என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெண்கள் அணியும் உடைகளில் சேலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. சேலைகளில் புதுவரவானது வந்து கொண்டேதான் இருக்கின்றது.
    பெண்கள் அணியும் உடைகளில் சேலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. சேலைகளில் புதுவரவானது வந்து கொண்டேதான் இருக்கின்றது. அதுவும், பண்டிகைக் காலம் என்றால் புது வரவுக்கு கேட்கவே வேண்டாம்.

    முந்தானை இல்லாமல் உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் வரும் க்ரஷ் ஷிஃபான் சேலைகள் மிகவும் மென்மையான வண்ணங்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் வந்துள்ளன. இளமஞ்சள், இளம் பச்சை, இளஞ்சிவப்பு, இளநீலம் என அதன் வண்ணமும் அதில் வந்திருக்கும் டிசைனும் க்ரஷ் சேலைகளில் பார்க்கும் பொழுது மென்மையான பூக்கள் நிறைந்த தோட்டத்தில் உலவுவது போன்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன.

    பல்லுவில் வித்தியாசமான டிஜிட்டல் டிசைன்களுடன் வழவழப்புத் தன்மையுடன் பளபளப்பாக வந்திருக்கும் புது வரவே ஷேட்டின் ஷில்க் சேலைகளாகும். இவற்றின் விலை ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    ஆறு இன்ச் பார்டர் முதல் பனிரெண்டு இன்ச் பார்டர்வரை பட்டுச் சேலைக்கே சவால் விடும் அழகுடன் வந்திருப்பவை கோரா மஸ்லின் சேலைகள் என்று சொல்லலாம். அழகான உடல் வண்ணத்திற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பார்டரும், பல்லுவும் இருக்க அதில் வேறு நிறத்தில் பார்டரின் கீழே பைப்பிங் பார்டர் வருவது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது. இந்தச் சேலைகளில் வரும் அனைத்து டிசைன்களுமே அற்புதமாக உள்ளன.

    எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் வந்திருக்கும் லினன் சேலைகள் முந்தியில் குஞ்சம் வைத்து வந்திருப்பவை. உடலில் சின்ன எம்பிராய்டரி டிசைன், பார்டரில் மட்டும் எம்பிராய்டரி டிசைன், ஜரிகை பார்டர் எனப் பலவிதமாக மனம் மயக்கும்படி வந்துள்ளன. சில்வர் லைன் பார்டர், வொர்லி எம்பிராய்டரி, பல்லு முழுவதும் எம்பிராய்டரி, மிரர் வேலைப்பாடு என்று அட்டகாசமாய் வந்திருக்கும் இந்தச் சேலைகளின் விலை ஆயிரத்து ஐநூறுக்குள்தான் என்றால் ஆச்சரியத்தில் நம் புருவத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது. வொர்லி பிரிண்ட் கேள்விப்பட்டிருப்போம். அதை அப்படியே எம்பிராய்டரியில் கொண்டு வந்திருப்பது ஒரு புது முயற்சியாக உள்ளது.

    புடவை முழுவதும் ஒரே வண்ணத்திலிருக்க புடவையின் மேல்புறம் சிறிய பார்டர், கீழ்புறம் பெரிய பார்டர், பல்லு முழுவதும் டிசைன் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் வரும் செமி ஆர்ட் பனாரஸ் சேலைகளானது பட்டுப் புடவைகளுடன் போட்டி போடுவதோடு ஆயிரம் ரூபாயில் இவ்வளவு அழகான சேலைகளா? என்று வியக்க வைக்கின்றது. அடர் சிவப்பு, அடர் பச்சை, அடர் நீலம், வாடாமல்லி மற்றும் மஜந்தா என்று இதன் வண்ணங்களுக்கேற்ப வரும் பார்டரும், பல்லுவும் நம்மை சுண்டி இழுக்கின்றன. இதுபோன்ற சேலைகளில் சுடிதார், லாங்கவுன் போன்றவை தைத்துக் கொள்வதற்கு ஏற்றாற்போல் இதன் டிசைன்கள் உள்ளன. இதுபோன்ற சேலைகள் பரிசளிக்க ஏற்றதாகவும் உள்ளன. சில்வர் ஜரிகை மட்டுமல்லாமல் கோல்டன் ஜரிகையுடன் கான்ட்ராஸ்ட் பல்லு மற்றும் பிளவுஸ்களுடன் மிகவும் அற்புதமாக வந்துள்ளன.

    பிளெயின் சேலைகளுக்கு டிஜிட்டல் பிரிண்டட் பிளவுஸ்கள். அத்துடன் காதுக்கு, கழுத்துக்கு அணிந்துகொள்ள மேட்சிங்கான பீட்ஸ்களில் செய்யப்பட்ட நகைகள் ஷேட்டின் துணியில் ஷைனிங்குடன் வரும் இவ்வகைச் சேலைகளின் விலையோ வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே.

