என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நோயாளிகளுக்கு மருத்துவம் ரீதியாக சிறந்த வழிகாட்டிகளாக உள்ளனர்.
    • பார்மசியில் முதுகலை பட்டப்படிப்பு, பி.எச்டி படிப்பு உள்ளிட்டவையும் உள்ளன.

    உலகில் மனிதர்களின் நலன்சார்ந்து பல்வேறு துறைகளும், பணிகளும் உள்ளன. ஆம்...! விவசாயம், மருத்துவம், சுகாதாரம், போலீஸ் உள்பட பல்வேறு துறைகளும், அதில் பணியாற்றுபவர்களின் சேவையும் உலகளவில் அனைத்து மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

    இப்படி அதில் ஒன்றான மருத்துவத்துறையில் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தையும், உயிரை காக்கும் மருந்து, மாத்திரைகளை நல்ல முறையில் வழங்கி மகத்தான சேவையை செய்து வருபவர்கள் தான் மருந்தாளுனர்கள். மருந்து வழங்குதல், அதனை எப்படி, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது உள்பட மருந்துகள் குறித்து நோயாளிகளுக்கு ஒரு தெளிவை வழங்குவார்கள்.

    அதன்படி பாதுகாப்பான, பயனுள்ள வகையில் மருந்துகளை நிர்வகித்து வினியோகம் செய்யக்கூடியவர்கள். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் ரீதியாக சிறந்த வழிகாட்டிகளாக உள்ளனர். இதன்மூலம் மக்கள் நல்ல மருந்து, மாத்திரைகளை கிடைக்க பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ மருந்தாளுனர்கள் என்பவர்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

    மருந்தாளுனர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி பள்ளியில் அறிவியல் பாடம் படித்து, பின்னர் பார்மசியில் இளங்கலை அல்லது டிப்ளோ படிப்பில் தேர்ச்சி பெற்று உரிய பயிற்சி பெற்று இருக்க வேண்டும். இதுதவிர பார்மசியில் முதுகலை பட்டப்படிப்பு, பி.எச்டி படிப்பு உள்ளிட்டவையும் உள்ளன. இதில் ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்றபடி கால நிர்ணயம் உள்ளது.

    இப்படி தங்களது அறிவு, நிபுணத்துவம் மூலம் மருத்துவ உலகை சிறந்ததாக மாற்றுவதில் தங்களது பங்களிப்பை ஆற்றும் மருந்தாளுனர்களை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25-ந்தேதி (இன்று) உலக மருந்தாளுனர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    1912-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதியன்று சர்வதேச மருந்து கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு அந்த கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 25-ந்தேதி உலக மருந்தாளுனர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு.
    • நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.

    பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளாவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை மிஸ் பண்ண வேண்டாம்.

    பப்பாளியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும். இதில் வைட்டமின் சி, ஏ, இ சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.

    வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

    ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும். பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும்.

    வைட்டமின் கே மற்றும் வைட்டமின்சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும்.

    அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்சமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. பப்பாளி நீர் நிறைந்த பழம் என்பதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

    ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பப்பாளியில் இருக்கிறது. நார்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது. பொட்டாசியம் சத்து அதிகம் உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கான சோடியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உணவு ஜீரண சக்தி சீராகி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

    • கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
    • துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும்.

    மழைக்காலம் நெருங்கும் சமயங்களில் அதிகம் பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று மெட்ராஸ் ஐ. இது ஒரு வைரஸ் தொற்றுக்களால் ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்று உள்ளவர்களின் கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கண்களில் உறுத்தல், கண் எரிச்சல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். வைரஸ் தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தால் கருவிழி பாதிப்படையக்கூடும். கண்களில் வீக்கம், பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்ப்போம்.

    செய்ய வேண்டியவை:

    * மெட்ராஸ் ஐ அறிகுறிகள் வெளிப்படத்தொடங்கினால் கைகளை கண்களுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. கண்களை அழுத்துவது, மென்மையாக விரல்களால் தடவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

    * கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும். அதனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

    * கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. அது விரைவில் நோய் தொற்றுவில் இருந்து விடுபட உதவும்.

    * வைட்டமின் ஏ, சி போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * மெட்ராஸ் ஐ கண்கள் பார்ப்பது மூலம் பரவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களில் தங்கி இருக்கும் வைரஸ்கள் மூலமே பரவும் என்பதால் சுத்தத்தை தீவிரமாக பேண வேண்டும்.

