என் மலர்
பெண்கள் உலகம்
- உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை.
- இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.
உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உடல், தான் இயங்குவதற்கு உபயோகித்தது போக மீதி கொழுப்புப் பொருட்கள் உடலில் மற்றும் ரத்தக் குழாய்களில் மெதுமெதுவாக படிய ஆரம்பிக்கிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு ரத்தக்குழாய்களிலுள்ள மற்ற சில பொருட்களுடன் சேர்ந்து கொழுப்புகளின் கலவையாக கடினமான 'காறை'யாக மாறி ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் படிந்துவிடுகிறது.
நிறைய வகைகளில் கொழுப்புப் பொருட்கள் உடலில் இருந்தாலும் முக்கியமான இரண்டு கொழுப்புகளைப் பற்றித்தான் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். 1) 'எல் டி எல்' என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு வகை, 2) 'ஹெச் டி எல்' என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு வகை ஆகும். 'எல் டி எல்' என்ற கெட்ட கொழுப்பானது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் படிய ஆரம்பித்து ரத்த ஓட்டம் சீராக போவதைத் தடுத்து, இதய நோயை உண்டாக்குகிறது. 'ஹெச் டி எல்' என்ற நல்ல கொழுப்பானது ரத்தத்திலிருந்து கெட்ட கொழுப்பை அப்புறப்படுத்தி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதன் மூலம் கொழுப்பு ரத்தக் குழாய்களின் உள்பகுதியில் படிவது தடுக்கப்படுகிறது.
கெட்ட கொழுப்புகளின் கலவையான காறை, இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அதை அடைத்து, எதிர்பாராதவிதமாக ஒருநாள் திடீரென்று, இதயத்துக்கு சுத்தமாக ரத்தம் போகவிடாமல் செய்துவிடுகிறது. இதயத்துக்கு ரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில், கெட்ட கொழுப்பு எவ்வளவு இருக்கிறது, நல்ல கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்றெல்லாம் பார்த்து, பார்த்து நாம் சாப்பிடுவதில்லை. தினமும் உடலுழைப்பு, ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல சிந்தனை இவைகளெல்லாம் இருந்தால், அதிக கொழுப்பு உடலில் சேர வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது. இவைகளெல்லாம் இல்லாதபோது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி, கடைசியில் மாரடைப்பில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
40 லிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, 'ரத்தக் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை' செய்ய வேண்டும். 50 லிருந்து 60 வயது வரை உள்ளவர்கள், ஆண்டுக்கு இருமுறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். 60 வயதைத் தாண்டியவர்கள், ஆண்டுக்கு 4 முறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் இதய சிகிச்சை நிபுணரிடம் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்று, ஆலோசனைகளை கண்டிப்பாக பெற வேண்டும்.
- வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.
- தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும்.
இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என சிலர். இப்படி பெரும்பாலானவர்களின் ஏக்கமே நல்ல, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதா? என்பது தான்.
நிம்மதியாக தூங்குவதற்கு என்ன தான் செய்வது என்று கவலையாக உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். இந்த 5 பழங்களை சாப்பிட்டாலே போதும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 பழங்கள்...
செர்ரி:
புளிப்பு செர்ரி சாறு குடிப்பது அல்லது புளிப்பு செர்ரிகளை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிக அளவில் கொண்டிருப்பதால் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவுகிறது.
கிவி:
கிவி படுக்கைக்கு முன் சாப்பிட சிறந்த பழம். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது மற்றும் செரோடோனின் என்ற ஹார்மோனைக் கொண்டுள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிக்க உதவுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது, உடல் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும் உதவும்.

அன்னாசி:
அன்னாசிப்பழத்தில் உள்ள மெலடோனின் தூக்க-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்துகிறது.
வாழைப்பழம்:
வாழைப்பழம் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு உணவு என்று சொல்லலாம். இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ட்ரிப்டோபன் என்ற அமிலம் உள்ளது, இவை தூக்கத்தை தூண்டக்கூடியவை. ட்ரிப்டோபன் மூளைக்கு சென்று மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது, இது தூக்கத்தை தூண்டுகிறது.
ஆப்பிள்:
ஆப்பிள் பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் மெக்னீசியம் என்ற ஒரு தாதுவும் உள்ளதால் நரம்பு மற்றும் தசைகளை தளரச் செய்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.
