என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாயு தொல்லை"

    • பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன.
    • வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும்.

    ஓட்டல்களில் சாப்பாடோ, பிரியாணியோ சாப்பிட்டு முடித்ததும் பில் தொகை செலுத்தும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் பெருஞ்சீரகம் வைக்கப்பட்டிருக்கும். அது இனிப்பு கலந்து வெள்ளை நிறத்திலோ அல்லது எதுவும் சேர்க்கப்படாமல் பச்சை நிறத்திலோ காட்சியளிக்கும். அதனை சிறிது எடுத்து மெல்லும் வழக்கத்தை பலரும் பின்பற்றுவார்கள். அவை என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

    வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கும்

    பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது. ரசாயன அடிப்படையிலான வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருட்களை போல் அல்லாமல், பெருஞ்சீரகம் சுவாசத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும்.

    ஹார்மோன் சம நிலைக்கு உதவும்

    பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அவை ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள். குறிப்பாக மாதவிடாய் கோளாறுகள், வயிறு வீக்கம் மற்றும் மனக்குழப்பத்தை கையாளும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.

    உடல் எடையை நிர்வகிக்கும்

    பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசி உணர்வை போக்கி முழுதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை குறைத்து காலப்போக்கில் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.

    செரிமானத்தை மேம்படுத்தும்

    அனெத்தோல், பென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் பெருஞ்சீரகத்தில் உள்ளன. அவை செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும். குறிப்பாக அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலோ பெருஞ்சீரகம் மெல்வது நல்ல பலனை தரும்.

    வீக்கம் மற்றும் வாயு தொல்லையை குறைக்கும்

    வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். அதிலிருக்கும் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் வாயு தொந்தரவை குறைக்கவும் உதவும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவதன் மூலம் அந்த சங்கடமான நிலைமையை தவிர்க்க முடியும்.

    எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

    உணவு உட்கொண்ட பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். பெருஞ்சீரகம் ஆரோக்கியத்திற்கு உகந்ததுதான் என்றாலும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகளை கொண்டிருந்தாலோ, மருந்து, மாத்திரைகள் உட்கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பெருஞ்சீரகத்தை உணவுக்கு பிறகு மெல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    எது நல்லது?

    பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகத்தை உட்கொள்வதே சிறந்தது. சர்க்கரை பாகு கலந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகமும் செரிமானத்திற்கும், வாய் புத்துணர்ச்சிக்கும் உதவும் என்றாலும் அதிலிருக்கும் இனிப்பு கலோரிகளை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். ஊட்டச்சத்துக்களின் செறிவை நீர்த்து போகச்செய்யும். உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இனிப்பு பெருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.

    • வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.
    • மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும்.

    வாய்வு பிடிப்பு, மாரடைப்பு இரண்டுமே நெஞ்சு வலியை உண்டாக்கும். அநேக மக்களுக்கு எல்லா நெஞ்சு வலியும் இதயம் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்குமோ என்ற பயமும், கவலையும் தான் அதிகமாக இருக்கின்றது. ஆனால் எல்லா நெஞ்சு வலிகளும் இதயம் சம்பந்தப்பட்டது இல்லை என்று நினைத்து ஒதுக்கிவிடவும் முடியாது.

    வாய்வு உண்டாக்கும் நெஞ்சுவலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

    அடிக்கடி ஏப்பம் வரும், வயிற்றைப் புரட்டும், வயிறு உப்புசமாக ஊதிப்போய் இருக்கும். ஆசனவாய் வழியாகவும் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். நெஞ்சுவலி விட்டுவிட்டு குத்துகிற மாதிரி பிடிப்பு மாதிரி இருக்கும். வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.

    இனி மாரடைப்பை உண்டாக்கும் நெஞ்சு வலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். சிலருக்கு மார்பு பகுதி திடீரென கனமாகி மிகமிகக் கடுமையான நெஞ்சுவலி வரலாம். திடீரென வரும் மாரடைப்பு மிகுந்த சக்தியுடன் வருவதால் சில நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்க வைக்க நேரிடும்.

    மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும். வலி மிக மிக கடுமையானதாக இருக்கும். நெஞ்சைக் கசக்கி பிழிகிற மாதிரி இருக்கும். நெஞ்சுப்பகுதியிலிருந்து இடது கை விரல்கள், இடது பக்க தாடை, தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதி முதலிய இடங்களுக்கு வலி பரவும். மூச்சு விடுவதில் சிரமம், அதிகமாக வியர்வை, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே இருக்கும். சிலருக்கு இவைகளில் ஒருசில அறிகுறிகள் மட்டும் ஏற்படலாம்.

    கடின உடற்பயிற்சி செய்யும்போது, கடின உடல் உழைப்பு செய்யும்போது அதிக மன அழுத்தம், மன உளைச்சலில் இருக்கும்போது மாரடைப்பு வலி வரக்கூடும்.

    நீங்கள் இருக்கும் இடத்தை உட்கார்ந்திருக்கும் நிலையை சற்று மாற்றினால் வாய்வு உடலிலிருந்து வெளியாகி உங்களுக்கு பிரச்சினை தீர வாய்ப்புண்டு. வெந்நீர், சீரக நீர் குடித்தால் கூட வாய்வு வெளியேறி வலி குறைய வாய்ப்புண்டு. இதற்குப்பிறகும் வலி போகவில்லை என்றால் அது இதயம் சம்பந்தப்பட்ட வலிதான் என்று முடிவு செய்யலாம்.

