என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    குழந்தையை மற்றவர்களோடு ஒப்பிடுவது அவர்களது சுயமரியாதையை பாதிக்கும். ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்காணித்து அஅதை மேம்படுத்த உதவுகங்கள்.
    உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நீங்கள் சரியான பெற்றோராக இருக்க விரும்பினாலும், நீங்கள் அறியாமல் சில தவறுகள் செய்யக்கூடும். இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய தவறுகளை இங்கே பார்க்கலாம்.

    * சுயமாக செயல்பட விடாமல் எப்போதும் உங்கள் சிறகுகளுக்குள்ளேயே வைத்து அடைகாப்பது. இதனால் அவர்கள் தனித்து போராட வேண்டிய சூழ்நிலைகளில் அவர்களால் செயல்பட முடியாமல் போகும்.

    * பெற்றோர்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலே, தங்கள் குழந்தையின் எடை, நிறம் அல்லது நடத்தை ஆகியவற்றை விமர்சிக்கவோ அல்லது கேலி செய்யவோ செய்கிறார்கள். நகைச்சுவையாக செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த செயல் உங்கள் பிள்ளைக்கு கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும்.

    * பெற்றோர்கள் குழந்தையை அவரது நண்பர்கள் அல்லது உடன்பிறப்புகளுடன் ஒப்பிடுகிறார்கள். குழந்தையை மற்றவர்களோடு ஒப்பிடுவது அவர்களது சுயமரியாதையை பாதிக்கும். அத்துடன் அவர்களை திறமையற்றவர்களாக உணரச்செய்யும். ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்காணித்து அதை மேம்படுத்த உதவுங்கள்.

    * பிள்ளைகள் ஏதேனும் கற்றல் சிரமத்தை எதிர்கொண்டால் சோம்பேறி அல்லது முட்டாள் என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக அவர்களின் பிரச்சனையை சரியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    * பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பாகவும் முரட்டுதனமாகவும் நடந்துகொள்வது அவர்களை ஒழுங்குபடுத்த உதவும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. இத்தகைய செயல் குழந்தைகளிடம் பதற்றத்தை அதிகப்படுத்தி அவர்களின் ஓட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அத்தகைய குழந்தைகள் மற்றவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள்.
    வீட்டு செலவுக்கு கணவர் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து சிறுகச்சிறுக சேமித்து சீட்டு கட்டுவது, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை.
    சேமிப்பு விஷயத்தில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். அம்மாக்கள் அஞ்சறைப்பெட்டியிலும் அரிசி, பருப்புகளின் உள்ளேயும் பணத்தை ஒளித்து வைத்து சேமிப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டு செலவுக்கு கணவர் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து சிறுகச்சிறுக சேமித்து சீட்டு கட்டுவது, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை.

    குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பாதுகாப்பை சோர்வில்லாமல் செய்பவளே நல்ல குடும்பத்ததலைவியாவாள்.

    இது ஒருபுறமிருக்க கண்ணில் கண்டதையெல்லாம் வாங்கிக்குவிக்கும் பெண்களும் உண்டு. ஆடம்பரத்துக்காக கடன் வாங்கி அதை திரும்பசெலுத்த முடியாமல்  அவதிப்படுவோரும் உண்டு. மாதம் முழுவதும் எப்படியெல்லாம் செலவழிக்க முடியுமோ அப்படியெல்லாம் செலவழித்து விட்டு மாதக்கடைசியில் கடன் வாங்கி மீண்டும் மாதத் தொடக்கத்தில் சம்பளத்தில் பெரும் பகுதியை கடன் செலுத்துவோரும் உள்ளனர்.

    அமெரிக்க அரசு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் செலவு செய்வதாக சொல்லப்படுகிறது. ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான பொருள்களை பயன்படுத்தினாலும் ஆடைகள் வாசனைத்திரவியங்கள், சோப் போன்றவற்றை வெவ்வேறு வண்ணங்களிலுமே பயன்படுத்துவார்கள். இரண்டின் உள்ளடக்கமும், மூலப்பொருட்களும் ஒன்றாக இருந்தாலும் விலையில் மாற்றம் இருக்கும். பெண்களுக்கான பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். பெண்களை குறிவைத்து விற்கப்படும் பொருட்களுக்கும், விளம்பரத்துக்கும் அதிக செலவாகிறது. பேக்கிங்கும் கவர்ச்சிகரமாக இருப்பதால் அவற்றுக்கான செலவு அதிகமாகிறது.