    இக்கத் மற்றும் வொர்லி பிரிண்ட்டுகளுடன் வரும் பேப்பர் சில்க் புடவைகளை ட்ரை கிளீன் செய்ய வேண்டிய அவசியமில்லை. டபுள் ஷேட், சிங்கிள் ஷேட்களுடன் எடை குறைவாக வரும் இவ்வகை சேலைகளை நாம் அணிந்தால் நம்மையும் எடை குறைவானவராகக் காட்டுமோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

    அலுவலகப் பயன்பாடு மற்றும் தினசரி உடுத்துவதற்கும் நேர்த்தியாக இருப்பவை என்றால் அவை செமிகாதி சில்க் சேலைகளாகும். இவற்றில் ஏராளமான டிசைன்கள் உள்ளன. செமி காதி காட்டன் சேலைகளிலும் கோபுரங்கள், கட்டங்கள் என அசத்தலான டிசைன்கள் நம்மை மயக்கும் விதமாக உள்ளன. இவற்றின் விலையோ ஐநூறு ரூபாய்க்குள் என்றால் நம்பவே முடியவில்லை.

    சனா சில்க் சேலைகளுக்கு ப்ரோகேட் பிளவுஸ்கள் மற்றும் அதற்கு ஏற்றாற் போல் அசத்தலான நகைகளும் அத்துடன் இணைந்து விற்பனைக்கு வந்துள்ளன. பிளெயின் வண்ண சேலைக்கு கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் நிறத்திலேயே இரண்டு விதமான வேலைப்பாடுகளுடன் வரும் பிளவுஸ்கள் என்று கலக்கலாக வந்திருக்கின்றன சனா சில்க் சேலைகள். டபுள் பிளவுஸ்களில் அதிக வேலைப்பாடு, சிம்பிள் வேலைப்பாடு என இரண்டு விதமாகக் கிடைக்கும் இவ்வகைச் சேலைகளின் விலையும் வேறுபடுகின்றது.

    சேலைத் துணியிலேயே, க்ளட்ச்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஆமாம், இதுபோன்ற சேலைகள் இப்பொழுது புதுவரவாக வந்துள்ளன. இனிமேல், கைப்பைகளை துணிகளுக்கு ஏற்றாற்போல் தேடி அலைந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

    செட்டிநாடு காட்டன் புடவைகளிலும் பிளையின் வித் பார்டர், கட்டங்கள் வித் பார்டர், ஜரி பார்டர், நூல் பார்டர் என அனைத்து வயதினரும், அணிவதற்கு ஏற்றாற்போல் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டு புதுவரவாக வந்துள்ளன. புட்டாக்கள், ப்ளாக் பிரிண்ட்டுகள், ஸ்கிரீன் பிரிண்ட்டுகள் என சிங்கிள் ஷேட் மற்றும் டபுள் ஷேடுகளில் அழகாக வந்திருக்கின்றன.

    கைகளால் செய்யப்படும் ப்ளாக் பிரிண்ட்டுகளில் பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சி, பூக்கள் என்று அருமையான வண்ணத் தோட்டமாக வந்திருக்கின்றன. மல் மல் காட்டன் சேலைகள். இதில் ஸ்கிரீன் பிரிண்ட்டுகளும் உள்ளன. பாம்பாம்கள் ஓரத்தில் இணைக்கப்பட்டு வரும் இந்தச் சேலைகள் மிகவும் மென்மையாக அணிவதற்கு ஏற்றதாக உள்ளன. தனித்துவமான டிசைன்களுடன் வரும் இவ்வகைச் சேலைகள் அலுவலகப் பயன்பாடு மற்றும் பிரயாணங்களில் அணிவதற்கு மிகவும் பொருத்தமாகவும் வசதியாகவும் உள்ளன.
    பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
    “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதே தெரியவில்லை. குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் அவைகளை கொல்லும் சம்பவங்களும் தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன” என்று குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விளக்குகிறார், முனைவர் ஆர்.ரமாதேவி. 48 வயதான இவர் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக உலகளாவிய நிலையில் செயல்படுபவர். கூடவே ஏராளமான நாடுகளுக்கு கல்விரீதியான பயணங்கள் மேற்கொண்டு, சர்வதேச அளவிலான கல்வியியல் ஆய்வுகளை மேற்கொள்பவர். பெண்களுக்கான உரிமைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் ஐக்கிய நாட்டு சபையிலும் உரையாற்றியிருப்பவர்.

    ‘உமன் அன்ட் சைல்டு கேர் இன்டர் நேஷனல்’ என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.ரமாதேவி, சமீபத்தில் லண்டனை தலைமையகமாக கொண்ட ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற ஆன்லைன் வானொலியில் ‘குழந்தைகளின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தினார். புதுமையான சிந்தனைகளும், புள்ளி விபரங்களும் கொண்ட அந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இவர் தேனியை சேர்ந்தவர். தற்போது சாத்தூர் ராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல் வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

    அவருடன் நமது உரையாடல் :

    சமீபத்தில் நிகழ்த்திய லண்டன் ரேடியோ உரை பற்றி கூறுங்கள்?