படுக்கைக்கு முன் ஆப்பிள் பழம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம், ஆனால் அது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தராது. சிலருக்கு ஆப்பிள் பழம் தூக்கத்தை தூண்டலாம், மற்றவர்களுக்கு அது உதவாது.
பழம் சாப்பிட்டும் தூக்கம் வரவில்லையே என்னதான் செய்வது என்று எரிச்சலடையக் கூடாது. பழம் சாப்பிட்ட உடனே தூங்கிவிட வேண்டும் என்ற மனநிலை தவறானது. ஏனென்றால் தூக்கத்தை மேம்படுத்தும் மற்ற வழிகளையும் பின்பற்ற வேண்டும். முதலில் இரவில் தூங்குவதற்கு முன் மனதை அமைதிப்படுத்துங்கள். வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.

படுக்கையறை சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன் காஃபின் மற்றும் மது முதலானவற்றை அருந்த வேண்டாம். தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும். லேசான உணவுகளை உண்ண வேண்டும். இவற்றை பின்பற்றினாலே நிம்மதியான தூக்கத்தோடு உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
என்ன செய்தாலும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை, உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
- மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.
முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சுற்றுச்சூழல், சூரிய ஒளிகதிர்கள் மற்றும் சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பது என பல்வேறு காரணங்களால் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றி முகப் பொலிவையும் இழக்க நேரிடும். இதனால் வயதான தோற்றத்தில் இருப்பதுபோல் நமக்கே தோன்றிவிடும்.
இழந்த சரும பொலிவை பெற எளிமையான ஃபேஸ் பேக் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிகவும் முக்கியமானது கடுக்காய் தான். கடுக்காய் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். ஃபேஸ் பேக்காக கூடவா போடலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம் கடுக்காய் ஃபேஸ் பேக் மூலம் இழந்த பொலிவை நம்மால் திரும்பப் பெற முடியும். முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையத்தையும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.
கடுக்காய் ஃபேஸ் பேக் செய்முறை:

ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.
நீங்கள் கடுக்காய் ஃபேஸ் பேக் போடும் போதே கடுக்காய் ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம். நேரம் மிச்சமாவதோடு கூடுதல் பொலிவைப்பெறலாம்.
கடுக்காய் ஹேர் பேக் செய்முறை:
1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும். 1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.
- சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.
- முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.
உணவுப்பொருளான கோதுமை, பெண்களின் சரும அழகை பராமரிக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவி புரியும் கோதுமை, சருமத்துக்கு நல்ல பொலிவையும் வழங்கும்.
மேலும், சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். கோதுமை மாவை விழுதாக தயாரித்து சருமத்தில் தடவும்போது, அது சரும முடிகளை தளர்த்தும். இப்படி அடிக்கடி கோதுமை மாவை பயன்படுத்தும் போது, காலப்போக்கில் முடியின் வேர்கள் பலவீனமடைந்து, அதன் வளர்ச்சி குறைந்து, சருமத்தில் முடி வளர்வது நின்றுவிடும்.
அதேபோல, முகத்தில் வளரும் முடிகளைப் போக்க கோதுமை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்...
கோதுமை மாவு பேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
தயிர் அல்லது பால்- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
தண்ணீர்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில், கோதுமை மாவு, பால் அல்லது தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
பின்னர் கைகளை நீரில் நனைத்து, மென்மையாக 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது சருமத்தில் உள்ள முடிகள் மென்மையாக அகற்றப்படுவதை உணரலாம்.
அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துடைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும்.
கோதுமை-தேன் பேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -2 டேபிள் ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், கீழிருந்து மேலாக அகற்றவும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கோதுமை மாவு-கடலை மாவு ஸ்கிரப்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் தயிர் அல்லது பால் சேர்த்து விழுது போல தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.
பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக முகத்தை 'ஸ்கிரப்' செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த 'ஸ்கிரப்', முகத்தில் வளரும் முடிகளை நீக்குவது மட்டுமின்றி, சருமத்துக்கு நல்ல பொலிவையும் தருகிறது.
- தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
- தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.
தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்...
பேச்சுவார்த்தை இல்லாமை
தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.
மன அழுத்தம், அவசரம்
வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
அலுப்பூட்டும் 'வழக்கம்'
திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
கவனிக்கப்படாதது
திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.
