என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும். இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

    ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள்: 10 - 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.
    இன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது.
    இன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது. சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தை மனதில் போட்டு புதைத்து, பின்னர் அடிக்கடி அது பற்றி சிந்திக்கும்போது அது மனநலனை பாதிப்புக்குள்ளாக செய்துவிடுகிறது. இந்த பிரச்சினையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    சில நாட்களில் சரியாகிவிடும் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அது மன இறுக்கமாக மாறி பிரச்சினையை அதிகப்படுத்தி விடுகிறது. தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, நம்பிக்கையின்றி இருப்பது, சோர்வாக காணப்படுவது போன்றவை மன இறுக்கத்தின் அறிகுறிகளாகும். ஒருசிலர் ஏதாவது ஒரு முக்கிய காரியத்தை செய்ய தொடங்கும்போது பீதியுடனும், மனக்கலக்கத்துடனும் காணப்படுவார்கள்.



    அது இயல்பானதுதான். ஆனால் பயம் நீங்காமல் தொடர்ந்து நீடிப்பது, பதற்றம், களைப்புடன் இருப்பது, எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மன நலனுக்கு பங்கம் விளைவித்துவிடும். மன அழுத்தம் அதிகரிக்கும்போது அட்ரினலின், கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அளவு அதிகமாகிறது.

    தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அதன் மூலம் நல்ல உணர்வை தரும் ஹார்மோன்கள் சுரக்கும். அது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
    அலுவலகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பணிபுரியும் பெண்களுக்கு அதிக அளவில் மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
    அலுவலகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பணிபுரியும் பெண்களுக்கு அதிக அளவில் மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

    இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர்.

    ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.



    பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்குச் சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    நடுத்தர மற்றும் உயர்மட்ட நிர்வாகப் பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.

    சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது பெண்களின் மனஅழுத்தத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    அதேநேரம், காரணமே இல்லாமலும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். அதற்கு உரிய ஒத்துழைப்புக் கிடைக்காதபோது துவண்டு விடுகின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
    சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    பச்சைமிளகாய் - 8
    இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 ஸ்பூன்
    பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி - தலா 1
    கொத்தமல்லி - கால் கப்
    வெங்காயம் - 5
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கொத்தமல்லி - ஒரு கொத்து



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

    பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைக்கவும்.

    5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பூரிக்கு அருமையான முட்டை குருமா ரெடி.

    குறிப்பு - கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாதாமில் பல்வேறு சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் பாதாமை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் உள்ளது. இன்று இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்று வேகமாக அதிகரித்து வரும் ஒரு நோயாக இருப்பது சர்க்கரை நோய். நம்முடைய வாழ்க்கை முறையினாலும் உணவுப் பழக்கத்தாலும் மிக வேகமாக இந்த நோய் பரவி வருகிறது என்றே சொல்லலாம்.

    சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன்னால் பாதாமில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு நூறு கிராம் பாதாமிற்கும் கார்போஹைட்ரேட் 21 கிராம், கொழுப்பு 49 கிராம், ப்ரோட்டீன் 21 கிராம், தியாமின் 0.211 மில்லி கிராம், நியாசின் 3.385 கிராம்,

    கால்சியம் 264 கிராம், காப்பர் 0.99 மில்லி கிராம், மக்னீசியம் 268 மில்லிகிராம், பாஸ்பரஸ் 484 மில்லி கிராம், பொட்டாசியம் 705 மில்லிகிராம், சோடியம் 1 மில்லிகிராம்,

    பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்றாலும் இவை உங்களுடைய இன்ஸுலின் சுரப்பினை கட்டுப்படுத்தும்.



    பாக்கெட் உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு அவுன்ஸ் பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் என்பது 45 பாதாம்.

    சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமே பாதாம் பயன் தரும் என்பது அர்த்தமன்று. சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பாதாம் ஓர் அருமருந்தாகும்.

