என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆண்டுக்கு ஒரு முறை விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் அந்தக் கதவை அன்று மட்டும் திறந்து வைப்பர்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வந்தாலும், மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் அந்தக் கதவை அன்று மட்டும் திறந்து வைப்பர். அதில் நுழைந்து வந்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள், கடல் அலையைப் போல சொர்க்கவாசலில் நுழையக் காத்திருப்பர். அருகிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலில் நாம் அவசியம் நுழைந்து சென்று வழிபட்டு வரவேண்டும். அதன் மூலம் சிக்கல்களும், சிரமங்களும் தீர்ந்து சிறப்பான வாழ்வமையும். ரொக்கமும் சேரும். சொர்க்கமும் கிடைக்கும்.
துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும்.
மகிஷாசுரனை வதம் செய்ய ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அதில் இருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகளின் மூலம் வாமை, ஜயேஷ்டை, ரவுத்ரி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் நவசக்திகளைக் கொண்ட நவதுர்க்கைகளைத் தோற்றுவித்தார்.
இந்த நவசக்திகளும் ஒன்றாகி துர்க்கா பரமேஸ்வரியாக வடிவெடுத்து சிம்ம வாகனத்தில் புறப்பாடு எருமை வடிவில் இருந்த மகிஷனை வதைத்தார். அதன் காரணமாக ‘மகிஷாசுர மர்த்தினி’ என்னும் திருநாமத்தைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
எருமை வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கோடாளி, கயிறு, குந்தாயுதம், திரிசூலம், ஒப்புறயர்வற்ற சாரங்கம் என்னும் வில்லுடன் துர்க்காதேவி காட்சியளிக்கிறாள்.
துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது. செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன்.
செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம்.
செவ்வாய்க்கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை (நல்ல மஞ்சள் நிறம் உடையவை) எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றைச் சிறுபாத்திரத்தில் வடித்து வைத்து விட்டு, இரு எலுமிச்சைத் தோல்களை எதிர்ப்புறமாக மடக்கிக் கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.
ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 9 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். ஆயுள் பலம் பெருக நல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.
ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் முதிய சுமங்கலிப் பெண்ணுக்கு (சுவாசினி) தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் காணிக்கை கொடுத்து வணங்கினால், அவற்றை நேரடியாக சுவாசினி உருவில் துர்க்கா பரமேஸ்வரியே பெற்றுக்கொண்டு அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம். மேலும் துர்க்கை சன்னதியில் கன்னிப் பெண்களின் கால்களுக்கு நலுங்கிட்டு, கைகளில் வளையல் இட்டுப் பூச்சூட்டி பூஜித்தால் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமை ஆண்கள் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளில் இருந்து பரிபூரணமாக விடுபடலாம்.
ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும்
அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.
அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.
அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு ஒன்று வந்தது. வியாபாரிக்கு உணவளிக்க விரும்பிய துறவி, தன் காலடியில் இருந்த ஒரு கம்பை எடுத்து, குரங்கின் தலையில் ஒரு அடி அடித்து விட்டு, “வந்திருப்பவர்களுக்கு இலை போடு” என்றார். குரங்கு வாழை இலையை எடுத்து வந்து போட்டது.
துறவி மீண்டும் தன் கையில் இருந்த கம்பால் குரங்கின் தலையில் அடித்து விட்டு “சாப்பாடு எடுத்து பரிமாறு” என்றார். குரங்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறியது. அதன்பிறகும் அந்த குரங்கின் தலையில் ஒரு அடி வைத்தார், துறவி.
இப்போது வியாபாரிக்கு வருத்தமாக இருந்தது. துறவியிடம், “சுவாமி.. நீங்கள் சொல்வதை எல்லாம் அந்தக் குரங்கு செய்துகொண்டுதானே இருக்கிறது. பிறகு எதற்காக அதை அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
ஆனால் அதற்கு துறவி எந்த பதிலும் சொல்லவில்லை. சற்றே புன்னகைத்துவிட்டு, தன் கையில் இருந்த சிறிய கம்பை, தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் ஒளித்து வைத்தார்.
