என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் அணிந்து மகிழும் மோதிரங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவை பற்றி குறிப்பிடுவதே இந்த தொகுப்பு...
    அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் அணிந்து மகிழும் ஆபரணங்கள் அனைத்துக்கும் பொருத்தமான பெயர்கள் உள்ளன. அதன் பின்னால் அதற்கான வரலாறும் இருக்கும். அந்த வகையில் அனைவரும் அணியும் மோதிரங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவை பற்றி குறிப்பிடுவதே இந்த தொகுப்பு

    ஆர்மர் மோதிர்ம்

    போர் கவசம் போன்ற தோற்றம் அளிப்பதால் அதற்கு ஆர்மர் மோதிரம் என்று பெயர். இவ்வகை மோதிரங்களை நடுவிரலில் அணிவது வழக்கம். பிசினஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைனோர் இவ்வகை மோதிரங்களை அணிந்து சென்றால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

    தம்ப் ரிங்க ( கட்டை விரல் மோதிரம்)

    கட்டை விரலில் மட்டும் அணிவதற்கேற்ப தடிமனாக இவ்வகை மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு விருந்துகள், விழாக்கள் மற்றும் பார்ட்டி ஆகியவற்றுக்கு அணிந்து செல்ல இந்த மோதிரம் ஏற்றதாக சொல்லப்படுகிறது.

    காக்டெய்ல் மோதிரம்

    அனைவருக்கும் பரிச்சயமான இவ்வகை மோதிரத்தின் பெயர் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டோம். நடுவில் பெரிய ரத்தினக்கல் பதிக்கப்பட்டு அதை சுற்றிலும் சிறிய ரத்திரனக்கற்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றில் வைரம் மற்றும் பவளம் ஆகியவற்றை பதிக்கப்படுவதே வழக்கம். அணிபவர்களுக்கு கிராண்ட் லுக் அளிக்கும் மோதிரவகை இது.

    மோர்னிங் ரிங்

    வெளிநாடுகளில் அதிகமாக உபயோகிக்கப்படும் இவ்வகை மோதிரங்கள் இறந்தவர்கள் நினைவாக அணியப்படுபவை. அதில் இறந்தவரின் பெயர், அல்லது இறந்த தேதி பொறிக்கப்பட்டிருக்கும்.

    கிளாஸ் ரிங்

    இவ்வகை மோதிரங்கள் 1999-ம் ஆண்டு முதல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. தடிமனாகவும், மத்தியில் சிறிய கல் பொருத்தப்பட்டும் தயாரிக்கப்படுகின்றன. அனைவரும் அணிந்து கொள்ள ஏற்றவை.

    பஸ்ஸில் மோதிரம்

    குழப்பமான வடிவமைப்பு கொண்டது என்பதால் பஸ்ஸில் மோதிரம் என்று அழைக்கப்படுகிறது. இதை அணிந்திருப்பர்களின் குணாதசயிங்களை மற்றவர்கள் எளிதாக அறிந்து கொள்ள இயலாது என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு

    பியூரிட்டி மோதிரம்

    அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் மோதிர வகை இது. மெல்லிய அளவில் ஒரே சிறிய ரத்தினக்கல் பொருத்தப்பட்டிருக்கும். எளிமையின் அடையாளமாக இந்த மோதிரம் குறிப்பிடப்படுகிறது.
    தினமும் வேப்ப இலை சாறு குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. நீரிழிவு போன்ற நோய்கள் நெருங்காது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதை பருக வேண்டும்.
    ஆயுர்வேதத்தில் வேம்பு, ஒரு அதிசய மரமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் வேர், பழம், இலை, பட்டை என ஒவ்வொரு பகுதியும் மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. வேப்ப இலை சாற்றை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    வேப்ப இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். பொடுகு, முடி உதிர்தல் பிரச்சினையை போக்குவதற்கு வேப்ப இலை சாறை தலையில் தடவலாம். பருகவும் செய்யலாம்.

    வேப்ப இலை சாறு மலேரியாவுக்கு காரணமான வைரஸை வளரவிடாமல் செய்துவிடும். வேப்ப இலை சாறுடன் தேன் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்தும் விடுபடலாம். வேம்பு ரத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். கல்லீரலுக்கும் வலிமை சேர்க்கும்.

    வேப்ப இலை சாறு செரிமானம் சீராக நடைபெற துணைபுரியும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    தினமும் வேப்ப இலை சாறு குடித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. நீரிழிவு போன்ற நோய்கள் நெருங்காது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதை பருக வேண்டும்.