    பாதாமில் சற்று அதிகமாக இருக்கக்கூடிய சத்துக்களில் முதன்மையானது மக்னீசியம். உங்கள் உடலில் போதுமான அளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

    பாதாம் மாவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைவான கலோரியே இருக்கிறது. அதோடு இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடனடியாக ரத்தத்தை அதிகப்படுத்தாது ஆகையால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.
    பெண்களை அசெளகரியப்படுத்துகிற முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த வெளளைப்படுதலுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    வெயில் காலத்தில் பெண்களை அசெளகரியப்படுத்துகிற முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த வெளளைப்படுதலுக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

    * வெந்தயத்தை ஊற வைத்து, அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு, வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிட வேண்டும். சிலர் வெந்தயக் கசப்புக்கு பயந்துகொண்டு , அதை அரைகுறையாக மென்று விழுங்கி விடுவார்கள். இப்படிச் செய்தால் பலன் கிடைக்காது.

    * தண்டுக்கீரையின் தண்டுகளை மட்டும் சூப் வைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் படிப்படியாக குணமாவதோடு, இனப்பெருக்க உறுப்புகளும் பலமடையும்.

    * இந்தப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு வெள்ளைப்பூசணிச் சாறுதான். வெயில் காலங்களில் மதிய வேளையில் தினமும் ஒரு கப் வெள்ளைப்பூசணிச்சாறை குடித்து வாருங்கள்.



    * சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை நீரில் நன்கு அலசி மோருடன் அரைத்துக் குடித்தால், உடம்பின் சூடு தணிந்து, வெள்ளைப்படுதல் ஒரே நாளில் கட்டுக்குள் வரும். கூடவே, சோற்றுக்கற்றாழை ஜெல்லை நீருடன் சேர்த்து அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டுவந்தால் உடற்சூடு கட்டுக்குள் வரும்.

    * வேப்ப மரப்பட்டை மற்றும் சீரகத்தை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வெள்ளைப்படுதல் பிரச்சனை வரும்போதெல்லாம், இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து குளிர்ந்த நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டு கால் மணி நேரம் கழித்து தண்ணீரால் அலசி விடுங்கள். அந்த இடத்தில் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.

    * மாங்கொட்டை மற்றும் மாம்பட்டை இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போடவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரால் அலசி வந்தால் அங்கிருக்கும் கிருமிகள் அழிந்து வெள்ளைப்படுதல் குணமாகும்.
    தோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரைக் கிலோ
    தயிர் - 2 தேக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    எள் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2
    முந்திரி - 6,
    பட்டை - சிறு துண்டு
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 8
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பூண்டு - 10
    எண்ணெய் - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    நட்சத்திர மொக்கு - ஒன்று



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.

    கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும்.

    வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர‌ மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

    வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும்.

    நன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும்.

    சுவையான‌ எள்ளு மட்டன் கிரேவி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.
    உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். இன்று சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.

    * சருமத்தில் உள்ள மருக்களை உதிரச் செய்வதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மரு உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின் ஒரு பஞ்சுண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பிழிந்து, மருக்களின் மீது வைத்து நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மருக்கள் உலர ஆரம்பிக்கும். இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், மருக்கள் நன்கு உலர்ந்து உதிர்ந்துவிடும்.



    * 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.

    * 5 டீஸ்பூன் நீரில், 3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும். இந்தமுறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    * ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும். ஒருவேளை இச்செயலால் மருக்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டால், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.

    தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது.
    தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது. உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை, இது புரதத்துடன் இணைந்து ‘கொழுப்புப் புரதமாக‘ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகரித்தால் ஆபத்து காத்திருக்கும். கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும். இவற்றில், எல்.டி.எல்.லும், வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலில் இருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு‘ என்கிறோம்.

