
பெரும்பாலானோரின் முதல் திட்டமிடுதலே பயணமாகத்தான் இருக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நிறைய பேர் வெளியூர் பயணம் மேற்கொள்ள முயற்சிப்பார்கள். ஒரே சமயத்தில் நிறைய பேர் ஒரே இடத்தில் கூடினால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் நேரும். சில நாட்களுக்கு பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அவசர பயணங்களை மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்து கொள்வது அவசியமானது.
கொரோனா ஏற்படுத்தி கொடுத்த நன்மை என்று சொன்னால் கைக்கழுவும் பழக்கம்தான். எந்த பொருளை எடுத்து உபயோகப்படுத்தினாலும் உடனே கைக்கழுவுவதற்கு பழகிவிட்டார்கள். எல்லா காலகட்டத்திலும் வைரஸ் கிருமிகள் படர்ந்திருக்கும். அதனால் கைக்கழுவும் பழக்கத்தை அடிக்கடி மேற்கொள்வதை கைவிட்டுவிடக்கூடாது. ஆரோக்கிய வாழ்வுக்கு அது கைகொடுக்கும்.
வெளியே சென்றால் முகக்கவசம் அணியும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அது சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். காற்று மூலம் நோய் தொற்று கிருமிகள் பரவக்கூடும் என்பதால் முகக்கவசம் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.
கடைகளுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்லும்போது சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களுக்கு செல்லும்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கும் வரை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது. இருமும்போதும், தும்மும்போதும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாயை மூடிக்கொள்வது சிறந்தது.
கொரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்திப்பதை சில காலம் தவிர்ப்பதும் நல்லது. அவர்களுடன் செல்போன், வீடியோ கால் மூலம் தொடர்பில் இருப்பதுதான் சிறந்தது.
நண்பர்கள், உறவினர்களை வீடு தேடி சென்று சந்திப்பதையும் சில காலம் தவிர்ப்பது நல்லது. அதுபோல் வீட்டில் சுபகாரியங்கள் நடத்த திட்டமிட்டிருந்தால், அதையும் சில காலம் ஒத்திப்போட்டுவிடலாம்.