என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • ஆண்டு தோறும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து உற்சாகத்துடனும், பக்தியுடனும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.
    • இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்துக்கு மாபெரும் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

    பல மொழி, வெவ்வேறு மதம், கணக்கில் அடங்காத சாதிகள் என பலதரப்பட்ட மக்களை கொண்டது தான் இந்திய திருநாடு.

    சுய லாபத்துக்காக சிலர் மதம், சாதியின் பெயரால் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் ஒற்றுமையை பேணி காத்து வருவதை மறுக்க முடியாது.

    அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மனதை குளிர்விக்கும் மத நல்லிணக்க நிகழ்வு நடந்து வருகிறது.

    இந்த மாநிலத்தின் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராம மக்கள் தான் வியத்தகு ஒற்றுமைக்கு சொந்தக்காரர்கள். இந்த கிராம இஸ்லாமியர்கள் தங்கள் மசூதிக்குள் 'நியூ கணேஷ் மண்டல் குழு' சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது கணபதி சிலையை நிறுவி, 10 நாள் பூஜைக்கு பிறகு நீர்நிலைக்கு எடுத்து சென்று கரைத்து வருகின்றனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்துக்கு மாபெரும் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

    மசூதி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி குறித்து நியூ கணேஷ் மண்டல் தலைவர் இலாகி பதான் கூறியதாவது:-

    ஆண்டு தோறும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து உற்சாகத்துடனும், பக்தியுடனும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த பாரம்பரியம் 1961-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சாங்கிலியில் பலத்த மழை பெய்து உள்ளது. அந்த நேரத்தில் பொது இடத்தில் விநாயகர் சிலை நிறுவிய இந்துக்களை மசூதிக்குள் வந்து கொண்டாடுமாறு இஸ்லாமியர்கள் அழைத்து உள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மசூதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. 1980-ம் ஆண்டு மண்டல் (சிலை நிறுவும் குழு) அமைக்கப்பட்டு மசூதிக்குள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நல்லிணக்க திருவிழா தொடங்கியது. அது முதல் கடந்த 44 ஆண்டுகளாக மசூதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதன் காரணமாக எங்களுக்குள் எந்த பிரச்சினைகளும் வருவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டல் நிர்வாகியான ராகுல் கோகடே கூறியதாவது:-

    1980-ம் ஆண்டு இந்த மதநல்லிணக்க திருவிழா தொடங்கியது. இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ரம்ஜான் நேரத்தில் இந்துக்கள் நோன்பு இருப்பார்கள். விநாயகர் சதுர்த்தி காலத்தில் இந்துக்களுடன் இஸ்லாமியர்களும் விரதம் இருந்து ஒன்றாக சாப்பிடுவார்கள். தீபாவளிக்கு பண்டங்களை பகிர்ந்து கொள்வோம். ரம்ஜானுக்கு அவர்கள் எங்களை பாயாசம் (கீர்) சாப்பிட அழைப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிராமத்தை சேர்ந்த மொசின் பதான் என்ற இஸ்லாமியர் கூறுகையில், "ஒருவர் மற்றொருவரின் மதத்தை மதிக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். எந்த பிரச்சினை என்றாலும் நாங்கள் நேரடியாக பேசி கொள்வோம். எனவே சோதனை காலங்களில் கூட எங்களுக்கு நல்லிணக்கம் நீடித்தது. எங்கள் பகுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் தினந்தோறும் நாங்கள் கலந்து கொள்வோம். சிலை கரைப்பு ஊர்வலத்துக்கும் செல்வோம். சில இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் கூட விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வார்கள்" என்றார்.

    மற்றொரு மண்டல் உறுப்பினர்கள் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி மட்டுமில்லாமல் மொகரம், தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளையும் இங்கு இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்" என்றார்.

    இந்து-இஸ்லாமியர்களின் இந்த ஒற்றுமை செய்தியை படிக்கும்போது ஒருகனம் நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா!. மத நல்லிணக்கத்துக்கு இதை விட வேறு என்ன சிறந்த உதாரணம் வேண்டும்?. தொடரட்டும் மதங்களை கடந்த ஒற்றுமை பயணம்!.

    • உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது.
    • மாணவர்கள் குழு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர்.

    மாணவப் பருவம் இனிமையானது. மாணவ குறும்புகள் ரசிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஆசிரியையை கவுரவிக்க, வித்தியாசமாக இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் தனியார் பள்ளியில், ஆசிரியர் அறையில் இருக்கும் ஆசிரியையிடம் ஒரு மாணவர் வந்து, வகுப்பில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும், விரைந்து வந்து விலக்கும்படியும் கூறுகிறார். இதை உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது.