    வரவுக்கேற்ற செலவு செய்தால் வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர கஷ்டமாக மாறாது. வரவுக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வது கஷ்டத்தில் மட்டுமல்ல பெரும் நஷ்டத்திலும் தள்ளிவிடும்.

    வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் சிக்கனமே, நாட்டின் நல்ல பொருளாதாரத்துக்கு அடித்தளமாக அமைகிறது. பொருட்களை வாங்குவதற்கு முன் அவற்றுக்கான தொகையை சேமிப்பு பணத்திலிருந்து செலவழிப்பது பற்றி பெண்கள் யோசிக்க வேண்டும். காலங்காலமாக கையில் இருப்பதை கொண்டு குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்செல்லும் பெண்களை பார்த்துக்கொண்டே தான் வளர்ந்து வந்துள்ளோம்.  அனாவசியச்செலவுகள் எவையென உணர்ந்து தவிர்த்திடுவோம். நம்முள் இருக்கும் ஆக்க சக்தியை உணர்வோம். செயல்படுத்தி நல்வாழ்வு வாழ்வோம்.
    நோய் எதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்து போராடும். இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயேதிர்ப்பு மண்டலம். இதுதான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலை தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி உடலை காக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்து போராடும். இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    எனவே நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10 முதல் 15 நிமிடம் வரை நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.

    முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை, அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும். பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறிவிடும்.
    குழந்தைகள், பெற்றோரிடையே மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது எப்படி? பெற்றோர் தங்கள் குழந்தைகளை எவ்வாறு அரவணைப்பது? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாகவே குழந்தைகள் வளர வளர தங்களைச் சுற்றியுள்ள சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள். நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். அதனால், பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், எரிச்சல், கோபத்தைக் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். அதைப் புரிந்துகொள்ளும்போது குழந்தைகள் பெற்றோருக்கு உதவ முன்வருவார்கள். மாறாக அவர்களுக்குப் புரியவைக்காவிட்டால் அவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் வேறுவிதமாக இருக்கும்.

    * பயம் – பெற்றோருக்கு ஏற்படும் மனபாதிப்புகள் தங்களை எந்த வகையிலாவது பாதித்துவிடுமோ என்ற பயம் குழந்தைகளிடம் ஏற்படலாம்.

    * கோபம் - எதற்கெடுத்தாலும் பெற்றோர் கோபமடைந்தால், பதிலுக்குக் குழந்தைகளும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

    * குற்றவுணர்வு – தன்னால்தான் தொந்தரவு ஏற்படுகிறது என்று எண்ணி தன்னைத்தானே குற்றவாளியாகக் கருதும் குழந்தைகளும் உண்டு.
    பயம்

    * சோகம் – குழந்தைகளுக்குப் பெற்றோர்தான் உலகம் என்பதால், அவர்கள்மீது அதீத அன்பு வைத்திருப்பார்கள். எனவே, அவர்கள் சோகமாயிருக்கும்போது குழந்தைகளும் சோகமாகிவிடுவார்கள்.

    * படபடப்பு – பெற்றோரது மாற்றுச் செயல்பாடுகளால் ஒருவித பயத்துக்குள்ளாகி நீண்டநேரம் அழுவது, படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களால் படபடப்பை வெளிப்படுத்துவார்கள்.

    * ஆதரவு – சில புத்திசாலிக் குழந்தைகள் பெற்றோருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். பெரியவர்களைப்போல `நீங்க ரெஸ்ட் எடுங்க; நான் வேலை செய்றேன்... இனிமே குறும்பு செய்யாம இருப்பேன்' என்று கூறுவதும் தங்களது தவறுகளைத் தாங்களே திருத்திக் கொண்டு அதைச் சொல்லி பெற்றோரை உற்சாகப்படுத்துவதும் உண்டு.

    குழந்தைகள் எதையும் உற்றுநோக்கும் திறன் பெற்றவர்கள். குறிப்பாக தங்களின் பெற்றோரின் நடவடிக்கைகளை உளவுத்துறைபோல கவனிப்பார்கள். ஏதேனும் ஒரு கண்ணாடிக் கோப்பை தவறி கீழே விழுந்தாலும் அதற்காகக் கத்தி கூச்சலிடும் பெற்றோரே அதிகம். என்ன கத்தினாலும் உடைந்த கோப்பை திரும்பி ஒட்டப்போவதில்லை. ஆகவே, குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், கவனமாகச் செயல்படக் கற்றுத் தருவது குழந்தையை நிதானமடையச் செய்யும்.

    * குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

    * அண்டை வீட்டாரிடமும் ஆரோக்கியமாகப் பழகும் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.

