என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சனைகள் பிள்ளைகளுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை பெற்றோர் நெறிப்படுத்த வேண்டும்.
    பிள்ளைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்; ஒருவேளை, எதிர்பாராத பிரச்சனை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

    உங்கள் பிள்ளைகள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் என்றால், அந்த ஸ்டேட்டஸைப் பாருங்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள், மன உணர்வுகள், நண்பர்கள், பப்பி லவ் என எல்லாவற்றையும் இதன்மூலம் அறியலாம். பிறகு, உங்கள் பிள்ளைகளின் இயல்பைப் பொறுத்து கண்டிப்பது, தண்டிப்பது, எடுத்துச்சொல்லித் திருத்துவது எனப் பொறுமையாக செயல்படுங்கள்.

    அடுத்தது, முகநூல். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இது அவசியமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். பிள்ளைகள் காது கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

    கை தவறுதலாக ஏதோ ஒன்றை டச் செய்துவிட்டாலும், இணையதளத்திலிருந்து கடகடவென ஆபாச வீடியோக்கள் கொட்டிவிடுகின்றன. பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் அவற்றை ஓப்பன் செய்துவிடலாம். அதனால், வாரம் ஒருமுறையாவது பிள்ளைகளுடைய போன் ஹிஸ்டரியை செக் செய்வது நல்லது.

    முகநூலில் பதிவேற்றப்பட்ட படங்களின் முகத்தை மட்டும் எடுத்து, அதை எப்படி ஆபாசப் படமாக மாற்றி மிரட்டுகிறார்கள் என்பதை, இதுபோன்ற செய்திகளை இணையத்தில் தேடியெடுத்து அவர்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற குற்றங்களால் உயிரைவிட்ட இளம் பெண்களைப் பற்றிய செய்திகளையும் பிள்ளைகள் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

    முகநூலில் இருக்கிறதுபோது, அறிமுகம் இல்லாதவர்கள், இன்பாக்ஸில் வந்து ஹாய் சொன்னால், அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பதுதான் நாகரிகம், மரியாதை எனப் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.

    முகநூலில் வரும் ஆபாச வீடியோக்களை ஓப்பன் செய்தால், அது நீ அனுப்பியதாக உன்னுடைய மற்ற முகநூல் நண்பர்களுக்குச் சென்றுவிடும் என்ற தகவலைச் சொல்லி, பிள்ளைகளை உஷார்படுத்துங்கள்.

    * 'உனக்குச் சமூக வலைத்தளங்களின் வழியாக ஏதாவது பிரச்சனை வந்தால், அதை உடனே அம்மாவிடம் சொல். நான் உன்னைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையைப் பதியவையுங்கள்.

    * உங்கள் மகளின் முகத்தை வைத்து மார்பிங் செய்வது போன்ற பிரச்சனை வந்தால், தைரியமாக சைபர் கிரைம் மூலம் தீர்வு காணுங்கள்.

    கடைசியாக, ஸ்மார்ட்போன் வழியாக உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும், பிள்ளைகளுக்கு நீங்களே அறிமுகப்படுத்தி விடுங்கள். போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள். 
    ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன.
    மருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பிரசவம் என்பது சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போது ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்று சிகிச்சை முறைகளைக் கையாண்டு சரிசெய்யமுடியும். வீட்டில், அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    உதாரணமாக, பிரசவம் முடிந்த பின் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்களில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவமனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு கட்டுப்படாவிட்டால் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வோம். ஒருபுறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை.

    ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்புகூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்துகளோ, கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப்பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர், ஆம்புபேக் உதவியுடன் சரிசெய்துவிடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை .

    ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன. தாயையும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி.
    ஒயின் பேஷியல் செய்துகொண்டால் சருமத்தின் இறந்த செல்கள் உதிர்ந்து, முகம் புத்துணர்வுடனும் பளபளப்புடன் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
    முன்பு ஆரோக்கியத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட திராட்சை, தற்போது அழகுக்காகவும் பயன்படுகிறது. பன்னீர் திராட்சை எனப்படும் கறுப்பு திராட்சையே உண்மையில் ஆரோக்கியமானது. திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிகப்பு, ரோஸ், வெள்ளை நிற ஒயின்கள், அழகியல் சார்ந்த சிகிச்சைக்குப் பயன்படுகிறது. அதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட், சருமத்தில் உள்ள எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டு சருமச் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. இதனால், வயதான தோற்றத்தை மறைக்க முடியும்.

    வெயிலினால் முகம் கறுத்துக் காணப்படுகிறது, சருமத்தின் உண்மையான நிறம் மங்கி சருமம் பொலிவிழந்து இருக்கிறது என்பவர்களுக்கு, ஒயின் ஃபேஷியல் பெஸ்ட் சாய்ஸ். முகத்தை கிளென்சிங், டோனிங் செய்ததும், வழக்கமான ஃபேஷியல் போன்றே ஸ்க்ரப்பர், மசாஜ் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்படும். வழக்கமான ஃபேஷியலைவிட ஒயின் ஃபேஷியல் கூடுதல் நிறம் மற்றும் உடனடி அழகைக் கொடுக்கும்.

    ஒயின் தெரப்பி:

    புத்துணர்வுக்கும் உடல் பொலிவுக்கும், உடலில் உள்ள சுருக்கங்கள் நீங்கவும் உடல் முழுவதும் ஒயினால் செய்துகொள்ளப்படும் சிகிச்சையே, ஒயின் தெரப்பி. வயது முதிர்வால் தோலில் சுருக்கங்கள் காணப்படுகிறது என்பவர்களுக்கு, ஒயின் தெரப்பி பெஸ்ட் சாய்ஸ். கறுப்புத் திராட்சையின் விதை மற்றும் தோலை அரைத்து, உடல் முழுவதும் அப்ளை செய்து ஸ்க்ரபராகப் பயன்படுத்தப்படும்.



    இதனால், சரும துவாரங்கள் திறந்துகொள்ளும். அதன்பின், வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் குளிக்க வேண்டும். இதன்மூலம் உடலின் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். அதன்பின் ஒயின் கலக்கப்பட்ட ஜெல் மற்றும் க்ரீம்களால் உடல் முழுவதும் அப்ளை செய்யப்படும். இறுதியாக, ஒயின் சீரம் அப்ளை செய்யப்படும்போது, மீண்டும் சரும துவாரங்கள் மூடிக்கொள்ளும். இது, இளமையான தோற்றத்தையும் உடல் பளபளப்பையும் கொடுக்கும்.

    உங்கள் சருமத்துக்கான ஒயின் தேர்வுசெய்யும் முன்பு கவனிக்கவேண்டியவை...

    டிரை ஸ்கின் உடையவர்கள், ஸ்வீட் ஒயினைப் பயன்படுத்தவும்.

    சென்சிட்டீவ் ஸ்கின் உடையவர்களுக்கு, ரெட் ஒயின் பெஸ்ட் சாய்ஸ். இது, சருமத்தின் ஆழ்துவாரங்கள் வரை சென்று, பருக்கள் மற்றும் கட்டிகள் வருவதைக் குறைக்கும்.

    நார்மல் ஸ்கின் எனில், டிரை ஒயினைத் தேர்வுசெய்யலாம். இதில் உள்ள டார்டாரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைத் தக்கவைத்துக் கூடுதல் அழகில் காண்பிக்கும்.

    டிரை ஸ்கின் எனில், ரெட் ஒயின், தேன், கற்றாழையின் சதைப் பகுதி என மூன்றையும் சேர்த்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

    எண்ணெய் பசை சருமம் எனில், ரெட் ஒயினுடன் சம அளவு தயிர் கலந்து பயன்படுத்துவதன் மூலம் அழகான தோற்றத்தைப் பெறமுடியும்.
    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலை பொடி இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 40
    நெல் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    அரைக்க :

    கறிவேப்பிலை - 3 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

    தாளிக்க  :

    கடுகு - சிறிதளவு,
    உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2.