சற்று நேரம் அமைதியாக இருந்த குரங்கு, இப்போது அங்கும் இங்கும் தாவியது, வியாபாரி சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையில், தன்னுடைய வாலை விட்டு ஆட்டியது. வியாபாரியின் தோளில் அமர்ந்து கொண்டு அவரது காதைப் பிடித்து திருகியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை இரண்டாக கிழித்துப் போட்டது.
அதன் சேட்டையைப் பொறுக்க முடியாத வியாபாரி, “சுவாமி... இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை. அடி போடுங்கள்” என்றார்.
உடனே துறவி, தான் மறைத்து வைத்திருந்த கம்பை எடுத்து குரங்கின் தலையில் அடித்தார். அதுபோய் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து கொண்டது.
இப்போது துறவி சொன்னார். “இந்தக் குரங்கைப் போலத்தான் மனித மனங்களும். ‘நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே’ என்று விட்டு விடக் கூடாது. ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும்” என்றார் துறவி. அதைக்கேட்டு வியாபாரி மனம் தெளிந்து புறப்பட்டார்.
மனிதர்களும் கூட தங்களின் குணநலன்களைப் பொறுத்தே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படியே அவர்களுக்கு பலன்களும் கிடைத்து வருகின்றன.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும், இறைவனாலேயே படைக்கப்பட்டதாக ஆன்மிகம் சொல்கிறது. அவற்றின் குணாதிசயங்களைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக பிரிக்கப்படுகின்றன. மனிதர்களும் கூட தங்களின் குணநலன்களைப் பொறுத்தே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படியே அவர்களுக்கு பலன்களும் கிடைத்து வருகின்றன. தேவர்களைப் போன்று அனைத்து சக்தியோடும் படைக்கப்பட்டவர்களே அசுரர்கள். ஆனால் அவர்களின் குணநலன்களால் அவர்கள் இறைவனின் அருளைப் பெற முடியவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொள்ளவும் இல்லை.
ஒரு முறை அசுரர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்மதேவரைச் சந்தித்தனர். “பிரம்மதேவா.. தேவர்களைப் போலவே, எங்களையும் நீங்கள் தான் படைத்தீர்கள். ஆனால், எங்களைச் சரிவர கவனிக்காமல், தேவர்களின் முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்துகிறீர்கள். இது பாரபட்சமானது இல் லையா?” என்றனர்.
பிரம்மா அவர்களிடம், “நான் எல்லாரையும் ஒன்று போல்தான் படைக்கிறேன். ஒருவரது முன்னேற்றம் என்பது அவரது முயற்சி, ஒற்றுமையைப் பொறுத்து தான் இருக்கிறது” என்றார்.
அசுரர்கள் அதை நம்ப மறுக்கவே, இதை நிரூபிப்பதாக பிரம்மதேவர் கூறினார். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்த பிரம்மா, தேவர்களையும், அசுரர்களையும் வரவழைத்தார். பெரிய பெரிய லட்டுகள் தயாராக இருந்தன. அசுரர்களை அழைத்து, “நீங்கள் எல்லாரும் இந்த லட்டைச் சாப்பிடலாம். ஆனால், முழங்கையை மடக்காமல் சாப்பிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்.
அசுரர்கள் எவ்வளவோ முயற்சித்தும், கையை மடக்காமல் சாப்பிட முடியவில்லை. லட்டுகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கிப் போயின.
அடுத்ததாக தேவர்களை அழைத்த பிரம்மதேவன், அவர்களையும் அதே முறைப்படி சாப்பிடச்சொன்னார். அவர்கள் லட்டை எடுத்தார்கள். நீட்டிய கையை மடக்காமல், எதிரே இருந்தவர் வாயில் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டார்கள். நிம்மதியாக சாப்பிட்டு முடித்தார்கள்.
இப்போது, பிரம்மா அசுரர்களை அழைத்துச் சொன்னார், “பார்த்தீர்களா! மற்றவர்களுக்கு உதவும் குணம்தான், அவர்களின் வயிறு நிறைய காரணமாக இருந்தது. நீங்கள் சுயநலவாதிகளாக இருந்ததால் எதுவுமே கிடைக்கவில்லை. சுயநலத்தை விட்டு பிறர் நலம் காப்பவர்களுக்கே இறைவனின் அருள் கிடைக்கும்” என்றார்.