    வேப்பம் பூக்களை நன்றாக உலர வைத்து, தூளாக்கி காபியாக தயாரித்து பருகி வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். வேப்பங்குச்சி பற்களில் காணப்படும் கிருமிகளை அழித்துவிடலாம். வேப்பம் பட்டை பற்களின் ஈறுகளை வலிமையாக்கும்.

    பிரசவத்திற்குப் பிறகு வேப்ப இலை சாறை சில நாட்கள் பருகிவந்தால் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

    வேப்ப இலை சாறை அதிகம் பருகக்கூடாது. அது விந்து மற்றும் சினை முட்டையின் தரத்தை பாதிக்கக்கூடும்.

    முகப்பருக்களை நீக்குவதற்கு வேப்ப இலைசாறை பயன்படுத்தலாம். அதை கொண்டு மசாஜ் செய்துவந்தால் முகத்தில் ஈரப்பதத்தன்மை சீராக இருக்கும். பல்வேறு வகையான சரும பிரச்சினைகளுக்கும் வேம்பை பயன்படுத்தலாம்.
    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

    சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

    தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.

    கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.

    பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.
    புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை.
    பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் அழகும் அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. ஆனால், அவை மட்டுமே போதுமானதில்லை. ஒருசில பெண்கள் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டால் உடனே திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிடுவார்கள். திருமணத்திற்கு அப்படி அவசரம்காட்ட வேண்டியதில்லை.

    மணமகன் ஆரோக்கியமானவராக இருப்பது அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்யம் சிறக்கும். நிரந்தரமான நோயாளியை மணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் சேவை வேண்டுமானால் செய்யலாம். தாம்பத்யம் நடத்த முடியாது.

    பெண்கள் எந்த பொருளையும், அது அவர்களது கண்களையோ, மனதையோ கவர்ந்தால்தான் தேர்வு செய்வார்கள். உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமான நபரைத் தேர்வு செய்யும்போது, அவர் மீது உங்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அத்தகைய ஈர்ப்பு ஏற்படும் அளவுக்கு அவர் தோற்றப்பொலிவு கொண்டவராகவும் இருக்கட்டும்.

    அறுபதை, இருபது திருமணம் செய்துகொள்வது புரட்சிகரமானது என்று சிலர் கருதலாம். ஆனால், தாம்பத்யம் இனிப்பதற்கு உங்களது வாழ்க்கைத் துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்கவேண்டும். பெண், ஆணைவிட மூன்று முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது ஏற்புடையது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பை உண்டாக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை ஒழுக்கமானவராக, நல்ல குணங்களை கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

    புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால், அந்த இடத்துக்கு ஏற்பவே உங்கள் சமூக அந்தஸ்து மதிப்பிடப்படும். பெண்கள் தங்கள் அந்தஸ்தை எல்லா விதத்திலும் உயர்த்திக்கொள்ள முன்வரவேண்டும்.

    உங்கள் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் கவனம் கொண்டவராக இருக்கவேண்டும். உங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும்.

    தம்பதியர் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையானது எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கும். முரண்பாடுகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் சகித்து, சரிசெய்யக்கூடிய பக்குவம் இருவரிடத்திலும் இருக்கவேண்டும். ஆகவே உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் உங்களோடு பொருந்தி வரக்கூடியவரை திருமணம் செய்துகொள்வதே சிறந் தது. உங்களுக்கு அமையப்போகும் வாழ்க்கைத்துணை தோழமை உணர்வுகொண்டவராகவும் இருக்க வேண்டும். இருவரும் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. பரிசுகள், புகழுரைகள், அன்பை வெளிப்படுத்துதல் போன்றவை, காதலையும் தோழமையையும் வளர்க்கும்.

    அலுவலகப் பணிகளுக்கு எட்டுமணி நேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணி நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும். அப்போதுதான் மனம் விட்டுப்பேசவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும். எல்லா சூழலிலும் உங்களோடு மனம்விட்டுப்பேசக்கூடிய துணை அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
    காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று வேர்க்கடலை, வெஜிடபிள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  

    ஊற வைத்து வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய வாழைத் தண்டு - கால் கப்,
    வெள்ளரித் துண்டுகள் - கால் கப்,
    கேரட் துண்டுகள் - கால் கப்,
    தக்காளி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
    எலுமிச்சைச் சாறு - , ஒரு டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்.