    * நோய் பாதிப்புக்கு ஆளானவர் கருப்பு வண்ண கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

    * குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    செய்யக்கூடாதவை:

    குடும்ப உறுப்பினர்களை தொட்டு பேசுவது, கைகளை சுத்தம் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்க கூடாது.

    * சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கக்கூடாது. உரிய பரிசோதனை செய்த பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * மருந்து போட்ட பின்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    * டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு எளிதாக பரவும். அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர் தனி அறையில் அமர்ந்து பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    * குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வைரஸ் தொற்றின் தாக்கம் மாறுபடக்கூடும். அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் மருந்துகளையே உபயோகப்படுத்த வேண்டும்.

    • சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
    • சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    சுவாசம் மேம்படும்

    துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.

    சரும பாதுகாப்பு

    துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    செரிமானம்

    அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.

    அழற்சி

    துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.

    மன நலம்

    துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.

    ரத்த சர்க்கரை

    துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.

    எடை மேலாண்மை

    துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.

    இதய ஆரோக்கியம்

    துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    • மிளகை 'பிளாக் கோல்டு' என்று அழைக்கின்றனர்.
    • மிளகில் உள்ள விட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    நம் இந்திய சமையலை பொருத்த வரை மிளகு என்பது மிக முக்கியமான பொருளாகும் சேர்க்கப்படுகிறது. இந்த கருப்பு மிளகை 'பிளாக் கோல்டு' என்று அழைக்கின்றனர். எனவே இந்த கொரோனா தொற்று நோய் கால கட்டத்தில் வீட்டிலேயே மிளகு கஷாயம் செய்து குடிப்பது காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளை களைய உதவி செய்யும். இவ்வளவு நன்மைகள் தரும் இந்த மிளகு கஷாயத்தை எப்படி செய்யலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

    மிளகில் உள்ள ஊட்டச்சத்து

    கருப்பு மிளகில் ஏராளமான வைட்டமின்கள், தயமின், ரிபோப்ளவின், வைட்டமின் சி, ஈ, பி6 மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேமாதிரி ஜிங்க், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதனாலேயே இந்த மிளகை நிறைய மருத்துவ நன்மைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மிளகில் உள்ள விட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

    மிளகு கஷாயம் தயாரிக்க கருப்பு மிளகு, துளசி, பனை வெல்லம், சர்க்கரை மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மிளகு கஷாயத்தை வெறும் 20 நிமிடங்களில் செய்து உங்க சளித்தொல்லையை நீக்கி விட முடியும்.

    தேவையான பொருட்கள்:

    கருப்பு மிளகு - 1/4 கப்

    துளசி : 10 எண்ணிக்கை

    பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

    உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு ஒரு வடிகட்டியை கொண்டு கஷாயத்தை வடிகட்ட வேண்டும். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் ஜீரணக்கோளாறு, இருமல் மற்றும் ஜலதோஷம் அறிகுறிகள் குறையும்.

    நன்மைகள்

    மிளகில் உள்ள பைபரைன் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்க வைத்து ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை, வயிற்றுபோக்கை போக்குகிறது. இதில் உள்ள விட்டமின் சி சாதாரண ஜலதோஷம், இருமலுக்கு எதிராக ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது.

    சருமம் வயதாவது, சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் போன்ற அறிகுறிகளை இதில் உள்ள வைட்டமின் சி குறைக்கிறது. இதன் ஆன்டிபயாடிக் தன்மை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

    • அதிக அளவில் காய்கள் உருவாக தென்னை டானிக் என்ற சத்தூட்டத்தை பயன்படுத்தலாம்.
    • தென்னையில் அதிக அளவு மகசூல் பெற உதவும் ஒரு சத்தூட்ட திரவமாகும்.

    தென்னையில் குரும்பை உதிராமல் இருக்கும் போது தான் அதிக அளவு காய்கள் உருவாகிறது. தென்னை மரத்தில் உருவாகும் குரும்பைகள் உதிராமல் தடுத்து அதிக அளவில் காய்கள் உருவாக தென்னை டானிக் என்ற சத்தூட்டத்தை பயன்படுத்தலாம்.

    தென்னை டானிக் என்று கூறப்படும் ஊட்ட சத்து திரவமானது தென்னையில் அதிக அளவு மகசூல் பெற உதவும் ஒரு சத்தூட்ட திரவமாகும். இந்த டானிக்கில் தென்னை மரத்தின் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீஷியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    இத்துடன் மரத்திற்கு தேவையான ஆக்சிஜன், சாலிசிலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் முதலிய வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த டானிக்கின் கார அமில நிலையானது மரத்தின் கார அமில நிலைக்கு ஏற்ப இருக்குமாறு தயார் செய்யப்பட்டுள்ளது.