    “உலகளாவிய நிலையில் மாணவர்களுக்காக 24 மணிநேரமும் ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற வலைதள வானொலி இயங்கிக்கொண்டிருக்கிறது. லண்டனை தலைமையகமாக கொண்டு ஒலிபரப்பும் அந்த வானொலியில் அவ்வப்போது மாணவர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் ‘டாக் ஷோ’ நடக்கும். அதில் தற்போது நான் ‘குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் பெருவாரியான மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஆனாலும் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டுதானே இருக்கின்றன?

    ஆமாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. அதில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி என்ற உறவுச் சங்கிலிகளின் பிணைப்பு இருந்தது. இப்போது தனிக்குடித்தனங்களாகிவிட்டதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

    அத்தை, சித்தி, அக்காள் என்று உறவுகளோடு கலந்திருந்த ஆண்கள், இப்போது தனிமையாகி பெண்களை உறவினர்களாக பார்க்காமல் வெறும் உருவங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி எல்லோரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அவர்களை எளிதாக தடம்புரள வைத்துவிடுகின்றன. அதனால் காத்திருக்கும் மனநிலையை கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் விரைவாக அனுபவித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலே உருவாகிவிடுகிறது. குழந்தைக்கு எதிரான வன்முறையில் அறிந்தோ அறியாமலோ பலர் ஈடுபடுகிறார்கள். ஒருசில குடும்பங்களில் பெற்றோராலே குழந்தைகள் பாதிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

    “யூனிசெப் நிறுவனம் 53 சதவீத குழந்தைகள் பாலியல் தொந்தரவை கடந்தே வருகிறார் கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆண் குழந்தைகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் குழந்தைகளில், 95 சதவீதம் பேர் குடும்பத்திற்கு தெரிந்தவர்களாலே சூறையாடப்படுகிறார்கள். அதனால் குடும்ப மானம் பறிபோவதாக கூறி பெரும்பாலான புகார்கள் வாபஸ் பெறப்பட்டுவிடுகிறது. 30 சதவீதம் குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைக்கிறது. நிறைய பேர் தப்பிவிடுகிறார்கள். யூனிசெப் அமைப்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் எத்தகைய தவறான எண்ணங்கள் சமூகத்தில் இருப்பதாக கருதுகிறீர்கள்?

    “பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். படிக்காத குடும்பத்து குழந்தைகளே பாதிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர், படிக்காதவர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் இதில் கிடையாது. எல்லா குழந்தைகளுமே பாலியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதுபோல் பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளாக பெண்கள் அணியும் ஆடையும் ஒரு காரணம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூன்றரை வயது குழந்தைகூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அதனால் ஆடையையும் ஒரு காரணமாக கூறமுடியாது.

    பெற்றோர், குழந்தைகளிடம் நட்போடு பழகி, அவர்களுக்கு பள்ளியில், வெளியிடங்களில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் மனம்விட்டு பேச வைக்கவேண்டும். பள்ளிப் பாடங் களோடு வாழ்க்கைத்திறன் சார்ந்த பாடங்களையும், பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொடுத்து எப்போதும் விழிப்புடன் நடந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும். பாலியல் கல்வி வாயிலாக அவர்களுக்கு உடல் நலம், மனநலம், பாதுகாப்பு முறைகள் பற்றியும் கற்றுத்தருவது மிக அவசியம்” என்கிறார், முனைவர் ரமாதேவி.
    6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
    காலை, இரவு என 2 வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடை பற்களை கீழ்நோக்கி சுழற்றியும், கீழ் தாடை பற்களை மேல் நோக்கி சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாக துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். புளூரைடு கலந்த அனைத்து வகை பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் ‘டிசென்சடைசிங்‘ பற்பசையை பயன்படுத்தலாம்.

    பல் தேய்க்க பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது. கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல் உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. பல் துலக்கியை பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது. ஆரோக்கியமான நிலை பற்களுக்கு பால்பற்கள்தான் அஸ்திவாரம். எனவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான ‘விரல் பல்துலக்கி‘யை பயன்படுத்தி, 5 வயது வரையிலும் குழந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும். குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியை தண்ணீரால் நன்றாக துடைத்துவிட வேண்டும். தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

    வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலை காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

    பற்களில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். காபி, தேநீர் உள்ளிட்ட அதிக சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிக குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

    வெற்றிலை பாக்கு போடுவது, புகை பிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்த்தால், பல்லுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது. குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கி பற்களையும் சிதைக்கின்றன. குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதை தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தை பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

