என் மலர்
பொது மருத்துவம்

நன்னாரி வேரின் மருத்துவ குணங்கள்
- நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.
- கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது.
நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தியன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது.
நன்னாரி வேர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது வெளிநாட்டினருக்கு தெரிந்தும் அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இதனை பலரும் பயன்படுத்துவது இல்லை. அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மூலிகையில் இது மிக முக்கியமான ஒன்று.
கொடி வகையை சேர்ந்த நன்னாரியின் வேரானது சித்தா ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமியோபதி மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுகிறது. நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். குடிப்பதற்கு இதமாகவும், சிறுநீர் போக்கை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்த நச்சுக்களை அகற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. இது உடலின் உள் வெப்பத்தை தணிக்கிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடிய சில சத்தூட்டங்கள் நன்னாரி வேரில் காணப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதீத வெப்பம் தணிந்து உடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது.