    டானிக்கின் கார அமில நிலையானது மரத்தின் கார அமில நிலையை பாதிக்காமல் இருப்பதால் டானிக் மரத்திற்கு எளிதாக ஊடுருவி செல்கிறது. இதனால் மரத்திற்கு தேவையான ஊட்டச் சத்துக்களும், வளர்ச்சி ஊக்கிகளும் மரத்தின் அனைத்து பாகங்களுக்கும் எளிதாக பரவுகின்றன. இதனால் மரத்திற்கு நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றில் இருந்து இயற்கையான எதிர்ப்பு சக்தி உண்டாகிறது.

    தென்னை மரத்திற்கு சத்து டானிக்கை வேர் மூலம் செலுத்துவதால் பலவிதமான நன்மைகள் உண்டாகின்றன. இலைகளில் பச்சையம் அதிகரித்து ஒளிச்சேர்க்கை மேம்படுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர் வேதியியல் பணிகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் டானிக் மூலம் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் காய்ப்புத் திறன் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டங்களும் ஆக்சின் போன்ற வளர்ச்சி ஊக்கியும் டானிக்கில் கலந்திருப்பதால் குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைக்கப்படுகிறது. காய்களின் எண்ணிக்கையும் பருமனும் உயர்ந்து மகசூல் அதிகரிக்கிறது.

    தென்னை டானிக்கை மரத்திற்கு வேர் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்துவதற்கு சரியான உறிஞ்சு வேர்களை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சு வேர்கள் அமைந்திருக்கும். இந்த வேரில் பென்சில் கனமுள்ள வெள்ளை நிற வேர் ஒன்றை தேர்வு செய்து அதன் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி சாய்வாக சீவி விடவும். பின்னர் டானிக் உள்ள பையில் அந்த வேரை நுழைத்து பையின் மேல் பாகத்தை வேருடன் சேர்த்து நூலால் கட்டி டானிக் சிந்தாமல் மண் அணைத்து விடவும்.

    மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சி விடும். எனவே, வெயில் நேரத்திலும் மழை அல்லது பாசனத்திற்கு முன்பும் டானிக்கை கட்டிவிட்டால் வேர் விரைவாக உறிஞ்சி விடும். தென்னை மரங்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வேர் வழியாக ஊட்ட மருந்து டானிக்கை செலுத்துவது நல்லது.

    பொதுவாக ஒரு மரத்திற்கு 200 மில்லி என்ற அளவுக்கு டானிக்கை செலுத்த வேண்டும். இந்த டானிக் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு சீலிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விவசாயிகள் எளிதில் இந்த டானிக்கை கொண்டு செல்லும் வகையில் அடர் திரவமாக 2 லிட்டர், 10 லிட்டர் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதுபோன்ற கேன்களில் விற்பனை செய்யப்படும் அடர்திரவத்தை டானிக்காக மாற்ற சில உத்திகளை கையாள வேண்டும். அதாவது, 10 லிட்டர் அடர்திரவத்துடன் 40 லிட்டர் குடிநீர் சேர்த்து 50 லிட்டர் டானிக் தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட டானிக்கை பாலிதீன் பைகளில் 200 மில்லி என்ற அளவில் அடைத்து மரங்களின் வேர்களில் கட்டிவிடலாம்.

    தென்னை ஊட்டமருந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை. ஆனால் இதில் கலந்துள்ள வளர்ச்சி ஊக்கிகளின் வீரியம் நாளடைவில் குறைய வாய்ப்புள்ளதால் டானிக்கை தயாரித்த 30 நாட்களுக்குள் மரங்களுக்கு பயன்படுத்துவது நல்லது.

    • கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.
    • புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.

    பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.

    பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும். இவற்றை தவிர கொழுப்பின் அளவை கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை தீவனம் உள்பட சில வழிகளில் அதிகரிக்கலாம். மாடுகளில் 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.

    மேலும், கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவு அதிகரித்தால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். மாடுகளின் பாலில் இதர சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்க 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

    பாலில் கொழுப்பின் அளவை அந்த மாடுகளின் மரபு கூறுகள் தீர்மானிக்கின்றன. சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது. எரிசக்திக்கான தீவனம் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.

    பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்பு சத்து பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்பு சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும்.

