என் மலர்
புதுச்சேரி
- விஷ பூச்சி கடித்து காலில் வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு.
- மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதி.
புதுச்சேரி:
பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதுபோல் புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள மீட்பு பணியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் , துணை சபாநாயகருமான ராஜவேலு ஈடுபட்டு வந்தார்.
அப்போது நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுார், கரையாம்புத்தூரில் ஏரி உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
இந்த நிலையில், கரையாம்புத்தூரில் மீட்பு பணியில் இருந்த துணை சபாநாயகர் ராஜவேலு வெள்ள நீரில் நடந்து சென்ற போது அவரது காலில் விஷ பூச்சி கடித்தது.
இதனை பொருட்படுத்தாமல் அவர், மீட்பு பணியை தொடர்ந்தார். இதனிடையே விஷ பூச்சி கடித்ததில் அவரது காலில் வீக்கம் ஏற்பட்டு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கேட்டறிந்தனர்.
- குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம்.
- கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பெஞ்ஜல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் குப்பை கிடங்கில் இருந்து குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி கோபாலன்கடை பகுதியில் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய் ஜெ சரவணன்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் கோபாலன் கடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் அந்த வழியாக சென்ற குப்பை வண்டியில் ஏறி குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து கழிவுகள் வெளியேறி வாய்க்கால் வழியாக ஊருக்குள் புகுந்தது தெரியவந்தது.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மீண்டும் குப்பை வண்டியில் ஏறி புறப்பட்டு சென்றார். அமைச்சர் குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை.
- பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி தனது வாகனத்தை விட்டு இறங்காமல் பார்வையிட்டார். காரை விட்டு ஏன் இறங்கவில்லை? உள்துறை அமைச்சர் வெளிநாடு சென்று விட்டார். முதலமைச்சர் கிராமப்புற பகுதிக்கு சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் செல்லவில்லை.
அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் என்பது கண்துடைப்பு. இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் பிரதமர் மீது பழி போடுவார். இதுதான் முதலமைச்சர் ரங்கசாமியின் வேலை.
ஒட்டுமொத்தமாக புதுவை அரசு இந்த புயலை எதிர்கொள்ள தவறிவிட்டது. நிவாரண பணிகள் திருப்திகரமாக இல்லை. இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் முழு கணக்கெடுப்பை நடத்தி நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். புதுவையில் உட்கார்ந்து கொண்டு நிதி கேட்கக்கூடாது, டெல்லி சென்று கேட்க வேண்டும்.
அப்படி கேட்காமல், பிரதமர் நிதி தரவில்லை என ரங்கசாமி கூறுவார். பிரதமர் மோடி பணம் தரவில்லை என பழி போடுவார். இந்த பழி போடும் காலமெல்லாம் முடிந்து விட்டது. இந்த இரட்டை என்ஜின் ஆட்சி ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. எதுவும் நடக்கவில்லை.
உண்மையில் இந்த இரட்டை என்ஜின் ஆட்சி என்றால், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று மாலை கடலூர்-புதுவை இடையே நேரடி போக்குவரத்து தொடங்கியது.
புதுச்சேரி:
பெஞ்ஜல் புயல் தமிழகத்தை தாக்கியதால் அங்கு வரலாறு காணாத மழை பொழிந்தது.
வீடூர், சாத்தனூர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதில் உபரி நீர் திறக்கப்பட்டதில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின. அன்று மாலை கடலூர்-புதுவை சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் கடலூர்-புதுவை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிந்ததால், மாலை 3 மணிக்கு பிறகு கடலூர்-புதுவை இடையே நேரடி போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் இரவு 10 மணிக்கு, தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் ஓடைப்பாலம் உள்வாங்கியது. இதனால், புதுவை- கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடலூர் சென்ற அனைத்து வானங்களையும், முருங்கப்பாக்கம் சந்திப்பு, கொம்பாக்கம், வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.
பாலம் உள்வாங்கியதால் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி, அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து நேற்று காலை உடைந்த பாலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.40 லட்சத்தில் உடனடியாக சீரமைக்கும் பணியை தொடங்கினர்.
பாலம் சீரமைக்கும் பணியினை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாலத்தின் முக்கியத்துவம், சேதத்திற்கான காரணம் குறித்து கவர்னரிடம் விளக்கினார்.
நேற்று மாலை வரை பணிகள் தொடர்ந்தது. பணிகள் நிறைவடையும் வரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அங்கேயே இருந்து பணிகளை பார்வையிட்டு, தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். பாலம் சீரமைப்பு பணிகள் முடிந்தாலும் உடனடியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
கான்கிரீட் உறுதித்தன்மை அடைவதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) மதியம் முதல் கடலூர் சாலையில் போக்குவரத்தை தொடங்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் இலகுரக வாகனங்களை இயக்கி பார்த்து பரிசோதனை செய்துவிட்டு, பின்னர் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.
- ஃபெஞ்சல்' புயல் காரணமாக புதுவையில் 48.4 செ.மீ., காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டியது.
- கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந்தேதி அன்று கனமழை பெய்தது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48.4 செ.மீ., காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டியது. தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீரால் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறான மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கத்தின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசித்த பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் புயல்-வெள்ள பாதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நவம்பர் 27, 28, 29 தேதி விடுமுறையை ஈடுசெய்ய வரும் டிசம்பர் 7, 14, 21-ந்தேதி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது.
- புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.600 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
- இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
தொடர் மழையால் சாத்தனுார் அணை நிரம்பியதாலும் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 1-ந் தேதி நள்ளிரவு சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.
இதனால் கடலுார் தென்பெண்ணை யாற்றில் கடந்த 2-ந் தேதி தண்ணீர் பெருக்கெடுத்ததால், கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூரை சுற்றியுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின.
அன்று மாலை கடலுார்-புதுச்சேரி சாலையும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இதனால் வாகன ஓட் டிகள் கடலுார்-புதுச்சேரி இடையே கூடுதலாக 10 கி.மீ. பயணம் செய்தனர். நேற்று மதியம் கடலுார்-புதுச்சேரி சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடியத் தொடங்கியதால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கு கடலூர்-புதுச்சேரி இடையே நேரடி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் புதுவை-கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பாலம் உள்வாங்கியது. இதனால், புதுச்சேரி-கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாலம் உள்வாங்கியதையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றப்பட்டது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு வரவேண்டும். அதுபோல் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு செல்லும் வாகனங்கள் வில்லியனூர், அபிஷேக பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல வேண்டும்.
- மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது.
- நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது.
புதுச்சேரி:
புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வருகிறது. தொடக்கத்தில் மழை சற்று குறைவாக பெய்த நிலையில் ஃபெஞ்சல் புயல் அதிக மழையை தந்தது.
புயல் கரையை கடந்தபோது புதுவையில் இதுவரை இல்லாத அளவாக 54 செ.மீ. மழை பதிவானது. இதனிடையே சாத்தனூர், வீடூர் அணைகளும் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது.
இந்த மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது. புதுவையின் மிகப்பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர், கிருமாம்பாக்கம் ஏரிகள் உள்பட 84 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன.
இதேபோல் புதுவையில் ஆறுகளின் குறுக்கே 27 படுகை அணைகள் உள்ளன. அதில் செல்லிப்பட்டு படுகை அணை ஏற்கனவே உடைந்துவிட்டது. தற்போது படுகை அணைகள் உள்ளன. இந்த அணைகளும் நிரம்பி வழிகின்றன.
கடந்த காலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியாக 68 செ.மீ. மழை பொழியும். ஆனால் இந்த ஆண்டு 76.50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது இதுவரை 11 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.
நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது. மேலும் விவசாய தேவைகளுக்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைக்கும்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
புதுச்சேரி பகுதியில் உள்ள 84 ஏரிகளும் நிரம்பிவிட்டன. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 4 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஏரிகளும் தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது.
கடந்த காலங்களில் பாகூர் ஏரி நிரம்பினால், ஊசுடு ஏரி நிரம்பாமல் இருக்கும். கடந்த ஆண்டு ஏரிகள் 70 சதவீதம்தான் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு இரு பெரிய ஏரிகளும் நிரம்பிவிட்டன.
இந்த ஏரிகளில் தற்போது 1.73 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் உட்புகாமல் இருக்கும். மேற்கில் இருந்து வரும் தண்ணீர் உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரி வழியாக திருப்பப்பட்டதால் இந்திராகாந்தி சதுக்கத்தில் ஓரளவுக்கு சேதம் தடுக்கப்பட்டது.
அதேபோல் பூமியான்பேட்டை பகுதியில் பாலம் பெரியதாக அமைக்கப்பட்டதால் தண்ணீரை எளிதாக உள்வாங்கியது. இதனால் பூமியான்பேட்டை, ஜவகர் நகர் பகுதியில் தேங்கிய தண்ணீர் விரைவாக வடிந்தது. பொதுப்பணித்துறை மூலம் 44 பம்புகள் வைத்து தண்ணீர் இறைக்கப்பட்டது.
வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை தடுக்க 15 ஆயிரம் மண் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்னும் 25 ஆயிரம் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
நகரப் பகுதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு கழிவுகளான மெத்தை, தலையணை போன்றவற்றை போட்டு வைத்துள்ளனர். இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதை ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.
சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டு சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் தண்ணீர் வடிவதில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வெள்ளமும் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
- பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
தவளக்குப்பம்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பாய்ந்து சென்றதால், புதுச்சேரி- கடலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாகூர் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டன.
நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது. இந்தநிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் உள்ள சிறிய பாலத்தின் மேற்கு பகுதி இணைப்பு சாலை நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்றபோது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாலத்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.
தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோரும் அங்கு வந்து பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் முருங்கப்பாக்கம், வில்லியனூர், உறுவையாறு, பாகூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் கடலூரில் இருந்து புதுவை வரும் வாகனங்கள் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.
அதேநேரத்தில் தண்ணீர் தேங்கிய, முகாம்களாக மாறிய தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப்பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலை பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தென்பெண்னை ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.05) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு, திருக்கனூர், செட்டிபட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம், பனித்திட்டு, நத்தமேடு, பாகூர் கொம்பூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
- 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயலால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 361 பேர் புயல் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தனர்.
கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5 ஆயிரத்து 527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.
500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.
இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சி பிரமூகர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது
இவை புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதல் கட்ட சேத மதிப்பீட்டில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன.
புதுச்சேரி:
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ம் தேதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக கொண்டு புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதற்கிடையே, புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்கள் நடைபெறும் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