    பால் அருந்துவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் பல்லுக்கு பாதுகாப்பு தரும். நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டு பண்ணும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தை பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
    பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் ஹார்மோன் செய்யும் கலாட்டாதான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டு கோபதாப உணர்வுகளை கட்டுப்படுத்தி, அந்த சில நாட்களை கடக்க முயற்சிக்கவேண்டும்.
    மனித உடலில் இருக்கும் சுரப்பிகள் சுரக்கும் தனித்துவமான திரவங்கள்தான் ஹார்மோன்கள். உடல், டஜன் கணக்கில் ஹார்மோன்களை சுரக்கிறது. ஹார்மோன்களின் சிக்னலுக்கு தக்கபடிதான் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் எல்லாம் செயல்படுகின்றன. உடல் வளர்ச்சி, பருவகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உணர்ச்சிகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரணம், உடலுக்கு தேவையான சத்துக்களை சேகரிப்பது, தூக்கத்தை உருவாக்குவது.. இப்படி ஹார்மோன்களால் உடலுக்குள் ஏற்படும் செயல்பாடுகள் ஏராளம். பொதுவான ஹார்மோன்களின் செயல்பாடுகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், இனப்பெருக்க விஷயத்தில் ஆண்-பெண் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுபடுகின்றன. ஆண்களுக்குள் ஆண்மையை உருவாக்குவதும், பெண்களுக்குள் பெண்மையை உருவாக்குவதும் தனித்தனி ஹார்மோன்கள்.

    பெண்களை எடுத்துக்கொண்டால் வருடத்தில் 365 நாட்களும் ஹார்மோன்கள் ஒரே மாதிரி சுரந்து கொண்டிருப்பதில்லை. சில நேரங்களில் ஹார்மோன்களின் சுரப்பில் சமச்சீரற்ற நிலை உருவாகிவிடும். அதற்கு தக்கபடி பெண்களின் உடல் செயல்பாட்டிலும் மாற்றங்கள் தோன்றும்.

    டெஸ்டோஸ்டிரான் என்பது ஆண் களுக்கான ஹார்மோன். அது சிறிதளவு பெண்களின் உடலிலும் இருக்கிறது. ஆண், பெண் இருபாலரிடமும் பாலியல் ஆர்வத்தைத் தூண்டுவது, இந்த ஹார்மோன்தான். மூளையில் இருக்கும் ‘ஹைப்போதலமஸ்’, ஹார்மோன்களுக்கு மூல காரணமாக இருக்கிறது. அதை தவிர ஹைப்போதலமஸ்க்கு வேறுசில பணிகளும் உள்ளன. உடலில் உள்ள சீதோஷ்ண நிலையை சமன் செய்தல், வேலை நேரத்திக்கு தக்கபடி தூக்கத்தின் செயல்முறையை மாற்றுதல் போன்றவைகளையும் செய்கின்றன. கடுமையான மன அழுத்தம் ஏற்படும்போது ஹைப்போதலமசின் பணிகள் பாதிக்கும். அப்போது ஹார்மோன் உற்பத்திக்கான சிக்னல்களை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பெண்கள் அதிக மனஅழுத்தத்தில் இருக்கும்போது அவர்களது இனப்பெருக்க செயல்பாடுகள் முடங்கிப் போவதுண்டு. அப்போது ஹைப்போதலமஸ், அதற்குரிய ஹார்மோன்களை சுரக்காததே அதற்கான காரணம்.

    பெண்கள் வயதுக்கு வந்த தொடக்க காலத்தில் ‘பி.எம்.எஸ்.’ எனப்படும் ‘பிரி மென்ஸ்டுரல் சிம்டம்’ தொந்தரவால் அவதிப்படுவதுண்டு. மாதவிலக்கு தொடங்குவதற்கு முந்தைய சில நாட்களில் இந்த பாதிப்பு உருவாகும். கோபம், எரிச்சல், பதற்றம், மன அழுத்தம், கவலை போன்றவை அதன் அறிகுறிகளாகும். மாதவிலக்கு சுழற்சி காலத்தின் முதல் பகுதி நாட்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் பெண்கள் அனுபவிப்பார்கள். நினைவாற்றலும் அதிகரிக்கும். நினைத்ததை எல்லாம் நடத்திமுடித்துவிடும் ஆற்றலை கொண்டிருப்பதாக கருதுவார்கள்.

    மாதவிலக்கு சுழற்சி காலத்தின் இரண்டாம் பகுதி நாட்களில் மன அழுத்தம் கொள்வது, ‘மூட் அவுட்’ ஆவது போன்றவை தோன்றும். அப்போது புரோஜெஸ்ட்டிரான் அதிகமாக சுரக்கும். மாதவிலக்கு தொடங்கும் நாட்களில் புரோஜெஸ்ட்டிரான் அதிகமாக சுரப்பதே ‘பி.எம்.எஸ்’ நெருக்கடி தோன்ற காரணமாக அமைகிறது. பெண்களில் 40 சதவீதம் பேர் இந்த அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்குள் புயல் வீசுவது போன்ற இந்த அவஸ்தைக்கு காரணம் ஹார்மோன் செய்யும் கலாட்டாதான் என்பதை பெண்கள் புரிந்துகொண்டு கோபதாப உணர்வுகளை கட்டுப்படுத்தி, அந்த சில நாட்களை கடக்க முயற்சிக்கவேண்டும்.
    இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.
    பட்டுச் சேலைகளில் எப்பொழுதும் தங்கநிற ஜரிகைகளில் அருமையான பார்டர்களும், அட்டகாசமான பல்லுவும் இருப்பதைப் பார்க்க முடியும். இப்பொழுது பெண்களிடையே பெரிதும் பிரபலமாகி வருவது சில்வர் நிற ஜரிகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டுச்சேலைகளாகும். இதுபோன்று சில்வர் நிறத்தில் வரும் ஜரிகைகள் சேலைக்கு கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.