    பாலில் கொழுப்பும் குறைவாக இருக்கும். இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

    மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும். கலப்பு தீவனத்தில் 33 சதவீதம் பிண்ணாக்கு, 30 சதவீதம் தவிடு கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கு 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.

    மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும். எனவே ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.

    இது தவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

    ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும். இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

    இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும். இது போன்ற பராமரிப்புகளை கால்நடை விவசாயிகள் கடைப்பிடித்தால் பாலில் கொழுப்பும், இதர சத்துக்களும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

    • உடல் தங்கம் போன்று உறுதி அடையும்.
    • ஒரு மண்டலம் உட்கொள்ள உடல் அழகு பெறும்.

    பொன்னாங்கண்ணி கீரையில் தங்க சத்து உண்டு என்றும், இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதி அடையும் உண்மை என்றும் கூறுவர். இதனை 'பொன் ஆம் காண் நீ' இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய் என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது என கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணி கீ்ரையை செம்மையாய் நெய்யில் வதக்கி மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள உடல் அழகு பெறும். பொன்னிறம் அடையும். கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.

    பொன்னாங்கண்ணி மற்றும் கரிசாலங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண் புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச் செடிகள் அல்லது நுண்தண்டுகளை நட வேண்டும். பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்காக மண்புழு கம்போஸ்ட் உரத்தை பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு 2 முறை (6 மாத இடைவெளியில் இட வேண்டும்.)

    மண்ணை நன்றாக வெட்டி ஒரு சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம். வோ்களை உடைய பக்க செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.

    பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது. தொட்டியில் பராமரிக்கும்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரங்களான மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் (தொட்டிக்கு 1 கிலோ) இட வேண்டும்.

    தொட்டியிலும், பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மி.லி. அளவு) தெளிப்பது நல்லது.

    செடிகளை நட்ட 4-வது மாதத்தில் இலைகளை தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம். தரை மட்டத்தில் இருந்து 5 செ.மீ. உயரத்தில் முழு செடியை வெட்டி எடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு 91717 17832 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணை பேராசிரியர் சி.ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

    • வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.
    • இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் விஷயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.

    பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.

    * பற்களை வலுடையச் செய்கிறது.

    * உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    * தலை வலி குறையும்.

    * கண்பார்வை மங்கல் குணமாகும்.

    * பசியை தூண்ட செய்யும்.

    * இதயத்தை பலம் பெற செய்யும்.

    * மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.

    * இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    * வாயுத் தொல்லை நீங்கும்.

    * நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    * எலும்புகள் வலுவடையும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

    * நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

    * உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.

    * வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.

    * வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

    இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.

    • உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது.
    • உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கிறோம்.

    தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடற் கொழுப்பு என்று கூறுகிறோம்.

    உயிரை பறிக்கும் உடல்பருமன்

    2016-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கைல் 1980-ம் ஆண்டுக்கு பின்னர் உடல் பருமன் உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் உடல் நிறை குறைவினால் ஏற்படும் மரணங்களை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

    உடல் பருமன் என்பது தடுக்கப்பட வேண்டிய நிலை எனவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் 30 சதவீதமான மக்கள் குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் சிறுகுழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

    முந்தைய காலங்களில் குழந்தைகள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வீதிகளில் விளையாடுவதை காணமுடிந்தது. ஆனால் இன்று அத்தகைய நிலை மாறி விளையாடுவதும் கூட செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

    மேலும் அதிக உடல் எடையானது மனிதர்களில் பல்வேறு மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பக புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடல் இறக்கம், மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உடல் பருமன் அதிகரிப்பால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் என்பது நம்மில் பலரும் அறியாத விசயம்.

    மிகவும் சிலருக்குதான் அது மரபு வழியாகவும் சில மருத்துவ காரணங்களினாலும் சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் போதிய தூக்கம் இன்மை, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள், அதிக புகைப்பழக்கம், தாமதமான குழந்தை பேறு போன்ற காரணங்களும் உடல் பருமனுக்கு வழிவங்குகின்றது.

    உலகளாவிய அளவில் தடுக்கக் கூடிய நோயினால் மனிதர்கள் இறப்பதில் உடல் பருமன் முதன்மை வகிப்பது மிகவும் வருந்தத்தக்கது. உடல் பருமன் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் மனிதர்களை பாதிப்படைய செய்கின்றது.

    தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைப்பதற்கும் உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. உடல் பருமனை காட்டுப்படுத்த அனைவரும் ஜிம்மின் உதவியை நாட ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் நாம் உடல் பருமன் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான்.

