என் மலர்
பெண்கள் உலகம்
- கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.
- கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிவி பழம் பச்சை நிறத்தில் சதைப்பற்றுள்ள பழம். அதன் தனித்துவமான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மகத்தான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது.
ஒரு கிவி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.
மருத்துவர்கள் தினமும் ஒரு கிவி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது.
தினமும் ஒரு கிவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கிவி பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்று கோளாறு மற்றும் வலி போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இரண்டு சிறிய கிவி பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட இரண்டு மடங்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. தோலுடன் கிவியை சாப்பிட்டால் அதிக நார்ச்சத்து பெறலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. கரையக்கூடிய நார்ச்சத்து ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்கி செரிமானத்தை மெதுவாக்குகிறது.
கிவி பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி நோயெதிர்ப்புக்கு ஒரு அற்புதமான உணவாகும்.
கிவி பழங்களில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது. இது கண்புரை உருவாகும் அபாயத்தைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.
கிவி பழத்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகரந்த ஒவ்வாமை மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பது உண்டு.
- லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள்.
நம் முகத்தை அழகாக்க மேக்கப் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நம் உதட்டை அழகாக்க லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயங்களும் அவசியம். லிப்ஸ்டிக்கை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து 'அப்ளே' செய்தாலே முகமானது அழகாக மாறி விடும். ஆனால் நம்மில் நிறைய பேர் தங்கள் உதடுக்கு ஏற்ற உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதில்லை. அதுமட்டுமின்றி, உதட்டு சாயம் பூசுவதிலும் பல்வேறு தவறுகளையும் செய்கிறார்கள். அதில் சிலவற்றை தெரிந்து கொள்வதுடன், அதை திருத்தி கொள்ள முயல்வோம்.
லிப்ஸ்டிக்
சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் விலையுயர்ந்த உதட்டு சாயங்களை விட தரமான உதட்டு சாயம்தான் உங்களுக்கு அவசியம். சில வகை உதட்டு சாயங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உங்கள் உதட்டை கருப்பாக மாற்றவும், விரிசலை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே உதட்டின் நிறத்தை மாற்றாத அதே நேரத்தில் மென்மையான உதட்டை பராமரிக்கக்கூடிய உதட்டு சாயங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஈரப்பதம்
உங்கள் உதடுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முதல் விஷயம் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருமையை போக்க முடியும். எனவே முதலில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை லிப் பாமைக் கூட பயன்படுத்தலாம். இதனால் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பிளவுகள் இல்லாமல் இருக்கும்.
லிப்ஸ்டிக்கின் தரம்
ரசாயனம் சார்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இயற்கையான உதட்டு சாயங்களை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் ரசாயனம் நிறைந்த உதட்டு சாயங்கள் அழற்சியை உண்டாக்கலாம். அவை உதடுகளை சீக்கிரமே கருப்பாக்கி விடும்.
தேன் லிப் பேக்
உதட்டு சாயங்களை பூசுவதனால் சிலருக்கு உதடுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை தேன் மூலமாகவே குணமாக்கலாம். தேனை உதட்டில் வாரத்திற்கு இரண்டு முறை தடவுவதினால், உதடுகளில் உள்ள விரிசலை குணப்படுத்த முடியும். தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளில் உள்ள வீக்கம் போன்றவற்றை போக்குகிறது.
- மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன.
- மண் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது.
கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா?
அப்படி குடிக்கிறபோது எந்தவித செயற்கை செயல்பாடும் இன்றி இயற்கையாக மண் பானையில் உள்ள நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறதா? வாருங்கள் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.
மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் இயற்கையான வடிவமைப்பு ஆகும். மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன. அதனால் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயல்முறையினால் பானையின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிறது. இது 'ஆவியாக்கக் குளிர்ச்சி' என அழைக்கப்படுகிறது.
மண்பானை ஒரு இயற்கை குளிரூட்டி. இது மின் சக்தி இல்லாமலே குளிர்ந்த தண்ணீரை வழங்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியமானது.
பிளாஸ்டிக் அல்லது உலோக பானைகளுடன் ஒப்பிடுகையில், மண் பானையில் தண்ணீர் எப்போதும் புதியதாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மண் பானையில் தண்ணீர் குடிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
- நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.
- கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது.
நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தியன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது.
