என் மலர்
இந்தியா

2 இளம்பெண்களுடன் வாலிபர் வீலிங் சாசகம் செய்த காட்சிகள்.
2 இளம்பெண்களுடன் விபரீத 'வீலிங்' சாகசம் செய்த வாலிபர்: சமூகவலைத்தளத்தில் வைரல்
- வாலிபரின் விபரீத சாகசத்துக்கு 2 இளம்பெண்களும் ஈடுகொடுத்தனர்.
- இந்த வீடியோவுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை 'லைக்' தெரிவித்து உள்ளனர்.
மும்பை :
மும்பை பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் விசித்திரமான முறையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தார். அவர் மோட்டார் சைக்கிளில் முன்பகுதியில் ஒரு இளம்பெண்ணையும், தனக்கு பின்னால் ஒரு இளம்பெண்ணையும் அமர வைத்து மின்னல் வேகத்தில் சென்றார். திடீரென மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தை மேலே தூக்கியவாறு 'வீலிங்' சாகசம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாலிபரின் விபரீத சாகசத்துக்கு 2 இளம்பெண்களும் ஈடுகொடுத்தனர். இருப்பினும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாலிபரை உடும்பு போல தொற்றி கொண்டனர். இந்த ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் அந்த வழியாக சென்றவர்களை திகிலடைய செய்தது.
இந்த வீலிங் சாகசத்தை வாலிபரின் நண்பர்கள் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த காட்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். அது வைரல் ஆனது. இந்த வீடியோவுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை 'லைக்' தெரிவித்து உள்ளனர்.
இந்த வீடியோ பற்றி அறிந்த மும்பை போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் பதிவெண் அடையாளம் தெரியவந்தது. இது தொடர்பாக பி.கே.சி போலீசார் விபரீத சாகசம் செய்த வாலிபர், அவருடன் திகில் பயணம் செய்த இளம்பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்கள் 3 பேரையும் பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர். அவர்களை பற்றி அறிந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளவும் என டுவிட்டரிலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.