எதிர்மறை நடத்தை
எதிர்மறை நடத்தை ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகும். ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.
உடல்ரீதியான நெருக்கமின்மை
திருமணத்தில் தாம்பத்திய உறவு மட்டுமல்ல, சின்னச் சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், அந்த உறவில் இருந்து அன்னியோன்னியம் ஆவியாகிப்போகும்.
விரக்தி, வெறுப்பு
திருமண உறவிலேயே மிகவும் மோசமான நிலை, தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது. கடந்த கால அனுபவங்களில் உண்டான வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது, ஒரு திருமண உறவை நஞ்சாக்கி விடும்.
தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. காரணம், ஒவ்வொரு தம்பதியரின் தேவைகள், விருப்பங்கள், பிரச்சனைகள் வேறுபட்டவை. மனப்பூர்வமான செயல்பாட்டின் மூலம், தம்பதிகள் தங்கள் வாழ்வை அன்புப் பூஞ்சோலை ஆக்கிக்கொள்ள முடியும்.
- உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
- வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி.
இன்றைய வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உடற்பயிற்சி பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் அவசியமானதாக கருதப்படுகிறது.
உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து சிறு வயதிலேயே உடல் பருமன் உண்டாகிறது. இவற்றை தடுக்க குழந்தைகள் செய்ய வேண்டிய எளிமையான உடற்பயிற்சிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
நடைப்பயிற்சி
வீட்டில் மாடி இருந்தால் தினமும் 10-15 நிமிடம் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். இல்லையென்றால் வீட்டின் அருகே நடக்கலாம். வாய்ப்பு இருப்பின் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காக்களில் நடப்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும். இவ்வாறு செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுகிறது. இதயத்துடிப்பு சீராகிறது.
சிலம்பு பயிற்சி
கம்புகளை வைத்து செய்கிற சிலம்பு பயிற்சியும் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தற்காப்பு கலைகளுள் ஒன்று. இதை தினமும் செய்வதால் குழந்தைகளின் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் சிலம்பாட்டம் உதவி புரியும்.
யோகா
தினமும் இருபது நிமிடங்கள் யோகா செய்வது குழந்தைகளுக்கு நல்லது. பல யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றில் அடிப்படையான ஆசனங்களான பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகிய வற்றை செய்வது சிறப்பானது. யோகா செய்வது குழந்தைகளின் மனதை அமைதியாக்குகிறது. சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துகிறது.

வீட்டு பணிகளை செய்வது
வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி ஆகும். இந்த வேலைகளை செய்வதால் நாம் குனிந்து நிமிருகிறோம். அதேபோல வீட்டில் கலைந்துள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு உடற்பயிற்சி தான்.
நடனம் ஆடுவது
வீட்டில் நடனம் ஆடுவது சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. பெற்றோர்கள் நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து குழந்தைகளை ஆட சொல்லலாம். இது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆப்பிரிக்க நாடுகளிலும், மற்ற வெளிநாடுகளிலும் வீட்டில் நடனம் ஆடுவதை உடற்பயிற்சியாக செய்து வருகின்றனர்.
கயிறு வைத்து குதிப்பது
ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு வைத்து குதித்து விளையாடும் பயிற்சியை குழந்தைகள் தினமும் செய்வது அவர்களின் பாதங்களையும், உடல் உறுப்புகளையும் சீராக வைத்திருக்க உதவி புரியும். இதை தினமும் செய்வதால் உடல் எடை அதிகரிக்காமலும், உடல் தசைகள் வலிமையாகவும் இருக்கும்.
- வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.
- மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும்.
வாய்வு பிடிப்பு, மாரடைப்பு இரண்டுமே நெஞ்சு வலியை உண்டாக்கும். அநேக மக்களுக்கு எல்லா நெஞ்சு வலியும் இதயம் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்குமோ என்ற பயமும், கவலையும் தான் அதிகமாக இருக்கின்றது. ஆனால் எல்லா நெஞ்சு வலிகளும் இதயம் சம்பந்தப்பட்டது இல்லை என்று நினைத்து ஒதுக்கிவிடவும் முடியாது.