    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். ஆனால் அடிக்கடி காபியை குடிப்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
    சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.

    காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

    அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.

    நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.

    நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
    அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.

    டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.

    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள்.  
    மஹத்யோக பிராணாயாம பயிற்சியினால் நுரையீரலின் அனைத்து பாகத்திற்கும் காற்று நன்கு பரவுகிறது. அசுத்த காற்று அதிகளவு வெளியேற்றப்படுகிறது.
    நுரையீரலின் முழுமையான சுவாசமுறை:

    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அதம, மத்யம, ஆத்ய பிராணாயா மத்தில் செய்த மூன்று விதமான உடலியக் கத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இந்த பிராணாயாமத்தில் செய்ய வேண்டும். வலது உள்ளங்கையை மார்பின் மேலும், இடது உள்ளங்கையை வயிற்றுப் பகுதியிலும் வைக்கவும்.

    மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்தபடி முதலில் வயிற்றுப் பகுதியில் காற்றை நிரப்பி, அதைத் தொடர்ந்து மார்புப் பகுதியிலும், அடுத்து மார்பின் மேல் பகுதியிலும் காற்றை நிரப்பவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும். பிறகு மூச்சுக்காற்றை நிதானமாக வெளியே விட்டபடி முதலில் வயிற்றுத் தசைகள், அடுத்து மார்பு, அதையடுத்து மார்பின் மேல்பகுதி என ஒன்றன்பின் ஒன்றாக சுருக்கவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இரு ஒரு சுற்று பயிற்சியாகும்.

    இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யவும். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: அத்ம சுவாசத்தில் வயிறு மற்றும் மணிபூர சக்கரத்தின் மீதும், மத்யம சுவாசத்தில் மார்பு மற்றும் அனாஹத சக்கரத்தின் மீதும், ஆத்ய சுவாசத்தில் மார்பின் மேல் பகுதி மற்றும் விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    ஆரம்பப் பயிற்சியில் தொடர்ந்து நான்கு வகை பிராணாயாமத்தையும் வஜ்ராசனத்தில் செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு பிராணாயாமத்திற்குப் பிகும் சுகாசனத்தில் சில வினாடிகள் ஓய்வு பெற்று, பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

    வஜ்ராசனத்தில் சில வினாடிகள் கூட அமர்ந்து பயிற்சி முடியாதவர்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து பயிற்சி செய்யலாம். அப்படி நாற்காலியின் மீது அமர்ந்து பயிற்சி செய்யும் போது முதுகு, கழுத்து, தலை நேராக இருக்கட்டும். முழங்கால்களுக்கு நேராக  தரைவிரிப்பின் மேல் குதிகால்கள் வரும்படி வைக்கவும். பாதம் இரண்டும் முழுமையாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்

    பயன்கள்: மஹத்யோக பிராணாயாம பயிற்சியினால் நுரையீரலின் அனைத்து பாகத்திற்கும் காற்று நன்கு பரவுகிறது. நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கப்படுகிறது. அசுத்த காற்று அதிகளவு வெளியேற்றப்படுகிறது. 
    இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சொந்தமாக வீடு வாங்கி ‘செட்டில்’ ஆன பிறகுதான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
    இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சொந்தமாக வீடு வாங்கி ‘செட்டில்’ ஆன பிறகுதான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். சொந்தவீடு என்பது சமூக அளவிலான அங்கீகாரமாக பார்க்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    மேலும், அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் எதிர்கால சேமிப்பு என்ற அடிப்படையில் வீட்டு வசதி திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ரியல் எஸ்டேட் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் ஹைதராபாத் நகரத்தில் நடந்த கிரெடாய் (Confederation of Real Estate Developers Association of India - CREDAI) அமைப்பின் இளைஞர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் தங்கள் விருப்பப்படி சொந்த வீடு வாங்கும் முடிவுடனும், 20 சதவிகிதம் பேர் ரியல் எஸ்டேட் சந்தையில் வர்த்தக ரீதியாக முதலீடு செய்யும் முடிவுடன் இருப்பது அறியப்பட்டுள்ளது.