    அழகும் ஆரோக்கியமும் எப்போதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஆரோக்கியம் இல்லாத அழகு அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றது. உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான முறைகளையும், உணவுகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் மனிதர்களுக்கு எதிலும் பொறுமை என்பதே இருப்பதில்லை. உடல் பருமனை குறைக்கவும் உடனடி தீர்வையே நாடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. உடனடியாக கிடைக்கும் தீர்வு நிலையானதாக இருக்காது.

    உடல் பருமனை குறைக்க நாள் முழுவதும் ஜிம்மில் கிடப்பதும், மெடிக்களில் ஆலோசனை இன்றி உடலை குறைக்க மருந்துக்களையும், பானங்களையும் உபயோகித்து குறைப்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இதன் விளைவுகள் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் என்பது குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை. உடல் பருமன் உடனடியாக தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம் ஆகும்.

    பெண்களுக்கு 20 முதல் 25 சதவீதமும், ஆண்களுக்கு 12 முதல் 15 சதவீதமும் உடலில் கொழுப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் மகப்பேறுக்காக மார்பகம், கூபகம், தொடை பகுதிகளில் 12 சதவீதம் கூடுதலாக அத்தியாவசிய கொழுப்பு காணப்படுகின்றது. ஆண்களுக்கு இது 3 சதவீதம் தான் காணப்படும். உடல் பருமன் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பத்தால் மட்டுமே உருவாகின்றது. கூடுதல் உணவு, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பரம்பரை காரணங்கள் போன்ற காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

    குறைவான கலோரியில் நிறைவான நார்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஜங்க்புட் வகைகளை நாடுவதை உடல் பருமன் உடையவர்கள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

    மேலும் தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உடல் பருமனை எளிதாக விரட்டியடிக்க முடியும்.

    • முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள்.
    • மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும் மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு.

    மூட்டுவலி.. ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உடலில் தோள்பட்டை, கை மூட்டு, கால் மூட்டு என்று உடலில் எங்கெல்லாம் மூட்டுகளின் இணைப்புகள் உள்ளனவோ அங்கு பலவீனமடையும் இடத்தில் மூட்டுகளில் வலியை உணரலாம்.

    முடக்குவாதம் சார்ந்த மூட்டுவலிகள், முதுகுத்தண்டு சார்ந்த அழுத்தத்தால் வரக்கூடிய வலிகள், குனிய முடியாமல் இருப்பது, நிமிர முடியாமல் இருப்பது, சற்று கனமாக இருந்தாலும் எடை தூக்க முடியாமல் இருப்பது என்று பல வலிகள் அனுபவிப்பது எல்லாமே மோசமான அசெளகரியம். இந்த மூட்டு வலிகளின் தீவிரம் குறைய மூட்டுகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும்

    மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உண்டு. அப்படியான மூலிகைகளை ஒன்றிணைத்து செய்யகூடிய சரக்கொன்றை கஷாயம் தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

    சிற்றரத்தை சூரணம் - 2 கிராம்

    நெருஞ்சில் சூரணம் - 2 கிராம்

    ஆமணக்கு சூரணம் - 2 கிராம்

    தேவதாரு சூரணம் - 2 கிராம்

    முக்கிரட்டை சூரணம் - 2 கிராம்

    சீந்தில்கொடி சூரணம் - 2 கிராம்

    சரக்கொன்றை சூரணம் - 2 கிராம்

    தண்ணீர் - 300 மில்லி

    செய்முறை:

    தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து அனைத்து மூலிகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி குடிக்கவும். கசப்பு சுவை சார்ந்தது என்றாலும் கூட மூட்டுகளுக்கு அருமையான பலமான வலுவை அளிக்கும். எல்லா விதமான வலிகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. முதுகுத்தண்டு, மூட்டு வலி பாதிப்புக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று சொல்லப்பட்டாலும் இந்த மூலிகை கஷாயம் வலியற்ற வேதனையற்ற நிலையை அளிக்கிறது. இவை அனைத்தும் உடலின் தேய்மானத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் காக்கும். மூட்டுகளை பலப்படுத்தி உடலை பலப்படுத்த இந்த கஷாயம் உதவும்.

