என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.
யூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால், இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து, கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.
அவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.
புறா விற்பவர்களை நோக்கி, “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றி எரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ‘பொறுமையும் சாந்தமும் மிகுந்த, தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது?’ என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.
இயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவரிடம் “இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருடங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள்.
ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆம்.. மனிதர்களின் உள்ளமும், கோவில்தான். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். இயேசு சொன்னபடியே, மூன்று நாட்களில் மனக்கோவிலை எழுப்பி காட்டினார்.
கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோவில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 31-ந் தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான இம்மாதம் 1-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நம்பெருமாள் அன்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை 5 மணி முதல் 6 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடைபெற்றது. பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.
அதன்பின்னர், நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின்னர், நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.
பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
அதன்பிறகு, மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. இதன் அடிப்படையில், நம்மில் பலர் வரவுக்கு ஏற்ப செலவு, எதிர்கால தேவைக்கு ஏற்ற சேமிப்பு, ஏழை-எளியவர்களுக்கு தம்மால் இயன்ற அளவு கொடுத்து உதவுதல் என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள்.
அதேநேரத்தில் சிலர் தங்கள் மனம் போல இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள். ‘வாழ்க்கை என்பது நன்றாக அனுபவிக்கத்தானே உள்ளது’ என்று இதற்கு விளக்கமும் கூறுவதுண்டு. மனிதர்களில் இன்னொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வருமானம் எவ்வளவு வந்தாலும் அதையும் செலவு செய்துவிட்டு, அதற்கு மேலும் கடன் வாங்கி செலவு செய்ய தயங்குவதில்லை. பிறருக்கு கொடுத்து உதவும் மனமும் இவர்களிடம் இருப்பதில்லை.
இப்படிப்பட்டவர்களை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் இருந்து செலவு செய்ய வேண்டும். அந்த செலவு தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தன் உற்றார் உறவினர்களுக்கும், பிறருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று இவ்வாறு திருக்குர்ஆன் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது:
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:267).
நமது வருமானம் நல்ல வழியில் இருக்க வேண்டும் அதை தான தர்மம் மூலம் செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த வசனம், கெட்ட வழியில் சம்பாதிப்பதையும், அதை தான தர்மம் செய்வதையும் கண்டிக்கிறது. எனவே நமது வருமானமும் நல்ல வழியில், இறைவன் வகுத்த வழியில் இருக்க வேண்டும். அதையும் தாராள மனதுடன் செலவு செய்ய வேண்டும் என்பதையே இந்த திருக்குர்ஆன் வசனம் வலியுறுத்துகிறது.
நம்மில் பலர் இன்று பகட்டுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும், வீண் பெருமைக்காவும் செலவு செய்ய தயங்குவது இல்லை. ஆடம்பரமான உடை, கவர்ச்சிகரமான செல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் செலவு செய்ய பலர் தயங்குவது கிடையாது. இது தவறாகும். நமது செலவு அவசியமானதாக, நல்ல வழியில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்திக்கூறுகின்றது:
“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்”. (திருக்குர்ஆன் 2:3).
நாம் அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்களாக இருந்தால், அந்த ஏக இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவன் குறிப்பிட்டுள்ளபடி தொழுகையில் தவறாமல் ஈடுபட வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் இருந்து நல்ல வழியிலும் செலவு செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் இறைவனின் நல்லடியார்களாக இருக்க முடியும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது.
இறைவழியில் வருமானத்தைத்ததேடி, அதை இறைவழியில் செலவு செய்பவர்களையே இறைவன் மிகவும் நேசிக்கின்றான். இதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195).
இறைவன் கொடுத்தவற்றை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழுவதுண்டு. இதற்கும் திருக்குர்ஆன் விடை சொல்கிறது. இதுகுறித்து நபிகள் நாயகம் முகமது (ஸல்) அவர்களிடம் இறைவன் கூறியதாவது:
“(நபியே) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்”. (திருக்குர்ஆன் 2:215).
நாம் செலவு செய்வது முதலில் நமது பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் இருக்க வேண்டும். அடுத்து அநாதைகள், ஏழைகள் போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் நன்மையான எதைச்செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நமக்கு நற்கூலி தருவான் என்றும் இந்த வசனம் நற்செய்தி கூறுகின்றது.
எனவே, நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
பேராசிரியர். அ. முகமது அப்துல் காதர், சென்னை.