    கிரெடாய் மற்றும் சி.பி.ஆர்.இ (புது டில்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வு நிறுவனம்-சிஙிஸிணி) கூட்டாக வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், 2020 ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் இளைஞர்களாக இருப்பார் கள் என்ற கூடுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகரங்களில் நிலவும் வாழ்க்கைக்கான சூழலை ஆண்டு தோறும் மதிப்பீடு செய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, நகர அமைப்பு, சமூக நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் இந்த மதிப்பீடு, இந்திய அளவில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேற்கண்ட செயல்பாடுகளுக்கு ஏற்ப மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை (ரூ.40,617 கோடி) விடவும், 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி (ரூ.41, 765 கோடி) அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் மேல் அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளதாகவும் மத்திய வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது. 
    மாலையில் டீ, காபியுடன் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட தோன்றினால் மீல்மேக்கர் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு.



    செய்முறை :

    மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த உதிர்த்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துக் கிளறவும்.

    பரிமாறும் முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
    `குழந்தைகளின் கண் பார்வையைப் பாதிப்பதில், ரசாயனப் பொருள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுண்ணாம்பு, அறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமிலங்களே குழந்தைகளின் பார்வையைப் பறித்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறு கவனமின்மை கூட குழந்தைகளின் பார்வைத்திறனை பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள் அவர்கள்.  

    ``ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாம் ரசாயனங்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்கள்மீது பெற்றோர் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருக்கும் நேரங்களில்தாம் அதிக பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, விளையாடும்போது கண்களில் குத்திக்கொள்வது, அதிகமாகக் கசக்குவது, தூசு இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு அப்படியே கண்களைத் தொடுவது, ஏதேனும் திரவத்தை கண்களில் ஊற்றிக்கொள்வது, குச்சிகளைக் கண்களுக்குள் விட்டு விழித்திரையில் குத்திக்கொள்வது போன்ற செயல்களில் தனிமையான நேரங்களில்தாம் குழந்தைகள் செய்வார்கள்.

    சுண்ணாம்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருக்கும் அமிலங்கள் அல்லது கிளீனர்கள், ப்ளீச்சிங் பவுடர், குளிர்பானங்கள் போன்றவற்றை எப்போதும் குழந்தைகளின் கைக்கெட்டாதவாறு வைக்கவேண்டும். மிகவும் ஆபத்தான பொருள் சுண்ணாம்புதான். காரணம், அதிலுள்ள ஆசிட் மற்றும் அல்கலி (Alkali) என்ற ரசாயனப்பொருள்.

    கண்களின் விழித்திரையில் ஆசிட்டோ, அல்கலியோ படும்பட்சத்தில், கருவிழிகளுக்குள் அவை ஊடுருவத் தொடங்கிவிடும். உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரசாயனங்கள் கண்களுக்குள் தங்கி அழற்சிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்களில் வறட்சி ஏற்படுவது, சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது போன்றவை அழற்சிக்கான அறிகுறிகளாகும். இதனால் கருவிழிகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கண்களில் ரசாயனம் பட்டவுடன் தொடர்ச்சியாக அரைமணி நேரம் கண்களை நன்றாகக் கழுவவேண்டும். முதல் 30 நிமிடங்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் பாதிப்பின் தன்மையைத் தீர்மானிக்கும். எனவே, கப் நிறையத் தண்ணீர் எடுத்து அதில் கண்களைத் திறந்தபடி வைத்து சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீராக இருந்தால், நல்லது. இமையை முடிந்தவரை திறந்து கண்களுக்குள் நீர் செல்லும்படிச் செய்யவேண்டும்.  கண்களுக்குள் செல்லும் நீர், சுண்ணாம்புப் பவுடரை கரைத்து வெளியே தள்ளிவிடும். சுண்ணாம்பிலுள்ள பெரிய பகுதிகள் இமைகளுக்கு அடியில் தங்கிவிடும் என்பதால், அரைமணி நேரம் கண்களை சுத்தப்படுத்திய பிறகு மருத்துவரிடம் செல்லவேண்டும்.