    அதே வேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத்துச் சென்று கரைத்துவிடுகிறது. இதன்மூலம் இதயத் தமனியைக் கொழுப்பு அடைப்பதைத் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாப்பு தருகிறது. ஆகவே, இதற்கு ‘நல்ல கொழுப்பு‘ என்று பெயர். கொழுப்பு என்றாலே அது இதயத்தை மட்டும் தாக்கும் என்று தான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை, அது மூளையைத் தாக்கி பக்கவாதத்தை ஏற்படுத்தும்; சிறுநீரகத்தைப் பாதிக்கும்; கல்லீரலைக் கெடுக்கும்; கை, கால் ரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டால், கை, காலை அகற்ற வேண்டி வரும். எனவே, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்தால், இதயம் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.



    ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கு முதல்வழி தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தினமும் 45 நிமிடங்கள் வீதம் குறைந்தது வாரத்துக்கு ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து தீவிர நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது கல்லீரலில் ஹெச்.டி.எல்.லை சுரக்கிற என்சைம்கள் தூண்டப்படுகின்றன. இதன் பலனால் இரண்டு மாதங்களில் 5 சதவீதம் ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். மேலும், நல்ல நடைப்பயிற்சி உடல் எடையையும் குறைக்கும். அப்போது 3 கிலோ எடை குறைந்தால் 1 சதவீத ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். நடைப்பயிற்சியின் போது மன அழுத்தம் குறைவதால், சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து கல்லீரல் என்சைம்களைத் தூண்டுகின்றன. அப்போது ஹெச்.டி.எல். அதிகரிக்கிறது. என்றாலும், நல்ல கொழுப்பை அதிகரிக்க இவை மட்டுமே போதாது.

    உடல் எடை சரியாக இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. மது ஆகாது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். செக்கில் ஆட்டப்பட்ட தாவர எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்துள்ள பட்டாணி, அகத்திக்கீரை, அவரைக்காய், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வழிகளும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். 
    வெயில் காலத்தில் வயதானவர்கள், குழந்தைகள் இந்த சீரக கஞ்சியை குடித்தால் உடலுக்கு சத்து கிடைக்கும். இன்று இந்த கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரக சம்பா அரிசி - ஒரு கப்
    பாசிப்பருப்பு - அரை கப்
    சின்ன வெங்காயம் - 6
    உரித்த பூண்டுப் பல் - 4
    பச்சை மிளகாய் - 3
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    சீரகம் - கால் டீஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - ஒன்று
    ஏலக்காய் - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    இஞ்சி விழுது - கால் டீஸ்பூன்
    புதினா இலைகள் - 8
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும்.

    அரிசியைக் கழுவி களையவும்.

    கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 5 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி... தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும்.

    பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.

    இதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

    பிறகு, வேகவைத்த அரிசி - பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவி இறக்கவும்.

    உடலுக்கு சத்து தரும் சீரக கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் எப்படி பழகுகிறீர்களோ, அவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ அதேபோன்றே மனைவியின் உறவினர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
    திருமணத்திற்கு பிறகு பெண்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டையும், குடும்ப உறவு களையும் பிரிந்து புதிய உறவு பந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். அதுபோன்றே கணவர்மார்களும் மனைவியின் குடும்ப உறவுகளிடம் புதிய பந்தத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மனைவியிடம் காட்டும் பாசத்தில் ஒரு பங்கையாவது அவருடைய உறவுகளிடம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    உங்களுடைய பெற்றோர்களிடம் எப்படி பழகுகிறீர்களோ, அவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ அதேபோன்றே மனைவியின் உறவினர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

    மனைவி வழி உறவுகளிடம் பழகுவதற்கு ஆரம்ப கட்ட முட்டுக்கட்டையாக இருக்கும் தயக்கத்தில் இருந்து மீள வேண்டும். அவர்களின் ரசனை உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப பழக வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்ன என்பதை அறிந்து அவை பற்றி பேச தொடங்கினாலே தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஒருசில விஷயங்களை அவர்களுடன் இணைந்து செய்வதற்கு பழக வேண்டும். அது இரு தரப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க உதவும்.