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபம், சஹஸ்ரநாம அர்ச்சனை. இரவு 7.00 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, ஆண்டாள் எதிர் சேவை நடைபெற்றது.
7.30 சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 9 மணிக்கு தீபாராதனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
ஜனவரி மாதம் 5-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 11-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
5-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சப்தமி திதி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
6-ம் தேதி புதன் கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
7-ம் தேதி வியாழக்கிழமை :
* நவமி
* சந்திராஷ்டமம்- உத்திரட்டாதி, ரேவதி
8-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* தசமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - அசுபதி, ரேவதி
9-ம் தேதி சனிக்கிழமை :
* ஏகாதசி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
10-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* துவாதசி
* சிறிய நகசு
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - பரணி
11-ம் தேதி திங்கள் கிழமை :
* மாத சிவராத்திரி
* சந்திராஷ்டமம் - கார்த்திகை
பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர் திரும்புவதற்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.
அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 22-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் 27-ந்தேதி இரவு திருக்கல்யாணம், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, 28-ந்தேதி தைப்பூச தேரோட்டம் ஆகியவை நடைபெறுகிறது.
31-ந் தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவர். இதில் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர் திரும்புவதற்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி பழனி முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் சன்னதியில் முருகப்பெருமானிடம் தைப்பூச திருவிழாவுக்கான அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து செய்திருந்தார்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப எனத்தொடங்கும் திருப்பாவையையும், அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள்.
அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள்வாயாக.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்ராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்ராயண புண்ணியகால உற்சவம், தட்சணாயண புண்ணிய கால உற்சவத்தின் போது சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.
இந்த ஆண்டிற்கான உத்ராயண புண்ணியகால உற்சவம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகில் எழுந்தருள காலை 7 மணியில் இருந்து 8.35 மணிக்குள் கொடியேற்றப்பட உள்ளது.
இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் காலை மற்றும் இரவு விநாயகர், சந்திரசேகரர் தனித்தனி வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி உலாவை மாட வீதியில் நடத்தலாமா அல்லது கார்த்திகை தீபத் திருவிழாவை போன்று கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடத்தலாமா என்று கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆருத்ரா தரிசனத்தை போன்று சாமி உலா மாட வீதியில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம:
- இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகுமாம். அவர் தன் வாய் வழியாக ரத்தினங்களை உமிழ்வதால் இந்த செய்கை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
பிரம்மாவின் மானசீக புத்திரராகத் தோன்றியவர், புலஸ்தியர். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராக இருந்தாலும், சுமாலி என்ற அசுரனின் மகளான கேகஸியை மணந்தார். இவர்களுக்கு தாயின் குணநலத்துடன் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
தந்தையின் குணநலத்துடன் விபீஷணன், குபேரன் ஆகிய இருவரும் பிறந்தனர். இதில் குபேரன் மிகச் சிறந்த சிவ பக்தன். அவர் சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்ததன் காரணமாக, வடதிசைக்கு அதிபதியாக ஆனார். மேலும் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவர்களின் விதிப்பயன்களுக்கு ஏற்ப செல்வத்தைக் கொடுத்துவரும்படி சிவபெருமான் கட்டளையிட்டார்.
இதற்கிடையில் திருமாலின் மனைவியான லட்சுமிதேவி, தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு விதமான சக்திகளைப் பெற்றிருந்தாள். அவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி ஆகியோரிடம் ஒப்படைத்து பராமரிக்கக்கூறினாள். அந்த இருவரையும் தன்னுடைய கணக்கர்களாக சேர்த்துக் கொண்டார், குபேரன். இவர்கள் இருவரும் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர். குபேரன் அரசாட்சி நடத்த, ‘அழகாபுரி’ என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கிக் கொடுத்தார். அங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தி வருகிறார், குபேரன்.
பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன், இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி. இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பதுமநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர்தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது மற்றொரு கை, வரத முத்திரை தாங்கி இருக்கும். பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் என்பதால் இந்த அமைப்பு காணப்படுகிறது.