    * பிளையின் நிற மருதாணிப் பச்சையில் சில்வர் நிற ஜரிகையுடன் ஒருபுறம் மட்டும் பார்டர் இருக்க, பல்லு முழுவதும் சில்வர் நிற ஜரிகையால் நெய்யப்பட்டிருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. சில்வர் நிற ஜரிகைகளுக்கு ஏற்றார் போல் உடல் நிறத்தை சேலையில் தேர்ந்தெடுத்து நெய்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுபோல் உடல் பிளையின் வண்ணத்தில் இருக்க பார்டரும், பல்லுவும் சில்வர் ஜரிகையுடன் இருப்பது மிடுக்கான தோற்றத்தைத் தருகின்றது.

    * உடல் முழுவதும் ருத்திராட்ச டிசைனானது சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டு, பல்லுவும் உடல் வண்ணத்திலேயே சில்வர் ஜரிகையால் நெய்யப்பட்டிருக்கும். இந்தச் சேலைகளுக்கு உதாரணமாக உடல் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்தால் அதற்கு மாறுபட்ட வண்ணமான மஜந்தா நிறத்தில் பைப்பிங் பார்டருடன் இருப்பது அணிந்து கொள்பவருக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பிளவுசானது பைப்பிங் பார்டர் நிறத்திலேயே புடவையுடன் இணைக்கப் பட்டிருக்கின்றது.

    * பிங்கிஷ் ஆரஞ்சு நிறச் சேலைக்கு பீச் சில்வர் டிஷ்யுவுடன் மீனாகாரி வேலைப்பாடு செய்யப்பட்டு வரும் சேலையின் அழகை என்னவென்று வர்ணிப்பது. இது போன்ற சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், நிற பேதமில்லாமல் உடுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்கின்றது.

    * சேலையின் மேற்புறம் சில்வர் ஜரிகையுடன் பெரிய பார்டரும், கீழ்புறம் தங்கநிற ஜரிகை பார்டர். அதன் கீழே மேல்புறம் இருப்பதைப் போன்ற பெரிய சில்வர் ஜரிகை பார்டருடன் உடல் முழுவதும் குறுக்குவாட்டில் கோடுகள் சில்வர் ஜரிகையால் டிசைன் செய்யப்பட்ட சேலைகள் வித்தியாசமாகவும், புது வரவாகவும் உள்ளன. எளிமையான விழா மட்டுமல்லாமல் எந்த விழாவிற்கு நீங்கள் இந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு சென்றாலும் சபையின் நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

    * தங்கநிற ஜரிகையில் வைர ஊசியுடன் பட்டுச்சேலைகளைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் சில்வர் நிற ஜரிகையில் வைரஊசியுடன் நெய்யப்படும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சாம்பல் நிற உடல் பகுதியில் சில்வர் ஜரிகை வைரஊசி டிசைன் அதற்கு காண்ட்ராஸ்டாக வாடாமல்லி, மஜந்தா, அடர்த்தியான இலைப்பச்சை அல்லது அடர்த்தியான நீலநிற கையகல பிளையின் பார்டர் கற்பனை செய்து பாருங்கள். பல்லுவும் பார்டர் நிறத்தில் டெம்பிள் பார்டராக இருந்தால் அதன் அழகைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

    * அடர்த்தியான நீலம், பச்சை, மஜந்தா போன்ற உடல் பகுதி இருக்கும் சேலைகளின் நடுவில் ஆங்காங்கே சில்வர்நிற ஜரிகையில் மாங்காய் மற்றும் புட்டாக்களை டிசைன் செய்திருக்கிறார்கள். அதன் பார்டர் மற்றும் பல்லுவிற்கு வெளிர் சந்தன நிறத்தில் சில்வர் ஜரிகை கோடுகளுடன் மெல்லிய பைப்பிங் பார்டர்களுடன் வரும் சேலைகள் அனைத்துவித விழாக்களுக்கும் உடுத்திக் கொள்ள ஏற்றதாக உள்ளது.