    மாமனாரிடம் பேசுவதற்கு தயங்குபவர்கள் சமீபத்திய நாட்டு நடப்புகள், குடும்ப நிலவரங்கள் பற்றி உரையாடலாம். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உரையாடலின் போக்கு அமைந்திருக்க வேண்டும். அதிகம் பேசுவதை காட்டிலும் அவர் களின் பேச்சுகளை ஆழ்ந்து கவனிப்பது நன் மதிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.



    மனைவியின் குடும்பத்தாருடன் சக நண்பர்களை போல் பழக வேண்டும். அதுவே எளிதில் இணக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

    மனைவியிடம் அவருடைய குடும்பத்தார் ஒவ்வொருவருடைய பழக்கவழக்கங்கள், அவர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது போன்ற அத்தனை விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப பழக தொடங்குங்கள். இளம் வயதில் இருப்பவர் களிடம் உங்கள் குடும்பத்தினரை போலவே உரிமையுடன் பழகுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டுங்கள்.

    வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் மனைவியின் குடும்பத்தாரையும் உடன் அழையுங்கள். அது இரு குடும்பத்தினரிடையே நெருக்கமான உறவு ஏற்பட வழிகோலும்.

    ஒவ்வொருவருடைய பிறந்தநாளையும் நினைவில் வைத்தோ அல்லது மனைவியிடம் கேட்டு தெரிந்து கொண்டோ வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறையை தொடருங்கள். அது அவர்கள் மத்தியில் உங்களுக்குரிய மதிப்பை உயர்த்தும். அன்பு பரிசுகள் வழங்கியும் அவர்கள் இதயத்தில் எளிதாக இடம் பிடித்துவிடலாம்.

    மனைவி குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடக் கூடாது. மனைவியை பற்றியோ, மற்ற குடும்ப உறுப்பினர்களை பற்றியோ குறை சொல்லக்கூடாது. ஒவ்வொருவரிடமும் பிடித்தமான குணாதிசயங்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்கள் குறித்து விவாதிக்கக்கூடாது. மாமியார்- மாமனாருடன் மகனை போல பழக முயற்சியுங்கள். அது அவர்களிடத்தில் உங்களுக்குரிய அந்தஸ்தை உயர்த்தும். மனைவி உங்கள் மீது காண்பிக்கும் நேசமும் அதிகரித்துவிடும்.
    நமது பாரம்பரிய விளையாட்டுகள், வரலாறு அறிய முடியாத பழமை கொண்டது. சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏராளமான விளையாட்டுகள் இருந்துள்ளன.
    கோடையில் வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கிறீர்களா குட்டீஸ். அதற்காக செல்போன் விளையாட்டில் மூழ்கிவிடாதீர்கள். செல்போன் விளையாட்டுகளைவிட சுவாரசியமான விளையாட்டுகள் பல நமது பாரம்பரியத்தில் உண்டு. மரபு விளையாட்டுகள் விளையாடுவதற்கு விறுவிறுப்பாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், அறிவை வளர்ப்பதாகவும் இருக்கும். அதே நேரத்தில் கோடையின் வெயில் நம்மை தாக்காமலும் காக்கும். வீட்டிற்குள்ளும், நிழலிலும் அமர்ந்து விளையாடும் சில பாரம்பரிய விளையாட்டுகளை பார்ப்போமா...

    நமது பாரம்பரிய விளையாட்டுகள், வரலாறு அறிய முடியாத பழமை கொண்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏராளமான விளையாட்டுகள் இருந்துள்ளன.

    சொக்கட்டான் (தாயக்கட்டம்), சில்லுக்கோடு (நொண்டியாட்டம்), கண்ணாமூச்சி (கண்டுபிடித்தல் ஆட்டம்), திருடன் போலீஸ், தட்டாங்கல் (சுட்டிக்கல் அல்லது கல்லு பிடித்தல்), கிச்சுக்கிச்சு தாம்பாளம், குலைகுலையாய் முந்திரிக்கா, பூப்பறிக்க வருகிறோம், ஆடுபுலி ஆட்டம், கில்லி (சில்லுக்குச்சி), பம்பரம், கோலியாட்டம், பல்லாங்குழி, ஏறுதழுவுதல், கபடி, உறியடித்தல், கோகோ, மாட்டுவண்டி பந்தயம், சைக்கிள் பந்தயம், இளவட்டக் கல் தூக்குதல் என நமது பாரம்பரிய விளையாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இவற்றில் சொக்கட்டான் , தட்டாங்கல், கிச்சுக்கிச்சு தாம்பாளம், பூப்பறிக்க வருகிறோம், ஆடுபுலி ஆட்டம், பரம்பரம், கோலி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள் வீட்டிற்குள்ளும், நிழல் உள்ள இடங்களிலும் எளிமையாக விளையாடலாம்.

    பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கு வலுவூட்டும். சூழலுக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு மற்றும் தைரியம் போன்ற பண்புகளை வளர்க்கக்கூடியது. விரைவாக செயல்படும் ஆற்றல், அறிவுத்திறன், கூர்மைத்திறன், நினைவாற்றல் மேம்பாடு, மனபலம் தரக்கூடியது. உறவு வளர்க்கும் ஆற்றல், கூடிவாழும் இயல்பை வளர்க்கும் திறனும் நமது விளையாட்டு களுக்கு உண்டு.

    தாயக்கட்டம்

    கோடை மற்றும் மழைக் காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டுகளில் முக்கியமானது சொக்கட்டான் எனப்படும் தாயக்கட்டம். ஐந்துக்கு ஐந்து சதுரங்கள் கொண்ட கட்டத்தில் அல்லது, 4 பக்கமும், ஐந்திற்கு மூன்று என்று அமைந்த கட்டங்களால் ஆன தளத்தில் ஆடும் விளையாட்டு இது. நான்கு பக்கமும் தலா ஒருவர் அமர்ந்து விளையாடலாம்.

    எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டோ அல்லது தனியாகவோ விளையாடலாம். ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். பகடைக் காய்களில் விழும் எண்களுக்கு ஏற்ப கட்டங்களில் காய்களை நகர்த்தி விளையாடுவார்கள். அடுத்தவர் காய் வைத்துள்ள கட்டத்தில் சரியாக முடியும் வகையில் எண்ணிக்கை வந்தால் அந்த காய் வெட்டுப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும். மீண்டும் அவர்கள் தாயம் போட்டுத்தான் காயை நகர்த்த வேண்டும். வெட்டியபின் கட்டத்தை ஒரு சுற்று சுற்றி, பழம் அடைய செல்ல வேண்டும். முதலில் நான்கு காய்களையும் மீட்டு கொண்டு வந்து பழமாக்குபவர் வெற்றி பெற்றவராவார்.

    கிராமப்புறங்களில் சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் போன்றவற்றை காய்களாக பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம் பிளாஸ்டிக்கில் வண்ணவண்ண காய்களும், பகடைகளும் கிடைக்கின்றன. தாயக்கட்ட விதிமுறைகள் இடங்களுக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடும். சொக்கட்டான் ஆட்டம் சில மணி நேரங்களுக்கு சுவாரஸ்யமாக பொழுதுபோக்க உதவும்.



    பல்லாங்குழி

    சிறுமிகள் மற்றும் பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்கும் விளையாட்டு பல்லாங்குழி. பல்வேறு உலக நாடுகளிலும் பல்லாங்குழி ஆட்டம் சிறிய மாறுதல்களுடன் விளையாடப்படுகிறது. மரப்பலகையில் சிறுசிறு குழிகளுடன் இருக்கும் விளையாட்டு சாதனத்தில் முத்துகளை நிரப்பி விளையாடுவார்கள். ஒரு குழியில் உள்ள முத்துகளை எடுத்து, அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொன்றாக இட்டு, முத்து தீரும் இடத்தில் வெற்றுக் குழி வரும்போது, அவர் அடுத்த கட்டத்தில் உள்ள முத்துகளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார். இப்படி போட்டியாளர் இருவர் மாறி மாறி ஆடும்போது, கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நடைபெறும். யார் நிறைய முத்துகள் சேர்க்கிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார். இதிலும் சில ஆட்ட முறைகள் உள்ளன. விதிமுறையிலும் சிறிது வேறுபாடுகள் வைத்து விளையாடுவது உண்டு.