    * உணர்வுகளை வெளிப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

    * பெற்றோர் தங்களது நட்புகளை ஆரோக்கியமாகப் பேணுவதுடன் தொழிலில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு அதனால் எந்தவிதமான மோசமான விளைவும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்!"
    டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் கோவிஷீல்டு, கோவேக்சின் எந்த தடுப்பூசி நல்லது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண்  கொரோனாதடுப்பூசி குறித்து கூறியதாவது,

    தற்போது கொரோனா 2-வது அலை முடிந்து 3-வது அலை வரக்கூடிய கட்டத்தில் இன்னும் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்று வரும் என்பதால் பின் எதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதனால் வரக்கூடிய எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் தொற்று வந்தால் கூட பெரிய அளவில் ஆபத்து ஏற்படாமல் குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும்.

    கொரோனா தடுப்பூசி

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்த கசிவு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் மருந்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா?, பெண்கள் மாதவிடாய், மொனோபாஸ் காலகட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? என்பது போன்ற பல சந்தேகங்கள் உள்ளது. இதுபற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் தயவு செய்து தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்த மருந்தையும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    கோவிஷீல்டு, கோவேக்சின் இவை இரண்டில் எந்த தடுப்பூசியை எடுத்துகொள்ளலாம், எந்த தடுப்பூசி சிறந்தது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் நல்லது,  பாதுகாப்பானது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    காலம் தாழ்த்தாமல் எந்த தடுப்பூசி கிடைக்கிறதோ அதை போட்டு கொள்வது நல்லது என்றும் இதுவரை தடுப்பூசி போடவில்லை என்றால் உடனே போட்டுக்கொள்வது நல்லது என்றும் அவர் கூறினார்..
    வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.
    பெண்கள் பெரும்பாலும் ஆடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் காண்பிக்கும் அக்கறையை உள்ளாடை வாங்கும் விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இறுக்கமான, தடிமனான, தவறான அளவு கொண்ட பிராவை தேர்ந்தெடுத்தால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அடிப்பகுதியில் ஒயர் கொண்ட இறுக்கமான பிராவை அணிந்து தூங்கும்போது பாதிப்புகள் அதிகமாகும். தவறான பிரா தேர்வால் ஏற்படும் இன்னல்கள் பற்றி பார்ப்போம்.

    இறுக்கமான பிரா அணியும்போது ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதிலும் எலாஸ்டிக் அல்லது ஒயர் பதிக்கப்பட்ட பிராவை அணியும்போது பாதிப்பு அதிகமாகும். அவை இயல்பாகவே இறுக்கத்தை ஏற்படுத்திவிடும். தூங்கும்போது இத்தகைய பிராவை அணிவது அசவுகரியத்தை உண்டாக்கும். இறுக்கமான பிரா அணிவது தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். சவுகரியமாக தூங்க முடியாது.

    இறுக்கமான பிரா அணிவது உடல் பகுதியில் எரிச்சல், தடிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இரவில் தூக்கமும் தடைப்பட்டு போகும். தூங்கும்போது அடிப்பகுதியில் ஒயர்கள், பட்டைகள் இல்லாத பிராவை உபயோகிப்பது நல்லது. வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

    எலாஸ்டிக் தன்மை கொண்ட பிராக்கள் இறுக்கத்தை உண்டாக்கும்போது அவை உடலில் பதியும் பகுதிகளில் நிறமிகள் பாதிப்புக்குள்ளாகும். தூங்கும்போது இந்த பிராக்களை அணியும்போது நிறமிகள் அதிகமாகும். அதன் மூலம் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும். மென்மையான அல்லது உடலமைப்புக்கு பொருந்தும் தளர்வான பிராவை அணிந்து கொள்வது நல்லது.

    தொடர்ந்து இறுக்கமான பிரா அணிந்தால் நிணநீர் அடைப்பு பிரச்சினையும் உண்டாகும். இது பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படும். மார்பகங்களில் நீர் வீக்கம் பிரச்சினையும் ஏற்படும். வலியற்ற கட்டிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    கோடை காலங்களில் இறுக்கமான பிரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரிக்கும். செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும். காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் நல்லது.
    உணவை குறைக்காமல் உடல் எடையை குறைக்க உங்களுக்கு பூசணிக்காய் உதவும். பூசணிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. பூசணிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக உள்ளன.
    தேவையான பொருட்கள் :

    பூசணிக்காய் - 1 துண்டு
    தயிர் - அரை கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு -தேவைக்கு

    செய்முறை:

    பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நீர் ஊற்றி பூசணிக்காயை வேகவைத்துக்கொள்ளவும்.