    அவர் வகுப்பறைக்குள் நுழைந்து சண்டையிடுவதுபோல நடித்த ஒரு மாணவரை கையைப் பிடித்து இழுத்து விலக்கிவிட்டதும், திடீரென பட்டாசு வெடித்து கரவொலி எழுப்பப்படுகிறது. அவர்கள் ஆசிரியையக்கு வாழ்த்துச் சொல்லி பரிசு தருகிறார்கள். அப்போதுதான் அது சண்டையல்ல, தன்னை மகிழ்விக்க மாணவர்கள் நடத்திய நாடகம் என்பதை அறிந்த ஆசிரியை நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டு புன்னகை பூக்கிறார். மாணவர்கள் பரிசுப் பொருட்களை நீட்டுகிறார்கள்.

    மாணவர்கள் குழு இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர். பல லட்சம் பேர் 'லைக்' தெரிவித்து உள்ளனர்.

    • ‘ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்’ நிறுவனத்தின் 2024-2025-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
    • துணைத்தலைவராக ஐடிசி லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த கருணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மும்பை:

    இந்தியாவில் உள்ள பத்திரிகைகளின் விற்பனையை தணிக்கை செய்யும் நிறுவனமான 'ஏபிசி' என்று அழைக்கப்படும் 'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' நிறுவனத்தின் 2024-2025-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

    தலைவராக மலையாள மனோரமா குழுமத்தின் இயக்குனர் மற்றும் தலைமை இணை ஆசிரியர் ரியாத் மாத்யூ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    துணைத்தலைவராக ஐடிசி லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த கருணேஷ் பஜாஜும், செயலாளராக பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தை சேர்ந்த மொகித் ஜெயினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட்
    • கெய்க்வாடின் காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ வைரலாகியது.

    நாட்டின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்து வருபவருக்கு மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தார்.

    தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் குறித்து மீண்டும் கீழ்த்தரமான கருத்து ஒன்றைக் கூறி சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொள்ளும் எனது நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாய்கள் நுழைய முயன்றால் அவர்களை அங்கேயே அப்போதே புதைத்து விடுவேன் என்று சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார்.

    முன்னதாக கடந்த மாதம் கெய்க்வாடின் காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ வைரலாகியது. கடந்த மாரச் மாதம் போலீஸ் லத்தியால் நபர் ஒருவரை சஞ்சய் தாக்கும் வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் தான் ஒரு புலியை வேட்டையாடியதாக கடந்த பிப்ரவரியில் சஞ்சய் கெய்வாட் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • எல்லோரும் அவர்களது தலைவர் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே விரும்புவர்
    • பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வர் ஆக வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் விநாயகர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறனர்.

    மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜவுடன் கூட்டணி வைத்த அவரது அண்ணன் அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் உள்ளார். சிவசேனாவை உடைத்து பாஜவுடன் கூட்டணி வைத்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணியிடம் இழந்ததில் இருந்து அஜித் பவார் சிவ சேனா அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியில் சலசப்பான சூழல் நிலவுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக அஜித் பவாரின் பேச்சு அமைந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் முதலமைச்சராக தான் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக அஜித் பவார் பொதுவெளியில் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புனேவில் உள்ள தாத்துசேத் ஹால்த்வாய் கணபதி கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட பின் பேசிய அவர், எல்லோரும் அவர்களது தலைவர் முதல்வர் ஆக வேண்டும் என்பதையே விரும்புவர் நானும் முதல்வர் ஆகவே விரும்புகிறேன். ஆனால் முதல்வர் ஆக அதிக மெஜாரிட்டியை பெற வேண்டும் என்பதும் அறிவேன். ஆனால் எல்லோரும் நினைப்பது போல் நடப்பதில்லை. தீர்ப்பு வாக்களிக்கும் மக்கள் கையில்தான் உள்ளது. மேலும் அதற்கு மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 145 என்ற பாதி இலக்கையாவது அடைவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாஜகவை சேர்ந்த மகாராஷ்ட்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வர் ஆக வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் விநாயகர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறனர். எனவே மகாரஷ்டிர முதல்வர் நாற்காலிக்கு கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் குறிவைப்பதால் அரசியல் களம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 2 ஆம் வாரத்தில் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஒரு மிருகக்காட்சிசாலைக்கு 6.5 ஏக்கர் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    மும்பையில் தோட்டம் மற்றும் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 6.5 ஏக்கர் நிலத்தை மிருகக்காட்சி சாலையாக மாற்ற பிரகான்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

    BMC இன் தலைமைப் பொறியாளர் (வளர்ச்சித் திட்டம்) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மும்பை மேம்பாட்டுத் திட்டம் (DP) 2034 மற்றும் மேம்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் ஊக்குவிப்பு ஒழுங்குமுறை 2024-இன் கீழ் செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

    இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நகரின் நடுவில் ஒரு மிருகக்காட்சிசாலையை கற்பனை செய்வது கடினம் மற்றும் விசித்திரமானது என்றும், ஒரு மிருகக்காட்சிசாலைக்கு 6.5 ஏக்கர் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும், இது தொடர்பாக பொதுமக்கள் அடுத்த 30 நாட்களில் தங்கள் ஆலோசனைகளையும் ஆட்சேபனைகளையும் சமர்ப்பிக்கலாம் என்று பிரகான்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

    • ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது.
    • சஞ்சய் கெய்க்வாட் பேசிய சர்ச்சை கருத்துக்கள் அடங்கிய வீடியோ வைரல் ஆனது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு பேசிய அவர், "இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை" என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சஞ்சய் கெய்க்வாட் பேசிய சர்ச்சை கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, சஞ்சய் கெய்க்வாட் மீது புல்தானா நகர காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
    • பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம்.

