என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக குழந்தையை அடிப்பது மிகவும் தவறு.
    இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறையினரிடமிருந்து பல மடங்கு மாறுபட்டவர்கள். எக்கச்சக்க புத்திசாலிகள். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்டு அனுசரித்துப் போவதில் பெற்றோருக்குத்தான் நிறைய குழப்பம். குழந்தைகளைப் படிக்கத் தவறி விடுகிறார்கள். இருவரும் வேலைக்குப் போகிற குடும்பங்களில், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு பல பெற்றோருக்கும் இருக்கிறது.

    அதை ஈடுகட்ட, குழந்தைகளின் விருப்பம் எதுவானாலும் நிறைவேற்ற நினைக்கிறார்கள். அது தவறு. எவ்வளவு மணி நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படிச் செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

    எதெல்லாம் அவர்கள் கேட்டால் மாற்றக்கூடிய விஷயங்கள், எதெல்லாம் மாற்றக்கூடாதவை என்பதைக் குழந்தைகளுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, ‘பள்ளிக்கூடத்துக்குப் போகலாமா, வேண்டாமா?’, ‘படிக்கலாமா, வேண்டாமா’ என்கிற மாதிரி விஷயங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்தே வேண்டியதில்லை. என்ன சாப்பிடலாம், விடுமுறையில் எங்கே வெளியே போகலாம் என்கிற மாதிரியானவற்றுக்குக் குழந்தையின் கருத்தைக் கேட்கலாம்.

    அம்மா-அப்பா இருவரும் ஒரே மாதிரித் தகவலைக் குழந்தையிடம் பரிமாற வேண்டியது மிக முக்கியம். சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக குழந்தையை அடிப்பது மிகவும் தவறு. ஆனால், கரண்ட்டை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்லியும், குழந்தை அதைத் தொட முயற்சிக்கிறபோது அடி கொடுத்து, அழுத்தமாக அதைப் புரிய வைக்கலாம். தப்பில்லை.
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். தங்களது மேஜை, நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச்சீட்டுகளும் இல்லை என்பதை தேர்வு தொடங்கும் முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதுதல் கூடாது. தேர்வு எழுதும்போது விடைகளை உத்தேசமாக போட்டு பார்ப்பதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் வண்ண பென்சில்களை பயன்படுத்தி எழுதுதலோ, அடிக்கோடிடுதலோ கூடாது. விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவோ, தனியாக பிரித்து எடுத்துச்செல்வதோ கூடாது. கூடுதல் விடைத்தாட்கள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே அதுகுறித்து அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

    ஒருசில விடைகளைக் கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், ‘மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவினால் எழுத வேண்டும். தேர்வர்கள் எக்காரணங்கொண்டும் தாம் எழுதிய விடைகளை அடித்தல் கூடாது. அது ஒழுங்கீனச்செயல் என கருதப்படும். இதனை மேற்கொண்டால் தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன் அடுத்து வரும் இரு பருவங்களுக்கும் தேர்வினை எழுத முடியாது.

    நேரத்தை மட்டும் காட்டக்கூடிய சாதாரண கைக்கெடிகாரத்தை மட்டுமே அணிந்து வரலாம். பறக்கும்படை உறுப்பினர்கள் பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. அவர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமை ஆற்ற வேண்டும். 
    இண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.
    முன்பு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த நீரிழிவு... முந்தைய தலைமுறையில் 40 வயதிலேயே வந்துவிட்ட நீரிழிவு... இண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.

    குழந்தைகளிடம் நீரிழிவு வராமல் தடுக்க பெற்றோருக்கு சில ஆலோசனைகள்

    ‘‘ஒருநாளில் இன்றைய குழந்தைகள் உணவின்மூலம் எவ்வளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கவனித்தால் அதிர்ச்சியாகவே இருக்கும். ஐஸ்க்ரீம், சாக்லேட், சாஸ், ஜாம், பிஸ்கெட், கேக், பிரட் போன்ற நொறுக்குத்தீனிகள் எல்லாமே சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள்.