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
கடன் அதிகரித்து கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு ரத்த தொற்று நோய், அடிக்கடி காயம் ஏற்படுதல், தலை சுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளின் சிரமம் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சிரமப்படும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் காலையில் நன்றாக குளித்து விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அதன் பின்பு முத்தாரம்மன் கோவிலில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்.
அதன்பின் நவக்கிரக நாயகி முத்தாரம்மனை தரிசித்து சர்க்கரை பாயாசம் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள். உங்கள் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
ராமனும், சீதையும் வழிபட்ட ராமேஸ்வரம் ராமநாதர் கோவில், ராமாயண இதிகாச காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.
* ராமனும், சீதையும் வழிபட்ட ராமேஸ்வரம் ராமநாதர் கோவில், ராமாயண இதிகாச காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. ராமநாதர் ஆலயத்தை வலம் வரும் பிரகாரங்களில் நிறைய லிங்கங்கள் இருப்பதைக் காண முடியும். அப்படி ஆலயத்தின் மூன்றாம் பிரகாரத்தில் ‘நீலேஸ்வரர்’ என்ற பெயரில் ஒரு லிங்கம் உள்ளது. இதன் சிறப்பு என்ன தெரியுமா?.
சீதாதேவி பிரதிஷ்டை செய்த ராமநாதர் லிங்கத்திற்கு முன்பாக, இந்த ஆலயத்தில் மூலவராக இருந்த சிவலிங்கம் இந்த நீலேஸ்வரர் லிங்கம் என்று சொல்லப்படுகிறது. ராமநாதர் ஆலய பிரகாரத்தில் இருக்கும் பல லிங்கங்களுக்கு மத்தியில் இந்த லிங்கமும் இருப்பதால், பத்தோடு பதினொன்று என்று நினைத்து செல்பவர்களே ஏராளம். அதே போல் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களும் கூட இதுபோன்ற லிங்கங்களை சரிவர பராமரிப்பது பற்றி யோசிப்பது இல்லை. இந்த நீலேஸ்வரர் லிங்கத்திற்கு, சிவராத்திரி நாளில் மட்டும், வில்வ இலையால் அர்ச்சனை, அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
* ராமநாதர் கோவிலில் பலருக்கும் தெரியாத ஒன்று, ‘சேதுமாதவர் சன்னிதி’. காலில் சங்கிலியுடன் பெருமாள் வீற்றிருக்கும் சேதுமாதவர் சன்னிதி சிறப்புக்குரியதாகும். சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தனாக விளங்கினான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, மகாலட்சுமி தேவியையே, மன்னனுக்கு மகளாகப் பிறக்கும்படி செய்தார், பெருமாள். மன்னனின் மகளுக்கு திருமணப் பருவம் வந்தது. அப்போது ஒரு இளைஞனின் உருவத்தில் அங்கு வந்த பெருமாள், மன்னனின் மகளிடம் சேட்டைகள் செய்தார்.
இதுபற்றி அறிந்த மன்னன், இளைஞனை பிடித்து வந்து சிறையில் அடைத்தான். அதோடு சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அந்த சங்கிலியில் கட்டுண்டு கிடந்தார். அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ‘இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது நானே’ என்று மன்னனுக்கு சுட்டிக்காட்டினார். இதையடுத்து மறுநாள் பெருமாளுக்கும், தன்னுடைய மகளுக்கும் திருமணம் செய்து வைத்தான், சுந்தரபாண்டியன். இளைஞனாக வந்த பெருமாள், இந்த ஆலயத்தில் சேதுமாதவராக சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறார்.
சேதுமாதவர் சன்னிதிக்கு அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் ஆகிய இருவரும் வீற்றிருக்கின்றனர். கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடி விட்டு இந்த சேதுமாதவர் சன்னிதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷம் நீங்கும்.
* ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு ‘பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னிதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்), வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் கிரகங்களின் சஞ்சாரங்களை கொண்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் உத்ராயண புண்ணிய கால கொடியேற்ற விழாவும் ஒன்று. 12 மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகவும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமாகவும் ஆகம நூல்கள் கூறுகின்றன.
தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சணாயின புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள். வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேதநூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகிறது.
உத்ராயண புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான உற்சவம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் முன்பு விநாயகர் மற்றும் அம்பாளுடன், சந்திரசேகரர் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா காலை 7.05 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பல மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு சாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10-வது திருநாளான தை மாத முதல் நாள் ஜனவரி 14-ந்தேதி (வியாழக்கிழமை) தாமரைகுளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
நாம் சனிபகவான் மீது நம்பிக்கை வைத்தால் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். எனவே தான் ‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்’ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
நல்லது நடக்க வேண்டுமானால், நாம் நவக்கிரகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் சனிபகவான் மீது வைத்தால் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். எனவே தான் ‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்’ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
மகரத்திற்கு செல்கிறார்
அப்படிப்பட்ட சனி பகவான் சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 11-ந் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று பின் இரவு 4.49 (27.12.2020 அதிகாலை) மணியளவில் உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். அங்கு 20.12.2023 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார். அவரது அருட்பார்வை கடகம், துலாம், மீனம் ஆகிய ராசிகளில் பதிகின்றது.
இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும்.
தற்சமயம் நவக்கிரகத்தில் சுபகிரமாக விளங்கும் குரு பகவானோடு சனி சேருவதால், வரும் சனிப்பெயர்ச்சி வளம் தரும் பெயர்ச்சியாக அமையும்.
நற்பலன் பெறும் ராசிகள்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம்.
பரிகாரங்கள் செய்து பலன்பெற வேண்டிய ராசிகள்: மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம்.
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ரிஷப ராசிக்கு அஷ்டமத்துச் சனி விலகுகிறது. கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி விலகுகிறது. எனவே இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் பொன்னும், பொரு ளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
மிதுனத்திற்கு அஷ்டமத்துச் சனி வருகிறது. துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி வருகிறது. தனுசு ராசிக்கு குடும்பச் சனி வருகிறது. மகர ராசிக்கு ஜென்மச் சனி வருகிறது. கும்ப ராசிக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது.
இந்தச் சனியின் சஞ்சார காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழ் கிறது. 13.11.2021-ல் கும்ப ராசியிலும், 14.4.2022-ல் மீன ராசியிலும், 22.4.2023-ல் மேஷ ராசியிலும் குரு பகவான் சஞ்சரிக்கப் போகின் றார்.
இதற்கிடையில் ராகு-கேது பெயர்ச்சியும் இரண்டு முறை நிகழ இருக்கின்றது. 21.3.2022-ல் மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். பிறகு 8.10.2023-ல் மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள்.
இடையில் சனி பலமுறை வக்ரம் பெறுகின்றார். கும்ப ராசியிலும் சில மாதங்கள் இருக்கின்றார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பன்னிரண்டு ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டிருக் கின்றது.
இயற்கை சீற்றங்கள்
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், தனது ஆட்சி வீடான மகரத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், ‘நீதிமான்’ என்று போற்றப்படும் சனியால் மக்கள் நலம்பெற வழிபிறக்கும். அரசாங்கமும், மக்கள் நலமும் வளமும் பெறத் தேவையான உதவிகளை வழங்கும்.
மழை வளம் அதிகமாக இருக்கும். வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு, சூறாவளிக்காற்று, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் செவ் வாய்-சனி சேர்க்கை காலத்திலும், செவ்வாய்- சனி பார்வை காலத்திலும் ஏற்படலாம்.
விவசாயம் சிறப்படைய அரசின் நலத்திட்டங்கள் உதவிகரமாக இருந்தாலும், இயற்கை மாறுபாடுகளை அவ்வப்போது கவனித்து விவசாயப் பணி களை மேற்கொள்வது நல்லது.
நாட்டின் பொருளாதார நிலை ஜூன் மாதத்திற்கு மேல் படிப்படியாகச் சீராகும்.
வெளிநாட்டில் வேலை செய்வோர், வேலை நீக்கம் செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பும் சூழல் அதிகரிக்கலாம்.