    * சில்வர் ஜரிகைகளுடன் பார்டரே இல்லாமல் வரும் பட்டுப்புடகைகளும் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அணிந்தாலும் மிக அழகிய தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்ற வண்ணங்களில் சில்வர் ஜரிகையில் மீனாகாரி பூ வேலைப்பாடுகளுடன் இடையில் சில்வர்ஜரி புட்டாக்களும் வந்திருப்பது அட்டகாசமாக உள்ளது. பல்லவின் காண்ட்ராஸ்ட் நிறமானது பூக்களின் நடுவில் வருவதுபோல் வடிவமைத்திருப்பது சேலைக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    * உடல்பகுதி, பல்லு என அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க சிறிய கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டரானது சேலையின் அழகை மேலும் கூட்டுகின்றது எனலாம். பைப்பிங் பார்டரின் மேலே சேலையின் கீழ்ப்புறம் மட்டும் யானை, குதிரை, மான், அன்னப்பறவை மற்றும் மயில் போன்றவை சில்வர் ஜரிகையில் நெய்திருப்பது பாரம்பரிய டிசைனை சேலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். பல்லுவிலும் பாரம்பரிய டிசைன்களையோ அல்லது புட்டாக்களையோ சில்வர் ஜரிகையில் டிசைன் செய்திருப்பது மிகவும் அசத்தலாக உள்ளது. கான்ட்ராஸ்ட் பைப்பிங் பார்டர் நிறத்திலேயே பிளையின் பிளவுஸ்கள் இந்தச் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
    காலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

    தேவையான பொருட்கள்

    துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்
    காலிஃப்ளவர் தண்டு - அரை கப்
    கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பால் - ஒரு கப்
    மிளகுத்தூள் - சிறிதளவு
    பூண்டு - 5 பல்
    நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    முதலில் காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.

    2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

    சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.
    அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.

    பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

    குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.

    குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள். குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.

    குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.

    குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.

    உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.
    ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.
    ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். உதாரணமாக தந்தையின் கோபத்திற்கு பயந்து ஊர் சுற்றும் மகனும் திருந்தப்போவதில்லை. எடையை குறைத்து போடும் கடைக்காரரும் திருந்தப்போவதில்லை.

    மாறாக அவர்கள் எப்போது தாங்கள் செய்வது தவறு என்று உணருகிறார்களோ அப்போது தான் அவர்களால் திருந்த முடியும். அதுவரை தவறு செய்பவர்கள் யார் மீது கோபப்பட்டாலும் அதனால் கோபப்படுபவரின் உள்ளம் வெந்து, கண்கள் சிவந்து, வயிறு எரிய கோபம் கொள்ளும் போது ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான் கெட்டுப்போகும். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.

    உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி , கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?

    ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம்.

    அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும். இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை” என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும். இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும்.

    ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும். அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால் , கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.
    கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்காமல் இருப்பதால் இப்போது பின்பற்றி வரும் வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது. ஊரடங்குக்கு பிறகு செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
    ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் ஒருசில விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்காமல் இருப்பதால் இப்போது பின்பற்றி வரும் வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது. ஊரடங்குக்கு பிறகு செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    பெரும்பாலானோரின் முதல் திட்டமிடுதலே பயணமாகத்தான் இருக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நிறைய பேர் வெளியூர் பயணம் மேற்கொள்ள முயற்சிப்பார்கள். ஒரே சமயத்தில் நிறைய பேர் ஒரே இடத்தில் கூடினால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் நேரும். சில நாட்களுக்கு பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அவசர பயணங்களை மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்து கொள்வது அவசியமானது.

    கொரோனா ஏற்படுத்தி கொடுத்த நன்மை என்று சொன்னால் கைக்கழுவும் பழக்கம்தான். எந்த பொருளை எடுத்து உபயோகப்படுத்தினாலும் உடனே கைக்கழுவுவதற்கு பழகிவிட்டார்கள். எல்லா காலகட்டத்திலும் வைரஸ் கிருமிகள் படர்ந்திருக்கும். அதனால் கைக்கழுவும் பழக்கத்தை அடிக்கடி மேற்கொள்வதை கைவிட்டுவிடக்கூடாது. ஆரோக்கிய வாழ்வுக்கு அது கைகொடுக்கும்.

    வெளியே சென்றால் முகக்கவசம் அணியும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அது சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். காற்று மூலம் நோய் தொற்று கிருமிகள் பரவக்கூடும் என்பதால் முகக்கவசம் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

    கடைகளுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்லும்போது சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களுக்கு செல்லும்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கும் வரை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது. இருமும்போதும், தும்மும்போதும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாயை மூடிக்கொள்வது சிறந்தது.

    கொரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்திப்பதை சில காலம் தவிர்ப்பதும் நல்லது. அவர்களுடன் செல்போன், வீடியோ கால் மூலம் தொடர்பில் இருப்பதுதான் சிறந்தது.