குபேரன், சிறுத்த சிவந்த உருவமும், பருத்த வடிவமும் கொண்டவர். இவரது மனைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து, முத்துக்குடையின் கீழ் ஆசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அவர் காலின் கீழ், அவரது வாகனமான குதிரை இருக்கும். குபேரனின் ஒரு கை அபய முத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகுமாம். அவர் தன் வாய் வழியாக ரத்தினங்களை உமிழ்வதால் இந்த செய்கை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார். ஒரு முறை காவிரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை குணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன. அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அதை குபேரன் வணங்கிக்கொண்டிருந்தபோது, “என்னை நீ முறையாக வழிபட்டு வந்தால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும்” என்றது சிவபெருமானின் குரல்.
ஈசன் கூறியவாறே குபேரனும், அந்த சிவலிங்கத்தை எடுத்து பூஜை செய்து வந்தார். குபேரன் வழிபட்ட அந்த ஆலயம், பவானி சங்கமேஸ்வரர் கோவிலாகும்.
திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பகல் பத்து திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிய நடந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதைதொடர்ந்து 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அன்று முதல் நேற்று வரை ராப்பத்து திருவிழாவுடன் 10 நாள் விழாநிறைவு பெற்றது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரத் துடன், பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ராப்பத்து கடைசி நாளான நேற்று திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
கடவுள், தம் மக்களை பாவம் என்னும் இருளில் இருந்தும், அடிமை வாழ்வில் இருந்தும் விடுவிக்க தொடக்க காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியாக முயற்சித்தார். ஆனால், நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு என்னும் பேரொளியை அளிக்கின்றார். ஆனால், நாமோ அவரது அன்பை உதறித்தள்ளி விட்டு பாவ வழியில் வாழ்கிறோம். எளிய முறையில் குழந்தை வடிவில் பிறந்த கடவுள், அவரிடம் இருக்கின்ற வாழ்வு தான், இன்று மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஒளியாக விளங்குகிறது. கடவுள் மனிதராக பிறந்தது மானிட குலத்துக்கு மாபெரும் கொடையாக அமைந்துள்ளது.
மனுகுலம் பாவத்தில் இருந்து முழு விடுதலைபெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்து பிறப்பின் நோக்கமாக இருந்தது. இயேசு என்ற பெயருக்கு பாவத்தில் இருந்து விடுதலை அளிப்பவர், அதாவது மீட்பர் என்று பொருள். இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல் வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு, இறைத்தூதரால் அறிவிக்கப்பட்டது.
இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் என்பதை மேய்ப்பர்கள் மட்டுமே முதலாவது கண்டனர். ஏழைகளுக்கு காட்சியளிப்பவராய், ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவில் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரின் தாழ்மை அனைத்து ஏழை-எளிய மக்களோடு ஒன்றிணைந்து வாழ அறைகூவல் விடுக்கிறது. இப்படிப்பட்ட வாழ்வே இம்மண்ணில் நமக்கு முழுமையான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அனுதினமும் அருளச்செய்யும்.
இயேசு பிறந்த போது ஏரோது அரசன் கலங்கினான்(மத்தேயு 2:3), மீட்பரின் பிறப்பால் தனது ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்று அஞ்சிய ஏரோதின் சதியும், சூழ்ச்சியும் வீழ்ச்சியுற்றன. மாநிலம் மாட்சி கண்டது. விண்ணவர் வாழ்த்திட, மன்னவர் மகிழ்ந்தனர்.
‘உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்’ என்று இயேசு சொன்னதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கிற போது நம்மால் கடவுளின் விண்ணுலகை அடைய முடியும்.
தற்போது, கொரோனா என்னும் கொடிய நோய்தொற்றின் காரணமாக உறவுகளை இழந்து, பொருளாதாரத்தை இழந்து வறுமையில் வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்கும் மக்களின் அச்சம் அகன்று ஆறுதல் பெறவும், இழப்பை மறந்து மீட்பு பெற, இயலாமை என்பது இல்லாமல் போக எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற அவர்களோடு உடனிருப்போம், அன்பு செய்வோம், ஆறுதல் கூறுவோம்.
மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
எளிமையின் சின்னமாய் உலகை மீட்க கடவுள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். தொழுவத்தில் பிறந்த கிறிஸ்து நம் உள்ளங்களில் பிறக்க வழி செய்வோம்.
கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைபிடித்து செயல்படுவோம். உலக மீட்பர் பாலன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக.
எழில் மிகு காட்சியளிக்கும் குமரியில் பண்பான தலைசிறந்த பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வரும், கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக என் இனிய கிறிஸ்து பிறப்பு திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.