    நன்கு வெந்ததும் மிளகாய், உப்பு சேர்த்து கிளறவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காய் கலவையில் கொட்டி கிளறி இறக்கவும்.

    அது ஆறியதும் தயிர், கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பூசணிக்காய் பச்சடி ரெடி.
    சாதாரணமாகவே குடும்பத்தில் கணவன் இறந்து விட்டால் அதை மனைவியால் ஏற்றுக்கொள்வது மிகக்கடினம். இந்த கொரோனா காலகட்டத்தில் அது பல மடங்கு கஷ்டத்தை கொடுத்து விடும்.
    கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களது அன்புக்குரியவர்களை கொரோனாவுக்கு பறிக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் துணையை பறிகொடுத்த பல பெண்கள் மனதளவில் வலுவிழந்து நிற்கிறார்கள்.

    ஒரு கூட்டு பறவை போல் வாழ்ந்த பிறகு குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் அதை அவ்வளவு எளிதாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இழப்பு என்பது ,ஈடுசெய்ய முடியாத ஒன்று. தற்போது கொரோனாவால் சிறிய வயதினர் கூட மரணமடைவதை பார்க்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் நன்றாக பேசிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுகிறார். யாரும் எதிர்பாராத தருணத்தில் தொற்று தீவிரமடைந்து மரணமடைந்து விடும்போது அவரதுமனைவியால் அதை அத்தனை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

    எப்படி அவர் இறந்தார்?என்ற கேள்வி முதலில் எழும். இரண்டாவது நிஜமாகவே இறந்துவிட்டாரா? இல்லை இது கனவா? என்ற எண்ணம் எழும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றால் ஏன் அவரை பறித்து கொண்டாய்? என கடவுளிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். உலகமே இருண்டது போல் உணர்வார்கள். அடுத்ததாக அவரது இழப்பை புரிந்து கொண்டு அதை ஏற்று கொள்ள முயன்று அதிகப்படியான மனஅழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு தேவை ஆறுதல் ஒன்றுமட்டும் தான்.

    சாதாரணமாகவே குடும்பத்தில் கணவன் இறந்து விட்டால் அதை மனைவியால் ஏற்றுக்கொள்வது மிகக்கடினம்.  இந்த கொரோனா காலகட்டத்தில் அது பல மடங்கு கஷ்டத்தை கொடுத்து விடும். ஏனெனில் நம் சமூகத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வது வழக்கம். கொரோனாவால் கணவனை இழந்த மனைவிக்கும் அந்தஆறுதல் கிடைக்காது. கடைசியாக ஒருமுறை கணவரை கட்டி அணைத்து முத்தமிட்டு கூட வழியனுப்ப முடியாது. சொந்தங்கள் கைகளை பற்றி கொண்டு ஆறுதல் அளிக்க முடியாது.

    இந்த கொடூரமான சூழலில் துணையை இழந்து மனஅழுத்தத்தில் தவிக்கும் அத்தகைய பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினர் நிச்சயமாக பக்க பலமாக இருக்க வேண்டியது மிக அவசியம். நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியாது என்பதால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். ஆறுதலாக நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்.

    கணவனை இழந்தவுடன் கணவன், தகப்பன் மகன் என அவருக்குரிய அத்தனை பொறுப்புகளும் மனைவி மீது வந்துவிடும். திடீரென எப்படி? எங்கேபோய் சம்பாதிப்பது? எப்படி குழந்தைகளை படிக்க வைப்பது குடும்பக்கடனை என்னால் எப்படி அடைக்க முடியும்? என்று எதிர்மறையாக யோசிக்காமல் என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்து சென்றிருக்கிறார். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். என்னால்  அது முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்கள். இது நிச்சயம் சிக்கலான நேரம். ஆரோக்கியமான நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல திட்டம் செயல்படுகிறது. மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தவறானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இப்போதைய சூழலில் ஆறுதலும், நம்பிக்கையும் புன்சிரிப்பும் அவர்களுக்கு தேவை. குடும்பத்தினரும் , நண்பர்களும் அரசும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அவர்கள் மீண்டு வருவார்கள்.
    சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
    கோடை காலத்தில் குளியல் மிக அவசியம். ஆனால் அது சரியான முறையில் இல்லாவிட்டால் சருமம் மற்றும் தலைமுடியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. பாதிப்பு ஏற்படாதவாறு குளிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.

    அடிக்கடி குளிக்கலாமா?