    நூடுல்ஸ், பாஸ்தா, சிப்ஸ், பப்ஸ் போன்ற உணவுகள் எல்லாவற்றிலுமே பதப்படுத்திகளையும், அறிவுறுத்தப்பட்ட அளவைவிட உப்பு, சர்க்கரையையும் அதிகமாக சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் விரும்பிப் பருகும் மென்பானங்களில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் இந்த குளிர்பானங்களின் லேபிளில், ‘இது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல மில்க்‌ஷேக், பழச்சாறுகளிலும் சர்க்கரை க்யூப்களை அதிகமாக சேர்க்கும் பழக்கம் இருக்கிறது.

    இப்படி இனிப்பு, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் உணவுகளைத் தொடர்ந்து அளவுக்கு மீறி சாப்பிடும்போது உடல்பருமன் அதிகரித்து நீரிழிவு உட்பட பல பிரச்னைகளில் போய்விடுகிறது. இந்நிலையை மாற்ற கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்த்து, சிறுதானியங்களில் செய்யும் இனிப்பு வகைகள், கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்று நம்நாட்டு உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே தயாரித்து கொடுத்து பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு முடிந்தவரை தடா போட வேண்டும்.

    அரிசி உணவைக் குறைத்து சிறுதானியங்களில் செய்த டிபன் வகைகள், சிற்றுண்டி வகைகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளில் ஜூஸ், சூப் போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம். சர்க்கரை சேர்க்காத ஃப்ரூட் ஜூஸ் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    நீரிழிவு பற்றியும் ஆரோக்கியக் கேடான உணவுப்பழக்கம் பற்றியும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லிப் புரிய வைக்கும் கடமையும் பெற்றோர், ஆசிரியர், உறவினர்களுக்கு உண்டு. கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம்களை அனுமதிக்காமல் முடிந்தவரை பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என வெளியிடங்களில் விளையாட கூட்டிச் செல்வதும் அவசியம்.
    தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...
    மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் தேதியிலேயே தேர்வு தொடங்குகிறது. 6-ந் தேதியில் பிளஸ்-1 வகுப்புக்கும், இரண்டாவது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சமயத்தில் மாணவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிவாய்ப்பை எளிமையாக்கும். தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும் உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்...

    ‘தேர்வு’ பற்றிய பயத்தை கைவிடுங்கள். நீங்கள் ஆண்டு முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன. இதில் பயம் கொள்ள என்ன இருக்கிறது? நிதானமாக, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் இனி புதிய பாடங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே படித்த பாடங்களையும், முக்கியமானவற்றை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பழகுங்கள்.

    நீண்ட நேரம் தொடர்ந்து படிக்காமல் போதிய இடைவெளியுடன் படியுங்கள்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல் நலனை கெடுக்கும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக நீண்ட நேரம் கண்விழித்து படிப்பது, சாப்பிடாமல் படிப்பது வேண்டாம். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். காயங்கள் உண்டாக்கும் சாகச செயல்களிலும் ஈடுபடாதீர்கள்.

    எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.

    நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், பேனா முதல் தேர்வு அட்டை வரை அனைத்தும் இருக்கிறதா? என்பதை வீட்டைவிட்டு கிளம்பும் முன் பரிசோதனை செய்யுங்கள். எதையும் தவற விடாமல் இருக்க ஒரே இடத்தில் வைத்து பராமரியுங்கள். சிறிய பொருட்களை ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.



    தேர்வுக்கு கிளம்பும் முன், காலை உணவை தவிர்க்கக்கூடாது.

    தேர்வுக்கு முந்தைய இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்க வேண்டாம். அது தேர்வை திருப்தியாக எழுத முடியாமல் செய்துவிடும்.

    தேர்வு அறைக்குள் நுழையும் கடைசி நிமிடம் வரை படிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே புத்தகங்களை மூடிவிட்டு, மனதை தேர்வுக்கு தயாராக்குங்கள். முக்கிய பகுதிகளை மனதில் நினைவூட்டிப் பாருங்கள்.

    தேர்வுக்கு நீங்கள் இதுவரை பயன்படுத்திய பேனா, பென்சில்களையே பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. அப்படி புதிதாக வாங்கியிருந்தால் நன்கு எழுதி பயிற்சி செய்து பழக்கப்படுத்திவிடுங்கள்.

