என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வயதாகும் போது வாதம் கூடும். ஆயுர்வேத சிகிச்சை முறையால் இந்த நோயைத் தீவிரமாக்காமல் தடுக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆர்த்தரைட்டிஸ் நோய்களிலேயே அதிகம் காணப்படுவது ஓ.ஏ. என்னும் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் நோய்தான். இது உடல்உறுப்புக்கள் தேய்மானம் ஆவதால் வருவது. வயதாகும் போது, எலும்புகள் முடியும் இடங்களில் மூட்டுக்களைக் காக்கும் கார்டிலேஜ் மெலிந்து கிழிந்து போகிறது. அதனால் வலி, வீக்கம் ஆகியவற்றோடு மூட்டுக்களின் இயக்கமும் குறைகிறது.

    ஓ.ஏ. எந்த மூட்டிலும் வரலாம். ஆனால் வழக்கமாக, கை முழங்கால் மூட்டுக்கள், இடுப்பு மற்று-ம் முதுகுத்தண்டில் வருகின்றது. இந்நோய் வரு-ம்போது மூட்டுக்கள் மட்டுமன்றி, பக்கத்தில் இருக்கும் தசைகள், எலும்புகள், மூட்டுக்களைச் சுற்றியுள்ள சவ்வுகள், மூட்டுக்களை மூடியிருக்கும் உறைகள் ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது.

    பரம்பரை, அதிக வேலைப்பளு, வளர்ச்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்ற பல காரணங்களால் இந்நோய் வரலாம். ஆரோக்கியமாக இருக்கும்போது, எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று உரயாமல் நழுவிச் செல்ல, கார்டிலேஜ் உதவுகின்றது. இந்த அசைவுகளிலிருந்து தனக்குத் தேவையான சக்தியையும் கிரகித்துக் கொள்கிறது.
    ஓ.ஏ. வரும்போது கார்டிலேஜின் வெளிப்புறத்திலுள்ள அடுக்கு சிதைந்து, அதனால் எலும்புகள் உராய்ந்து வலி உண்டாகிறது. சிலசமயங்களில் ஆஸ்டியோ பைட்ஸ் எனப்படும் சிறுபடிமம் எலும்பின் விளிம்பில் உண்டாகின்றன.

    எலும்பிலிருந்தோ, கார்டிலேஜிலிருந்தோ உடைந்த சிறு துண்டுகள், மூட்டுக்களுக்கிடையே உள்ள வெற்றிடத்தில் மிதக்கின்றன. இதனால் மேலும் சேதம் அதிகமாகின்றது; அதிக வலி வருகின்றது; ஆர்.ஏ. போன்ற வகை ஆர்த்தரைட்டிஸ் பிற உறுப்புக்களையும் பாதிப்பது போல ஓ.ஏ. பிற உறுப்புக்களை பாதிப்பதில்லை.

    அறிகுறிகள்:

    நோய் தொடங்கியபின் மெதுவாகவே அதிகரிக்கும். ஆனால் போகப்போக மிகக்கடுமையாகி விடும். வலி, இறுக்கம், சப்தம் கேட்பது போன்ற உணர்வு எலும்-புகள், மூட்டுக்கள் இலகுவாக இயங்குவது குறைதல், எலும்பு உடைதல் ஆகியன நேரும். நாள்முழுதும் வேலை பார்ப்பவர்களுக்கு, வேலை முடிந்தபின், ஓ.ஏ. காரணமாக வலி அதிகமாகும். வீக்கம் வரும்; அந்த இடம் சூடாகி, பாதிக்கப்பட்ட மூட்டுக்கள் உடைய நேரலாம்.

    ஓ.ஏ. தீவிரமாகும்போது, கார்டிலேஜ் முழுவதும் பாதிக்கப்பட்டு, ஓய்வாக இருக்கும்போதே வலியும், உராய்வும் வரும். ஓ.ஏ. காரணமாக உடலின் மேற்பகுதியில் எடைகூடும்; அடிக்கடி மூட்டுக்கள் உடையலாம், கால்கள் வில்போல வளையும். மேலும் ஓ.ஏ. காரணமாக நடை மாறி, நொண்டி நொண்டி நடக்க நேரும்; நோய் அதிகமாகும் போது, மருந்துகள் கூட வேலை செய்யாமல் போகும்.

    முதுகுத்தண்டில்/ கழுத்தில் ஓ.ஏ. வரும்போது ஆஸ்டியோ பைட்ஸ் காரணமாக நரம்புகள் தூண்டப் பெற்று கடு-ம் வலி வரலாம். உணர்ச்சியுற்றுப் போகலாம். பூச்சி ஊருவது போன்ற உணர்வு வரும். ஓ.ஏ., விரல்களில் இருக்கும் சிறுசிறு மூட்டுக்களில் கெட்டிப்பட்ட எலும்பு வளர்ச்சியை உண்டாக்கும்; விரல்களின் முடிவில் இருக்கும் எலும்பின் வளர்ச்சி ஹெபர்டன்ஸ் நோட் எனப்படும்; விரல்களின் நடுவில் ஜாயிண்டில் வரும் எலும்பு வளர்ச்சி பவுச்சர்ஸ் நோட் எனப்படும் பாதங்களில் பெருவிரலின் அடியில் வருவது புனியன் எனப்படும்.