வாய்வு உண்டாக்கும் நெஞ்சுவலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
அடிக்கடி ஏப்பம் வரும், வயிற்றைப் புரட்டும், வயிறு உப்புசமாக ஊதிப்போய் இருக்கும். ஆசனவாய் வழியாகவும் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். நெஞ்சுவலி விட்டுவிட்டு குத்துகிற மாதிரி பிடிப்பு மாதிரி இருக்கும். வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.
இனி மாரடைப்பை உண்டாக்கும் நெஞ்சு வலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். சிலருக்கு மார்பு பகுதி திடீரென கனமாகி மிகமிகக் கடுமையான நெஞ்சுவலி வரலாம். திடீரென வரும் மாரடைப்பு மிகுந்த சக்தியுடன் வருவதால் சில நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்க வைக்க நேரிடும்.
மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும். வலி மிக மிக கடுமையானதாக இருக்கும். நெஞ்சைக் கசக்கி பிழிகிற மாதிரி இருக்கும். நெஞ்சுப்பகுதியிலிருந்து இடது கை விரல்கள், இடது பக்க தாடை, தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதி முதலிய இடங்களுக்கு வலி பரவும். மூச்சு விடுவதில் சிரமம், அதிகமாக வியர்வை, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே இருக்கும். சிலருக்கு இவைகளில் ஒருசில அறிகுறிகள் மட்டும் ஏற்படலாம்.
கடின உடற்பயிற்சி செய்யும்போது, கடின உடல் உழைப்பு செய்யும்போது அதிக மன அழுத்தம், மன உளைச்சலில் இருக்கும்போது மாரடைப்பு வலி வரக்கூடும்.
நீங்கள் இருக்கும் இடத்தை உட்கார்ந்திருக்கும் நிலையை சற்று மாற்றினால் வாய்வு உடலிலிருந்து வெளியாகி உங்களுக்கு பிரச்சினை தீர வாய்ப்புண்டு. வெந்நீர், சீரக நீர் குடித்தால் கூட வாய்வு வெளியேறி வலி குறைய வாய்ப்புண்டு. இதற்குப்பிறகும் வலி போகவில்லை என்றால் அது இதயம் சம்பந்தப்பட்ட வலிதான் என்று முடிவு செய்யலாம்.
மாரடைப்பினால் நெஞ்சுவலியா, வாய்வுக் கோளாறினால் நெஞ்சுவலியா என்பதைக் கண்டுபிடிக்க இரண்டுக்கும் உண்டான அறிகுறிகளை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனோ தானோ என்று மெத்தனமாக இருக்கக்கூடாது.
மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்களும், நுரையீரல் நோய்களும், ஆஸ்துமா, காசநோய், கொரோனா நோய், கணைய நோய், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சுருங்கிப் போதல், விலாஎலும்பு விரிசல் போன்றவைகளினால் கூட நெஞ்சுவலி ஏற்படலாம். உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் இதய சிகிச்சை நிபுணரை உடனே சந்தித்து அவசர முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
- சப்ரோபைட்டுகள் என்ற பூஞ்சை காளான் இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும்.
- வெள்ளை பட்டன், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல உணவை சுவைக்கும் மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.
சமீப காலங்களில் காளான்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக மாறிவிட்டது. காளான் என்பது காய்கறி குடும்ப பயிர் அல்ல. உண்ணக்கூடிய காய்கறிகள் தரும் தாவரங்கள் குளோரோபில் என்ற பச்சையம் மூலம் சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று அதனை மாவுச்சத்து என்ற கார்போஹைட்ரேட் ஆக மாற்றி விளைகிறது. ஆனால் காளான்களில் குளோரோபில் இல்லை. அவை ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது இவை எப்படி வளர்கின்றன?
இந்த காளான்கள் தாங்கள் வளர மற்ற தாவரங்களில் இருந்து தங்களுக்கு தேவையான சத்தான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்கின்றன. இதனால் தான் இந்த காளான்களை பூஞ்சை குடும்ப தாவரமாக அடையாளப்படுத்தி உள்ளனர்.
இந்த பூஞ்சை வகை காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
சப்ரோபைட்டுகள் என்ற பூஞ்சை காளான் இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும். அவை அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் தாதுக்களை உறிஞ்சி வளருகின்றன. இந்த பிரிவில் வெள்ளை பட்டன், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல உணவை சுவைக்கும் மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.
