search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசுவின் கோபமும்.. மனக் கோவிலும்..

    கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.
    யூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால், இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து, கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.

    அவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.

    புறா விற்பவர்களை நோக்கி, “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றி எரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ‘பொறுமையும் சாந்தமும் மிகுந்த, தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது?’ என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.

    இயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவரிடம் “இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருடங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள்.

    ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆம்.. மனிதர்களின் உள்ளமும், கோவில்தான். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். இயேசு சொன்னபடியே, மூன்று நாட்களில் மனக்கோவிலை எழுப்பி காட்டினார்.

    கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோவில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.
    Next Story
    ×