    இவை காரணமாக, அதிக வலி இல்லாவிட்டாலும் விரல்கள் இயக்கம் பாதிக்கப்படுகிறது; கை விரல்களிலும், பாதங்களிலும் வரும் ஓ.ஏ.-க்கு பரம்பரை காரணமாக இருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் காணப்படும்.

    ஓ.ஏ.-இல் இரண்டு வகை உள்ளது. (1) பிரைமரி (முதல் நிலை) வீவீ) செகன்டரி (இரண்டாம் நிலை). முதல் நிலை/ பிரைமரி என்பது இயற்கையாக வயதாவதால் வருவது, (வேறு நோய் அல்லது காயம் காரணமாக அல்ல) வயதாகு-ம் போது கார்டிலேஜில் சேரும் நீரின் அளவு அதிகமாகும். எலும்பில் புரோட்டின் பூச்சு குறைகிறது. ஆகவே, நோய் வரும்.

    செகன்டரி/இரண்டாம் நிலை

    வேறு நோய்கள் காரணமாக வருவது; எடை கூடுதல் அடிக்கடி மூட்டுக்கள் உடைதல், அடிக்கடி அறுவை சிகிச்சை நடத்தல், இயற்கையிலேயே சரியான அமைப்பில் மூட்டுக்கள் இயல்பு நிலை மாறி இருத்தல், நீரிழிவு நோய் மற்றும் ஹார்மோன் மாறுதல்கள் காரணமாக வரலாம். யூரிக் அமில படிமங்கள் உருவாகி, கார்டிலேஜை பாதித்தும் ஓ.ஏ. வரலாம் கேல்சியம் பைரோபாஸ்பேட் படிமம் காரணமாக கவுட் அல்லாமல் ஆர்த்தரைட்டிஸ் வரலாம்.

    ரிக்ஸ் பேக்டர் (நோய் உண்டாகக் காரணங்கள்)

    1. வயதாவது
    2. இன்னதென்று காரணம் அறியப்படாமலே பெண்கள் அதிகம் ஓ.ஏ. வால் பாதிக்கப்படுகின்றனர்.
    3. பிறப்பிலேயே கார்டிலேஜ் குறைபாடு/ மூட்டுக்களின் அமைப்பில் குறைபாடு காரணமாக
    4. விளையாடும் போது உண்டாகும் காயங்கள்/ விபத்துக்களால்
    5. எடை கூடுதல்
    6. சோம்பலான வாழ்க்கை முறை (அசைவின் போதே சக்தியை உறிஞ்சுகின்றன).
    7. குறிப்பிட்ட மூட்டுக்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வேலைகளை மட்டும் அதிகம் பார்த்தல்
    8. நீரிழிவு நோய், கவுட், தைராய்டு குறைவாக சுரத்தல், ஆகிய காரணங்களால் ஓ.ஏ. வரலாம்.
    9. பரம்பரை
    10. பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் சுரப்பது குறைவதால் கால்சியம் சத்து இழப்பு நேருகிறது.அதனால் ஓ.ஏ. வரும். பெண்கள் தம் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை. சரியாகச் சாப்பிடாத காரணத்தால் வரலாம், உடல் எடை கூடி விடுவதாலும் வரும்.



    ஆயுர்வேத சிகிச்சை:

    (இந்நோய் சந்திவாதம் எனப்படும். ஆகவே சிகிச்சை சந்திவாத சிகிச்சை எனப்படும்) வயதாகும் போது வாதம் கூடும். வாதம் இயற்கையாக உலர்ந்த இயல்பு உடையது. வாதம் மேலும் அதிகம் ஆகும்போது உராய்வைத்தடுக்கும். சினோவியல் திரவம் சுரப்பது குறையும். அதனால் கார்டிலேஜ் பாதிக்கப்படும்.
    சரியாக உணவு உண்ணாதது, காயம் படல், அதிகமாகக் குளிரில் நனைதல், குளிர்ந்த உணவு எடுப்பது, இயற்கை உபாதைகளை அடக்குதல், வாயு உற்பத்தி ஆதல், தூக்கமின்மை, மன உளைச்சல், மன அழுத்தம் ஆகிய காரணங்கள் நோயை அதிகமாக்கும்.

    சிகிச்சை முறையால் நோயைத் தீவிரமாக்காமல் தடுக்கலாம். பாதித்த கார்டிலேஜைச் சரி செய்யலாம். மூட்டுக்கள் இடையே உராய்வைத் தடுக்கும் திரவத்தை மேம்படுத்தலாம். அதனால் மூட்டுக்களின் செயல்பாடு மற்றும் பாரத்தை அதிகரிக்கலாம். சந்திவாத சிகிச்சையில் சமனசிகிச்சையும் சோதன சிகிச்சையும் அடங்கும்.

    சமன சிகிச்சையில் மருந்து உள்ளே எடுத்துக் கொள்ளுதல், வெளிப்புறமாக மருந்து பூசுதல் ஆகியன அடங்கும். சோதனை சிகிச்சையில் பஞ்ச கர்மா, காயகல்ப சிகிச்சைகள் இடம்பெறும். அதனால் கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்படும். புத்துணர்வு கிடைக்கும். ஆரோக்கியமான உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியன மூட்டுக்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது.

