search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் கவனிக்கும் விஷயங்கள்
    X
    பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் கவனிக்கும் விஷயங்கள்

    பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் கவனிக்கும் விஷயங்கள்

    புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை.
    பெண்கள் மணமகனை தேர்ந்தெடுப்பதில் அழகும் அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. ஆனால், அவை மட்டுமே போதுமானதில்லை. ஒருசில பெண்கள் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டால் உடனே திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிடுவார்கள். திருமணத்திற்கு அப்படி அவசரம்காட்ட வேண்டியதில்லை.

    மணமகன் ஆரோக்கியமானவராக இருப்பது அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்யம் சிறக்கும். நிரந்தரமான நோயாளியை மணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் சேவை வேண்டுமானால் செய்யலாம். தாம்பத்யம் நடத்த முடியாது.

    பெண்கள் எந்த பொருளையும், அது அவர்களது கண்களையோ, மனதையோ கவர்ந்தால்தான் தேர்வு செய்வார்கள். உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமான நபரைத் தேர்வு செய்யும்போது, அவர் மீது உங்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அத்தகைய ஈர்ப்பு ஏற்படும் அளவுக்கு அவர் தோற்றப்பொலிவு கொண்டவராகவும் இருக்கட்டும்.

    அறுபதை, இருபது திருமணம் செய்துகொள்வது புரட்சிகரமானது என்று சிலர் கருதலாம். ஆனால், தாம்பத்யம் இனிப்பதற்கு உங்களது வாழ்க்கைத் துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்கவேண்டும். பெண், ஆணைவிட மூன்று முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது ஏற்புடையது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பை உண்டாக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை ஒழுக்கமானவராக, நல்ல குணங்களை கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

    புதிய வாழ்க்கையில் அடியெடுத்துவைப்பவர்களுக்கு சமூக அந்தஸ்தும் மிக முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால், அந்த இடத்துக்கு ஏற்பவே உங்கள் சமூக அந்தஸ்து மதிப்பிடப்படும். பெண்கள் தங்கள் அந்தஸ்தை எல்லா விதத்திலும் உயர்த்திக்கொள்ள முன்வரவேண்டும்.

    உங்கள் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் கவனம் கொண்டவராக இருக்கவேண்டும். உங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும்.

    தம்பதியர் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையானது எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கும். முரண்பாடுகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் சகித்து, சரிசெய்யக்கூடிய பக்குவம் இருவரிடத்திலும் இருக்கவேண்டும். ஆகவே உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் உங்களோடு பொருந்தி வரக்கூடியவரை திருமணம் செய்துகொள்வதே சிறந் தது. உங்களுக்கு அமையப்போகும் வாழ்க்கைத்துணை தோழமை உணர்வுகொண்டவராகவும் இருக்க வேண்டும். இருவரும் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. பரிசுகள், புகழுரைகள், அன்பை வெளிப்படுத்துதல் போன்றவை, காதலையும் தோழமையையும் வளர்க்கும்.

    அலுவலகப் பணிகளுக்கு எட்டுமணி நேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணி நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும். அப்போதுதான் மனம் விட்டுப்பேசவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும். எல்லா சூழலிலும் உங்களோடு மனம்விட்டுப்பேசக்கூடிய துணை அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
    Next Story
    ×