சனியின் வக்ர காலத்திலும், செவ்வாய் சனியோடு சம்பந்தப்படும் நேரத்திலும் பக்கத்து நாட்டுப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். இருப்பினும் சனியின் பலத்தால் இந்திய அரசு அதைச் சமாளித்து வெற்றி காணும் சூழ்நிலையும் ஏற்படும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சந்திரனை சனி நெருங்கும் போது ஏழரைச்சனி தொடங்குகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழரைச்சனி தொடங்கும் போது, அதுமுதல்சுற்றா, இரண்டாவது சுற்றா, மூன்றாவது சுற்றா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருசிலருக்கு நான்காவது சுற்று வரலாம். இதில் முதல்சுற்று- மங்கு சனி, இரண்டாவது சுற்று- பொங்கு சனி, மூன்றாவது சுற்று- இறுதிச்சனி என்பார்கள். பொங்கு சனிக்காலத்தில் சனி நன்மை செய்யும் என்பது பொது விதி.
அனைத்து ராசிக்காரர்களும், சனிப்பெயர்ச்சியின் விளைவாக சந்தோஷங்களை வரவழைத்துக் கொள்ள, சனி பெயர்ச்சியாகும் நாளில் சனி பகவானை வழிபடுவது நல்லது. அத்துடன், தங்களது சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திற்குரிய கிரக அடிப்படையில் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு, தேனி மாவட்டத்தில் உள்ள குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக்கோவில் வன்னி மரத்தடி சனீஸ்வரர், கண்டவராயன்பட்டி அருகில் உள்ள நல்லிப்பட்டி ஒற்றைச் சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர்கோவில் போன்ற சிறப்பு தலங்களில் சனி பகவான் வீற்றிருந்து அருள்கொடுக்கிறார். அனைத்து சிவாயலங்களிலும் சனி பகவான் நவக்கிரகத்தில் காட்சி கொடுப்பார். முறையாக அவரை வழிபட்டு வந்தால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.
அரவணைக்கும் கிரகம்
‘ஆயுள்காரகன்’ என்று வர்ணிக்கப்படும் சனிபகவான், உயிரைத் தாக்கும் கிரகம் அல்ல. உயிரைக் காக்கும் கிரகம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீதியின் சின்னமாக விளங்கும் தராசுச் சின்னம் இடம் பெற்ற துலாம் ராசியில் அவர் உச்சம் பெறுகின்றார். எனவே அவர் ‘நீதிமான்’ என்றும், ’நியாயவான்’ என்றும் போற்றப்படுகின்றார். அவரை நாம் போற்றிக் கொண்டாடினால் அவர் ஆட்டி வைக்கும் கிரகம் அல்ல, அரவணைக்கும் கிரகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நல்லதைச் சொல்வோம்! நல்லதைச் செய்வோம்! நல்லதே நடக்கும்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில். சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில். சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். அந்த வரிசையில், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் கால் வைத்தாலே முக்தி என்று சொல்லப்படுகிறது.
உலகில் முதன்முதலாக தோன்றிய சிவன் கோவில் இதுதான் என்றும், இங்குதான் முதன் முதலாக ஆருத்ரா தரிசனம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகங்கள் இருப்பதை காணலாம். ஆனால் நவக்கிரகங்களும் முழுமையாக அறியப்படாத காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே வழிபாட்டில் இருந்தபோது உருவானதாக இந்தக் கோவிலைச் சொல்கிறார்கள். அதனால்தான் இங்கு நவக்கிரகங்களில், சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டும் காணப்படுகிறது.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். ருத்திரன் என்னும் சிவன், மங்கையான பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் என்பதாலேயே இது ‘உத்திரகோசமங்கை’ என்று பெயர் பெற்றது. `உத்திரம்' என்றால் `உபதேசிப்பது' என்று பொருள், `கோசம்' என்றால் `ரகசியம்' என்றும், மங்கை என்பது பார்வதியை குறிக்கும். பார்வதிக்கு வேதத்தின் ரகசியத்தை உபதேசித்த இடம் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயம் மிகவும் பழமையானது என்பதற்கு சான்றாக, இந்தக் கோவிலில் ராணவனின் மனைவியான மண்டோதரி வழிபாடு செய்திருக்கிறாள். மிகச்சிறந்த சிவ பக்தனையே திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பல காலம் காத்திருந்த அவள், தொடர்ந்து இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டிருக்கிறாள். இதையடுத்து ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம், இந்த ஆலயத்திலேயே, இறைவனின் முன்னிலையிலேயே நடைபெற்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
இந்தக் கோவிலின் மூலவர் ‘மங்கள நாதர்.’ சுயம்பு மூர்த்தியான இவர் இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
