என் மலர்
மகாராஷ்டிரா
- பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை புதிய பாராளுமன்ற நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும்.
- பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மும்பை :
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற பிரதமர் மோடி, அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டமேற்படிப்பு படித்தது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புரட்சிகரமானது. பிரதமரின் இந்த கல்வி சான்றிதழை அவர் கட்டிய புதிய பாராளுமன்ற பிரதான நுழைவு வாயிலில் காட்சிப்படுத்த வேண்டும். அவரது கல்வி தகுதியை பாராளுமன்றமும், நாடும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் மர்மம் என்ன?. இதை ஏன் மறைக்க வேண்டும்?.
பிரதமர் மோடி தானாக முன் வந்து பட்டப்படிப்பு குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
- அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கவுகாத்தி:
அருணாசலபிரதேசத்தின் தவாங் பகுதியில் மராட்டியம் மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவவீரரான தாகலே உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று ராணுவவீரர் தாகலேவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புகுழுவினரின் தீவிர போராட்டத்தின் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு தாகலே சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக தவாங்கில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியான ராணுவவீரர் தாகலேவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
- சாவர்க்கரின் தியாகத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது.
- தற்போது நாடு பல முக்கிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நாக்பூர் சென்றிருந்தார். அப்போது அங்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் வீட்டுக்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதற்கிடையே நாக்பூர் பத்திரிகையாளர் மன்றத்தில் சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
சாவர்க்கர் நாட்டு சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். அவரது தியாகத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதற்காக சாவர்க்கர் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றுவதை ஏற்க முடியாது.
சாவர்க்கர் விவகாரம் புதிய பிரச்சினை அல்ல. நான் கூட விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. அவரது இந்து மகா சபாவை பற்றி விமர்சித்து உள்ளேன்.
இதபோல 32 வருடத்துக்கு முன் நாடாளுமன்றத்தில் சாவர்க்கரை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறேன். ரத்னகிரியில் சாவர்க்கர் வீடு கட்டினார். அதன் முன் சிறிய கோவில் கட்டினார். அந்த கோவிலில் வால்மீகி சமூகத்தை சேர்ந்தவரை பூசாரியாக நியமித்தார். இது அவரது முற்போக்கு சிந்தனையாக கருதுகிறேன்.
தற்போது நாடு பல முக்கிய மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக 18 முதல் 20 கட்சிகள் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தினோம். அதிகாரத்தில் இருப்பவர்களால் நாடு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றி நான் எடுத்துரைத்தேன்.
வெளிநாட்டு மண்ணில் இந்திய பிரச்சினைகளை பற்றி ராகுல்காந்தி பேசுவதாக கூறுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் இவ்வாறு பேசப்பட்டு உள்ளன.
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாலிபரின் விபரீத சாகசத்துக்கு 2 இளம்பெண்களும் ஈடுகொடுத்தனர்.
- இந்த வீடியோவுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை 'லைக்' தெரிவித்து உள்ளனர்.
மும்பை :
மும்பை பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் விசித்திரமான முறையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தார். அவர் மோட்டார் சைக்கிளில் முன்பகுதியில் ஒரு இளம்பெண்ணையும், தனக்கு பின்னால் ஒரு இளம்பெண்ணையும் அமர வைத்து மின்னல் வேகத்தில் சென்றார். திடீரென மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தை மேலே தூக்கியவாறு 'வீலிங்' சாகசம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாலிபரின் விபரீத சாகசத்துக்கு 2 இளம்பெண்களும் ஈடுகொடுத்தனர். இருப்பினும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாலிபரை உடும்பு போல தொற்றி கொண்டனர். இந்த ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் அந்த வழியாக சென்றவர்களை திகிலடைய செய்தது.
இந்த வீலிங் சாகசத்தை வாலிபரின் நண்பர்கள் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த காட்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். அது வைரல் ஆனது. இந்த வீடியோவுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை 'லைக்' தெரிவித்து உள்ளனர்.
இந்த வீடியோ பற்றி அறிந்த மும்பை போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் பதிவெண் அடையாளம் தெரியவந்தது. இது தொடர்பாக பி.கே.சி போலீசார் விபரீத சாகசம் செய்த வாலிபர், அவருடன் திகில் பயணம் செய்த இளம்பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்கள் 3 பேரையும் பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர். அவர்களை பற்றி அறிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளவும் என டுவிட்டரிலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
- தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராகுல் வழக்கறிஞர் வாதம்
- ஏப்ரல் 15ம் தேதி ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தானே:
குஜராத் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி மீதான மற்றொரு அவதூறு வழக்கு மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றுவிட்டு, இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு காந்தியின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார்.
இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர், ராகுல் காந்தி மீது பிவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி, தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால், தனது தொகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டும், கட்சிப் பணிக்காக நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ராகுல் காந்தியின் மனுவுக்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் வழக்கறிஞர் ஆஜராகி, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது அல்ல என்று கூறினார். தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறியதுடன், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
எழுத்துப்பூர்வ அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கும்போது அதற்கு ஏற்ப முடிவு எடுக்கவேணடும் எனவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் விவசாயி ஆத்திரமடைந்தார்.
- இதனால் அவர் ரூ.2 லட்சம் பணத்தை அரசு அலுவலகம் முன் வீசி எறிந்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாகக் கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து கோஷமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்குவாதத்தின்போது வாலிபர் கோபத்தின் உச்ச நிலைக்கு சென்று துப்பாக்கியால் மாமனாரை சுட்டுக்கொன்றார்.
- போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டம் சாரதா நகரில் வாலிபர் ஒருவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரது மனைவி காதலனுடன் அவுரங்காபாத்துக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் ஆத்திரமடைந்து மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தின்போது வாலிபர் கோபத்தின் உச்ச நிலைக்கு சென்று துப்பாக்கியால் மாமனாரை சுட்டுக்கொன்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர்.
- வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது.
வசாய்:
மிராபயந்தர் மாநகராட்சியில் வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தானே மாவட்டம் மிராபயந்தர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான சொத்து வரி நகரில் மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 977 பேரிடம் ரூ.227 கோடியே 80 லட்சம் வரையில் இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் ரூ.155 கோடியே 49 லட்சம் அளவிற்கு வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதி ரூ.72 கோடியே 31 லட்சம் அளவில் பாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருபவர்கள் மீது மாநகராட்சி கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதன்பேரில் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது. இதன்படி 262 குடியிருப்புவாசிகளின் சொத்துகள் பறிமுதல் செய்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்த சொத்துக்களை ஏலம் விடப்பட்டு வரி வசூலிக்கப்படும். நடப்பு ஆண்டில் வரி வசூல் 68 சதவீதமாகவும், நிலுவை தொகையை வசூலிக்க கமிஷனர் அறிவுறுத்தலின்படி சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக என மாநகராட்சி துணை கமிஷனர் சஞ்சய் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.
- பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
- காதல் ஜோடியின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூராக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர்.
காதல் ஜோடியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன்.
- பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.
மும்பை :
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியிருப்பதாவது:-
மோடி பெயர் தொடர்பான கருத்து மூலம் ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அவமதித்து உள்ளார். வேண்டும் என்றே சாவர்க்கர் மற்றும் மோடியை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்கிறேன். பொது மக்கள் ராகுல்காந்தியை தெருவில் நடமாட விடமாட்டார்கள்.
சாவர்க்கரை அவமதித்த ராகுல் காந்தியை உத்தவ் தாக்கரே தரப்பினர் ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது. அவர்களுக்கு இந்துத்வா பற்றி பேச அருகதையில்லை.
ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 'காவலாளியே திருடன் ' என கூறினார். அப்போது மக்கள் அவருக்கு தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுகொடுத்தனர். அவர் வெளிநாட்டில், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பேசினார். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தி பாரதத்தை துண்டாடுதல் குறித்து பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இவ்வாறு அவா் கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது.
- சாவர்க்கரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
மாலேகாவ் :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுதான் "மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை'', என கூறினார்.
இதன்மூலம் ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் குற்றம் சாட்டின. இது மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநிலம் மாலேகாவில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
சாவர்க்கர் எங்களின் அடையாளம். ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரத்தில் அவரை அவமானப்படுத்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
அந்தமான் செல்லுலார் சிறையில் 14 ஆண்டுகள் கற்பனை செய்ய முடியாத சித்ரவதைகளை சாவர்க்கர் அனுபவித்தார். அவரது துன்பங்களை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். இது ஒரு வகையான தியாகமாகும்.
நமது நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றதான் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன். இந்த நேரத்தை வீணடிக்க அனுமதித்தால் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும். 2024-ம் ஆண்டு தேர்தல்தான் ஜனநாயகத்தை காக்க நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றாக பேசினார். ரூ.20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தமானது என்று சரியான கேள்வியை எழுப்பினார். ஆனால் மத்திய அரசு அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.
நான் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற போராடுகிறேன். என் போராட்டம் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆகவேண்டும் என்பதற்கானது அல்ல. தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக்கின் 6 வயது பேத்தியை புலனாய்வு அமைப்புகள் விசாரித்தனர். லாலு பிரசாத் யாதவின் கர்ப்பிணி மருமகள் மயக்கம் அடையும் வரை விசாரிக்கப்பட்டார். ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தால் போலீசார் உங்களை தேடி வருவார்கள்.
பிரதமர் மோடி ஒன்றும் நமது இந்தியா கிடையாது. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் இதற்காகவா உயிரை கொடுத்தார்கள்? பா.ஜனதாவில் இருப்பவர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்றால் மற்ற கட்சியில் இருந்து வரும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்ப்பதை அவர்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடிகிறது.
எனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பறித்துவிட்டனர். ஆனால் அந்த துரோகிகளால் மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- லாரியில் இருந்து டெம்போவில் இருமல் சிரப் மாற்றப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
- கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 9.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கோடீன் அடங்கிய இருமல் சிரப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்து செய்துள்ளனர்.
மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவில் உள்ள கொண்டாரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் (பிவாண்டி) கிஷோர் கைர்னார் கூறிகையில்" கிடைத்த துப்புத் தகவலின் பேரில், கொங்கன் காவல் நிலையக் குழு ஒரு இடத்தில் சோதனை நடத்தியது. இதில், லாரியில் இருந்து டெம்போவில் இருமல் சிரப் மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர். அப்போது போலீஸார் ரூ. 9.30 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கைப்பற்றி நான்கு பேரைக் கைது செய்தனர்.
இதைத்தவிர, 8.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு வாகனங்கள், ஒரு டிரக் மற்றும் ஒரு டெம்போ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.