    நண்பர்கள், உறவினர்களை வீடு தேடி சென்று சந்திப்பதையும் சில காலம் தவிர்ப்பது நல்லது. அதுபோல் வீட்டில் சுபகாரியங்கள் நடத்த திட்டமிட்டிருந்தால், அதையும் சில காலம் ஒத்திப்போட்டுவிடலாம்.
    இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் போன்ற பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளைஞர்-இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.
    பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது அப்ளிகேஷன்களிலேயே கிடைக்கிறது. உங்களுக்கு எந்த மாதிரியான உடைகள் சிறப்பாக இருக்கும்?, எந்த நிறத்திலான உடை பொருந்தும், இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் போன்ற பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்குகின்றன. அப்படி இளைஞர்-இளம்பெண்களின் பேஷன் தாகத்தை  தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

    பேஷன் குளோசெட் (Fashion closet)

    இந்த செயலியை ஓபன் செய்து, தனித்தனியாக தலைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில் என தோழிகளுடன் பகிர்ந்து கருத்துக் கேட்கும் வசதியும் உள்ளது.

    வார்டுரோப் அசிஸ்டெண்ட் (wardrobe assistant)

    திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை இந்த செயலி அளிக்கிறது. ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டு மல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான டிரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்டுகளையும் அறியலாம். இதில் ஆடைகளை நல்ல விலைக்கு விற்கும் வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிருமுறை பயன்படுத்திய அல்லது வாங்கியபின் அளவு, நிறம் போன்றவை பொருந் தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த ‘ஆப்’பின் வாடிக்கை யாளர்களிடையே விற்கலாம். நீங்களும் அதுபோல் மற்றவர்களிடமிருந்து வாங்கலாம்.

    ஷிசிமோ(Chicisimo)

    நாளைக்கு கல்லூரியில்/ அலுவலகத்தில் முக்கியமான நிகழ்ச்சி. டிரெண்டியான உடையை எப்படி கண்டுபிடிப்பது? எங்கு வாங்குவது என குழப்பமா? விடுங்கள் கவலையை! பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதை பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்கு பல்வேறு பேஷன் ஐடியாக்களை பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடை பரிந்துரைகள் மற்றும் ஆல்பங்களை மற்ற பெண்களுடன் பகிர்ந்து, கருத்து பெறலாம்!

    ஸ்மார்ட் குளோசட்(Smart Closet)

    ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டு மல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த ‘ஆப்’பில் உள்ள பிரத்யேகக் கேலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

    பாலிவோர்(Polyvore)

    இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, சந்தையில் உள்ள டிரெண்டிங் ஆடைகளை பார்க்கலாம், வாங்கலாம் மற்றும் பிறரின் கருத்துகளையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்த புகைப்படங்களை சேமித்துவைக்கலாம்.
    மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், சிகிச்சை முறை பற்றியும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு பற்றியும் மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன் விளக்கமாக பேசுகிறார்.
    ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாதத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நோய் தடுப்பு கருத்தரங்குகளும் அதிகளவில் நடத்தப்படும். அப்படி இருந்தும் பெண்களிடம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது என்கிறார், மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன். சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த மார்பக சீரமைப்பு நிபுணரான இவர், புற்றுநோய்க்கு பிறகான மார்பக பராமரிப்பு வழிகாட்டுதல்களை யூ-டியூப் வாயிலாகவும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் வழங்கி வருகிறார். அவர் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், சிகிச்சை முறை பற்றியும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு பற்றியும் விளக்கமாக பேசுகிறார்.

    * மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறதா?

    கடந்த 3 ஆண்டுகளைவிட, விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுவதால், அந்த காலத்தில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பொது இடங்கள், அலுவலகங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகளில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதால், போதிய விழிப்புணர்வு இருக்கிறது.

    * எதனால் விழிப்புணர்வு குறைகிறது?

    கூச்ச சுபாவம், பயம் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் பற்றி பிறரிடம் பேசுவதில்லை. மேலும் மார்பகங்களில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை குடும்ப பெண்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதை பெற்றோரிடமும், கணவரிடமும் பகிர்ந்து கொள்வதும் இல்லை.

    * மார்பக புற்றுநோயை எப்படி கண்டறிவது?

    யூ-டியூப் தளத்தில் ‘பிரஸ்ட் கேன்சர் எக்சாமினேசன் அட் ஹோம்’(Breast Cancer Examination at home) என்று தேடிப்பார்த்தால் நூற்றுக்கும் அதிகமான வீடியோக்கள் வரும். அதில் மார்பகங்களை எப்படி வீட்டிலேயே பரிசோதிப்பது என்பதை வீடியோவாக விளக்கி இருப்பார்கள். அதை பின்பற்றி மாதம் ஒரு முறை மார்பகங்களை வீட்டிலேயே பரிசோதித்து பாருங்கள். மார்பகம், அக்குள் போன்ற பகுதிகளில் ‘கட்டி’ இருக்கிறதா?, அவை வலியை உண்டாக்குகிறதா? என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெறுங்கள்.