    மகாராஷ்டிரா மாநிலம் lபுனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியாளர் தின நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, "சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. நமது கட்டமைப்பில் நியூட்டன்களுக்கே அப்பாக்கள் சிலர் உள்ளனர். கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.

    நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    அரசு அதிகாரிகள் பற்றி நிதின் கட்கரி தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ராகுல்காந்தி அண்மையில் அமெரிக்க சென்றார்.
    • இட ஒதுக்கீட்டை ராகுல்காந்தி ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது.

    அண்மையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சென்றார். அங்கு பேசிய அவர், "இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, இட ஒதுக்கீட்டை ராகுல்காந்தி ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய சஞ்சய் கெய்க்வாட், "மகாராஷ்டிராவிலும் , நாட்டிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தி, நாட்டில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று பேசியுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான தகவல்களை பேசிய ராகுல்காந்தி இப்போது இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது உண்மையான முகத்தை காட்டிவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது நல்லதாக இருக்கும்.
    • மஹாயுதி கூட்டணியில் 8 முதல் 10 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும்.

    ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டமன்ற தேர்தலுடன் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அதிக அளவில் பாதுகாப்புப்பணி தேவைப்படுவதால் மகாராஷ்டிரா மாநில தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் நவம்பர் 2-வது வாரம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    நவம்பர் 2-வது வாரத்தில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது நல்லதாக இருக்கும். மஹாயுதி கூட்டணியில் மெரிட் மற்றும் சிறந்த ஸ்டிரைக் ரேட் தொகுதி பங்கீட்டிற்கு வரையறையாக இருக்கும். இன்னும் 8 முதல் 10 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.

    வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தியுள்ளோம். திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். இந்த இலக்கு 10 லட்சம் இளைஞர்கள் என்பதாகும். லட்கி பாகின் திட்டத்தின் கீழ் 1.6 கோடி பெண்கள் நிதியுதவி பெறுகிறார்கள். 2.6 கோடி பெண்கள் என்பதுதான் எங்கள் இலக்கு.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மஹாயுதி பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஆகும்.

    • நிதின் கட்கரி பிரதமர் ஆகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் ஆனால் அதற்கு தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
    • நிதின் கட்கரி தனது மனதில் இருக்கும் நாற்காலி ஆசையை எதிர்க்கட்சிகளைச் சாக்காக வைத்து மோடிஜியிடம் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் ஆகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் ஆனால் அதற்கு தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

    அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல. நான் ஒரு சித்தாந்தத்தையும் நம்பிக்கையையும் பின்பற்றுபவன் என்று அந்த தலைவரிடம் கூறினேன். அவற்றில் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறினேன் என்று தெரிவித்திருந்தார்.

    இதன்மூலம் நிதின் கட்கரி தனது நாற்காலி ஆசையை சாமர்த்தியமாக மோடியிடம் வெளிப்படுத்தி உள்ளார் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர் விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா அணி தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இந்தியா கூட்டணியில் நாட்டை ஆளும் திறன் உடைய பல தலைவர்கள்  இருக்கின்றனர்.

     

    எனவே நிதின் கட்கரி தனது மனதில் இருக்கும் நாற்காலி ஆசையை எதிர்க்கட்சிகளைச் சாக்காக வைத்து மோடிஜியிடம் கூறியுள்ளார். எங்களிடமே பல தகுதி வாய்ந்த தலைவர்கள் இருக்கும்போது பாஜகவில் இருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம். Well played நிதின் ஜி என்று விமர்சித்துள்ளார்.

    • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் இருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானம் ரத்து
    • சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

    மும்பையில் இருந்து கத்தாரின் தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், 5 மணிநேரத்திற்கு மேலாக தாமதம் ஆனதால் பயணிகள் விரக்தி அடைந்தனர்.

    அதிகாலை 3:55 மணிக்கு இந்த விமானம் புறப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படவில்லை. விமானத்திற்குள் 5 மணிநேரம் பயணிகள் காத்திருந்தனர்.

    பின்னர் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுமாறு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் பயணிகள் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஹோல்டிங் ஏரியாவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

    சுமார் 250 முதல் 300 பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்று விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    5 மணிநேர தாமதத்திற்கு பிறகு இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கோரியது.

    வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் தங்குமிடங்கள் வழங்குவதாகவும் அவர்கள் செல்லும் இடங்களுக்கு மீண்டும் விமான டிக்கெட் முன்பதிவு செய்து தரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×