என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மதுரை சித்திரை திருவிழாவில் வருகிற 22-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான்.

    மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து பட்டத்து அரசியாக மகுடம் சூடி, நாட்டை ஆண்டு, தேவதேவா்களை போரில் வென்று கடைசியாக சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.

    அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. திருக்கல்யாணம் மட்டும் நடந்தது.

    இந்தாண்டும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிப்பதாக அரசு அறிவித்தது. இருந்தாலும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று உள்திருவிழாவாக மதுரை சித்திரை திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பட்டர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    சித்திரை திருவிழா என்றால் சுவாமி-அம்மன் தினமும் வெவ்வேறு வாகனத்தில் மாசி வீதியில் உலா வருவது முக்கிய சிறப்பாகும். ஆனால் கொரோனாவால் திருவிழா கோவிலுக்குள் நடைபெறுவதால் காலை, இரவு நேரங்களில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் கோவிலில் உள்ள ஆடி வீதியில் பக்தர்கள் யாருமின்றி வலம் வருகின்றனர்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா, வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8.05 மணிக்கு மேல் 8.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கப்படு்ம். அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசிய இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என யாருக்கும் அனுமதி கிடையாது.

    மேலும் திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை வழிபாடு செய்யலாம். ஆனால் பக்தர்கள் திருக்கல்யாண கோலத்தை காண முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே திருக்கல்யாண கோலத்தை காண அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    25-ந் தேதி திருத்தேர் வீதி உலா காலை 6.30 மணிக்கு ஆடி வீதியில் நடைபெறுகிறது. இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.
    தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு தொடர்பாக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு, பொது போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவை மாவட்டத்தில் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அரியமான், காரங்காடு, ஏர்வாடி கடற்கரை பகுதிகளுக்கும் ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகள் சுற்றுலாத்துைற கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதால் சமூக இடைவெளியுடன் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். வணிக வளாகங்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்டவை இரவு 9 மணிக்கு மேல் திறக்கக்கூடாது.

    கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளைக் கொண்டு 50 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுகபுத்ரா உடன் இருந்தார்.
    திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் இருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோவிலையும் அடையலாம்.
    திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் திருப்பூந்துருத்தி எனும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோயிலையும் அடையலாம்.

    ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

    ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார்.

    இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், ‘திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்’ என அசரீரி கேட்டது.

    இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார்.

    சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. ‘விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்’ என கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர்.

    ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோயிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது.

    சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.

    அதுமட்டுமா? இந்தத் தலத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறச் செய்தார்.

    வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின் போது, இன்றைக்கும் கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். அருகில் உள்ள கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். மூலவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்.

    அப்படி உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். சுற்றுவட்டார கிராம மக்களும் தஞ்சை, திருவையாறு, கண்டியூர் முதலான ஊர்களைச் சேர்ந்த மக்களும் வந்து விழாவில் கலந்துகொண்டு தரிசித்துச் செல்வார்கள்.
    வரகூரில் குடிகொண்டிருக்கும் பெருமாளின் திருநாமம் - ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர். வரகூர் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஏராளம். உலகில் எங்கிருந்தெல்லாமோ வரகூர் பெருமாளை வந்து ஸேவித்தவண்ணம் உள்ளனர்.

    தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். கல்யாணக் கவலையால் கண்ணீர் விடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியத்தைத் தந்தருள்வார் வரகூர் பெருமாள்.
    இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    திருச்சி கல்லணையில் வழியாகவும் வரகூர் திருத்தலத்தை அடையலாம்.
    அரசு வெளியிட்ட அறிக்கையில் திருச்சூர் பூரம் விழாவை சம்பிரதாய சடங்காக மட்டுமே கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விழாவில் பக்தர்கள் பங்கேற்கவோ, யானைகள் அணிவகுப்பு, குடை மாற்ற சடங்குக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்

    கேரளாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொரோனா 2-வது அலை காரணமாக அங்கு நேற்று மட்டும் 13 ஆயிரத்து 644 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

    கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    இதற்கிடையே பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழாவை கொண்டாட வேண்டும் என்று பக்தர்களும் கோவில் நிர்வாகிகளும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து நேற்று கேரள அரசின் தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின் அரசு வெளியிட்ட அறிக்கையில் திருச்சூர் பூரம் விழாவை சம்பிரதாய சடங்காக மட்டுமே கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விழாவில் பக்தர்கள் பங்கேற்கவோ, யானைகள் அணிவகுப்பு, குடை மாற்ற சடங்குக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் திருச்சூர் பூரம் விழாவின் போது நடைபெறும் போட்டி வாணவேடிக்கையும் ரத்து செய்யப்பட்டது.
    தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கரிவரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    நெகமம் அடுத்த வடசித்தூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்த கோவில் கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை கோவில் முன்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
    குடமுழுக்கு விழாவிற்காக சொக்கநாதபெருமான் உருவச்சிலையுடன் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாதயாத்திரையை தொடங்கினார்.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 3 மணியளவில் புஷ்ப யாகம் நடந்தது. வேதப்பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத பிரதான அர்ச்சகர்கள் மல்லி, ரோஜா, சம்பங்கி, சாமந்தி, அல்லி, கரகாம்பரம் உள்பட 12 வகையான மலர்கள், துளசி, வில்வம் உள்பட 6 வகையான இலைகள் உள்பட 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகத்தை நடத்தினர்.