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, ப.மிளகாய் போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து சலாட் கலவையில் கொட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சத்தான சுவையான சாலட் ரெடி.
    எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது.
    ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது முடியும் வரையில் உள்ள கால கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி வேகம் சற்றே குறைகிறது, அதேநேரத்தில் குழந்தையின் சத்துணவின் தேவை அதிகரிக்கிறது. இப்பொழுது தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் போதாது.எனவேதான் இணை உணவுத் தேவைப்படுகிறது.இந்த பருவத்தில் நம் வீட்டில் நமது பாரம்பரியத்தில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கும் வீட்டு உணவு வகைகள் ஒவ்வொன்றாக கொடுத்து பழக்க வேண்டும்.

    நமக்கு பழக்கமான இட்லி, பொங்கல், இடியாப்பம், சாதம், போன்றவைகளை மசித்து கொடுப்பதற்கு பயப்படத் தேவையில்லை. பருப்பு, காய்கறி வேகவைத்த நீர், பழரசம், அரிசிக் கஞ்சி, சத்து மாவுக்கஞ்சி போன்றவை கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு புது உணவு தான் தரவேண்டும், அந்த உணவை குழந்தை பழகுவதற்கு குறைந்தது ஐந்திலிருந்து ஏழு நாட்கள் அவகாசம் தந்த பின்னரே மற்றொரு புது உணவை தர வேண்டும். உதாரணமாக ஒரு நாள் காலை உணவாக இட்லி கொடுக்க ஆரம்பித்திருந்தால் அடுத்த சில நாட்களுக்கு இட்லி மட்டுமே காலை உணவாக தரவேண்டும். மற்ற வேளைகளில் தாய்ப்பால் தொடரலாம். இந்த உணவுக்கு குழந்தை பழகிய பின்னர் மற்ற உணவுகளை ஒவ்வொன்றாகத் தொடரலாம்.

    எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும். அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கரண்டியிலோ/மத்தினாலோ/கையாலோ நன்கு பிசைந்து ஊட்டுவதே மிகவும் சரியானது.

    டெல்லி கல்யாண் பானர்ஜி கிளினிக் மருத்துவர்கள், உளவியல், மன நல பிரச்சினைகள் காரணமாக தற்போது சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
    புதுடெல்லி

    கொரோனா வைரஸ் தொற்று நோய் மனித வாழ்க்கையையே தடம் புரளச்செய்து விட்டது. பெருந்தொற்று தாக்கத்தாலும், அதில் இருந்து மீண்டாலும் பல்வேறு பிரச்சினைகளால் ஒருபக்கம் அல்லாடுகிறார்கள். மற்றொரு பக்கம் சிலர் கொரோனாவால் தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவிக்கிறார்கள். ஊரடங்கு, பொதுமுடக்கம் போன்றவற்றால் வருமான இழப்பால் அவதிப்படுகிறார்கள். வேலை வாய்ப்பின்மையால் சிலர் அல்லலுறுகிறார்கள்.

    இப்படி பிரச்சினைகளின் நெரிசல், மனிதர்களுக்கு உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல்வேறு பிரச்சினைகளை சங்கிலித்தொடர்போல ஏற்படுத்தி விடுகிறது.

    கொரோனாவின் 2-வது அலையால் பெரும் பாதிப்புக்கு ஆளான தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனாவாலும், அதன் நிமித்தமான கட்டுப்பாடுகளாலும், அதிர்ச்சியாலும், இன்ன பிற பிரச்சினைகளாலும் மனச்சோர்வு, பீதி, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

    இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும், கிளினிக்குகளிலும் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

    இதுபற்றி பி.எல்.கே. ஆஸ்பத்திரியின் மனநல மருத்துவ ஆலோசகர் மணிஷ் ஜெயின் கூறுகையில், “சோகம், தனிமைப்படுத்துதல், தங்களுக்கு அன்பானவர்களை இழந்து விடுவோமா என்ற பயத்தினால் ஏற்படுகிற துக்கம், வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்காக வருகிறவர்களின் எண்ணிக்கை 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது” என கூறினார்.

    கொரோனா

    மேலும் அவர் கூறும்போது, “ஏற்கனவே மனநல பிரச்சினை உள்ளவர்கள், தொற்றுநோயின்போது, மேலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். வாழ்வில் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள், கொரோனா பயம் போன்றவை மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன” எனவும் தெரிவித்தார்.

    டெல்லி கல்யாண் பானர்ஜி கிளினிக் மருத்துவர்கள், உளவியல், மன நல பிரச்சினைகள் காரணமாக தற்போது சிகிச்சை பெற வருகிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த கிளினிக்கிற்கு மட்டுமே இப்படிப்பட்ட மனநல பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.