இரண்டாவதாக, ஒட்டுண்ணிகள் என்ற பூஞ்சை காளான் உயிருள்ள மரங்கள் மற்றும் தாவரங்களில் வளர்ந்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செழிப்பாக வளரும். இவற்றை காளான் கொலையாளிகள் என்கின்றனர். இதற்கு காரணம், ஒரு மரம் விழுந்து விட்டால் அதன் மேல் தோன்றும் இந்த காளான்கள் அந்த மரத்தின் மிச்சம் மீதி சத்துக்களை உறிஞ்சி இல்லாமல் செய்து விடும்.
மூன்றாவதாக, மைக்கோரைசா வகை காளான்கள். இவை உயிருள்ள மரங்களின் வேர்களில் வளர்ந்து ஒரு கூட்டு வாழ்வை ஏற்படுத்தி, மரத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.
நிலத்தில் மற்றும் தாவரங்களில் சத்துக்களை உறிஞ்சி வாழும் காளான்களில் இயற்கையாகவே பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. ஆனால், அனைத்து காளான்களும் உண்ணத்தகுந்தவை அல்ல.
- வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
- புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக இது அழைக்கப்படுகிறது. மூளைக்கும், பெண்ணுறுப்பிற்கும் இடையிலான தொடர்பு தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
மாதவிடாய்க்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பாலியல் ஆசையும், இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டமும், வழுவழுப்பான திரவம் சுரப்பதும் குறைகிறது. பிரசவத்திற்குப் பிறகும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் உடலின் ஹார்மோன் அளவுகள் மாறுவதால் தாம்பத்ய விருப்பம் பாதிக்கும்.
புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், இதய நோய், மனச்சோர்வு மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் ஆகிய நோய் பாதிப்புகள் மற்றும் சில மருந்துகள் பாலியல் ஆசையைக் குறைத்து, உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்கும். யோனி தசைகள் நீட்சி குறைவாக இருப்பது (டிஸ்பெரூனியா) வலிமிகுந்த தாம்பத்தியத்திற்கு வழிவகுக்கும். நீண்டகால மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு, கவலைகள் இவை பாலியல் விருப்பமின்மையை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்சனைகள் தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கலாம்.
வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். இது தாம்பத்ய உறவில் கவனம் செலுத்தவும் அதை அனுபவிக்கவும் உதவும். சைக்கிளிங், நீச்சல், நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகள், ஹெகல் பயிற்சிகள் இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
தாம்பத்தியத்தின்போது யோனி வறட்சி அல்லது வலி ஏற்பட்டால், இதற்கான மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய், சோற்றுக் கற்றாழை ஜெல் இவைகளை பயன்படுத்தலாம்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், அவகோடா, அடர் சாக்லெட், மாம்பழம், பலாப்பழம், மாதுளம்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், செவ்வாழைப்பழம், எள்ளுருண்டை, வெந்தயக்களி, முட்டை, கோழிக்கறி, கடல் உணவுகள், பால்பொருட்கள், முருங்கைக்காய், புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ சிகிச்சைகள்
* சதாவரி லேகியம் காலை, இரவு இரு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
* குமரி லேகியம் காலை, இரவு ஐந்து கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
* மலச்சிக்கல் இருந்தால் கடுக்காய் பொடியை இரவு நேரத்தில் 1 கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
- மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.
தற்போது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை ருசிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அது இனிப்பு கலந்த பழம் என்று நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடங்கி செரிமானத்தை மேம்படுத்துவது வரை ஏராளமான நன்மைகளை கொண்டவை. இந்த சமயத்தில் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
1. சத்துக்கள் அதிகம்
மாம்பழம் வெறும் இனிப்பு பழம் மட்டுமல்ல, சத்தானவை. ஒரு மாம்பழத்தில் (சுமார் 200 கிராம்) தோராயமாக 150 கலோரிகள், சுமார் 3 கிராம் நார்ச்சத்து மற்றும் தினசரி வைட்டமின் சி தேவையில் 75 சதவீதமும், வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதமும் கொண்டிருக்கிறது. அத்துடன் பி6, தாமிரம், வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் வழங்குகிறது. மாம்பழத்தில் கொழுப்பு மற்றும் சோடியமும் குறைவாக உள்ளது. மேலும் இயற்கை சர்க்கரைகள் நார்ச்சத்துடன் கலந்திருக்கின்றன. அதனால் செயற்கை இனிப்பு வகைகளை விட இது சிறந்த தேர்வாக அமைகிறது.
