search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலியல் வன்முறை
    X
    பாலியல் வன்முறை

    பாலியல் வன்முறை: சட்டத்தின் துணையுடன் குழந்தைகளை பாதுகாத்திடுங்கள்

    பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. இது குற்றவியல் நடைமுறை சட்டமாக இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது.
    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. அத்தகைய வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது, 18 வயதுக்கு உள்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான சட்டமாகும். இது குற்றவியல் நடைமுறை சட்டமாக இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகளும் நிறுவப்பட்டன. அவைகளில் பெண்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பெண் வக்கீல்களே அரசு தரப்பில் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டு சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டவர் ஜி.டி.ஆர்.சுமதி. இவர் திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்து வருகிறார்.

    சுமதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒக்கிலிப்பட்டி ராஜாபாளையம் கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை தங்கவேல். தாயார் சுசீலா. சகோதரிகள் சாந்தி, சாரதி. இவர், பிளஸ்-2 வரை திருச்செங்கோடு அரசு பள்ளிக் கூடத்தில் படித்தார். தூத்துக்குடி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து, பல்கலைக்கழக அளவில் பதக்கம் பெற்றவர். பின்பு, சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். படித்து தேறி, வழக்கறிஞர் பணியை தொடங்கினார். இவரது கணவர் எஸ்.ரமேஷ். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுமதி மூத்த குற்றவியல் வழக்கறிஞர் பி.சி.பழனிசாமியிடம் பயிற்சி பெற்றவர்.

    பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள்- அதில் சமூகம் பெறவேண்டிய விழிப்புணர்வு பற்றி அரசு வழக்கறிஞர் சுமதியுடன் நமது கலந்துரையாடல்:

    மகளிர் நீதிமன்றங்களின் நோக்கம் என்ன?

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரித்து விரைவான தீர்வு காண மகளிர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கு எதிரான கொலை வழக்குகள், தற்கொலை வழக்குகளும் அதில் சேர்க்கப்பட்டன. பிற தண்டனை சட்டங்களை விட போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக்கடுமையானதாக இருக்கும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இருக்கும் பட்சத்தில், விசாரணை இல்லாமலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது. அதுபோல் குற்றவாளி ஜாமீன் பெற்று வெளியே சென்று, மீண்டும் புகார்தாரருக்கு தொல்லை கொடுத்தால் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்கவும் முடியும். இது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான சட்டம். அதை அமல்படுத்துவதே மகளிர் கோர்ட்டு களின் நோக்கம்.

    தற்போது எந்த வயதினர் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள்?

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக் கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தை களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட
    குழந்தை
    களுக்கும், அவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.

    வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். அப்பாக்களால் பாதிக்கப்பட்ட மகள்களையும் நான் வழக்கில் சந்தித்திருக் கிறேன். நான் ஆண்களை குறைசொல்வதற்காக இதை எல்லாம் கூறவில்லை. நான் சந்தித்த வழக்குகளின் அடிப்படையில் சொல்கிறேன்.

    பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

    பாலியல் பாதிப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் சிறந்த பணியை செய்பவர்கள் யார்?

    அதிக அளவிலான பாலியல் குற்றங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளின் அக்கறையால் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பெற்றோரை விட குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது ஆசிரியர்களிடம்தான். எனவே தங்கள் மாணவிகள் மேல் அதிகம் அக்கறை கொண்ட ஆசிரியைகள் அவர்களின் சிறு மாற்றத்தைக்கூட கவனித்து ஆறுதலுடன் பேசுகிறார்கள். அப்படித்தான் பல குற்றங்கள் வெளி வந்து இருக்கின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பது சைல்டு லைன் என்கிற குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன். 1098 என்ற எண்ணில் இலவச தொலைபேசி சேவையுடன் இந்த அமைப்பு இயங்குகிறது. பள்ளிக்கூட ஆசிரியைகள் சைல்டுலைன் அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சைல்டுலைன் அமைப்பு பார்த்துக்கொள்ளும். மகளிர் போலீஸ் நிலையங்கள் இந்த விஷயத்தில் மிகப்பெரிய பொறுப்புடன் திகழ்கின்றன. போக்சோ சட்டம் என்றாலே வேறு எந்த பேரங்களுக்கோ, பரிந் துரைகளுக்கோ இடம் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விடும்.

    சமூகத்துக்கு பயந்து சிலர் புகார் தெரிவிக்க முன்வருதில்லை. ஆனால் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. பாலியல் குற்றங்களால் பாதிப்படைந்த சிறுமிகளின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவர்களிடம் நடைபெறும் விசாரணை கூட மிக எளிமையாக, பாதுகாப்புடன் நடக்கும். குழந்தைகள் குழந்தைகளாகவே பாவிக்கப்படுவார்கள். அரசு வக்கீலான நானோ, குற்றவாளிகளின் தரப்பு வக்கீலோ பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. குறுக்கு விசாரணை நடைமுறைகளே இல்லாமல் நீதிபதியே நேரடியாக வாஞ்சையுடன் விசாரணையை நடத்துவார். எனவே பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சிறுமிகளின் பாதுகாப்புக்கு கோர்ட்டு எல்லாவிதத்திலும் உத்தரவாதம் அளிக்கும். அத்துடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால்
    குழந்தை
    களின் எதிர் காலத்துக்கு உரிய நிதி உதவி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவையும் கோர்ட்டு பரிந்துரையின் பேரில் அரசு வழங்கும் நிகழ்வுகளும் நடந்து உள்ளன.

    பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

    சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் தங்கள் மீது
    பாலியல்
    ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும். பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.

    அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும்
    குழந்தை
    களுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும். இதுதான் என் ஆசை!'' என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி.இவர் சேவைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
    Next Story
    ×