    மாரடைப்பினால் நெஞ்சுவலியா, வாய்வுக் கோளாறினால் நெஞ்சுவலியா என்பதைக் கண்டுபிடிக்க இரண்டுக்கும் உண்டான அறிகுறிகளை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனோ தானோ என்று மெத்தனமாக இருக்கக்கூடாது.

    மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்களும், நுரையீரல் நோய்களும், ஆஸ்துமா, காசநோய், கொரோனா நோய், கணைய நோய், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சுருங்கிப் போதல், விலாஎலும்பு விரிசல் போன்றவைகளினால் கூட நெஞ்சுவலி ஏற்படலாம். உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் இதய சிகிச்சை நிபுணரை உடனே சந்தித்து அவசர முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.

    அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

    செரிமானத்தின் போது குடலில் உண்டாகும் வாயு, எப்போதாவது  வெளியேறுவது இயல்புதான். ஆனால் அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

    குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே வாயு ஏற்படுகிறது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.

    குடற்பகுதியில்  வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். சில நேரங்களில், சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் (Small Intestinal Bacterial Overgrowth) வாய்வுப் பிரச்னை உண்டாகும்.



    பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயு உண்டாக்கும் வஸ்துக்களே. இவற்றைச் சமைக்கும் போது அதிகளவில் மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு மற்றும் சீரகத்துக்கு இருக்கும் வாய்வகற்றி செய்கை காரணமாக, குடலில் வாயு உண்டாகாது. இருப்பினும் வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது. வாயு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.

    பாலில் உள்ள 'லாக்டோஸ்' (Lactose) சிலருக்கு வாயுப் பிரச்சனையை உருவாக்கலாம். பழங்களில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ (Fructose) மற்றும் செயற்கை சுவையூட்டிகளில் உள்ள ‘சார்பிடால்’ (Sorbitol) போன்றவற்றைச் செரிக்க முடியாத போதும் வாயுப் பெருக்கம் உண்டாகும். சார்பிடால் என்பது, இனிப்புச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

    எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.

    பெருங்குடல் சார்ந்த நோய்கள், குளுடன் புரதத்தைச் செரிக்க முடியாமல் போவது, செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாயு வெளியேறும்.  

    குடலில் சேரும் வாயுக்களில் கரியமில வாயு, ஹைட்ரஜன், நைட்ரஜன், மீதேன், ஆக்சிஜன் போன்றவை அடக்கம். சில நேரங்களில் கந்தகம் சேர்ந்த கூட்டுப்பொருள்கள் உருவாவதால், நாற்றம் உண்டாகிறது.

    அடிக்கடி வாயு வெளியேறுவதைத் தடுக்கும் உணவுகள்/மருந்துகள்

    புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும். தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து, வாயுப் பிரச்னையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.

    அந்த டயட், இந்த டயட் என மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்!
    பெருங்காயத்தை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.
    உணவுக்கு வாசனை, சுவை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுவது பெருங்காயம். இதை உணவில் சிறிது சேர்க்கும்போது, வாயுவை வெளியேற்றும். வீக்கத்தை கரைத்து வலியை குறைக்க கூடியதாக விளங்குகிறது. நுண்கிருமிகளை போக்கும் தன்மை உடையது. தலைவலி, உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க கூடிய அற்புத மருந்தாக பெருங்காயம் விளங்குகிறது. நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். இருமலை போக்க கூடியது.

    பெருங்காயத்தை பயன்படுத்தி மாந்தத்தை சரிசெய்து பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்: பெருங்காயம், மிளகு, திப்பிலி, சுக்குப்பொடி, சீரகம், உப்பு.

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் 10 மிளகு, 5 திப்பிலி, சிறிது சீரகம் எடுத்து தட்டி போடவும். இதனுடன் சிறிது பெருங்காய தூள், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி உணவுக்கு பின் குடித்துவர வாயு தொல்லை நீங்கும். வயிறு உப்புசம், மாந்தம், செரியாமை, வயிற்று வலி பிரச்சனை குணமாகும்.



    பெருங்காயத்தை கொண்டு ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளரில் வெந்நீர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயம், உப்பு, அரை எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும். இவற்றை கலந்து உணவுக்கு பின் குடித்துவர ஒற்றை தலைவலி சரியாகும். கடுமையான தலைவலி, வாந்தி, நடுக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு காரணமான ஒற்றை தலைவலி இல்லாமல் போகும்.

    குழந்தைபெற்ற தாய்மார்களின் வயிற்றில் அழுக்குள் தங்காமல் இருப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். 2 பல் பூண்டு நசுக்கி எடுக்கவும். கால் ஸ்பூன் பெருங்காயம், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர கருப்பையில் அழுக்குகள் சேராமல் வெளியேறும். அழுக்கள் வெளியேறாமல் இருந்தால் காய்ச்சல் ஏற்படும். பாதுகாப்பான மருந்தாக இது விளங்குகிறது.

    பல் வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். லவங்கம் ஒரு ஸ்பூன் எடுத்து பொடித்து நீரில் இட்டு காய்ச்சி அதிலிருந்து வரும் புகையை பற்களில் படும்படி காட்டுவதால் பல் வலி விலகிப்போகும். இந்த நீரில் உப்பிட்டு வாய்கொப்பளித்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்தகசிவு சரியாகும்.
    ×