    சிலர் சற்று அதிகமாக வியர்வை வந்ததும் குளிக்க சென்று விடுவார்கள். இதுபோன்று அடிக்கடி குளிப்பதால் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும். இதனால சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு காணப்படும். அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளிப்பது சிறந்தது.

    சருமத்துக்கு ஏற்ற சோப்..

    சோப் தேர்வில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப சோப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் சோப் சருமத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அதை உடனே தவிர்ப்பது நல்லது. முகத்துக்கு பயன்படுத்தும் சோப்பை தனியாக வைத்திருப்பது சிறந்தது. முடிந்தவரை முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்கு பதில் ராசாயம் அதிகம் சேர்க்காத பேஸ்வாஷ்களை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் அதிக நுரை உள்ள சோப்களை பயன்படுத்தாமல் சருமத்துக்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தலாம்.

    துண்டு விஷயத்தில் கவனம்..

    சோப் பயன்படுத்துவதுபோல் துண்டு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் துண்டை தலைக்கும் பயன்படுத்துவர். எப்போதும் உடலுக்கும் தலைக்கும் தனித்தனியாக துண்டு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை துண்டை பயன்படுத்தியதும் அதை தரமான சோப்பை கொண்டு துவைத்து வெயிலில் நன்கு உலர்த்தி காய வைக்க வேண்டும். துண்டில் முழுமையாக ஈரம் காய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

    சுடுநீரில் கவனம்

    பருவ காலத்துக்கு ஏற்ப நீரை பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும் போது அதிக சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சூடான நீரை பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலுவிழக்க தொடங்கும். மிதமாக சுடுநீரை பயன்படுத்துவதே சிறந்தது.

    நீண்ட நேர குளியல் வேண்டாம்.

    சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். ஆனால் 10 நிமிடங்கள் குளியலுக்கு செலவிடுவதே போதுமானது. நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

    மாய்ஸ்சுரைசர் அவசியம்..

    குளித்து முடித்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற்படாமலிருக்க மாய்ஸ்சுரைசர் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது சரும வகைகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதில் சரியானதை தேர்ந்தெடுத்து குளித்து முடித்த பின்னர் கட்டாயம் தடவிக்கொள்ள வேண்டும். பொதுவாக சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் சருமத்துக்கு சரியான மாய்ஸ்சுரைசர் என்பதால் அதை தடவினாலே போதுமானது.

    குளியல் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வுதான் அதில் சில நெறிமுறைகளை கடைப்பிடித்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    விலை குறைவு மற்றும் தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக நமக்கு ஒத்துவராத ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஜீன்ஸ் தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...
    துணிகளானது வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு நம் உடலுக்கு கச்சிதமாகவும், வசதியாகவும் இல்லை என்ற உணர்வு சிறிதளவு வந்துவிட்டாலும் மறுபடியும் அந்த ஆடையை அணிய மாட்டோம்.

    அதிலும் ஜீன்ஸ் பேன்ட்டுகள் போன்றவை கனக்கச்சிதமாக இருந்தால் மட்டுமே நம் தோற்றத்தை அழகாக காட்டும். சரி இவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

    இதோ சில யோசனைகள்:

    * ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சிலருக்கு உடலின் மேல்பாகமானது உடலின் கீழ் பாகத்தை விட அதாவது தொடை, கால்களை விட பூசியது போன்ற உடல்வாகு உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் குறுகலான கால்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் உயரம் குறைவாகவும், மெலிந்த தேகம் உடையவராக இருந்தால் குறைந்த உயரமான (லோ-ரைஸ்) ஜீன்ஸ்களை அணியலாம். பூசிய தேகம் உடையவராக இருந்தால் உயரமான (ஹை-ரைஸ்) ஜீன்ஸ்களை அணியலாம்.

    * மெலிந்த உடல்வாகு உடையவர்களாக இருந்தால் குறுகிய இடுப்பு மற்றும் உடலுடன் ஒட்டியது போல் இருக்கும் ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை நம் உடல் தோற்றத்தை எடுப்பாக காட்டும். அதற்கு மேலே அணியும் டி-ஷர்ட், டாப் போன்றவை சிறிது தளர்வாக இருப்பது போல் அணியவேண்டும்.

    * சிலருக்கு இடுப்பு மற்றும் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். உடலின் மேல் பாகம் சாதாரணமாகவும் கீழ்பாகம் பூசியது போன்றும் உடல்வாகு உடையவர்கள் என்றால் நீட்சியடையக்கூடிய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் பென்சில் வடிவ ஜீன்ஸ்களைத் தவிர்க்கலாம். பூட்-கட் அல்லது பரந்த மடிப்புகளுடன் வருபவற்றையும் தேர்வு செய்யலாம்.