அம்பிகையின் திருநாமம், ‘மங்கள நாயகி’ என்பாதாகும். ஆலய தல விருட்சம் ‘இலந்தை மரம்’ ஆகும். ஆலய தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்.’ இந்த ஆலயத்தில் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜண்ட மகரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். கோவிலின் முதல் பிரகார வாயு மூலையில், வள்ளி- தெய்வானை யுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரண்டாம் பிரகார வாயு மூலையில், வள்ளி-தெய் வானையுடன் ஆறுமுகமும், பன்னிரு கரமுமாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
ஒரு முறை மகாவிஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடி முடியைக் காண முயன்று தோற்றுப்போயினர். ஆனால், முடியைக் கண்டதாக பிரம்மன் கூறிய பொய்க்கு, ``ஆமாம்'' என்று பொய் சாட்சி சொன்னது தாழம்பூ. இதனால் ‘`நீ என்னுடைய வழிபாட்டில் இருக்க மாட்டாய்’' என்று சாபமிட்டார் சிவன். எனவே பெரும்பாலான சிவாலயங்களில், தாழம்பூ கொண்டு ஈசனுக்கு வழிபாடு செய்யப்படுவதில்லை. ஆனால், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் இறைவனுக்கு தாழம்பூவால் அர்ச்சனை, அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தக் கோவில், பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடிய யுகத்திற்கும் முற்பட்டது என்றும், பொய் கூறியவர்களையும் மன்னித்து அருளும் மனம் படைத்தவர் இத்தல மங்களநாதர் என்றும் சொல்கிறார்கள்.
இத்தலத்தின் நடராஜர் மரகதத்தால் ஆனவர். நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே இருப்பார். திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம், ஆராதனை செய்யப்படும். அன்றைய தினம் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பின்னர் மீண்டும் சாத்தப்படும் சந்தனக்காப்பு, அடுத்த திருவாதிரை திருநாள் வரை இருக்கும். சந்தக்காப்பு இல்லாத, அபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளும் மரகத நடராஜரை தரிசிக்க வேண்டும் என்றால், நாம் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம். இங்கு தினமும் மதியம் 12.45 மணி அளவில் மரகத லிங்கத்திற்கும், ஸ்படிக லிங்கத்திற்கும் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். இதில் மரகத லிங்கம் மரகத நடராஜரையும், ஸ்படிக லிங்கம் மூலவரான மங்களநாதரையும் குறிக்கும்.
இந்தக் கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் என்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணி, பகல் 12.30 மணி, மாலை 5.30 மணி என மூன்று முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம், தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தை அடைவதற்கு 10 கிலோமீட்டர் முன்பாக வலதுபுறம் ஒரு பாதை பிரிந்து செல்லும். அது தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையாகும். இந்தச் சாலையில் 7 கிலோமீட்டர் சென்றால், உத்திரகோசமங்கை திருத்தலத்தை அடையலாம்.
உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றத்தை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றத்தை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 10-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும்.
தீபம் முன்னாடி அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது அனைத்து பிரச்சினைகளும் தீர்வதோடு, தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இதேபோல் மகா லட்சுமி அருள் கிடைக்க வெற்றிலை தீபம் ஏற்றுவது பலன் தரும்.
தீப மந்திரம்
ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
கிரணோத்கர பாஸ்வா
தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
சுப்ரபாதம் குருஷ்வமே.
தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. 9 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் சாமி கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர சாமி புறப்பாடு நாளை(புதன்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலையில் அஷ்டமி சப்பரங்களில் எழுந்தருளுவார்கள். அங்கிருந்து காலை 5 மணிக்கு சப்பரங்கள் புறப்பாடாகி வடக்கு நோக்கி யானைக்கல், வடக்குவெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளிவீதி, குட்ஷெட்தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் சாமி கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இதனை காண பக்தர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள்.