    மருந்துகள், களிம்புகள் கூட இந்த கஷாயம் குடித்து வருவதன் மூலம் வலிகள் குறையும். தொடர்ந்து 2 மண்டலங்கள் என சாப்பிட்டு வந்தால் வலிகள் 30-50 சதவீதம் வரை குறைவதை உணர்வீர்கள். இது உடல் அமைப்புக்கு மட்டும் அல்லாமல் உடல் செயல்பாடு அனைத்துக்கும் இவை முக்கியமானது. மூளை அனுப்பும் தகவல் சிறு மூளை வழியாக முதுகுத்தண்டுக்கு வந்து அங்கிருந்து உற்பத்தியாகும் நரம்புகளின் செயல்பாடு காரணமாக தான் உடல் சீராக இயங்குகிறது.

    • வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின்.
    • வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை.

    வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படுகின்றன. வயதாகும் போது பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

    வெரிகோஸ் வெயின் நரம்புகள் வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை. ஆனால் இவை எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். உடலில் கால்கள் மற்றும் முகம் போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்படும் போது இது சங்கடத்தை உண்டு செய்யும். சில சிலந்தி நரம்புகள் வெளிப்படையாக பார்க்க முடியும். இந்த வெரிகோஸ் வெயினுக்கு உரிய வீட்டு மருத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.

    வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்லது வெரிகோஸ் வெயின் என்பது அடர் நீலம் அல்லது ஊதா நிறத்தை கொண்டிருக்கும். இது தோலின் அடியில் இருந்து வெளியேறலாம். இந்த நரம்புகளில் சிறிய வால்வுகள் பலவீனமடையும் போது வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் உருவாகலாம். இது நரம்புகள் இரத்தம் பின்னோக்கி பாய்வதை நிறுத்துகின்றன. இவை சேதமடையும் போது ரத்தம் நரம்புகளில் தேங்கும். இதனால் நரம்புகளில் வீக்கம் உண்டு செய்கிறது.

    நோயின் அறிகுறிகள்:

    * கால்களில் எரியும் உணர்வு இருக்கும்

    * கால்கள் கனமாக இருக்கும்

    * தசைப்பிடிப்பு இருக்கும்

    * இரவில் அதிகமாக இருக்கும்.

    * கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம்

    * வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள்

    * நரம்புக்கு மேல் மெல்லியதாக தோன்றும்

    * உலர்ந்த அல்லது அரிப்பு தோல்

    உடற்பயிற்சி

    வழக்கமான உடற்பயிற்சி கால்களில் சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்புகளில் தேங்கியிருக்கும் ரத்தத்தை வெளியேற்ற செய்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தம் குறைக்க உதவுவதோடு வீங்கி பருத்து வலிக்கும். தசைகள் அதிக சிரமமின்றி வேலை செய்ய பயிற்சிகள் உதவுகின்றன. நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்றவற்றை செய்யலாம்.

    உணவுவகைகள்

    உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் உடலில் தண்ணீரை தக்க வைக்கும். உப்பு உணவை குறைப்பதன் மூலம் நீர் தக்கவைப்பை குறைக்கலாம். பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் நீர் தேக்கத்தை குறைக்க செய்யும். பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள், பருப்புகள், வெள்ளை பீன்ஸ், உருளைக்கிழங்கு, இலை காய்கறிகள், சால்மன் மற்றும் டுனா போன்ற சில மீன்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளான கொட்டைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள், ஓட்ஸ், கோதுமை மற்றும் ஆளிவிதை, முழு தானிய உணவுகள் இதன் மூலம் எடையை கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில் அதிக எடையுடன் இருக்கும் போது கால்கள் வீங்கி பருத்து நரம்புகள் வலிக்க வாய்ப்புகள் அதிகம்.

    நீண்ட நேரம் உட்காருவதை தவிர்ப்பதன் மூலம் வெரிகோஸ் வெயின் குறையலாம். இரத்த ஓட்டம் சீராக இருக்க, அவ்வபோது சுற்றி செல்ல அடிக்கடி எழுந்து செல்வது நிலையை மாற்றி வைப்பது நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். குறுக்கு கால்களில் உட்காரக்கூடாது. இது கால்களுக்கு ரத்தஓட்டத்தை மேம்படுத்தலாம். சுழற்சி சிக்கல்களை சேர்க்கலாம்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை மெதுவாக மசாஜ் செய்வது நரம்புகள் வழியாக இரத்தத்தை நகர்த்த செய்யலாம். ஒரு நபர் உகந்த விளைவுகளை அறிய மென்மையான மசாஜ் எண்ணெய்கள் அல்லது மாய்சுரைசர் பயன்படுத்தலாம். நரம்புகளில் நேரடியாக அழுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது திசுக்களை சேதப்படுத்தும்.

    ×