    மருந்துகள்:

    உள்ளே சாப்பிட:


    கந்த தைலம் -(வெறும் வயிற்றில் காலை, இரவு படுக்குமுன்.
    தன்வந்த்ரம் கசாயம்-வெறும் வயிற்றில் (காலை, மாலை).
    திக்தக நெய் - (இரவு உணவுக்குப்பின்)
    ராசனாதி கஷாயம்
    லராக்ஷா குக்குலு - தினமும் 1-3 கிராம், 2 முறை உணவுக்குப்பின் எடுக்கலாம். (ஆனால் அலர்ஜி, சிறுநீரகப்பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்).

    வெளிப்பூச்சு:

    * முறிவெண்ணெய் / தன்வந்த்ரம் தைலம் மூட்டுக்களில் தேய்க்கலாம்)
    * பலா அஸ்வ கந்தாதி தைலம் லேசாகச் சூடாக்கி, தேய்த்து, 1/2 மணி கழித்து, வெந்நீரில் குளிக்கலாம்.
    * 2 எண்ணெய் (நெய்+ஏதாவது ஒரு எண்ணெய்).
    * 4 எண்ணெய் (நெய்+ஏதாவது ஒரு எண்ணெய் தேய்க்கலாம்).
    * விளக்கெண்ணெய் அடர்த்தி அதிகம். ஆகவே உடலுக்கு நல்லது.
    * எள், சதகுப்பை இரண்டையும் பாலில் வேகவைத்து வீக்கம் இருந்தால் பத்து போடலாம்.
    * தசமூல சூரணம் பத்துப் போடலாம்.
    * கொட்டுஞ்சுக்காதி தைலம் மெதுவாக உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வியாதிக்கு வயது முக்கிய காரணம். செரிமானம், கழிவு வெளியேற்றம் சரியாக இருக்க வேண்டும். அதற்காக
    * சீரகத் தண்ணீர் குடிக்கலாம்

    * சுக்குகாப்பி குடிக்கலாம்.
    * உணவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிகம் சேர்க்க வேண்டும்.
    * வாயு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    * லிங்வசாதி சூரணம் சாப்பிடலாம் (செரிமானம் தூண்ட).
    * மலச்சிக்கல் வராமலிருக்க நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
    * உடல் தகுதிக்கேற்ப அவ்வப்போது பேதி மருந்து எடுக்கலாம்.

    * உண்ணா நோன்பு அவரவர் உடல்நிலைக்குத் தகுந்தபடி மேற்கொள்ளலாம். (முழுதாகவோ அல்லது திரவ ஆகாரம் மட்டும் என்பது போன்று).
    * சிறிய உடற்பயிற்சி, அவரவர் உடல் தகுதிக்கேற்ப செய்யலாம்.
    * வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த பழரசங்கள், பழங்கள் ஆயுர்வேத சிகிச்சையை ஊக்குவிக்க உதவும்.
    ஆர்த்தரைட்டிஸ் காரணமாக நீர்கோர்த்து, பலூன் போல உப்பும் போது, அதைத் குறைக்க உதவும் உணவுகள்:
    மீன் - ஒமேகா-3, கொழுப்புச்சத்து மிகுந்த சல்மான், டுனா, ஹெரிங் போன்ற மீன்களை எடுக்கலாம். ஏனெனில் ஒமேகா-3 கொழுப்புச் சத்து ஆர்த்தரைட்டிஸ் குறையப் பெரிதும் உதவும்.

    இஞ்சி-தினமும் இஞ்சியை 5 கிராம், 3 வேலை எடுப்பது செரிமானத்தை ஊக்குவித்து, ‘ஆமம்’ உருவாவதைத் தடுக்கும். மேலும் இஞ்சி, பற்பல, ஆர்ஏ போன்ற வாத நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாக உதவும்.

    மஞ்சள்-மஞ்சளில் இருக்கும் குர்ருமின் என்ற பொருள் நீர்கோர்த்து, உப்புவதைத் தடுக்கும். மூட்டுக்களில் இருக்கும் வீக்கம் மற்றும் காலையில் இறுக்கமாதல் ஆகியவற்றைத் தடுக்கும்.

    பூண்டு - வாதத்தைப் போக்கும் முக்கிய மருந்து. வலியைப் போக்கும், வீக்கத்தைப் போக்கும்.

    செலரி - இதன் சாறு வாதத்துக்கு நல்லது.

    - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)

    சிக்கனை விட நாட்டுக்கோழியில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    சீரக சம்பா அரிசி - 1 கிலோ
    பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 8
    புதினா - 1 சிறிய கட்டு
    கொத்தமல்லி - 1 சிறிய கட்டு
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
    முந்திரி - 5
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3
    சோம்பு - 1 ஸ்பூன்
    இஞ்சி - 2 அங்குலம்
    பூண்டு - 15 பல்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கடலை எண்ணெய் - 150 மில்லி



    செய்முறை :

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய், சின்ன வெங்காயம், 3 பச்சை மிளகாய், முந்திரி, ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

    குக்கரில் 100 மில்லி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த நாட்டு கோழி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    200 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 5 விசில் விடவும். நாட்டுக்கோழி வேக சற்று நேரம் எடுக்கும்.