    * தடகள வீரர்களைப் போன்ற உடலமைப்பு உடையவர்களாக இருந்தால் ஃபிளேயர் அல்லது பூட்கட் ஜீன்ஸ்களை அணியலாம். இவை நம் உடலை அழகாக கண்ணியமாக வெளிக்காட்டும்.

    * ஆண்பிள்ளை போன்ற சூப்பர் மாடல் வடிவம் உடையவர்களாக இருந்தால் பாய்ஃப்ரண்ட் அல்லது பெல்-பாட்டம் ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். பாய்ஃப்ரண்ட் ஜீன்ஸ்கள் பெண்கள் அணியும் ஜீன்ஸ்களைவிடத் தொடைப்பகுதியில் சற்றுத் தளர்வாக இருக்கும். ஜீன்ஸ் முழுவதும் தளர்வாக உடையவர்களுக்கு பாய்ஃப்ரண்ட் ஜீன்ஸ்கள் மிக அருமையாகப் பொருந்தும். சிறிய பின்புறம் உடையவர்கள் ஃப்ளேர்டு அல்லது பெல்-பாட்டம் ஜீன்ஸ்களை அணியலாம்.

    * நீண்ட கால்களை உடையவர்களாக இருந்தால் குறைந்த உயரமுடைய ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு நேர்மாறாக அதிக உயரமுடைய ஜீன்ஸ்களை அணிந்து உங்கள் கால்களின் அழகை நேர்த்தியாகவும் வெளிக்காட்டலாம்.

    * சிறிய கால்களை நீளமானதாகக் காட்ட உயர்ந்த இடுப்பு (ஹை வெயிஸ்ட்) கொண்ட உடலுடன் ஒட்டிய ஜீன்ஸ்களை அணியும் பொழுது உங்களை நீண்ட கால்களை உடையவர் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. தொள தொளப்பான பேகி ஜீன்ஸ்களை இன்னும் நீளமானதாகக் காட்ட விரும்பினால் குதிகால் உயரமான (ஹைஹீல்ஸ்) காலனிகளை இந்த ஜீன்ஸ்களுடன் அணியலாம்.

    * மெல்லிய தேகம் கொண்ட ஆண்கள் நேரான கால்கள் மற்றும் இறங்கிய இடுப்பு (லோவெயிஸ்ட்) ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். உயர்ந்த இடுப்பு கொண்ட ஜீன்ஸ்களை அணியும் பொழுது அவை உங்கள் பின்புற அழகை மிகவும் சதையற்றதாக ஃப்ளாட்டாகக் காட்டும். அதேபோல் பேகி ஜீன்ஸ்களை மெல்லிய தேகம் உடையவர்கள் தவிர்ப்பது நல்லது.

    * கட்டுக்கோப்பான உடல்வாகு உடையவர்களாக இருந்தால் ஸ்லிம்ஃபிட், ஸ்ட்ரெயிட் லெக் அல்லது பூட்கட் ஜீன்ஸ்களைத் தேர்வு செய்து அணியலாம். பேகி ஜீன்ஸ்களைத் அணிந்தால் அவை உங்களது கட்டுக்கோப்பான சதையை முற்றிலும் மறைத்துவிடும். அதேபோல் தளர்வான ஃபிட் ஜீன்ஸ்கள் உங்கள் கால்கள் மற்றும் தொடையைப் பெரியதாகக் காட்டும்.

    * அகலமான மற்றும் பருத்த இடுப்பு மற்றும் பின்பாகம் உடையவர்களாக இருந்தால் தளர்வான ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். உடலுடன் ஒட்டிய மற்றும் உயரம் குறைந்த ஜீன்ஸ்களைத் தவிர்க்கலாம்.

    * ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றை அணிந்து பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது. ஒவ்வொரு நிறுவன ஜீன்ஸ்களின் அளவானது மற்றொன்றிலிருந்து வேறுபடும். எனவே கடைகளுக்குச் சென்று அவற்றை அணிந்து பார்த்து, நமக்கு அணிந்திருக்கும் பொழுது வசதியாக இருக்கின்றதா என்பதை உறுதிசெய்த பின்னர் வாங்குவது நல்லது.

    * ஒப்பனை அறைகளில் ஜீன்ஸ்களை அணிந்து நடந்து, மேலும் கீழும் குதித்து, கீழே உட்கார்ந்து, குனிந்து மற்றும் ஒரு காலை உயர்த்தி அவை அணிந்தால் வசதியாக இருக்கும் என்பதை உறுதிசெய்த பிறகு வாங்கலாம்.