நன்னாரி வேர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது வெளிநாட்டினருக்கு தெரிந்தும் அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இதனை பலரும் பயன்படுத்துவது இல்லை. அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மூலிகையில் இது மிக முக்கியமான ஒன்று.
கொடி வகையை சேர்ந்த நன்னாரியின் வேரானது சித்தா ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமியோபதி மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுகிறது. நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். குடிப்பதற்கு இதமாகவும், சிறுநீர் போக்கை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்த நச்சுக்களை அகற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. இது உடலின் உள் வெப்பத்தை தணிக்கிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடிய சில சத்தூட்டங்கள் நன்னாரி வேரில் காணப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதீத வெப்பம் தணிந்து உடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது.
- எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா?
- சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு இட்லி பிடிக்கும் ஆனால் எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா? கவலையை விடுங்க... ஆரோக்கியமான இட்லி அதுவும் சுரைக்காய் இட்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 1
* இட்லி ரவை - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
* புளித்த மோர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை.

செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு கப் துருவிய சுரைக்காயுடன் 1 கப் ரவை சேர்க்க பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .
* பின் சுரைக்காயுடன் தாளிப்பு மற்றும் புளித்த மோரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள 'சுரைக்காய் இட்லி மாவை' கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன இட்லியாக ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் இட்லி தயார்.
- சர்க்கரை நோய்க்கான அறிகுறியில் பெரும்பாலும் உடல் சோர்வு இல்லையென்று நினைத்து விட்டுவிடுகிறோம்.
- உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் ரத்தசோகை பரிசோதனை செய்வது அவசியம்.
காலையில் எழும் போதே உடல் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு உண்டாகும் உடல் சோர்வானது இயல்பு. ஆனால் இதற்கு மாறாக காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வாக இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை உற்றுநோக்குவது என்பது இன்றியமையாதது. ஏனெனில் முதலில் காலை நேரத்தில் உண்டாகும் உடல்சோர்வு நாளடைவில் நாள் முழுக்க உடலை பலவீனப்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க உடல் சோர்வு ஏற்பட என்ன காரணம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
உறக்கமின்மை
ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குறட்டை விட்டு தூங்கினாலே நல்ல தூக்கம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இது ஆழ்ந்த தூக்கம் கிடையாது. நாம் தூங்கும் இடத்தில் போதுமான அளவு காற்று இல்லையென்றாலும், தூங்கும் நேரத்தில் மாற்றம், போதிய நேரம் தூங்க முடியவில்லை என்றாலும் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும். எனவே, தூங்கி எழுந்தவுடன் உடல் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களின் இரவு நேர தூக்கம் பற்றி யோசிப்பது அவசியம்.

தைராய்டு
உடலின் பல்வேறு செயல்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சீரான தைராய்டு சுரப்புதான். பலரும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறியை தீவிரமாக உணர்வதில்லை. அறிகுறி தீவிரமாகும் போது உடல் சோர்வும் களைப்பும், உணர்ந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு ஒரு ஹைப்பர் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்கான சிகிச்சை எடுத்துகொள்ளும் போதே உடல் சோர்வு இருக்காது.
நீரிழிவு
சர்க்கரை நோய்க்கான அறிகுறியில் பெரும்பாலும் உடல்சோர்வு இல்லையென்று நினைத்து விட்டுவிடுகிறோம். உண்மையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது பசியும், தாகமும், சிறுநீர் போக்கும் அதிகரிப்பது போல் உடல் சோர்வும் அதிகமாகிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்ற பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம்.
ரத்த சோகை
ரத்த சோகைக்கான முதல் அறிகுறி உடல் சோர்வு தான். உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் ரத்தசோகை பரிசோதனை செய்வது அவசியம். ஏனென்றால் ரத்த சோகை இருக்கும் போது உடலில் ரத்தத்தின் அளவு குறையக்கூடும். அப்போது உடல் செய்யக்கூடிய வேலைகளில் அதிகப்படியான தொய்வு உண்டாக கூடும். இது இரும்புச்சத்து குறைபாட்டால் பெருமளவு வரக்கூடும்.

ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உடல் சோர்வும் அதீத களைப்பும் இருக்கும். தொடர்ந்து சோர்வோடு காலை எழும் போதே தலைவலியும் இருந்தால் அவை பெரும்பாலும் இந்நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு எழுந்தவுடன் தலை பாரமாக இருக்க கூடும். அவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் மருத்துவரிடம் சென்று நின்ற நிலையில், உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையின் ரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் உண்டாகும் இந்த சோர்வு ரத்த அழுத்தத்தாலும் இருக்கலாம்.
தொடர்ந்து உங்களுக்கு உடல் சோர்வு இருந்தால் 10 நாட்கள் வரை தொடர்ந்து காலையில் எழும் போதெல்லாம் சோர்வை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.
உடல் சோர்வாக இருக்கும் போது வாழ்க்கை முறையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை:
உடல் சோர்வுக்கு மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் காரணமாக கண்டறியப்பட்டால் தவிர்க்காமல் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். அதே நேரம் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை முறையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான். நீங்கள் உண்ணும் உணவில் சத்தான புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, கால்சியம் என அனைத்து சத்துகளும் சரிவிகிதமாக இருக்கும்படி எடுத்துகொள்ள வேண்டும். காலை உணவாக பழத்துண்டுகளாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உடல் சோர்வை போக்க முடியும்.
- பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
- எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
கண் பார்வை சிறிது சரியாக இல்லை என்றால் கூட பயம் வந்துவிடும் என்பது உண்மைதான். பார்வை பிரச்சனை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது நம்பிக்கை இழந்து நடக்கவே பயப்படுவதுண்டு. 50 வயதைத்தாண்டிய பலபேருக்கு இந்தப்பிரச்சனை இருக்கிறது. 40 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வரும் வெள்ளெழுத்து பிரச்சனை என்பது சரிசெய்யக்கூடியது. 50 வயதுக்கு மேல் வரும் பார்வைக் குறைபாடு பெரும்பாலும் கண்புரை நோய் (கேட்டராக்ட்) பிரச்சனையாக இருக்கக்கூடும்.
இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் அன்றாடக் காரியங்களில் கூட தடுமாற்றம் காணப்படும். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயமும், வேறு ஏதாவது பொருட்கள் மீது மோதி விடுவோமோ என்ற பயமும் வந்துவிடும்.
இதனால் உங்கள் அன்றாட செயல்கள் குறைந்துவிடும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயக்கம் ஏற்படும். பயத்தினால் சரிவர நடக்காததினால் தினமும் நடக்க வேண்டிய நடை குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். பெண்களைப் பொறுத்தவரை அன்றாட வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் தடைபடும். இதனால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்ற அச்சமும் மற்றவர்களை நம்பித்தான் வாழவேண்டுமோ என்ற கவலையும் அதிகமாக வந்துவிடும்.
இதற்கு தீர்வு: எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் சொல்லும் பரிசோதனைகளை உடனே செய்ய வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்ளச் சொன்னால் உடனே செய்ய வேண்டும். கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கும் உடனடியாக தயாராக வேண்டும்.
கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை உடனடியாக செய்தால் தான் மறுபடியும் பார்வை பழைய நிலைக்கு வரும். அப்பொழுதுதான் எந்த வேலையையும் மிகச் சாதாரணமாக செய்து முடிக்கலாம் என்ற துணிவு வரும். பார்வை குறைபாடு தானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்.
- சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
- முதலில் முகத்தை காய்ச்சாத பசும்பால் வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாத மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கவலையை விடுங்க.. இனி பெண்கள் பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக மாற்றலாம். அதுவும் கோதுமை மாவு இருந்தாலே போதும். கோதுமை மாவு உபயோகித்து சப்பாத்தி, பூரிதான் போட முடியும் என்பதில்லை. கோதுமை மாவு உபயோகித்து முகம், கழுத்து மற்றும் கைகளை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்க வைக்க முடியும்.
கோதுமை மாவு ஃபேஸ் பேக் எப்படி போடலாம் என்று தெரிந்து கொள்ளலாம் .

கோதுமை மாவு ஃபேஸ் பேக் போடும் முறை:
ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவு, அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
முதலில் முகத்தை காய்ச்சாத பசும்பால் வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு சிறிதளவு பசும்பாலை முகத்தில் தடவி ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுக்கவும்.
பின்பு கண் பகுதியை தவிர்த்து விட்டு கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து முகத்தில் கீழிருந்து மேலாக கோதுமை மாவு பேஸ்ட்டை அப்ளை செய்யவும்.
சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். இது இறந்த சரும செல்களை வெளியேற்றவும் ரத்த ஓட்டத்தை தூண்டவும் உதவும். ஃபேஸ் பேக் காயும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் முகத்தோடு ஒட்டிப் போகும் அளவு காய்ந்துவிடக் கூடாது. பத்து நிமிடம் ஃபேஸ் பேக் காயும் வரை பொறுத்திருந்து, லேசாக ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி மென்மையாக பேஸ்பேக்கை ஒத்தி எடுக்கவும். பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
- உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை
- அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அதிகமான தண்ணீர் தாகம் மருத்துவ ரீதியாக 'பாலிடிப்சியா' அல்லது 'தாகமிகுமை' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். பாலிடிப்சியாவில் போதுமான அளவு தண்ணீர் குடித்த பிறகும் தாகம் குறையாது. இது ஏற்பட முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் ஆகும். இருப்பினும் உங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதால், கீழ்க்கண்ட காரணிகளில் ஏதேனும் ஒன்றால் உங்களுக்கு அதிகமான தண்ணீர் தாகம் ஏற்படலாம்.
1) நீரிழிவு இன்சிபிடஸ்: இதில் அதிகமான அளவு சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை இழக்க செய்து, தாகத்தை அதிகரிக்கிறது.
2) முதன்மை தாகமிகுமை (பிரைமரி பாலிடிப்சியா): உடலியல் தூண்டல் இல்லாத நிலையிலும் உண்டாகும் அதிக தாகம் மற்றும் நீர் பருகும் நிலை.
3) சைக்கோஜெனிக் பாலிடிப்சியா அல்லது உளச்சார்பு தாகமிகுமை: கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களிடம் காணப்படும் அதிகமான நீர் உட்கொள்ளல்.
4) நீர்ச்சத்து இழப்பு: வாந்தி, வயிற்று போக்கு, அதிகம் வியர்த்தல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு குறைபாடு.
5) அதிக உப்பு: அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உப்பு ரத்தத்தில் உறிஞ்சப்படுவதால், திசுக்களில் உள்ள திரவம் இழுக்கப்பட்டு தாகம் அதிகரிக்கிறது.
6) செரிமானம் தொடர்பான பிரச் சினை: இதில் உணவை ஜீரணிக்க அதிமான அளவு தண்ணீர் தேவைப்படுவதால் தாகம் அதிகரிக்கிறது.
7) ரத்த சோகை.
8) உமிழ் நீர் குறைவாக சுரப்பதால் உண்டாகும் வறண்ட வாய் பிரச்சனை
9) கடுமையான உடற்பயிற்சி
10) உடலில் வேறு எங்கேனும் ஏற்படும் குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு
11) அதிகமான காபின் அல்லது மது அருந்துதல்.
12) மருந்துகளின் பக்கவிளைவுகள் (டையூரிடிக்ஸ், லித்தியம்)
13) ரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியம் (ஹைபோகலீமியா)
14) மிகை தைராய்ட் நிலை (ஹைப்பர்தைராய்டிசம்)
மேற்கூறிய ஏதேனும் காரணங்களால் உங்களுக்கு அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.
- வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்கின்றனர். வெந்நீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,செரிமானம் மேம்படவும் , உடல் எடையைக் குறைக்கவும், மன அழுத்தம் குறையவும்,சரும பிரச்சனைகள் மற்றும் வலி நிவாரணியாகவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
வெந்நீர் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன்மூலம் தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
செரிமானம் மேம்படும்:
வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான மண்டலத்தைத் தூண்டி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் மலத்தை மென்மையாக்கி கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் குடிப்பது செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து உணவு எளிதாக ஜீரணிக்கவும், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவி செய்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது:
வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரி வேகமாக எரிக்க உதவுகிறது. மேலும், வெந்நீர் குடிப்பதால் பசி குறைந்து அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
மன அழுத்தம் குறையும்:
உடலில் உள்ள கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்தி, மனதை அமைதியாக வைக்கிறது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகள் குறையும்:
சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வெந்நீர் குடித்து வந்தால் அவை குறைய நேரிடும். வெந்நீர் தோலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி தோலை சுத்தமாக வைக்கிறது. மேலும், முகப்பரு, சரும அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

வலி நிவாரணி:
வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும் வெந்நீர் குடிப்பதால் குறையும் என சொல்லப்படுகிறது.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும்.
- பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள்.
உடற்பயிற்சி என்பது எல்லோருக்குமே முக்கியம். அப்போதுதான் ஆரோக்கியம், உடல் கட்டுக்கோப்பை காக்க முடியும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். அதிலும், குடும்பத்தின் முதுகெலும்பாய் உள்ள பெண்கள், அன்றாடம் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால், வீட்டு வேலை, வெளி வேலை என்று எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் அவர்கள், உடற்பயிற்சி செய்ய தங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள்.
அப்படி நேரமில்லாத பெண்கள், குறைந்தபட்சம் 2 பயிற்சிகளாவது செய்வது நல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 30 நிமிடங்களேனும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
வாராந்திர பழக்கமாக 2 பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்வது, அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு உதவும். அந்த பயிற்சிகள் பற்றி...
நடைபயிற்சி
நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும். உட்கார்ந்த வாழ்க்கைமுறையை கொண்டவராக இருந்தால் அதை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். பரபரப்பான நாட்களிலும், நடப்பதற்கு நேரத்தை ஒதுக்குவது மனதை அமைதியாகவும் இலகுவாகவும் உணரச் செய்யும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது. இந்த 3 மணி நேரத்தை 45 நிமிடங்களாக பிரிக்கலாம். வாரத்தின் 7 நாட்களில் 4 நாட்கள் வேகமான நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் தசைகளை யும் வலிமையாக்கும்.

எடை தூக்குதல்
பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள். இது ஆண்களுக்கானது என பல பெண்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் எடை தூக்கும் பயிற்சி, பெண்களின் உடலை வலிமையாக்குவதில் முக்கியப்
பங்காற்றுகிறது. வாரத்தில் 2 முறையாவது எடைகளை தூக்கி பழகவேண்டும். முதலில் குறைந்த எடைகளைத் தூக்கி பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எடையை அதிகரிக்கலாம். வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் எடை பயிற்சிகளை செய்யலாம்.
பெண்கள் உடற்பயிற்சிக்கு என்று ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்க தேவையில்லை. அவர்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையில் காலையில் 10 நிமிடங்கள், மதியம் 10 நிமிடங்கள், இரவில் 10 நிமிடங்கள் என பிரித்து, மொத்தத்தில் 30 நிமிடங்கள் நடப்பது போதும்.
வாரத்தில் 2 நாட்களாவது எடைகளுடன் கூடிய பயிற்சியை செய்ய 30 நிமிடங்கள் அல்லது குறைந்த பட்சம் 15 நிமிடங்களை ஒதுக்கலாம். 3-3-3 விதியை பின்பற்றலாம். மூன்று வெவ்வேறு பயிற்சிகளை மூன்று செட்டுகள் செய்வதே 3-3-3 விதியாகும்.
இது பெண்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் எளிதாகிவிடும்.
முடிந்தால் வீட்டிலோ அல்லது பெண்களுக்கு என்று உள்ள உடற்பயிற்சிக் கூடங்களிலோ எடைப்பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ளலாம்.
- பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
- கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.
* கீரைக்கூட்டுக்கு தேங்காய் அரைத்து செய்வதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி கூடும்.
* பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அடை சுட்டால் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
* தேங்காய் பர்பி செய்யும் போது 2 டீஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் சுவை கூடும்.

* தேங்காயை உடைத்து முதலில் கண் உள்ள பாகத்தை உபயோகிக்க வேண்டும், அந்தப் பகுதி தான் விரைவில் கெட்டுப்போகும்.
* பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
* கோதுமை அல்வா செய்யும் போது நீர்த்து விட்டால் சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
* பாகற்காய் குழம்பு செய்யும் போது நான்கு துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது.
* கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.
* எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு டீஸ்பூன் அவலை பொடி செய்து சூப்பில் சேர்த்துக் கொதிக்க விட்டால் சூப் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
* வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டால் குழம்பு ஜோராக இருக்கும்.
* தயிர் வடை செய்ய உளுந்துடன் ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊற வைத்து அரைத்தால் வடைகள் மெத்தென்று இருப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.






