையை யொட்டி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற டிசம்பர் 20-ந்தேதி மாலை 5.20-க்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற வுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் பள்ளி களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தாலும் சனிக்கிழமை என்பதாலும், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.  நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும் திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயில் அதிக மாக உள்ளதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.

    தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.

    புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.

    இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    • கருப்புசாமி மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
    • யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு என உணர்ந்தனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதி எதிரே, சாமி தரிசனம் செய்த பெண்ணிடம், 6 1/2 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபரை பிடித்து தங்க நகையை மீட்டுத்தருமாறு, பெண்ணின் கணவர், திருநள்ளாறில் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை தூநேரி அழகர் கோவில் மெயின் சாலையைச்சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கருப்புசாமியை காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசனம் செய்துவந்தால், நேரம் நல்லா இருக்கும் என ஜோதிடர் கூறியதை அடுத்து, கருப்புசாமி, தனது மனைவி உமாதேவியுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனீஸ்வரரை, அவரது சன்னதி எதிரே நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பும்போது, உமாதேவியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்க நகையை காணவில்லை. கூட்டத்தை விலக்கி பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து, உமாதேவி திருநள்ளாறு போலீசில் புகார் கொடுக்க கணவரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர், உயிருக்கு வந்த ஆபத்து தங்க செயினுடன் போய்விட்டது. சனியும் விலகிவிட்டது. அதனால், புகார் தராமல் வீட்டுக்கு போங்க என கூறியதாக கூறப்படுகிறது. அதனை நம்பி தம்பதியினர் புகார் தராமல் ஊர் திரும்பிவிட்டனர். ஊர் சென்றதும், யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு. புகார் தந்தால்தான் நகை கிடைக்கும் என உமாதேவி கணவரிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காரைக்கால் திருநள்ளாறு வந்த கருப்புசாமி, கடந்த டிசம்பர் மாதம் சனீஸ்வரர் சன்னதி முன்பு நடந்ததை கூறி, கோவில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபரை பிடித்து, தங்க நகையை மீட்டுதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
    • நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி என்ற டெல்லி கோபி.

    சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது விவாகரத்து வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணம் செய்து கொண்ட இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி கோபி விவகாரத்து வழக்கிற்காக புதுவைக்கு வந்தார்.

    விசாரணை முடிந்து புதுவை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் வடபழனி போலீசார் எனக்கூறி கோபியை கடத்தி சென்றனர்.

    சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே வந்தபோது காரில் அவரை தாக்கி மகன்-மருமகள் எங்கே? என கேட்டனர். மேலும் மற்றொரு காரில் இருந்து வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கோபியை மிரட்டினார். கோபி தொடர்ந்து சத்தம் போட்டதால் கானாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கோபியை கீழே இறக்கிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து கோபி கானாத்தூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் புதுவை என்பதால் அங்கு புகார் அளிக்குமாறு கானாத்தூர் போலீசார் கூறி புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை

    இதனால், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கோபி கூறியதாவது:-

    எனது மகனையும், மருமகளையும் ஆணவக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பெண்ணின் தந்தை, நண்பர் ஆகியோர் கூட்டு சதி செய்து போலீஸ் என கூறி என்னை கடத்தி சென்றனர். நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடத்தல் சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படு கின்றனர்.

    இது தொடர்பாக கோர்ட்டையும் நாட உள்ளேன். கானாத்தூரில் கடத்தல் கும்பல் என்னை விடுவித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் என்னிடம் இருக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுபஸ்ரீ பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார்.
    • 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை.

    காரைக்கால்:

    காரைக்கால் சின்னக் கண்ணு செட்டிவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கு, கவிதா என்ற மனைவியும், பவித்ரா (வயது26), சுபஸ்ரீ (22) என்ற 2 மகள்களும் உள்ளனர். சுபஸ்ரீ காரைக்கால் செருமா விளங்கை பகுதியில் இயங்கி வரும் பெருந்தலைவர் காம ராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார். வழக்கமாக, காலை கல்லூ ரிக்கு செல்லும் மாணவி, மாலை வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, தந்தை பல்வேறு இடங்களில் தேடியும், தோழிகள், உறவி னர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, மாணவியை கண்டு பிடித்துதருமாறு, தந்தை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார்.
    • பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012-ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

    திருமணமான சில மாதங்களில் எல்லம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்து தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது, கல்யாணசுந்தரம் வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார்.

    நாட்கள் நகர நகர சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை எல்லம்மாளுக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்து கல்யாணசுந்தரத்திடம் அவர் கேட்டுள்ளார். அப்போது எல்லம்மாளை கல்யாணசுந்தரம் சமாதானப்படுத்தி புதுவை கோரிமேட்டில் குடி வைத்துள்ளார்.

    பின்னர் இருவரும் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்த சூழலில் எல்லம்மாள் 2-வது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தை பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கல்யாணசுந்தரம் தனது 2-வது மனைவியின் பேச்சை கேட்டு, எல்லம்மாள் மற்றும் அவரது 2 குழந்தைகளை சரிவர கவனிக்காமல் வீட்டுக்கு வருவதை தவிர்த்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து எல்லம்மாளை மீண்டும் சமாதானம் செய்த கல்யாணசுந்தரம் எல்லம்மாளுக்கு மாதந்தோறும் வீட்டு செலவுக்கு என்று ரூ.25 ஆயிரம் பணம் தருவதாக கூறினார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் பார்த்து விட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்யாணசுந்தரம் குடும்ப செலவிற்கு பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும் தன்னையும் குழந்தைகளையும் சந்திப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும் எல்லம்மாள் புகார் கூறியுள்ளார்.