    சிறுவர்களின் கணித அறிவை வளர்ப்பது, புத்திசாலித்தனமாக செயல்படும் ஆற்றலை வளர்ப்பது பல்லாங்குழி ஆட்டத்தின் சிறப்புகளாகும்.

    ஆடுபுலியாட்டம்


    அறிவுத்திறனை வளர்க்கும் வியூக விளையாட்டு ஆடு புலி ஆட்டம். இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இந்த ஆட்டம் விளையாடப் படுகிறது. முக்கோணம் மற்றும் செவ்வகம் இணைந்ததாக ஆடுபுலி ஆட்டத்தின் கட்டங்கள் இருக்கும். இதை எளிதாக சாக்பீஸ் கட்டிகளில் வரைந்து கொண்டு ஆடுவது மக்களின் வழக்கம். இதில் 3 புலிக் காய்கள் (கற்கள்), 10 அல்லது 15 ஆடு காய்கள் (சிறுகற்கள்) இருக்கும். ஒவ்வொரு கட்டம் சந்திக்கும் புள்ளியில் காய்களை வைக்க வேண்டும். புலியானது ஆடு காய் இருக்கும் புள்ளியைத் தாண்டி அடுத்த புள்ளியில் தாவும் வகையில் வைத்துவிட்டால் ஆடு ஆட்டமிழக்கும். அடுத்தடுத்த புள்ளியில் இரு ஆடுகள் இருந்தால் புலியால் தாவ முடியாது. அதேபோல இரு பக்கமும் புலி தாவ முடியாத அளவு ஆடுகள் மறைத்துக் கொண்டால் புலிக் காயை நகர்த்தியவர் தோல்வி காண்பார். இந்த ஆட்டத்தில் ஆடுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தினால் வெற்ற பெற முடியும்.

    கோலி- பம்பரம்

    இதேபோல கோலிக் குண்டுகள் மற்றும் பரம்பர விளையாட்டுகளையும் வீட்டிலிருந்த படியும், மரத்தடி நிழலிலும் எளிதாக விளையாடலாம். கோலி ஆட்டத்தில் பல வகைகள் உண்டு. விதிமுறைகளும் இடத்திற்கு இடம் வேறுபடுவது உண்டு.

    பம்பரங்களை பொழுதுபோக்காக சுற்றி விளையாடுவது, குழுவாக இணைந்து விளையாடுவது உண்டு.

    திருடன்-போலீஸ்

    கிராமப்புறங்களில் குழந்தைகள் விளையாடிய மற்றொரு அற்புத விளையாட்டு திருடன்-போலீஸ். 5 குழந்தைகள் கோடை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டு. சிறுதுண்டு காகிதத்தை எடுத்து சதுரமாக வெட்டிஅதில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என எழுதி மடித்து தரையில் போட்டவுடன் ஆளுக்கொரு சீட்டை எடுப்பர். பின்பு போலீஸ் யார் என்பர்.அந்த சீட்டு உள்ளவர் நான் தான் போலீஸ் என்றவுடன் மற்ற நால்வரும் அமைதியாக இருப்பார்கள். போலீஸ் சீட்டு வைத்து உள்ளவர் திருடன் சீட்டு வைத்திருப்பவரை கண்டுபிடிக்க வேண்டும். திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றி புள்ளியும் இல்லாததால் அவர் போலீசிடம் தப்பிக்க பல்வேறு முகபாவனைகளை கையாள்வார். அதை கூர்ந்து நோக்கி நால்வரில் திருடனை கண்டறிய வேண்டும். ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையைக் கணிக்கும் உளவியல் பயிற்சியைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு.

    இனிமை மிகுந்த பாரம்பரிய விளையாட்டுகளை ஆடி, கோடையின் கொடுமையில் இருந்து தப்புவோம். அறிவையும், சமூகப் பண்பையும் வளர்த்து மகிழ்வோம்! 
    ×