    குக்கர் விசில் அடங்கியதும் திறந்து 1 பங்கு அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதி வந்ததும் ஊறிய அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கிளறி 2 விசில் மட்டும் விடவும். விசில் அடங்கியதும் அரிசி உடையாமல் கிளறி இறக்கி தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி பிரியாணி தயார்!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் சரும பிரச்சனைகளை தீர்த்து நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும் பீட்ரூட்டை வைத்து ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடை காலத்தில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம் கரும்புள்ளிகளைப் போக்கலாம் முகப்பருவை நீக்கலாம் கருவளையங்களை போக்கலாம் மற்றும் பல சரும பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்த முடியும். குறிப்பாக பீட்ரூட்டைக் கொண்டு கோடைக்காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது தான் மிகவும் சிறந்தத.

    1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த செயலை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் உங்கள் முகம் ஜொலிப்பதை காணலாம்

    2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி அதனால் வந்த தழும்புகளும் மறையும்.

    1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸில் சர்க்கரை சேர்த்து கலந்து அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால் படிப்பபடியாக கரும்புள்ளிகள் நீங்குவதை காணலாம். இதை வாரத்தில் 3 நாட்கள் செய்து வர வேண்டும்.

    பீட்ரூட் ஜூஸ் உடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சருமம் வறட்சி படிப்படியாக நீங்கும்.
    சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூறுவார்கள். அப்படி தண்ணீர் குடித்தால் என்ன உடல்நலப்பிரச்சனைகள் வரும் என்பது குறித்து பார்க்கலாம்.
    சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது என்பது பலரின் அறிவுரை. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. இன்று இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள். அது கூடாது. சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம்.

    சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது. ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது. வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி தொண்டை வறண்டுகொண்டேயிருக்கும். அடிக்கடி தாகமெடுக்கும். அவர்கள் மட்டும் மொத்தமாகக் குடிக்காமல், கொஞ்சமாகச் அருந்தலாம்.’’

    ''நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.



    'தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. தாகம் எடுக்கும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இன்று நாம் வேலை பார்க்கும் சூழல், குளிரூட்டப்பட்ட அறைகளில் தாகம் எடுப்பதே இல்லை. அதற்காக தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

    ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை. ஆனால், குறைவாகக் குடிப்பதால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகும் அரை மணி நேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.

    இந்த வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தானது, சுவையானது இந்த சப்போட்டா மில்க் ஷேக். இன்று இந்த மில்க் ஷேக் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ச்சிய பால் - 2 கப்,
    நன்கு பழுத்த சப்போட்டா - 4,
    பாதாம்பருப்பு - 10,
    ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
    சர்க்கரை - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    கொதிக்கும் வெந்நீரில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்கி கொள்ளவும்.

    சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதையை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெட்டிய சப்போட்டா பழத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸியில் போடுங்கள்.

    அதனுடன் ஊற வைத்த பாதாம், ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    நன்றாக நுரைக்க அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் பெண்கள் சிறுநீர் தொற்றால் மிகவும் அவதிப்படுவார்கள். பெண்களின் இந்த சிறுநீர் தொற்றை தவிர்க்கும் உணவுமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    சிறுநீரகத் தொற்று பெண்களை அதிகளவில் பாதிக்கக்கூடியது. இதனால் பெண்களுக்கு அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரை குறைவாக வெளியேறுதல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும், அதை சரிசெய்வதற்கான வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

    * சுகாதாரமில்லாத டாய்லெட்டை பயன்படுத்துதல், சிறுநீரை அடக்குதல், தண்ணீர் குறைவாக குடித்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது, உடல் சூடு, உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு, சர்க்கரை வியாதி, ஸ்டீராய்டு எடுத்துக் கொள்ளுதல், சுகாதாரமில்லாத குடிநீர், தோல் வியாதிகள், ஆல்கஹால் பயன்பாடு, மரபணுக் கோளாறு உட்பட பல்வேறு காரணங்களால் சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது.

    * தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரில் வெட்டி வேர் போட்டு குடிக்கலாம். .

    * உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி, செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.



    * பழங்களில் தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காயை பச்சடி செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

    * தொப்புள்ளைச் சுற்றி விளக்ககெண்ணெய் தடவினால் உடல் சூடு குறையும்.

    * நீர் மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேணடும்.

    * சூடான நீரில் சீரகத்தை சிறிது போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிடலாம்.

    * வெந்தயத்தை மோரிலோ அல்லது இளநீரிலோ ஊற வைத்து குடிக்கலாம்.

    * நெல்லை பொடியாக்கி கசாயம் வைத்து சாப்பிடலாம்.

    * சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை பச்சையாக சாப்பிடலாம். உடல் சூடு தணிந்து சிறுநீரகத் தொற்று சரியாகும்.
    சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டிய பணி, வேலைக்குச் செல்லும் பெண்களுடையது.
    வேலைக்குச் செல்லும் சில பெண்கள், காலை நேரத்துப் பரபரப்பை குறைக்க, முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்துக்கள் உள்ளன. சமைப்பதற்கு வேகு நேரத்துக்கு முன்பே காய்களை நறுக்கி, ஃப்ரீட்ஜில் வைப்பதால், இந்த வைட்டமின், நார்ச்சத்துகள் பெரும்பாலும் காற்றில்  கலந்துவிடும். மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ஏற்கெனவே வைத்திருக்கும் சில பொருள்கள், எளிதில் பாக்டீரியாவை பரப்பும். எனவே, நறுக்கிய காய்களிலும் பாக்டீரியா பரவலாம். அதனால், காய்களை இரவே நறுக்கிவைக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.

    கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களில் பலர், குழந்தையைப் பக்கத்தில் உள்ள வீட்டார்களிடம் ஒப்படைக்கிறார்கள். இது, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள நெருக்கத்தை உடைக்கும். தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துவரும் சூழலையும் மனதில்கொள்ள வேண்டும். எனவே, தனது அல்லது கணவனின் தாய் போன்ற நெருங்கிய உறவினரிடம் ஒப்படையுங்கள். முடியாதபட்சத்தில், தரமான குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பது நல்லது.

    அலுவலகத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சில பெண்கள் எப்போதுமே மேக்கப்பில் இருப்பார்கள். அந்த அழகு சாதனப் பொருள்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முறையான வழிகாட்டல் இல்லாமல், இஷ்டத்துக்குப் பயன்படுத்துவார்கள். இது, சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தோல் மருத்துவரை அணுகி, உங்களின் ஸ்கினுக்கு ஏற்றதைத் தேர்வுசெய்து, சரியான அளவில் பயன்படுத்துங்கள். அழகுடன் ஆரோக்கியமும் இருக்கும்.



    பல பெண்கள் அலுவலக வேலையையும் வீட்டு வேலையையும் சமன் செய்வதில்தான் பல இடையூறுகளைச் சந்திக்கின்றனர். சரியான திட்டமிடலுடன் செயல்படுவதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். அலுவலகப் பணியை வீட்டில் பார்க்கும்போது, உங்கள் குழந்தை மற்றும் கணவருக்குச் செலவிடும் நேரத்தையும் அன்பையும் இழக்கிறீர்கள் என்பதை மனதில்கொண்டு, திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

    அலுவலகம் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், மாதவிடாய் நாள்கள். அதிக வேலை, ஆண்களுக்கு மத்தியில் பணிபுரியும் சூழல் போன்றவற்றால், நாப்கின்களை கழிப்பறைக்கு எடுத்துச்செல்லத் தயங்கி, மணிக்கணக்கில் மாற்றாமல் இருப்பார்கள். இது, தொற்றுநோய், சரும அலர்ஜி போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

    அலுவலகம் செல்லும் பெண்களில் 90% பேர், அலுவலகத்துக்கு போடும் துணிகளைத்தவிர மற்ற நாள்களில் பயன்படுத்திய துணிகளை ஒரு கூடையிலோ, வீட்டின் ஓரத்திலோ போட்டு வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்திய ஆடைகளில் வியர்வையின் காரணமாக பாக்டீரியா, கிருமிகள் இருக்கும். இது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்களுக்குக் கெடுதல் ஏற்படும்.

    சில பெண்கள் அலுவலகத்தில் பாலியல் சீண்டல்கள், கேலிகளுக்கு ஆளாகலாம். இதற்கு ஆரம்பத்திலே சரியான பதிலடி கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவித்து விஷயத்தை முடிக்க வேண்டும்.
    சிறுதானியங்களில் சிறப்பு மிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகள், மசாலா கலந்து செய்தால் சுவை இரட்டிப்பாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாமை - 50 கிராம்
    பயத்தம் பருப்பு - 50 கிராம்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    தேங்காய் பால்- 1 கப்
    கேரட், பீன்ஸ் - கால் கப்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - கால் தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க  :

    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு.



    செய்முறை :

    சாமை அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பயத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்..

    வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, பாதியளவு மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கி விடவும்.

    விசில் போனவுடன் மூடியை திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.
    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் கடைகளில் கிடைக்கக்கூடிய பவுடர்களை பயன்படுத்துவதை விட எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.

    வெயில் காலத்தில் முகத்தில் கொப்பளங்களோ, கட்டிகளோ வருவதற்கு முதல் காரணம், உடலில் எதிர்ப்புசக்தி குறைவதுதான். இரண்டாவது காரணம், அதிகமாக வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உலர்ந்த தன்மை ஏற்படும். இதனை, நீர்ப்போக்கு (Dehydration) என்பார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் சருமத்தில் பெரும்பாலும் கட்டிகள் ஏற்படுகின்றன.

    சிலருக்கு வெயில் காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும். இதனாலும் முகத்தில் கட்டிகள் ஏற்படலாம். உடலிலுள்ள கழிவுகளும், உடல்சூடும் வெளியேறாமல் உடலிலேயே தங்குவதால், இந்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. எனவே, வெயில் காலத்துக்கு முன்பிலிருந்தே சருமத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை வெயிலில் குழந்தைகள் விளையாடும்போதும் கூட மறக்காமல் அதிக தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது குடிக்க வேண்டும்.