    இதையடுத்து தங்களுக்கு நீதி வேண்டி எல்லம்மாள் கருவடிகுப்பம் பகுதியில் உள்ள கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் தனது 2 குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் தன்னை ஏமாற்றிய கல்யாணசுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் எல்லம்மாள் புகார் அளித்துள்ளார்.

    தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012-ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதியதாக எழுந்த புகாரில் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • 2 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் தனது குழந்தைகளுடன், காரைக்காலுக்கு வேலை விசயமாக வந்துவிட்டு, மீண்டும் திருவாரூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.

    இந்த விபத்தில், கார் மற்றும் கடை வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும், கார் டிரைவர் ரமேஷ், கடை உரிமையாளர் திருவாரூர் நன்னிலத்தைச்சேர்ந்த ஜெயக்குமார்(50) என்பவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்தோர்,2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, ஜெயக்குமாரின் மகன் குருமூர்த்தி, காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஜயகுமார் முதலில் அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி கிரிப்டோ டாஸ்க் செய்து முடித்தார்.
    • விரக்தி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூர் அடுத்த மேல்திருக்காஞ்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் விஜயகுமார் (வயது 30). என்ஜினீயர்.

    இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேல்திருக்காஞ்சி வீட்டில் இருந்தபோது இவரது செல்போனுக்கு டெலிகிராம் செயலி மூலம் அனுசியா என்ற பெண் பெயரில் மெசேஜ் வந்தது.

    அதில் கிரிப்டோ டாஸ்க் என்ற செயலி மூலம் பணத்தை செலுத்தினால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனை நம்பிய விஜயகுமார் முதலில் அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி கிரிப்டோ டாஸ்க் செய்து முடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை. இதுகுறித்து அவர் மெசேஜ் அனுப்பினார். அதில் மேலும் பணத்தை செலுத்தினால் மட்டுமே முன்பு செலுத்திய பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என தகவல் வந்தது.

    இதனை நம்பிய அவர் அடுத்தடுத்து ரூ.33 ஆயிரம், ரூ.65 ஆயிரம், ரூ.1 லட்சம் என பணத்தை செலுத்தியுள்ளார். மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் இரட்டிப்பாகவில்லை. கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. பணம் குறித்து கேட்ட அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா ஆகியோர் சம்பந்தப்பட்ட செயலி மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண் பெயரில் மெசேஜ் அனுப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்தனர்,
    • அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரைக்கால் நகர போலீஸ் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, காரைக்கால் ஒப்பிலா ர்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, போலீசாரை பா ர்த்ததும், அங்கு நின்றிருந்த ஐயப்பன்(வயது30) என்பவர் ஓடத்துவங்கினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது, சட்டை பாக்கெட்டில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்ரி சீட்டுகளை வைத்திருந்தார். அவரது செல்போனிலும், 3 எண் லாட்ரி சீட் எண்கள் இருந்தது. விசாரித்ததில், 3 எண் லாட்ரியை விற்றதை வாலிபர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    • கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    • புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் மது வகைகள் என சுமார் 900 பிராண்ட் மது வகைகள் புதுவையில் விற்பனையாகிறது.

    புதிய பிராண்டு மது வகைகளை ருசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்தும், பிரெஞ்சு காலனி நாடுகளின் பகுதிகளில் இருந்தும் மக்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுவையில் விற்பனை ஆகிறது. 33 பிராண்ட் பீர்கள் புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5 பிராண்டுகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வருபவையாகும்.

    கோடை காலம் தொடங்கி விட்டதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் மது பிரியர்கள் பீருக்கு தற்போது மாறி உள்ளனர்.

    புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீரை ருசி பார்க்கின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    பொதுவாக வரும் அனைத்து பீர்களும் பார்லியில் செய்யப்படும். பார்லி தவிர்த்து அரிசி, கோதுமையிலும் செய்யப்படும் பீர்களும் கிடைக்கிறது. வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் பாக்ஸ் பீர்கள் புதுவையில் விற்பனையாகும். தற்போது மாதத்திற்கு 2½ லட்சம் பாக்ஸ் பீர் என விற்பனை உயர்ந்துள்ளது.

    புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது. இங்கு பீர் தயாரிப்பை நேரடியாக வாடிக்கையாளர்கள் பார்த்தபடியே பீர் அருந்தலாம். இங்கு மாம்பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி என பல வகைகளில் பீர் கிடைக்கிறது. பீர் விற்பனை தொடர்பாக மொத்த விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வழக்கமாகவே கோடை காலத்தில் மதுவை விட பீர் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பீர் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. வழக்கமாக படிப்படியாக அதிகரிக்கும் பீர் விற்பனை தற்போது கோடை காலம் தொடங்கிய உடனே அதிகரித்து உள்ளது.

    இதற்காக ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து மதுபான தொழிற்சாலைகளில் பீர் ஆர்டரை அதிகரித்துள்ளோம். இந்த ஆண்டு 3 புதிய பீர்கள் அறிமுகமாகி உள்ளது. வழக்கத்தை விட சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும். 3 லட்சம் பாக்ஸ் பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×