என் மலர்
மகாராஷ்டிரா
- இந்திய அணியில் குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.
- ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே, வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.
வங்காளதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
- மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதுவும் வெளியாகவில்லை.
- சத்ரபதி சிவாஜியை ஆளுநர் குறைத்து மதிப்பிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
- வேறு எந்த பெரிய மனிதருடனும் சிவாஜியை ஒப்பிட முடியாது என எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்
மும்பை:
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, சத்ரபதி சிவாஜியை பற்றி பேசியது சர்ச்சையானது. மகாராஷ்டிர மாநிலத்தின் அடையாளமான மன்னர் சத்ரபதி சிவாஜி அந்த காலத்து அடையாளச் சின்னம் என்றும், நிதின் கட்காரி நவீன காலத்து அடையாளச் சின்னம் என்றும் கூறினார்.
"நாம் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் நமக்கு பிடித்த தலைவர் மற்றும் ஹீரோ பற்றி கேட்பார். சிலர் சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காந்தி என்று சொல்வார்கள். ஆனால் இங்கு யாராவது உங்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களைக் காணலாம். சிவாஜி பழைய காலத்து அடையாளச் சின்னம், நான் புதிய சகாப்தம் பற்றி பேசுகிறேன். டாக்டர் அம்பேத்கர் முதல் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் அத்தகைய அடையாளச் சின்னத்தை காணலாம்" என்றார் ஆளுநர்.
சத்ரபதி சிவாஜியை பழைய அடையாளச் சின்னம் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடனும் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரியாத ஒருவரை (ஆளுநர்) வேறு எங்காவது அனுப்புங்கள்" என்று வலியுறுத்தினார்.
ஆளுநரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து மத்திய மந்திரி நிதின் கட்கரி, கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜா எங்களுக்கு கடவுளை போன்றவர். பெற்றோருக்கும் மேலாக நாங்கள் அவருக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம், என்றார்.
- மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது.
- டேங்கர் லாரி கடும் வேகத்தில் தறி கெட்டு ஓடத்தொடங்கியது.
புனே:
மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
வேகமாக சென்று கொண்டிருந்த அந்த லாரியின் டிரைவர் பிரேக் பிடித்து நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காமல் பழுது ஏற்பட்டு இருந்தது.
இதனால் அந்த டேங்கர் லாரி கடும் வேகத்தில் தறி கெட்டு ஓடத்தொடங்கியது. டிரைவர் அதன் வேகத்தை குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது.
அடுத்தடுத்து பல வாகனங்களை அந்த லாரி இடித்து தள்ளியது. அந்த லாரி மோதிய வேகத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று வேகமாக மோதின. இதனால் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் அலறினார்கள்.
மொத்தம் 48 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி நொறுங்கின. டேங்கர் லாரி மோதிய வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மற்ற வாகனங்கள் பின்பகுதியிலும், முன் பகுதியிலும் நொறுங்கி ஒன்றன் மீது ஒன்று சாய்ந்த நிலையில் இருந்தன.
இதன்காரணமாக நீண்ட தொலைவிற்கு பாலத்தின் இறக்கத்தில் வாகனங்கள் மோதி நின்றன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட வில்லை. ஆனால் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புனேயின் பல்வேறு பகுதியில் இருந்தும் தீயணைப்பு படை வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி கிடந்த 48 வாகனங்களையும் போராடி அகற்றினார்கள். இதனால் அந்த பாலம் பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பல மணிநேரத்திற்கு அந்த பகுதி முழுக்க கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
காயம் அடைந்த 30 பேரில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் நொறுங்கிய 48 வாகனங்களில் 30 கார்கள் ஆகும், 2 ஆட்டோ, மற்றவை வேன்கள்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.
- இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமலுக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
மும்பை :
தொழில் அதிபரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவருக்கும், பிரமல் குழுமத்தின் தலைமை இயக்குனரான ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நிடா அம்பானி மற்றும் ஆனந்தின் பெற்றோர் அஜய் பிரமல், ஸ்வாதி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், "நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இஷாவுக்கும், ஆனந்துக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார்.
- சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் பற்றி கடுமையாக பேசினார்.
வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்காக வேலை பார்த்தவர், அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர், காந்தி, நேரு போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்தவர் என கூறியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க., சிவசேனா கட்சியின் இரு அணிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக சஞ்சய் ராவத் சாம்னாவில் கூறியுள்ளதாவது:
நான் 3 மாதங்கள் ஜெயிலில் இருந்தேன். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அதற்கான நினைவிடம் உள்ளது. சாதாரண கைதி, ஒரு நாளை ஜெயிலில் கழிப்பதே கடினம். சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார். அப்போது அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
ஆங்கிலேய அரசு அவரை பொய் பணப்பரிமாற்ற வழக்கில் கைதுசெய்யவில்லை. ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுத புரட்சியை தொடங்கியதால் அவரை கைது செய்து அந்தமான் ஜெயிலில் அடைத்தனர்.
சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம். அது மன்னிப்பு கடிதம் என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் சாவர்க்கரை விமர்சிப்பது அல்ல. சாவர்க்கருக்கு எதிராக பேசியதால், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் கிடைத்த நேர்மறை சக்தி, நம்பிக்கையை சிதைத்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டங்களை மேலும் பலப்படுத்தும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
- பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது
புல்தானா:
மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜல்கான்-ஜமோத்தில் இன்று ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பலவீனப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார், மேலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சட்டங்களை மேலும் பலப்படுத்துவதுடன் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
பழங்குடியினர் நாட்டின் முதல் உரிமையாளர்கள். பிற குடிமக்களைப் போலவே அவர்களுக்கு சம உரிமைகள் உள்ளன. பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் பேசினார்.
மேலும், பழங்குடியினரின் நிலங்களை பறித்து தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க பிரதமர் விரும்புவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உலக கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கப்பட்டது.
மும்பை:
8-வது உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், உலக கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக் குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக உத்தரவிட்டது.
ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தேர்வுக்குழுவில் தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
- புரளியாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகம்.
- மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து ராகுல்காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடை பயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷெகானில் நடைபெற்று வருகிறது. சாவர்கர் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் ஷெகானில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணம் அடுத்ததாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் நுழைய உள்ள நிலையில் இந்தூரில இனிப்பு கடை ஒன்றில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது புரளியாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க வேண்டும் பாபுநாராயண் கேட்டார்.
- முதல்-மந்திரி முக்கியமான கூட்டத்தில் இருப்பதால் சந்திக்க முடியாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுநாராயண் (வயது 43). இவரது காதலி கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசார் காதலி தற்கொலை குறித்து சரியான விசாரணை நடத்தவில்லை. இதற்கு நீதி வேண்டும் என கேட்டு பாபுநாராயண் நேற்று மாலை தெற்கு மும்பையில் உள்ள அரசு தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடத்திற்கு வந்தார்.
அவர் மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க வேண்டும் என கேட்டார். ஆனால் முதல்-மந்திரி முக்கியமான கூட்டத்தில் இருப்பதால் சந்திக்க முடியாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் திடீரென அந்த கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த கட்டிடத்தின் நடு பகுதியில் பாதுகாப்பு வலை கட்டப்பட்டு இருந்ததால் பாபுநாராயண் அதில் விழுந்தார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் அவர் லேசான காயம் அடைந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது.
- மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது.
மும்பை :
மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மந்திரி நாராயண் ரானேக்கு சொந்தமான 8 மாடி 'ஆதிஷ்' பங்களா உள்ளது. இந்த வீடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் விதியை (சி.ஆர்.இசட்) மீறியும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டுமான பரப்பளவில் (எப்.எஸ்.ஐ). கட்டப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆட்சியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நாராயண் ரானே வீட்டில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது. அவர் மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு அவரது மனுவை கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. மேலும் நாராயண் ரானேயின் வீட்டில் சட்டவிரோத கட்டிட பகுதிகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதேபோல நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2 மாதங்களில் வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமான பகுதியை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு நாராயண் ரானேக்கு உத்தரவிட்டு இருந்தது. அவர் 2 மாதத்தில் அதை செய்ய தவறினால், சட்டவிரோத கட்டுமான பகுதிகளை மாநகராட்சி இடிக்கும்" என்றார்.
இந்தநிலையில் நாராயண் ரானே நேற்று அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமான பணிகளை இடிக்கும் பணிகளை தொடங்கி உள்ளார்.
இதற்கிடையே நாராயண் ரானே பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் இடிக்கும் பணி தொடங்கி இருப்பதை சமூக ஆர்வலர் சந்தோஷ் தாவுந்கர் வரவேற்று உள்ளார்.
அதே நேரத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதியை மீறியதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதி மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது இதைவிட மோசமாக இருக்கும் எனவும் கூறினார்.
- ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
- ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மும்பை :
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பால்தாக்கரேவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் மனைவி ராஷ்மி தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே வீர சாவர்க்கர் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
ராகுல்காந்தியின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் மீது எங்களுக்கு உள்ள மரியாதை மற்றும் பற்றை யாராலும் அழிக்க முடியாது.
சுதந்திரத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா) சாவர்க்கர் மீது அன்பு காட்டுவது நகைப்பிற்குரியதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சாவர்க்கர் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லை. சாவர்க்கர் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தார். அந்த சுதந்திரம் இன்று பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. சாவர்க்கருக்கு மத்திய அரசு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை?.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் இரவே பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.