2. சருமத்தை பிரகாசமாக்கும்
மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கொலாஜனை உருவாக்கவும், மந்தமான சருமத்திற்கு பொலிவூட்டவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் மாம்பழத்தை சாப்பிடுவது சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பதோடு இயற்கையாகவே சரும அழகை பிரகாசிக்க செய்யும்.
3. செரிமானத்திற்கு உதவும்
மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடைபெற உதவும். அதிலிருக்கும் அமிலேஸ் போன்ற இயற்கை நொதிகள் உணவை உடைப்பதை எளிதாக்கும். வயிறு உப்புசமாகவோ, மந்தமாகவோ இருப்பதாக உணர்ந்தால் மாம்பழங்கள் சாப்பிடலாம்.
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.

5. கண் ஆரோக்கியத்தை காக்கும்
கண்கள் வறண்டு போனாலோ, சோர்வடைந்தாலோ மாம்பழம் சாப்பிடுவது பலனளிக்கும். ஏனெனில் மாம்பழத்தில் வைட்டமின் ஏ, லுட்டீன், ஜியாசாந்தைன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கண் வறட்சி, சோர்வு மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
6. பசியை சமநிலைப்படுத்தும்
நன்கு பழுத்த மாம்பழத்தில் நார்ச்சத்துடன் கலந்திருக்கும் இயற்கையான இனிப்பு, நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். பசியை சமநிலைப்படுத்தி அதிகம் சாப்பிடாமல் தடுக்கும். உடல் ஆற்றலை பலப்படுத்தும்.
7. முடியின் வலிமையை அதிகரிக்கும்
மாம்பழத்தில் இருக்கும் போலேட், வைட்டமின்கள் ஏ, சி போன்றவை உச்சந்தலை மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களாகும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். பருவ காலம் முழுவதும் முடிகள் வலுவாக இருக்க உதவும்.
8. உற்சாகமாக வைத்திருக்கும்
மாம்பழங்களில் உள்ளடங்கி இருக்கும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான இயற்கையான சக்தியை கொடுக்கும். அதனால் உற்சாகத்துடன் அன்றைய நாளை இயங்க வைக்கும்.
- முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
- மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.
* அரிசி ஊற வைப்பது போல பருப்பையும் ஊற வைத்து சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.
* தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காயுடன் கேரட்டையும் துருவி சேர்த்து செய்தால் பர்பி கலர்புல்லாக இருக்கும்.
* ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், ஏலக்காய் எளிதில் தூளாகி விடும்.
* பஜ்ஜி மாவுடன் ஓமம் சேர்த்து செய்தால் பஜ்ஜி நல்ல மணத்துடன் இருக்கும்.
* கேசரி செய்யும் போது தண்ணீரின் அளவைக் குறைத்து, பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
* மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.
* மீதமுள்ள காய்கறி பொரியல்களை தோசை மாவுடன் கலந்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அடை மாதிரி ஊற்றலாம்.
* பிரெட்டை வெட்டும் பொழுது கத்தியை வெந்நீரில் நனைத்து வெட்டவும்.
* பூண்டு வாங்கியவுடன் உதிர்த்து வைத்தால் வீணாகாமல் இருக்கும்.
- ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்று கூறப்படுகிறது.
- உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது.
காரணம்
உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நாகரிக வாழ்வியல் முறைகள், தவறான உணவுப்பழக்கம், குறைந்த பட்ச உடற்பயிற்சி கூட இல்லாதிருத்தல், மன அழுத்தம், மனக்கவலைகள். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, பொருளாதார நெருக்கடிகள், கொஞ்ச நாட்கள் இளமையை நன்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று கருத்தரித்தலை தள்ளிப்போடுதல், மருத்துவர் ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆண், பெண் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள் உள்பட குழந்தையின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை
அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு), டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.
பெண்களுக்கான உடலியல் பிரச்சனை
சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
பெண்களுக்கு
* மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும். இதை உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக பலன் தந்துள்ளது.
* மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.
* விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.
* புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.
ஆண்களுக்கு
* முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.
* விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை போன்ற மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
* உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.