    கொரோனா காலத்துக்கு முன்பாக சராசரியாக 1,750 மருந்து சீட்டுகள் எழுதித்தரப்படுவது, இப்போது 2,500 ஆக உயர்ந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, பீதி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைக்கு ஆளாகியவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

    கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள், ஊரடங்கால் பாதிக்கப்படாதவர்கள்கூட இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்களாம்.
    வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கால்களை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்பு அதிகம்.
    கணவன்-மனைவி, குழந்தைகளுக்கென வீடுகளில் தனித்தனி அறைகள் அமைக்கப்படுவதை போல முதியவர்களுக்கும் தனி அறை அமைப்பது அவசியமாகிவிட்டது. முதுமை எல்லோருக்கும் சொந்தம் என்பதால் இன்று நம் பெற்றோருக்காகவோ, தாத்தா- பாட்டிகளுக்காகவோ கட்டும் அறைகள் பிற்காலத்தில் நமக்கு உதவும் என்ற தொலைநோக்கு யோசனையும் தேவை. சரி, முதியவர்களுக்கான அறை, வசதிகள் எப்படி இருக்க வேண்டும்? என பார்க்கலாம்.

    அழகழகான டைல்ஸ்கள் வீட்டின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். ஆனால், டைல்ஸ் தரைகள் முதியவர்களுக்கு கொஞ்சம் எதிரி என்றே சொல்லலாம். வழுக்குத் தன்மையுள்ள டைல்ஸ் தரைகளில் முதியவர்கள் நடக்கும்போது வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கால்களை நனைத்து விட்டு வரும்போது விழும் வாய்ப்பு அதிகம். முதியவர்கள் கீழே விழுந்தால், அவர்களின் உடல் நிலை பாதிக்கக்கூடும். 

    எனவே வழுக்கும் தன்மையுள்ள டைல்ஸ்களுக்கு பதிலாக, சொரசொரப்புத் தன்மையுள்ள டைல்ஸ்களை பதிக்கலாம். முடிந்த அளவுக்கு வீட்டுக்குள் மாடி படிக்கட்டுகளைச் சாய்வு தளமாக அமைப்பது முதியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நிச்சயமாகக் கைப்பிடி அமைக்க வேண்டும். மாடிப்படிக்கட்டுகளில் டைல்ஸ்கள் பதிப்பதை தவிர்க்கலாம்.

    குளியலறையில் சொரசொரப்பு தன்மையுள்ள டைல்ஸ்களை பயன்படுத்துவது முதியவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்றது. குளியலறை அலமாரிகள் குறைந்த உயரத்தில் அமைப்பதும் நல்லது. குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகள் வலுவாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்யவும். மேற்கத்திய பாணி கழிப்பிடங்களை அமைப்பதே முதியவர்களுக்கு ஏற்றது.
    பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    விவாகரத்து, பிடித்தமானவர்களின் திடீர் மரணம், வேலை இழப்பு போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். இதில் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்சைமர் சங்கமும் ‘‘60 வயதுக்குட்பட்ட பெண்களில் 6 பேரில் ஒருவர் அல்சைமர் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால் 11 பேரில் ஒருவருக்குத்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது’’ என்கிறது.

    அமெரிக்காவின் ஹான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சிந்தியா முன்ரோ, ‘‘மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது சிரமமானது. ஆனால் மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்தால் அது எளிதானது. மேலும் வயதாகும்போது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் ஆய்வு முடிவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன அழுத்தம் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. சாதாரணமாக மன அழுத்தம் ஏற்படும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு அதிகரிக்கும்.

    மீண்டும் மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசால் அளவு மிக அதிகமாகிவிடும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். மன அழுத்த ஹார்மோன் அளவு உயர்வது நினைவுத்திறனை பாதிக்க செய்துவிடும்” என்கிறார்.

    பேராசிரியர் முன்ரோ குழுவினர் 900 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 63 சதவீதம்பேர் பெண்கள். அவர்கள் சராசரியாக 47 வயதை கடந்தவர்கள். மன அழுத்தம் நீடிக்கும்போது மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
    பெரும்பாலான மக்கள் சுயமருத்துவமுறையில் மருந்துகடைகளில் வலி நிவாரண மாத்திரைகளைதான் வாங்குகிறார்கள். இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.
    உடல் நிலை சரியில்லாதபோது, காத்திருந்து டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதுதான் பலரது வழக்கம். சிலர் நேராக மருந்துகடைக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிடுகிறார்கள். இந்த பழக்கம்தான் சுயமருத்துவம் எனப்படுகிறது. இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.

