என் மலர்
ஆந்திர பிரதேசம்
- அவர்கள் இந்த ராகிங் சம்பவத்தை வீடியோ எடுத்து, ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
- கல்லூரியில் மாணவராக அல்லாத ஒரு வெளி நபரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவன் சீனியர்களால் குரூரமான முறையில் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திராவின் பலநாடு மாவட்டத்தில் உள்ள தச்சபள்ளி அரசு ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டு, மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டு ராகிங் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்றும், அவர்கள் இந்த ராகிங் சம்பவத்தை வீடியோ எடுத்து, ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
கல்லூரியில் மாணவராக அல்லாத ஒரு வெளி நபரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
- விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே விபத்து நிகழ்ந்தது.
- எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு சிலிண்டர், வெல்டிங் பணியின்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் சங்கபத்ரா பாக்சி உத்தரவிட்டார்.
- தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.
- குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. இவர் விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையங்களை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லாத தம்பதிகளிடம் சோதனை குழாய் மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்று தருவதாக நம்ப வைத்தார். அதன்படி வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வந்தார்.
தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.
இதற்காக தம்பதிகளிடம் ரூ.30 முதல் 40 லட்சம் வரை வசூல் செய்தார். மேலும் வாடகை தாய்க்கு உடல்நலம், மருத்துவ செலவுகள், பராமரிப்பு ஊட்டிச்சத்து செலவு என 9 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தார்.
ஆனால் இந்த கருத்தரிப்பு மையத்தில் கடத்தப்படும் குழந்தைகளை வாடகை தாய் முறையில் பெற்றதாக கூறி தம்பதியினர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நம்ரதா உள்பட 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளை கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதன் மூலம் குழந்தைகளை வாங்கிய 80 தம்பதிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இதற்காக குழந்தை இல்லாத தம்பதிகளிடம் நம்ரதா ரூ. 25 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நம்ரதா மற்றும் அவரது மகன் ஜெயந்த் கிருஷ்ணாவின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.
- மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.
- வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார்.
இரு மனம் இணையும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் இருப்பார்கள்.
இந்த திருமணத்தில் அடியெடுத்து வைத்த ஒரு இளம்பெண், முதல் நாளிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 22). இவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவருக்கும் திருமண வீட்டார் விருந்து அளித்து அசத்தினர். மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.
இதனையடுத்து சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கப்படவில்லை. அதன்பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை மீட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹர்ஷிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். திருமண வீடு துக்க வீடானது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே ஸ்ரீவித்யாவை ராம்பாபு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார்.
- ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக வரதட்சணை மற்றும் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால் திருமணம் ஆகி 78 நாட்களே ஆன ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவில் திருமணம் ஆன 6 மாதங்களில் 24-வது பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான ஸ்ரீவித்யா. இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கிராம சர்வேயரான ராம் பாபுவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே ஸ்ரீவித்யாவை ராம்பாபு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார்.
தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ராம்பாபு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார். மேலும் வேறொரு பெண்ணின் முன்பு இவள் எதற்கும் லாயக்கில்லை என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா கடிதம் ஒன்றை எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், "என்னால் உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது மரணத்திற்கு என் கணவரும் அவன் வீட்டாரும்தான் காரணம். அண்ணா... என்னால் இந்தமுறை உனக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாட முடியாது" என எழுதி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
- இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் பல்லிகுரவா பகுதியில் கிரானைட் குவாரியில் பாறைகள் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இறந்தவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய காயமடைந்த தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.
- மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டூர் பி அருகே தம்மையா டோடி கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 450 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தது.
கோவில் திருவிழாவில் கிராம மக்கள் அதிக அளவில் கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.
இதனைக் கண்ட அந்த கிராமத்து பெரியவர்கள் இனி இந்த கிராமத்தில் யாரும் கோழி வளர்க்க கூடாது, கோழிக்கறியை சாப்பிடக்கூடாது என தடை விதித்தனார்.
இதனால் அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் கோழியை வளர்ப்பது இல்லை. கோழிகள் வளர்க்கப்படாததால் அந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளாக சேவல் கூவும் சத்தம் கேட்டது இல்லை.
கோழிக்கறியும் சாப்பிடாமல் உள்ளனர். மாறாக கிராம மக்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆட்டுக்கறியை மட்டும் சாப்பிட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
- சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
- இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.
இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.
நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.
நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.
- விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
- வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார்.
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. மழை பெய்ததால் அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார்.
அப்போது மண்ணில் மின்னும் ஒரு பொருளை கண்டார். அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை கண்ட விவசாயிகள் போட்டி போட்டு கொண்டு வைரக்கல்லை வாங்க கிராமத்திற்கு வந்தனர். அப்போது பெண் விவசாயி என்னிடம் உள்ள வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.
ஆனால் சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். இதனால் பெண் வியாபாரி ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறினார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
- ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக வார இறுதி விடுமுறை நாட்களில் வரலாறு காணாத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதேபோல் நேற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வந்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 23 வைகுந்தம் தங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 85,740 பேர் தரிசனம் செய்தனர். 35,555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை.
- வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவருடைய குப்பம் தொகுதியில் வசிக்கும் 250 குடும்பத்தினரை தத்தெடுத்துள்ளார்.
ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
அப்போது வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.
அவர் கூறுகையில்:- நான் குப்பம் தொகுதியில் 250 குடும்பங்களை தத்தெடுக்கிறேன். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி எனது பொறுப்பு.
வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானே களம் இறங்கி இதனை நடைமுறைப்படுத்துகிறேன். சமூகத்தில் பொருளாதார இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப்போல மாநிலத்தில் ஏழை குடும்பத்தினரை தத்தெடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