    * பயப்படவேண்டிய அவசியம் உண்டா?

    முடிந்தவரை ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பக புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம். கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற பல சிகிச்சைகள் மூலம் ஆரம்பநிலை நோயிலிருந்து குணம் பெறலாம். நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில்தான் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அகற்றவேண்டியிருக்கும். அதை நினைத்தும் வருந்த தேவையில்லை. ஏனெனில் தமிழகத்தில் மார்பக சீரமைப்பு, செயற்கை மார்பக உருவாக்கம் போன்ற சிகிச்சை முறைகள் அதிகரித்துவிட்டன.

    * மார்பக அகற்றம் சிகிச்சைக்கு பிறகான வழிகாட்டுதல் எப்படி இருக்கும்?

    மூன்று முறைகளில் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம். ஒன்று உடலில் இருக்கும் தசைகளை கொண்டு உருவாக்குவது. மற்றொன்று, உடல் கொழுப்புகளை கொண்டு உருவாக்குவது. இறுதியாக வெளிநாடுகளில் பிரபலமான சிலிக்கான் பொருளை உட்செலுத்தியும் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம்.

    * பக்க விளைவுகளை உருவாக்குமா?

    இல்லை. உலக அளவில் இது மிகவும் வெளிப்படையான சிகிச்சை. ஆனால் தமிழ்நாட்டில்தான் கூச்சப்படக்கூடிய, மூடிமறைக்கக்கூடிய சிகிச்சையாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற சிகிச்சைகள் சத்தமில்லாமல் அரங்கேறுகின்றன. பக்க விளைவும் மிகமிக குறைவு என்பதால், பல்வேறு காரணங்களால் மார்பகத்தை இழந்தவர்களும், மார்பகத்தை சீரமைக்க விரும்புபவர்களும் முயன்று பார்க்கலாம். செலவும் ரூ.1 லட்சம் முதல் ஒன்றரை லட்சத்திற்குள் அடங்கிவிடும்.

    * மார்பக சீரமைப்பு சிகிச்சையில் உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

    டீன்-ஏஜ் பெண் ஒருவர் புற்றுநோயால் மார்பகத்தை இழந்துவிட்டார். உயிர் பிழைத்து வந்த மகிழ்ச்சியைவிட சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?, கல்லூரிக்குள் எப்படி நுழைவது?, குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியாகுமா? போன்ற பல கேள்விகள் அவளது மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தன. நான் அவளை சந்தித்து, திடப்படுத்தினேன். செயற்கை மார்பக உருவாக்கம் பற்றி விளக்கி, தைரியம் கொடுத்தேன். அதற்கு பிறகுதான், அவளுக்கு வாழ்க்கை இனிக்க தொடங்கியது. அவளது தன்னம்பிக்கையும் உயர்ந்தது. இவர் மட்டுமல்ல, குடும்ப பெண்கள், மாடல் அழகிகள், தொலைக்காட்சி பிரபலங்கள் போன்றோரும் தன்னம்பிக்கைக்காக மார்பக சீரமைப்பு, மார்பக குறைப்பு, உடல் கொழுப்பு அகற்றம் போன்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

    * மார்பக புற்றுநோய் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சிகளை பற்றி கூறுங்கள்?

    சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக யூ-டியூப் சேனல் மூலமாக மார்பக புற்றுநோய் குறித்தும், விழிப்புணர்வு விஷயங் களையும், செயற்கை மார்பக சிகிச்சை குறித்தும் பகிர்ந்து வருகிறேன்.
    பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. தொற்று நோய்க்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
    தேவையான பொருட்கள்

    பசலைக்கீரை - 200 கிராம்,
    காளான் - 100 கிராம் ,
    வெங்காயம் - 1 பெரிய,
    தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி,
    முட்டைகோஸ் - 100 கிராம் ,
    கேரட் - 1,
    சீரகம் - 1 தேக்கரண்டி ,
    மிளகாய் - 2,
    சோம்பு - 1 தேக்கரண்டி ,
    குடைமிளகாய் - 1 ,
    உப்பும், இஞ்சியும் - தேவைக்கு.

    செய்முறை:

    காய்களையும், கீரையையும் நறுக்கிக்கொள்ளவும்.

    இஞ்சியை அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி விழுதை கொட்டி வதக்கவும்.

    அத்துடன் மிளகாயை நறுக்கிப்போட்டு, சீரகம், சோம்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், காளான் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டிக் கிளறவும்.

    பசலைக் கீரையையும், உப்பையும் சேருங்கள்.

    சிறிதளவு தண்ணீர் விட்டு கீரை, காய்கறிகளை வேகவிட்டு இறக்கவும்.

    சூப்பரான பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் ரெடி.

    குறிப்பு:- கீரை, காய்கறிகளை மூடிவைத்தே வேகவைக்கவும். அப்படி செய்தால்தான் அதில் உள்ள முழு சத்துக்களும் வீணாகாமல் கிடைக்கும்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×