    கண் பார்வையில் குறைபாடுகள் எதுவும் இருந்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், வருடத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.

    கண்களில் படும் ரசாயனத்தை (Chemical Burns) கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நிலையிலேயே சரிசெய்யாவிட்டால், வாழ்நாள் பாதிப்புகள்கூட ஏற்படலாம்.

    குழந்தைகளை, பெற்றோர் மின்திரைகளுக்கு அடிமையாக்கிவிட வேண்டாம். இது அவர்களுக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
    வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
    இதயநோய், பக்கவாதம், மாரடைப்பு என்ற பல்வேறு தொற்ற நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது சர்க்கரை நோய். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரை நோய், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் அவ்வளவு எளிதில் ஆறாது. பார்வையும் கூட பாதிக்கப்படும். இதெல்லாம் எல்லோரும் அறிந்தது தான்.

    ஆனால், சர்க்கரை நோய் வயிற்றையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இதுபற்றி விழிப்புஉணர்வு இல்லாததால், வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

    பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு விதமான வயிற்றுபிரச்சனைகள் வரலாம். ஒன்று 'டயாபடிக் கேஸ்ட்ரோபேரசிஸ்' (Diabetic Gastroparesis) என்ற பிரச்சனை ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, அது வேகஸ் நரம்புகளைப் பாதிக்கும். இரைப்பையில், 'எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம்', 'எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும்' என்பதையெல்லாம் தீர்மானிப்பதும் செரிமானப் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இந்த நரம்புகள்தான். இவற்றில் பாதிப்பு ஏற்படும்போது, அஜீரணக் கோளாறுகள், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வீக்கம், மேல் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

    மற்றொரு பிரச்சனை, 'இன்டெஸ்டினல் எண்ட்ரோபதி' (Intestinal Enteropathy). இந்தப் பிரச்சனையும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காத நிலையில்தான் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும். சில நேரங்களில் இரண்டு பிரச்சனைகளும் மாறிமாறி வரலாம்.



    தீர்வு என்ன?

    வயிற்று உபாதைகளால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் பயன்தராது. அவற்றிலிருந்து விடுபட வேறுசில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

    * திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * மூன்று வேளைச் சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடலாம்.

    * மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களைக் கைவிடவேண்டும்.

    * அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவைக் குறைத்து நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    * ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியுடன் மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளவேண்டும்.

    இவற்றைப் பின்பற்றுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே, அது நிரந்தர தீர்வாக அமையும்.
    சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாளை கருவாடு - 6 துண்டுகள்,
    வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
    நசுக்கிய பூண்டு - 5 பல்,
    சாம்பார் வெங்காயம் - 6,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
    நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
    உப்பு - தேவைக்கு.
    புளி - நெல்லிக்காய் அளவு,
    நல்லெண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    வாளை கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    பின்பு கரைத்த புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலியல் சார்ந்த குறைபாடுகளில் 90 சதவீதம் மனம் சார்ந்த தொந்தரவுகளே. மீதமிருக்கும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
    ஆண்மைக் குறைபாடுகள் அத்தனையும் தங்களால் தீர்க்க முடியும் என்று வாக்களித்து இவர்கள் தங்களது பிசினஸை மேம்படுத்திக் கொள்ள அத்தனை வகையான விளம்பரங்களையும் செய்கின்றனர். எனவே, விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

    பாலியல் குறைபாடுகளை முதலில் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் சார்ந்த குறைபாடுகளில் 90  சதவீதம் மனம் சார்ந்த தொந்தரவுகளே. மீதமிருக்கும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வேறு பிரச்சனைகள் கூடப் பாலியல் குறைபாட்டுக்குக் காரணம் ஆகலாம்.