    படிக்காதவர்களே இந்த சுயமருத்துவத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் தவறு. படித்தவர்கள், என்னென்ன அறிகுறிகள் இருந்தால் அது என்ன பிரச்சினை என்பதை ‘கூகுள் சர்ச்’சில் தேடிவிட்டு, அதற்கு ஏற்றாற்போல் குறிப்பிடப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு சுயமருத்துவர்களாகிக் கொள்கிறார்கள். இது ஆபத்து நிறைந்த செயலாகும்.

    பெரும்பாலான மக்கள் சுயமருத்துவமுறையில் மருந்துகடைகளில் வலி நிவாரண மாத்திரைகளைதான் வாங்குகிறார்கள். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் குறிப்பிட்ட வகை வலி நிவாரண மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக செயல்பாடு குறைதல், இதய பாதிப்புகள் ஏற்படுதல், அல்சர் போன்றவை ஏற்படும்.

    வழக்கமாக ஏற்படும் ஜலதோஷம் என்றால், ஒரு வாரம் வரை தொந்தரவு தந்துவிட்டு அதுவாக குணமாகிவிடும். ஆனால் உடனடியாக அதில் இருந்து மீளவேண்டும் என்று நினைத்து பலர் மருந்து கடைகளுக்கு சென்று அறிகுறிகளை கூறி சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் பொருத்தமற்ற மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டால் அது உடலில் ‘ஆன்டிபயாடிக்ஸ் ரெசிஸ்டென்சை’ உருவாக்கிவிடும். இது நோய்க்கு அளிக்கப்படும் மருந்தை எதிர்க்கும் தன்மையை கிருமிகள் பெறுவதற்கு காரணமாகி, ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அச்சுறுத்தலாகிவிடும்.

    ஒருவரது நோயின்தன்மை, அவரது வயது, அவரது எடை, நோய் கிருமிகளின் எண்ணிக்கை போன்றவைகளை கருத்தில்கொண்டு நோயாளிக்கு, டாக்டர் மருந்துகளை பரிந்துரைக்கிறார். அவரால்தான் அந்த நோயாளிக்கு எந்த மருந்து, எந்த அளவுக்கு, எத்தனை நாட்களுக்கு சாப்பிடவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டாக்டர் ஐந்து நாட்களுக்கு மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் சிலர் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். மூன்று நாட்கள் சாப்பிட்டதும் அவர்களுக்கு நோய் குணமானதுபோல் தோன்றும். முழு நிவாரணம் கிடைத்துவிட்டதாக நம்பிவிடுகிறார்கள். உண்மையில், அந்த நோய் கிருமிகள் முழுவதுமாக அழிய ஐந்து நாட்களும் குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரைகள் எடுத்தாகவேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே சாப்பிட்டால் அந்த நோய்கிருமிகள் அழியாமல் உடலுக்கு உள்ளேயே இருந்து, அந்த மருந்துக்கு எதிராக செயல்படும் நிலையை அடைந்துவிடும். அதனால் மீண்டும் அந்த நோய் வரும்போது, அதே மாத்திரைகளை சாப்பிட்டால் பலன்கிடைக்காது.

    அதுபோல் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்றவைகளுக்கு டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டை பயன்படுத்தி, மீண்டும் அதே நோய்கள் ஏற்படும்போது மருந்துகள் வாங்கிக்கொள்வதும் சரியானதல்ல. நோய்வாய்ப்படும் ஒவ்வொருமுறையும் டாக்டரின் ஆலோசனையை பெற்றுதான் மருந்துகள் வாங்கிசாப்பிடவேண்டும். அதுவே முழுமையான தீர்வுக்கு வழிகாட்டும்.
    முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.
    முடி கருகருவென அடர்த்தியாக நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு. சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும். இதை கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன் பொறாமைப்படுவ்தும் உண்டு. உதாரணமாக நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் பாப் கட்டிங் செய்தாலோ அல்லது முடியின் அளவை குறைத்துக் கொண்டாலோ அது பற்றி ஊரே பேசும். அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உண்டு.

    இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களின் தலைமுடியில்  பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

    முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.

    உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.

    இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.

    கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.

    தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

    பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும். உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
    வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பொடிமாஸை உணவிற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம் சாலட் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - 2 கப்,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு,
    எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வேக வைத்த வேர்க் கடலையை மிக்ஸியில்போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    பின்னர் வேக வைத்து பொடித்த வேர்க்கடலை, உப்பு போட்டு, மூன்று நிமிடங்கள் கிளறவும்.

    அடுப்பிலிருந்து இறக்கும்போது எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வேர்க்கடலை பொடிமாஸ் சாலட் ரெடி.
    ×