    * அதேபோல் விலை குறைவு மற்றும் தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக நமக்கு ஒத்துவராத ஜீன்ஸ்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
    கோபத்தின் உச்சம், பிறர் மனதை காயப்படுத்தும் வார்த்தை பிரயோகமாகவே இருக்கும். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்பு மூன்று முறை சிந்தியுங்கள். அந்த வழக்கம் மனதை நிதானப்படுத்த துணை நிற்கும்.
    கோபம், எதிர்மறை உணர்வுகளை தூண்டிவிட்டு நிம்மதியை குலைத்துவிடும். கோபத்தால் உறவுகளை இழந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஏராளம். கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா? -முடியும்! எப்படி?

    வாக்குவாதம் செய்யும்போதும், கோபம் கொள்ளும்போதும் சுவாசத்தில் தடுமாற்றம் உண்டாகும். சீராக சுவாசிக்க முடியாது. அந்த சமயத்தில் மூச்சை ஆழமாக உள் இழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். அது உடலையும், மனதையும் அமைதிப்படுத்த உதவும். அதன் மூலம் கோபம் குறையும். தினமும் யோகாசனம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்வதும் கோபத்தை தணிக்க உதவும்.

    உணர்வுகளை மென்மையாக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. கோபத்தை உருவாக்கும் சூழலில் மனதை அமைதிப்படுத்துவதற்கு பிடித்தமான இசை மீது கவனத்தை செலுத்தலாம். இசைக் கருவிகளை இசைக்கவும் செய்யலாம். அது மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு துணைபுரியும்.

    மன அமைதிக்கு வித்திடும் மந்திர சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. கடினமான சூழ்நிலையில் அவற்றை உச்சரிக்கும்பொது நேர்மறையான ஆற்றலும், தைரியமும் உண்டாகும். கோபமாக இருக்கும் சமயத்தில், ‘எல்லாம் சரியாகிவிடும்’, ‘எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது’ என்பது போன்ற சொற்களை உச்சரித்து மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

    நாம் கோபம் கொள்ளும்போது சமயத்தில் மனம் இறுக்கமாக இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் நகைச்சுவை உணர்வு நம்மை இயல்பாக்கும். அது கடினமான காரியம் என்றாலும் நகைச்சுவை சினிமா காட்சிகள், வீடியோக்களை பார்ப்பது மனதை இலகுவாக்கும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியான தருணங்கள், விஷயங்களை நினைவு கூர்வதற்கு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அதுவும் மனதை இயல்பாக்கும்.

    மனதை அமைதிப்படுத்தவும், கோபத்தை குறைப்பதற்கும் நடைப்பயிற்சி உதவும். கை, கால்களுக்கு இயக்கம் கொடுப்பது மனதுக்கும், உடலுக்கும் இதமளிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் செய்யலாம். சிறிது தூரம் சைக்கிளிலோ, மோட்டார் சைக்கிளிலோ சென்று வரலாம். அவை மனதை கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

    கோபத்தின் உச்சம், பிறர் மனதை காயப்படுத்தும் வார்த்தை பிரயோகமாகவே இருக்கும். அத்தகைய வார்த்தைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடும். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவதற்கு முன்பு மூன்று முறை சிந்தியுங்கள். அந்த வழக்கம் மனதை நிதானப்படுத்த துணை நிற்கும்.

    கோபமாக இருக்கும் சமயத்தில் கண்ணாடியில் உங்கள் முகத்தின் பிரதிபலிப்பு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் முகமே உங்களுக்கு வெறுப்பை தரும். அதனால் கோபத்தை குறையுங்கள்.
    பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. இது குற்றவியல் நடைமுறை சட்டமாக இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது.
    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. அத்தகைய வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது, 18 வயதுக்கு உள்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான சட்டமாகும். இது குற்றவியல் நடைமுறை சட்டமாக இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகளும் நிறுவப்பட்டன. அவைகளில் பெண்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பெண் வக்கீல்களே அரசு தரப்பில் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டு சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டவர் ஜி.டி.ஆர்.சுமதி. இவர் திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்து வருகிறார்.

    சுமதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒக்கிலிப்பட்டி ராஜாபாளையம் கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை தங்கவேல். தாயார் சுசீலா. சகோதரிகள் சாந்தி, சாரதி. இவர், பிளஸ்-2 வரை திருச்செங்கோடு அரசு பள்ளிக் கூடத்தில் படித்தார். தூத்துக்குடி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து, பல்கலைக்கழக அளவில் பதக்கம் பெற்றவர். பின்பு, சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். படித்து தேறி, வழக்கறிஞர் பணியை தொடங்கினார். இவரது கணவர் எஸ்.ரமேஷ். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுமதி மூத்த குற்றவியல் வழக்கறிஞர் பி.சி.பழனிசாமியிடம் பயிற்சி பெற்றவர்.

    பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள்- அதில் சமூகம் பெறவேண்டிய விழிப்புணர்வு பற்றி அரசு வழக்கறிஞர் சுமதியுடன் நமது கலந்துரையாடல்:

    மகளிர் நீதிமன்றங்களின் நோக்கம் என்ன?

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரித்து விரைவான தீர்வு காண மகளிர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கு எதிரான கொலை வழக்குகள், தற்கொலை வழக்குகளும் அதில் சேர்க்கப்பட்டன. பிற தண்டனை சட்டங்களை விட போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக்கடுமையானதாக இருக்கும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இருக்கும் பட்சத்தில், விசாரணை இல்லாமலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது. அதுபோல் குற்றவாளி ஜாமீன் பெற்று வெளியே சென்று, மீண்டும் புகார்தாரருக்கு தொல்லை கொடுத்தால் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்கவும் முடியும். இது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான சட்டம். அதை அமல்படுத்துவதே மகளிர் கோர்ட்டு களின் நோக்கம்.

    தற்போது எந்த வயதினர் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள்?

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக் கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தை களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.

    வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். அப்பாக்களால் பாதிக்கப்பட்ட மகள்களையும் நான் வழக்கில் சந்தித்திருக் கிறேன். நான் ஆண்களை குறைசொல்வதற்காக இதை எல்லாம் கூறவில்லை. நான் சந்தித்த வழக்குகளின் அடிப்படையில் சொல்கிறேன்.

    பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

    பாலியல் பாதிப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் சிறந்த பணியை செய்பவர்கள் யார்?

    அதிக அளவிலான பாலியல் குற்றங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளின் அக்கறையால் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பெற்றோரை விட குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது ஆசிரியர்களிடம்தான். எனவே தங்கள் மாணவிகள் மேல் அதிகம் அக்கறை கொண்ட ஆசிரியைகள் அவர்களின் சிறு மாற்றத்தைக்கூட கவனித்து ஆறுதலுடன் பேசுகிறார்கள். அப்படித்தான் பல குற்றங்கள் வெளி வந்து இருக்கின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பது சைல்டு லைன் என்கிற குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன். 1098 என்ற எண்ணில் இலவச தொலைபேசி சேவையுடன் இந்த அமைப்பு இயங்குகிறது. பள்ளிக்கூட ஆசிரியைகள் சைல்டுலைன் அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சைல்டுலைன் அமைப்பு பார்த்துக்கொள்ளும். மகளிர் போலீஸ் நிலையங்கள் இந்த விஷயத்தில் மிகப்பெரிய பொறுப்புடன் திகழ்கின்றன. போக்சோ சட்டம் என்றாலே வேறு எந்த பேரங்களுக்கோ, பரிந் துரைகளுக்கோ இடம் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விடும்.

    சமூகத்துக்கு பயந்து சிலர் புகார் தெரிவிக்க முன்வருதில்லை. ஆனால் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. பாலியல் குற்றங்களால் பாதிப்படைந்த சிறுமிகளின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவர்களிடம் நடைபெறும் விசாரணை கூட மிக எளிமையாக, பாதுகாப்புடன் நடக்கும். குழந்தைகள் குழந்தைகளாகவே பாவிக்கப்படுவார்கள். அரசு வக்கீலான நானோ, குற்றவாளிகளின் தரப்பு வக்கீலோ பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. குறுக்கு விசாரணை நடைமுறைகளே இல்லாமல் நீதிபதியே நேரடியாக வாஞ்சையுடன் விசாரணையை நடத்துவார். எனவே பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சிறுமிகளின் பாதுகாப்புக்கு கோர்ட்டு எல்லாவிதத்திலும் உத்தரவாதம் அளிக்கும். அத்துடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குழந்தைகளின் எதிர் காலத்துக்கு உரிய நிதி உதவி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவையும் கோர்ட்டு பரிந்துரையின் பேரில் அரசு வழங்கும் நிகழ்வுகளும் நடந்து உள்ளன.

    பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

    சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல்ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும். பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.

    அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும். இதுதான் என் ஆசை!'' என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி.இவர் சேவைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
    ×