    வீரியமின்மை, விந்து விரைவாக வெளியேறுதல், விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறைதல் ஆகியவற்றை முறையான மருத்துவர்களிடம் விவாதிப்பது முக்கியம். பயிற்சி, அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை மூலம் பாலியல் குறைபாடுகளை சரி செய்துவிடலாம்.

    பாலியல் பிரச்சனைக்கு மன ரீதியான காரணங்கள் இல்லாமல் உடல் ரீதியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை ஆய்ந்து அறிவது மருத்துவரின் கடமை. காரணம் தெரியாமல் குத்துமதிப்பாக சில மருந்துகளை சாப்பிடச் சொல்லும் போலி மருத்துவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.

    பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படைத் தன்மையுடன் பேசமுடியாத சூழலே போலிகள் உருவாவதற்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது.

    காதல், காமம் இரண்டையும் ‘அடச்சீ’ என்று பார்க்கும் மனப்பான்மையை தகர்த்தெரியும் சூழலை உருவாக்க வேண்டும். செக்ஸ் என்ற சொல்லே இங்கு கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. செக்ஸ் என்பதும் இயல்பான செயல்பாடே என்பதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது.



    குழந்தையின்றித் தவிக்கும் பெண்களை இந்த சமுதாயம் பலவிதமாகவும் வசை பாடுகிறது. இந்தச் சூழ்நிலையை வைத்தே வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் ஆசாமிகள் இங்கு அதிகம் உள்ளனர். குழந்தைக்காக ஏங்கும் கணவனின் கடினமான மனநிலையும், மனைவியின் மன அழுத்தத்தையும் பணமாக மாற்றும் வித்தையை போலி மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பாலியல் குறைபாடுகளுக்கு நிச்சயமாக இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உண்டு. ஆனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பதிவு பெற்ற அல்லது பாரம்பரிய முறைப்படி நெடுநாளாக மருத்துவம் பார்த்து வரும் தகுதி வாய்ந்த மருத்துவர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

    அதிக பணம் செலவழித்து விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களை எந்தக் காரணம் கொண்டும் நம்ப வேண்டாம், விளம்பரத்துக்காக செலவழித்த பணத்தை உங்களிடம்தான் வசூலிக்கப் போகிறார்கள்.

    ஐந்து ரூபாய் மதிப்புள்ள மருந்தை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் வித்தகர்கள் இங்கு அதிகம். பாலியல் சார்ந்த குறைபாடுகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நிவர்த்தி செய்யக் கூடிய கொடிய வியாதியல்ல. செலவில்லாமல் செய்யக் கூடிய மனமாற்றம் மட்டுமே. பாலியல் பற்றிய சந்தேகங்களை வெளிப்படையாக விவாதியுங்கள்.

    பள்ளிப் பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை பேசிப் புரிந்து கொள்ள சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். திருமண வாழ்வில் கணவன் மனைவி இடையில் அன்புப் பரிமாற்றத்தில் மனத்தடைகள் இன்றி இருங்கள்.

    ஒருவரது குறையை மற்றவர் பெரிது படுத்தத்தேவையில்லை. பாலியல் தொடர்பான சிறு பிரச்சனைகளுக்கு உங்கள் குடும்ப மருத்துவரிடம் விவாதிக்கலாம். தேவைப்பட்டால் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகலாம். பாரம்பரிய உணவு, உடலுழைப்பு, மனமகிழ்ச்சியும் ஆரோக்கியமான தாம்பத்யத்துக்கு வழிவகுக்கும்.
    ×