    முன்னதாக காலை 10 மணியளவில் பிரதான அர்ச்சகா்கள் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந் தது. அதைத்தொடர்ந்து மதியம் பல்ேவறு வகையான பூக்கள் நிரப்பப்பட்ட மலர் கூடைகளை பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    புஷ்ப யாகத்தில் கோவில் துணை பார்வதி, தோட்ட கண்காணிப்பாளர் சீனிவாஸ், உதவி அதிகாரி துர்க்காராஜு, தோட்ட மேலாளர் ஜனார்த்தன்ரெட்டி, கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் அச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.
    கும்பகோணத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமங்கலக்குடி. இங்கு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர், வரிப்பணத்தைக் கொண்டு இந்த கோவிலைக் கட்டினார்.

    வரிப்பணத்தில் கோவிலைக் கட்டியதால், கோபம் கொண்ட மன்னன், மந்திரியை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது மந்திரி, தன்னுடைய உடலை திருமங்கலக்குடியிலேயே அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் மந்திரியின் மனைவி, திருமங்கலக்குடி திருத்தலத்தில் உள்ள மங்களாம்பிகை அம்மனிடம் வேண்டினாள்.

    இதையடுத்து அந்த மந்திரியின் தலையை ஒட்டச்செய்து, உயிர் பெறச் செய்தாள், அன்னை. மந்திரி மனைவியின் மாங்கல்யம் காத்ததால், இத்தல நாயகி, ‘மங்களாம்பிகை’ என்று பெயர் பெற்றாள். இறைவன் ‘பிராணவரதேஸ்வரர்’ ஆனார். இத்தலத்தின் பெயர் ‘மங்களக்குடி.’ தல விநாயகர் ‘மங்கள விநாயகர்.’ தீர்த்தம்- மங்கள தீர்த்தம், விமானம் - மங்கள விமானம்.

    இந்த ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் திருமண தரிசன விழா நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான சிவன் கோவிலான இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    இக்கோவிலில் சிவபெருமான், அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்ததாக ஐதீகம். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும், பார்வதியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    முன்பு ஒரு காலத்தில் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தபோது தேவர்கள், முனிவர்கள், பக்தர்கள் அனைவரும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்ததாகவும், உலகம் சமநிலை தன்மையை இழந்தது.

    இதுபற்றி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து தென்திசை சென்று உலகத்தை சமநிலைப்படுத்தும் படி கூறினார். அதற்கு சிவபெருமானிடம் அகத்திய முனிவர், ‘தங்கள் திருமணத்தை கோடான கோடி மக்கள் இங்கு இருந்து பார்க்கும்போது, எனக்கு அந்த பாக்கியம் இல்லையே’ என்று வருத்தப்பட்டார். அதற்கு சிவபெருமான், ‘நீ தென்திசை சென்று உலகத்தை சமநிலைப்படுத்து நீ எங்கிருக்கிறாயோ அந்த இடத்திற்கு நான் திருமண கோலத்தில் அங்கு காட்சி அளிக்கிறேன்’ என உறுதி அளித்தார் அதை ஏற்று அகத்திய முனிவர் தென்திசை வந்து வேதாரண்யத்தை அடுத்துள்ள அகத்தியன் பள்ளியில் அமர்ந்து தவம் இருக்க உலகம் சமநிலையை அடைந்ததாகவும், சிவபெருமான் கொடுத்த வாக்கை காப்பாற்ற திருமணக் கோலத்தில் வேதாரண்யம் வந்து அகத்திய முனிவருக்கு காட்சி அளித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

    இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கும் திருமண தரிசன விழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிவபெருமான், பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் எழுந்தருளினார். பெருமாள், அகத்தியமுனிவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவை தொடர்ந்து கோவிலில் திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் சந்தனம் பூசப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
    திருப்பதி :

    கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது.

    ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே, ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    காய்ச்சல், சளி, இருமல். உடல் வலி உள்ளவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது.

    ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்த பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு சென்று மத்திய விசாரணை அலுவலகத்தில் அவர்களின் ரசீதை ஸ்கேன் செய்தபின், அவர்கள் துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று அறைகளை பெற்று வந்தனர். இதனால் பக்தர்கள் இருவேறு இடங்களுக்கு அறை பெற செல்ல வேண்டியிருந்தது.

    இந்நிலையில் தேவஸ்தானம் இந்த முறையை தற்போது எளிதாக்கி உள்ளது. திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.

    அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 25,695 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,253 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.21 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வருகிறார். தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக திருவிழா மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கடந்த 11-ந் தேதி தேர்த்திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்துஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை வாகனம்,சேஷ வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தார். நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற வேண்டிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், அரசின் உத்தரவுப்படி நடைபெறாது. ஆனால் இன்று காலை 10.30 மணிக்குமேல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட சிறிய அளவிலான சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரமான இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முதல் நாளிலேயே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் திரள்வார்கள். ஆனால் தற்போது தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இதன் காரணமாக சமயபுரம் களையிழந்து காணப்படுகிறது.
    பிறர் செய்த செயல்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு எனக்கு மனம் தந்தீரே, இறைவா உமக்கு நன்றி! பிறரைத் தீர்ப்பிட்டு அவரது மாண்பைச் சிதைக்கின்ற மனிதனாக நான் வாழாமல் இருக்க வழிகாட்டிய இறைவா உமக்கு என் நன்றி!

    “ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு| உறுதியாக இரு. துன்ப வேளையில் பதற்றத்துடன் செயலாற்றாதே. “

    சிலுவைப் பாதை பாடுகளின் பாதை மட்டுமல்ல
    நம் வாழ்வின் பாதையுங் கூட.

    மனிதனாக நான் வாழ
    சிலுவைப் பாதை
    என்னைச் சிந்திக்கச் செய்கிறது.

    அந்தச்  சிந்தனை ஒரு தியானமாகி
    எனக்குள் ஒரு முறை
    நானே உற்று நோக்கி
    தெரிகின்ற குறைகளை, நிறைகளை
    சீர்தூக்கிப் பார்த்து
    ஒரு முழுமையான மனிதனாக என்னை மாற்ற
    சிலுவைப்பாதைச் சம்பவங்கள்
    என்னைத் தூண்டுகின்றன.

    இரண்டாயிரம் ஆண்டின் முன்னே
    நடந்து முடிந்துவிட்ட
    வெறும் சம்பவமல்ல இது.

    நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும்
    நிகழ்வுகள் இவை.

    துன்பப்பட்டவன் வாழ்வு இது.
    துன்பப்படுபவன் வாழ்வுக்கு வழியும் இது.

    எனவே,
    சிலுவையின் பாதையில் நாம் நடப்போம்
    சிந்திக்கும் பாதையில் நாம் நடப்போம்
    புறக் கண்களை மட்டுமல்ல
    அகக் கண்களையும் கூட திறந்து நடப்போம்.

    முதலாம் நிலை

    இயேசு சாவுக்குத் தீர்வையிடப்படுகிறார்

    திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம். அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.

    “தீயோனின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறுபெற்றவன்”
    “நீதித் தீர்ப்பு வரும்போது தீயோர் நிலை குலைந்து போவர்; நல்லவர் சபையில் பாவிகள் நிலைத்திரார்.”
              (சங். 1 : 1 மற்றும் 4)
    வஞ்சகம் அறிவுக்குத் திரைபோட, வெஞ்சினம் கண்களை மறைக்க சதிகாரர் ஆடுகின்ற ஆட்டம்.
    உதிக்கும் சூரியனில் கரிக்கும், கறைக்கும் இடமிருப்பதாக நயவஞ்சகரின் கொக்கரிப்பு.
    சேற்றின் நடுவே இருந்தாலும் தாமரையில் ஏது சேறு? பாவிகள் நடுவே வாழ்ந்தாலும் இயேசுவில் பாவக்கறை இருக்க முடியுமா?
    பரபாசுக்கும்,  பரமனுக்கும் வித்தியாசம் புரியாத அறிவிலிகள் நடுவே பதவிக்காக நீதியைக் கைகழுவி விடும் பிலாத்துக்கள்.
    வாழவைக்க வந்த தெய்வம் வாழாவெட்டியாகப் போனதிங்கே.
    தன் கண்ணில் குத்தி நிற்கும் நாட்டுக் கட்டையைக் கண்டு கொள்ளாமல், கண்டு கொள்ள மனமில்லாமல், அயலவன் கண்ணில் தூசைக் காட்டும் அவல ஜீவன்கள் நடுவே ஒரு உத்தமர் இங்கே மௌனியாக!
    நீதி ஸ்தலத்திலே சத்தியம் வாயடைத்துப் போயிற்று உண்மை ஊமையாயிற்று!! மனதில் மட்டும் நீதி எப்படி வரும்?

    சிந்திப்போம்:

    பிறர் செய்த செயல்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு எனக்கு மனம் தந்தீரே, இறைவா உமக்கு நன்றி!
    பிறரைத் தீர்ப்பிட்டு அவரது மாண்பைச் சிதைக்கின்ற மனிதனாக நான் வாழாமல் இருக்க வழிகாட்டிய இறைவா உமக்கு என் நன்றி!
    தேவையான இடத்தில் வாய் திறந்து நீதிக்காக்குரல் கொடுக்கத் துணிவை எனக்குத் தந்தமைக்காகவும் இறைவா எனது நன்றி!

    எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி-
    எங்கள் பேரிற் தயவாயிரும்!
    மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
    திருபுவனம் கோதண்டராமர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் தினசரி பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது.
    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பிரசித்திபெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தினசரி பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. நேற்று ராமன்- சீதை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை பிரம்மோற்சவ கமிட்டியினர், சவுராஷ்டிரா சபையினர் செய்து வருகின்றனர்.
    ×