    எண்ணெய் தேய்த்து குளிப்பதனால், உடலில் சூடு தங்குவது தடுக்கப்படும். வாரத்துக்கு இரண்டு முறை, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, அதில் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டுக் குளிக்கவும். வெயில் காலத்தில், விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, உடலின் சூடு வெளியேறி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    நாட்டு மருந்துக் கடைகளில் குளிர் தாமரை தைலம் கிடைக்கும். அந்த எண்ணெயுடன், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் அரை டீஸ்பூன்  

    நல்லெண்ணெய், இயற்கையான சன்ஸ்கிரீன் லோஷன். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால், வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

    கறிவேப்பிலையை காம்புடன் எடுத்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து சொட்டு விளக்கெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில்விட்டு, அந்தக் கறிவேப்பிலை காம்பை விளக்கெண்ணெயுடன் உரசினால், விழுது போன்று கிடைக்கும். அதனை, வேனில்கட்டிகள் வந்துள்ள இடங்களில் பூசி வந்தால், கட்டிகள் நீங்கும்.

    நாட்டு மருந்துக் கடைகளில் செங்காவி கிடைக்கும். அதனை பவுடராக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மாவு பதத்துக்குச் செய்துகொள்ளவும். பின்னர், அதனுடன் 10 சொட்டு விளக்கெண்ணெய், 2 சொட்டு தேன் கலந்து, வேனில்கட்டிகளில் பூசினால், இரண்டே நாள்களில் கட்டிகள் மறைந்துவிடும்.
    ஜானுசிரசாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும், அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
    பெயர் விளக்கம்: “ஜானு” என்றால் முழங்கால் என்று பொருள். “சீர்ச” என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனத்தில் முழங்காலை தலையால் தொடுவதால் ஜானுசி ரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். பிறகு இடது காலை மடக்கி குதிகாலை பிறப்புறுப்பை தொடும்படி வைக்கவும். பாதம், வலது தொடையோடு ஒட்டியபடி இருக்கட்டும். வலது காலை இடுப்புக்கு நேராக நகர்த்தி வைக்கவும். கைவிரல்களை தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை ஆழமாக உள்ளுக்கு இழுத்து நிதானமாக வெளியே விட்டபடி,நேராக நீட்டி வைத்திருக்கும் இடது காலின் கட்டை விரலை இருகைகளின் கட்டை விரல்கள், ஆள் காட்டி விரல்கள், நடுவிரல்களால் பிடித்துக் கொள்ளவும்.

    வலது கால் வளையாமல் நேராக இருக்கட்டும். தலையை மேலே உயர்த்தி 2 முறை ஆழமாக மூச்சை இழுத்து விடவும். மூச்சை வெளியே விட்டபடி உடலை வளைத்து வலது முழங்காலை நெற்றிதொடு மாறு வைக்கவும். முழங்கை மூட்டுகளை தரையில் தொடும்படி வைக்கவும்.

    இந்த ஆசனத்தில் 30 முதல் 60 வினாடி சாதாரண மூச்சுடன் நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து தலையை மேலே தூக்கி படம் 16&ல் உள்ள நிலைக்கு வந்து கட்டை விரலை பிடித்திருக்கும் கைவிரல்களை விடுவித்து கால்கள் இரண்டையும் விடுவித்து நேராக நீட்டி உட்காரவும்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்: இடுப்பு, விலாத்தசை மற்றும் முழங்கால் பகுதி மீதும், சுவாதிட்சடான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: ஆசனத்தில் நிலைத் திருக்கும் போது நீட்டி வைத்திருக்கும் காலை எந்த பக்கமும் சாயாதபடி நேராக வைத்திருக்க வேண்டும். கால்விரலை கை விரல்களால் பிடிக்க முடியாதவர்கள் ஒரு துண்டை உள்ளங்காலுக்கு வெளியே சுற்றிப் போட்டு துண்டின் இரு முனைகளையும் கை விரல்களால் கெட்டியாக பிடித்துக் கொண்டு, குனிந்து முழங்காலை தொட முயற்சிக்கவும். நெற்றியால் முழங்கால் மூட்டை தொட முடியவில்லை என்று காலை மடக்கி தொட முயற்சிக்கக் கூடாது.

    தடைக் குறிப்பு: இடுப்பு சந்து வாதம், இடம் விலகிப் போன முதுகெலும்பின் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள்:
    விலாப் புறதசைகள், இடுப்பு, கால்கள் மற்றும் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும், அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கணையம், அட்ரீனல் சுரப்பி, குடல்கள், பாலின சுரப்பிகள் நன்கு இயங்க ஊக்கு விக்கிறது. சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் ஆரம்ப காலகற்களை கரைக்க உதவுகிறது.

    மனித உடலில் உணவால் ஆக்கப்பட்ட காரணத்தால் வாழ்வில் உணவு மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. ஆகவே சரிவிகித உணவு மிகச் சிறந்த மருந்தாகச் (உணவே மருந்து) சொல்லப்படுகிறது.
    உணவை “அன்னம்” என்பர்; இந்து தர்மப்படி அன்னம் என்பது பிரம்மம், “அன்னம் பரப்பிரம்ம சொரூபம்”. பிரசன்ன உபநிஷத் அன்னத்தைப் பிரம்மமாகச் சொல்கிறது; உணவிலிருந்து விதை வந்தது; அதிலிருந்து உயிர்கள் வந்தன.

    உணவு ஜடராக்னியால் செரிக்கப்பட்டு, மூச்சுக்காற்றால் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது; உறுப்புக்களின் தேவதைகளுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. நகம் முதற்கொண்டு ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தேவதை உரித்தானதாக இருக்கிறது என்று சொல்வர்.நமது உடலைச் சுற்றி 5 கோஷங்கள் இருக்கின்றன.