    தேர்வு தொடங்கும்போது முதலில் கேள்வித்தாளை நன்கு படித்துப்பாருங்கள். எந்தெந் வினாக்களுக்கு விடையெழுத வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். யோசித்து விடையளிக்க வேண்டிய வினாக்களை ஒதுக்கிவைத்துவிட்டு தெரிந்தவற்றை வேகமாக எழுதி முடியுங்கள்.

    ஒவ்வொரு வினாவுக்கும் குறித்த நேரத்தில் விடையளியுங்கள். இறுதியில் எல்லாவற்றுக்கும் விடையளித்திருக்கிறீர்களா? முக்கியமான விஷயங்கள், வாய்ப்பாடுகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்பதை திருப்பிப் பாருங்கள். அதற்கெனவும் சில நிமிடங்களை ஒதுக்கி வையுங்கள்.

    ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகளை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். எதை தவறவிட்டால் மதிப்பெண் குறையும் என்பதையும் அறிவுறுத்தியிருப்பார்கள். அதைப் பின்பற்றி தேர்ச்சி பெறவும், முழு மதிப்பெண் பெறவும் முயற்சி செய்யுங்கள்.

    பதில்களை ஸ்கெட்ச், ஜிகினா பேனாக்களால் அலங்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரம் கிடைத்தால் மட்டும் அனுமதிக்கப்பட்ட பேனாக்களைக் கொண்டு அழகுபடுத்தலாம்.

    அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து பதற்றம் அடைய வேண்டாம். தேர்வாளரின் நேர அறிவுறுத்தலை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வேகமாக பதிலளியுங்கள்.

    தேர்வு எழுதி முடித்தபின், அதைப் பற்றி ஆராய வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள். வெற்றி உங்களுக்கே. வாழ்த்துக்கள்!
    மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையால் பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது.
    பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி  இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன. பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை.

    ‘‘நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப்போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறுகளிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

    அதை பெரும்பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சில உணவுப்பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உப்பின் அளவை குறைப்பது முக்கியம். டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது. கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.

    அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம். இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது..

    அறிகுறிகள்...

    சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தனமாக இருக்கக் கூடாது.

    உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால்தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும். கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், ‘லித்தோட்ரிப்ஸி’ முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. ‘யூரிட்ரோஸ்கோபி’ முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...
    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பெண் குழந்தைகளுக்கு டிரஸ் பண்ண பெரிய போராட்டம் நடக்கும். அம்மாவும், மகளும் ஒரே கலர் டிரஸ் என்று கூட சொல்லி, அவர்களை நம் வழிக்கு கொண்டு வர, டிரஸ் செலக்ட் செய்து வாங்கினால், அதை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் டிரஸ்சை அணிந்து கொள்வர். குழந்தைகளுக்கு நாம் எது நல்லது, எது கெட்டது என்று எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வர்.

    குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போட வேண்டும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

    திருமண விழாக்களில்: திருமண விழாவுக்கு ஏற்ற உடை பட்டுப் பாவாடைதான். அந்த நேரங்களில் அவர்களுக்கு கழுத்தை ஒட்டி நெக் செயினும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும். நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹ ந்தி, மோதிரம் செட், இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டால், ரொம்ப அழகாக இருக்கும். எந்த வகை நகையாக இருந்தாலும், ஒரே மாதிரி போடவும். பிளைன் நகைகள் திருமண விழாவிற்கு அழகாக இருக்கும். முடிந்தவரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல், ஒரு கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.

    ரிசப்ஷனுக்கு : மாலை நேர ரிசப்ஷனுக்கு, குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உடைகள் எது என்றால் காக்ராசோளி, அனார்கலி, சகாரா போன்ற நல்ல ஒர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் போது, டிரஸ்க்கு மேட்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும்.

    பர்த் டே பார்ட்டி: அடிக்கடி போவது இங்குதான். பார்ட்டிக்கு போகும் போது சிம்பிளாக, மார்டனாக டிரஸ் போடவும். அந்த டிரசுக்கு மேட்சாக மெல்லிய செயின், வளையல், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஒட்டினால், அழகாக இருக்கும்.

    குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, டிவி மிக அருகில் சென்று பார்த்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை கண் மருத்துவரிடம் காட்ட வேண்டியது மிகவும் அவசியம்.
    நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறுசுறுப்புடனும் இருப்பர். எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்லமாட்டார்கள்.

    குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, பிழையாக எழுதுவது, படிப்பின் கவனக்குறைவு, நாட்டமின்மை, அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து எழுதுதல், டி.வி மிக அருகில் சென்று பார்த்தல் இவற்றில் ஏதாவது தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை உடனே அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி டாக்டர் ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    கண்களை பாதுகாப்பது அவசியம். மேலும் குழந்தைகளுக்கு கீரை வகைகள், பப்பாளி, கேரட், மீன் போன்றவை உணவாக கொடுப்பதுடன், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், பார்வையுடனும் இருப்பார்கள். 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யவேண்டும்.

    குடும்பத்தில் யாரேனும் கிளேகோமா குறைபாடு இருந்தால் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்தல் அவசியமாகும். மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர் அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம்.

    பிரஷரை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கின்ற நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்து, மட்டும்தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரிசெய்வதற்கு அல்ல என்பதை கிளேகோமா உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவரின் ஆலோசனைபடி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ‘பென் ஐ கேர்’ டாக்டர்கள் டி.பென்ரவீந்திரன், பி.பிரவின்தாம்சன் ஆகியோர் தெரிவித்தனர்.
    வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள்.
    பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பானும் முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட தீவிரமிக்க ஒரு தொற்றுதான் டிப்தீரியா. வயது வந்தவர்களையும் டிப்தீரியா(Diphtheria) என்ற தொண்டை அடைப்பான் தாக்கும் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகம் டிப்தீரியாவுக்கு ஆளாகிறார்கள். எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    Corynebacterium diphtheriae என்ற பாக்டீரியா காரணமாக தொண்டை அடைப்பான் உண்டாகிறது. இக்கிருமிகள், தொண்டை, மூக்கு பகுதிகளுக்கும் பரவி சளிச்சவ்வை பாதிக்கின்றன. பாதிப்புக்குள்ளானவரின் இருமல், தும்மல் மற்றும் பேசுதல் மூலமாகக் கிருமி வெளியேறி காற்றின் மூலமாக மற்றவருக்கும் பரவுகிறது.

    தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையில் சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டைப்புண் ஆகியவற்றுடன் டிப்தீரியா ஆரம்பிக்கிறது. இதன் அறிகுறியாக நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். தொண்டையின் அடிப்பகுதியிலும் சில சமயங்களில் மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் ஒரு மேற்படலம் உருவாகும். குழந்தைகளின் கழுத்து வீங்கலாம். சுவாசம் துர்நாற்றமடிக்கும். உடல் பலவீனமும் சுவாசிப்பதில் சிரமமும் இருக்கும்.

    குழந்தைக்குத் தொண்டை அடைப்பான் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். தொண்டை அடைப்பானுக்குப் பிரத்யேகமான மருந்துகள் இருக்கின்றன. டிப்தீரியா மற்றவர்களுக்கு தொற்றாத வண்ணம் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனியறையில் படுக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளிக்கச் சொல்லலாம். ஆவி பிடிக்கச் செய்வது நல்லது. வெதுவெதுப்பான திரவ உணவுகளையும் கொடுக்கலாம்.

    தொண்டை அடைப்பானை ஆரம்பநிலையில் தடுப்பூசி கொண்டு எளிதில் தடுத்துவிடலாம். ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால் வீட்டிலுள்ள மற்ற குழந்தைகளையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    தேவைப்பட்டால் தடுப்பு மருந்துகளும் கொடுக்கலாம்.சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் தொற்று, பக்கவாதம், இதயத்தசைகள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் தன்மை கொண்டது டிப்தீரியா. எனவே, ஆரம்ப நிலையில் சரி செய்வதே பாதுகாப்பானது!
    குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்.
    குழந்தைகள் வாழும் குடும்ப சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் குழந்தைகளின் மன நிலையும் இருக்கும். குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வயது முதல் குழந்தையின் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் வளர்கிறது. ஒரு வயது குழந்தைக்கு சுற்றுச்சூழல் எல்லாமே புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்கு வாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கிவிடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும்.

    ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.

    குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத் தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவை யற்ற ஆயுதமாகும்.

    குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
    ஆஸ்துமா பாதிப்பு பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 5 முதல் 10 சதவிகிதம் வரை குழந்தைகளையும் ஆஸ்துமா பாதிக்கிறது.
    ‘‘சுற்றுச்சூழல் மாசு, பரம்பரை ரீதியான காரணங்களால் பொதுவாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இதே காரணங்களால் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா உண்டாகலாம். கிராமத்தைவிட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் இன்னும் அதிகம். பல பெற்றோர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. உடனே வேறு மருத்துவர், வேறு சிகிச்சை என்று மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்.

    அப்படியே ஆஸ்துமாவை ஏற்றுக்கொண்டாலும் இன்ஹேலர் வைக்க வேண்டும் என்று சொன்னாலோ, நெபுலைஸர் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாலோ கேட்பதில்லை. பெற்றோரின் அறியாமையால் கடைசியில் குழந்தைதான் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளிடம் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுப் பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ‘‘நிறம், மணம், சுவை கிடைப்பதற்காக, உணவைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களால் குடல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். இந்த வேதிப் பொருட்களால் மூச்சுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாவதற்கும் 5 சதவிகித வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தை திடீரென்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதற்கு உணவுப் பொருட்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக ஐஸ்க்ரீம் வகைகள், குளிர்பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உணவுகளில் இந்த வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளே ஆஸ்துமாவை உண்டாக்குகின்றன.

    அதனால், குழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் சமீபத்தில் குழந்தை என்ன சாப்பிட்டது என்பதை பெற்றோர் கவனித்து, குறிப்பிட்ட உணவை அதன்பிறகு தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இல்லாமலே சளி ஏற்படுவது, இருமலுடன் வாந்தி, 10 நாட்கள் வரை சளித் தொல்லையால் குழந்தை அவதிப்படுவது போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம். 
    சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
    சிறுவர்-சிறுமியர்களை காலையில் பல் துலக்க வைப்பதே பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. மூன்று, நான்கு வயது கடந்த குழந்தைகள் பல் துலக்குவதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். அவர்களுக்கு பெற்றோரே பல் துலக்கிவிடும் நிலையும் இருக்கிறது. அது ஒருபுறம் இருக்க, சிறுவர்கள் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் டூத் பிரஷின் மேல்மட்ட பகுதி முழுவதும் பற்பசையை தடவி கொடுத்துவிடுவார்கள். அப்போதுதான் பற்களை நன்றாக சுத்தம் செய்ய முடியும் என்று நினைப்பார்கள். அது தவறானது.

    மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவில்தான் பற்பசையை தடவி கொடுக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவிலும் நான்கில் ஒரு பகுதி அளவுக்குத்தான் பற்பசையை உபயோகிக்க வேண்டும். அதுதான் குழந்தைகளின் பற்களுக்கு ஆரோக்கியமானது.

    அதிக அளவில் பற்பசையை பயன்படுத்துவது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல் துலக்கு வதற்கு பயன்படுத்தும் பிரஷ் மென்மையானதாக இருக்க வேண்டும். மென்மையான பிரஷ்தான் பற்களுக்கு பாதுகாப்பு தரும். கடின பிரஷ்களை பயன்படுத்துவது பற்களின் ஈறுகளுக்கு பங்கம் விளைவித்துவிடும். குழந்தைகள் உபயோகப்படுத்தும் பிரஷ் தலைப்பகுதி ஒன்றரை அங்குலம் அளவில் இருப்பது நல்லது.

    குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் வரையாவது பல் துலக்க வைக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே குழந்தைகளை பல் துலக்க வைத்துவிடுகிறார்கள். சில குழந்தைகள் பல் துலக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் நடத்திய ஆய்வில் 38 சதவீத குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பற்பசை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பட்டாணி அளவில்தான் பற்பசையை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
    பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
    குழந்தைகளைத் தூக்குவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. மிக மிக மென்மையாக இருக்கும்.

    பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.

    தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.

    குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.

    தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.

    ×