    அவை அன்னமய கோஷம், பிராண மய கோஷம், மனோமயகோஷம், விஞ்ஞான மயகோஷம், ஆனந்தமய கோஷம் என்பனவாகும். இவற்றில் வெளிப்புறமாக இருப்பது அன்னமய கோஷம். நமது முன்னோர் ஸ்தூல சரீரத்தை அன்னமய கோஷம் என்பர். ஏனெனில் இது உணவால் ஆனது. இந்து மதத்தில் உணவு மிக முக்கிய இடம் வகிக்கிறது.

    கோயில்களில் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. தர்மகாரியமாக ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்படுகிறது. பறவைகள் விலங்குகளுக்குக் கூடத் தரப்படுகிறது. சாப்பிடும் முன் ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டதெய்வங்களுக்குப் படைப்பர். அப்போது அந்த உணவிலுள்ள தீமைகளை அத்தெய்வம் நீக்கிவிடுவதாகச் சொல்வர். தைத்திரிய உபநிஷத்தில், வருணன், தன் மகன் பிருகுவிற்கு உணவைப் பற்றிக் கூறுவது, உணவின் மேன்மையைக் காட்டும்.

    “உணவுக்கு உரிய மரியாதை தர வேண்டும், குறை சொல்லக்கூடாது. உணவை மறுக்கக்கூடாது, உணவை வீணாக்கக்கூடாது, நிறைய உணவை வைத்துக் கொண்டு வரும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டும்” என்பதே அந்த அறிவுரை! மனித உடலில் உணவால் ஆக்கப்பட்ட காரணத்தால் வாழ்வில் உணவு மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. சரிவிகித உணவிற்கு இணையான மருந்தோ, பரிகாரமோ கிடையாது. ஆகவே சரிவிகித உணவு மிகச் சிறந்த மருந்தாகச் (உணவே மருந்து) சொல்லப்படுகிறது.

    இன்று “டயட்டிஷியன்கள்”, ஊட்டச்சத்து நிபுணர்கள் உடற்பயிற்சி வல்லுனர்கள், அழகுக்கலை நிபுணர்கள் என பலதரப்பட்டவர்களும் உணவைப் பற்றிப் பேசுகிறார்கள். உடல்நலத்தைத் காப்பதில் உணவின் பங்கு மிக முக்கியம் என அனைவரும் அறிவர். ஆனால் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அவரவர் உடல், மனம் ஆகியவற்றின் அடிப்படையில், அவரவர்க்கும் பொருத்தமான உணவு என்ன என்பதை அறிந்து, செயல்படுத்த வேண்டும் என்பது அறியப்படாமல் இருக்கிறது. ஆயுர்வேதம் உணவு பற்றி விரிவாகப் பேசுகிறது.

    பசிக்கு உணவு:


    பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது பொது நியதி. உடல் இயங்கத் தேவைப்படும் சக்தியைப் பெற உணவு தேவைப்படுகிறது என்று உடல் காட்டும் சங்கேத மொழியே பசி! இதற்கு முன் சாப்பிட்ட உணவு செரிமானம் முடிந்து, அடுத்த உணவுக்கு உடல் தயாராகி விட்டது என்பதற்குப் பசியே அறிகுறி!

    விருப்பமான உணவுக்காக வரும் பசி:

    என்ன உணவு என்பதைப் பொறுத்து, பசி வரக்கூடாது, நமக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டால் கூட, அந்த உணவைச் சாப்பிடத் தோன்றுமானால், அதுவே உண்மையான பசி! பிடித்தமான உணவைப் பார்த்தவுடன் தோன்றுவது உண்மையான பசி அல்ல! ஒரு நல்ல விருந்தை மனம் எதிர்பார்க்கிறது என்பதுதான் உண்மை!

    பொழுது போக்கிற்காக உண்பது:

    பயணங்களின் போதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் பார்க்கும் போதும், நண்பர்களுடனான சந்திப்பிலும், எதையாவது கொறிப்பது என்பது எழுதாத சட்டமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த நேரங்களில் பொறித்த உணவுகளை உண்கின்றனர். இவை உடல்நலனுக்கு உகந்தவை அல்ல! நிறத்திற்காகவும், கெட்டுப்போகாமல் இருக்கவும், அதிக ருசிக்காகவும் ராசயனங்கள் இவற்றில் அதிகம் சேர்க்கப்படுகின்றன. மேலும் சாப்பிடும் அளவும் அதிகமாகிவிடும்.



    உளவியல் காரணங்களுக்காக உண்பது:

    மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் மனம் பாதிக்கப்பட்ட சமயத்தில், வேறு செயல்களில் மனதைச் செலுத்தி மடைமாற்றம் செய்ய உடல் முற்படுகிறது. இதற்குச் சுலபமான வழி என்னவெனில் கவனத்தைத் திருப்புவதுதான்! இவ்வாறு உண்பதால் சர்க்கரை அளவு கூடும். கொழுப்புச்சத்து கூடும். இதுவே தொடர்ந்தால் நீரிழிவு, இதயநோய் ஆகியவை வரலாம். உணவுகள் அப்போதைக்கு பாதித்த மனதுக்கு மறதியைத் தரும் அவ்வளவே! ‘மூட்’ மாறும்! பின்னர், உளவியல் பிரச்சினைகள் மேலும் அதிகமாகும் என்பதே உண்மை! இத்தகைய சந்தர்ப்பங்களில், மன உளைச்சலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அதைச் சரி செய்ய முயல்வதே நல்லது! யோகா, கவுன்சிலிங் போன்றவையும் உதவும்.

    இதில் இன்னொரு வகை - நோயாளிகள்! நீரழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்தந்த வேளையில் சாப்பிடச் சொல்லி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பசி இருக்கிறதா என்று கவனிப்பது இல்லை. பசியில்லாமல் சாப்பிடுவதால் ஆமம் (கழிவு) உண்டாகிறது. ஏற்கனவே இருக்கும் நோய்களை இன்னும் சிக்கலாக்குகிறது. எனவே உண்பது என்பது, எந்தவிதக் கட்டாயமும் இல்லாமல் இயல்பான நிகழ்வாக இருக்க வேண்டும். பசியிருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும் பசித்திரு! தனித்திரு!! விழித்திரு!!! என்பார் வள்ளலார்.

    யட்டிங்:

    உடல் இளைக்க வேண்டும், பார்க்க உடல் கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்று இன்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதற்குச் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர் மிகச்சிலரே! “ஆரோக்கியமான டயட்” என்று ஒரு டயட்டை முடிவு செய்து அதன்படி உண்ணத் தொடங்குகிறார்கள். தொடங்கும் முன் டயட்டின் நோக்கம் என்ன என்று பார்க்க வேண்டும்.

    அது நமது பிரகிருதிக்குப் பொருத்தமானதா என்று கண்டறிய வேண்டும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எடைகுறைய வேண்டும் என்ற ஆர்வமும், அவசரமும், தீவிரநோய்களுக்கு வித்திடுகின்றன. முக்கிய சத்துக்களை இழக்கும் அபாயமும் நேர்கிறது. மேலும் மனதுக்குத் திருப்தியும், உடலுக்குச் சக்தியும் தராத எந்த முறையும் நீண்ட நாட்கள் பின்பற்றப்படமாட்டாது.

    பசிக்கும்போது மட்டும் உண்ணுதல்:

    பெரும்பாலான நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்டு பழகிய பழக்கம் காரணமாகவும், உணவு இடைவேளை வந்துவிட்டது சாப்பிட்டுத்தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும், அல்லது மிகுந்த வேலைப் பளுவிற்கிடையே கொறிக்க சிறிது நேரம் கிடைத்து விட்டது என்பதற்காகவும் உண்கிறோம். இதுபோன்ற சமயங்களில் பசி இருப்பதில்லை. பெரும்பாலும், முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் முடிந்து, வயிறு காலியாக இருக்கும் போது பசிதோன்றும். அப்போதுதான் சாப்பிட வேண்டும். ஆனால் பசி தோன்றும் நேரங்களில் சாப்பிட முடியாமல் போகிறது. அதைச் சரி செய்ய, சாப்பிட நமக்குக் கிடைக்கும் நேரத்தில் பசி வந்து சாப்பிட ஓர் ஏற்பாட்டை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    அதாவது மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளை, அந்த நேரத்தில் மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், காலை உணவை அதற்குத் தகுந்தபடி சற்று முந்தி எடுத்துக் கொள்ளலாம். எளிதில் செரிமானம் ஆகி 1 மணிக்கு வயிறு காலியாகும்படியான உணவு களைக் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பசியில்லாதபோது நேரம் கிடைத்தது என்பதற்காகச் சாப்பிட்டால் நோய்வாய்ப்பட நேரும்.

    உடலின் தேவைக்கேற்ற அளவில் உணவு:

    நமது வயிற்றை மூன்று பாகமாக கொள்ள வேண்டும். முதல் பாகத்தில் திட உணவும், இரண்டாம்பாகத்தில் திரவ உணவும், மூன்றாம் பாகம் காலியாகவும் இருக்க வேண்டும். செரிமானம் நடைபெறும்போது உணவின் அசைவுகளுக்குக் காலியிடம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு உணவுக்குமிடையே 4-6 மணி நேர இடைவெளி தேவைப்படும். இன்னும் சிறிது உண்ணலாம் என்றிருக்கும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும்.

    ‘முதல் ஏப்பம்’ உணவு போதும் என்பதற் கான அடையாளம்! அதிகம் உண்பதால் வெகு சீக்கத்திரத்தில் எல்லா தோஷங்களும் அதிக மாகிவிடும். மாறாக அளவு குறைவாக உண்பதால் உடல்வளர்ச்சி, பலம்பெறுவது தடைபடும், வாதம் தொடர்பான நோய்கள் தோன்றக் காரணமாகிவிடும். ஆகவே சரியான அளவில் உண்பது முக்கியமானது.
    குழந்தை பிறந்து தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படும் பெண்களுக்கு இந்த பால்சுறா குழம்பை செய்து கொடுத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் சுறா - 250 கிராம்
    தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
    புளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை)
    பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
    சீரகம் - 2 டீஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
    சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்)
    காய்ந்த மிளகாய் - ஒன்று  
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.

    பூண்டைத் தட்டிக்கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

    தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.

    நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×